Sunday, 2 February 2025

வெள்ளைக்காகமும் துன்னெலியும்

 

வெள்ளைக்காகமும் துன்னெலியும்

விக்டர் வாழ்டாயேவ்

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் வெள்ளைக்காகம் ஒன்று அதுவரை போயிராத காட்டுப்பகுதிக்குள் பறந்து சென்றது. மிகப் பரந்து விரிந்து உயரமாக இருந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தது. அதன் உச்சியில் கூடு கட்ட ஆரம்பித்தது.

கீழே நிலத்துக்குள்ளிருந்து ஒரு துன்னெலி ( Mole ) மேலே வந்தது. அது உயரே வெள்ளைக்காகம் கூடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. நின்று கவனித்தது. பிறகு பேசியது,

“ ஹாய்.. வெள்ளைக்காகம்! அந்த மரத்தில் கூடு கட்டாதே.. அது நல்ல மரம் இல்லை..”

வெள்ளைக்காகம் சிரித்தது. பிறகு காலை உதைத்தபடி,

“ என்னைத்தனியே விடு..”

என்று சொன்னது. துன்னெலி கொஞ்சநேரம் நின்று பார்த்தது. மறுபடியும் சொன்னது,

“ காகமே! அந்த மரத்தில் கூடு கட்டாதே.. அது மோசமான மரம்..”

காகம் மீண்டும் சிரித்தது.” ஏய்.. குருட்டுத்துன்னெலியே, கால்களில் மூளையை வைத்திருக்கும் உனக்கு என்னை விட எல்லாம் நன்றாகத் தெரியுமோ? நான் வானத்தில் பறக்கும்போது எல்லா மலைகளையும் சமவெளிகளையும் பார்ப்பேன்.. அப்போது நீ ஒரு புழுவைப் போல தரையைக் குடைந்து கொண்டிருப்பாய்.. இந்தக் காட்டிலேயே இந்த மரம் தான் வலிமையான பெரிய மரம்..”

வெள்ளைக்காகம் துன்னெலியின் பேச்சைக் கேட்கவில்லை. அந்த உயரமான மரத்திலேயே கூடு கட்டியது. சீக்கிரமே முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன.

சிறிது காலம் கடந்தது. சமவெளிகளிலிருந்து காற்று வேகமாகப் பாய்ந்து வந்தது. தன்னுடைய வலிமையான கரங்களால் மரங்களைப் பிடித்துக் கொண்டது காற்று. மரங்களை அங்குமிங்கும் ஆட்டிக்குலுக்கியது.

சீக்கிரத்திலேயே அந்தப் பெரிய மரத்தை நோக்கி வந்தது. அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளை வளைத்துக் குலுக்கியது. வேர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவை தரையிலிருந்து பிய்க்கப்பட்டன. அப்படியே கீழே சாய்ந்தது மரம்.

அந்த வெள்ளைக்காகமும் அதன் குஞ்சுகளும் மரத்தின் அடியில் மாட்டி நசுங்கிப் போயின.

துன்னெலி தரைக்குள்ளேயிருந்து வெளியே வந்தது.

“ மேலே உயரப் பறப்பதாலே உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டாய்.. நான் தரையில் வளைக்குள் இருந்தாலும் உன்னால் பார்க்க முடியாததை நான் பார்ப்பேன்.. அந்த மரத்தின் வேர்கள் அழுகிப் போய் இருந்தது எனக்குத் தெரியும்.. நான் சொன்னதை நீ கேட்டிருந்தால் நீ இப்போது உன்னுடைய கூட்டில் சௌகரியமாக உட்கார்ந்து இருப்பாய்..”

என்று சொன்னது துன்னெலி.

சில சமயம் நீங்கள் கீழே தரையில் நடப்பதையும் கவனிக்கவேண்டும். அப்போது தான் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்..


நன்றி - புக் டே

 

No comments:

Post a Comment