பெர்ரா புளூக்கோ
ஸ்பிச்செபுப்பியோ! அல்லது பாழாய் போன புரட்டனே!
உதயசங்கர்
திட்டுங்கள் பந்தலியோனே! நன்றாகத் திட்டுங்கள்! ரோஸேல்லியின்
கடை வாசலில் தினம் தினம் இரவும் பகலும் ஜெம்மாவைப் போல விழிகளைத் தொலைத்து விட்டு வரமாட்டானா?
சானின் வரமாட்டானா? அவனுடைய ஜெம்மா என்ற கிசுகிசுப்பு கேட்காதா? ஏதோ சில காரணங்களினால்
காலதாமதமாகிவிட்டது, என்னை மன்னித்து விடு ( அட! அது பொய்யாகக்கூட இருந்து விட்டுப்
போகட்டுமே ) என்று முழங்காலில் தண்டனிட்டு ஜெம்மாவை முதன்முதலில் பிரியும் போது அணைத்தானே
ஸானின் அப்படி அணைக்கும் அந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த உங்களைப்
போலவே நானும் வீண் நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தேன் ஏமாற்றிவிட்டான் ஸானின் இல்லை
துர்கனேவ்.
பந்தலியோனே திட்டுங்கள்! ஸானினைத் திட்டுங்கள்! துர்கனேவைத்
திட்டுங்கள்! பசப்பியான மாரியாவைத் திட்டுங்கள்! போலஸவைத் திட்டுங்கள்! எல்லாரும் புரட்டர்கள்!
பாழாய் போன புரட்டர்கள்! முதல் காதலின் அதிகாலைப்பனித்துளி வானிலிருந்து மெல்ல மிதந்து
அப்போது தான் மலர்ந்த மலரின் மெல்லிதழ் மீது மேகம் போல வந்தமர்கிற அந்தத் தூயகாதலை
மறந்து விட்ட ஸானினைத் திட்டுங்கள் பந்தலியோனே!
பெர்ரா புளூக்கோ ஸ்பிச்செபுப்பியோ
எனக்கு பிராங்கபர்ட் தெரியாது. ருஷ்யமொழியோ, நீங்கள் பேசும்
இத்தாலி மொழியோ தெரியாது. ரோஸேல்லியின் மிட்டாய்க்கடையும் தெரியாது. ஜெம்மாவும் அம்மா
பாவப்பட்ட பிராவு ரோஸேல்லியையும் தெரியாது. ஸானினைக் கதாநாயகனாக வரித்துக் கொண்ட எமிலியோவையும்
தெரியாது. ஜெம்மாவைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட கனவான் வறண்ட கார்ல் கிளியூபெரையும்
தெரியாது. ஜெம்மாவின் வீட்டு நாயான தர்த்தாலியாவையும் தெரியாது. ஏன் துர்கனேவ் என்ற
மாபெரும் இலக்கிய மேதையை நாற்பது வருடங்களாகத் தான் தெரியும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு
முன்பு அவர் எழுதிய மூன்று காதல் காதைகள் நூலையும் தந்தையரும் தனயரும் நாவல்களைப் படித்த
பிறகு தான் தெரியும். என் வாழ்வில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமையாக துர்கனேவ் மாறி
விட்டார்.
என் இளமைக்காலத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மனதின் சலனங்களை,
என்னவென்று விளங்காத உருவமற்ற உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து என் கண்முன்னே என்னையே
நிறுத்திவிட்டார் துர்கனேவ். முதல் காதல் நாவலில் வரும் ஜீனா தேவதையாக நினைக்கும் விளாட்மீராக
அப்போது இருந்தேன். முதல் காதலின் தூய அன்பில் திளைத்துக் கொண்டிருந்தேன். அப்படி தான்
ஆஸ்யா. அவளை எப்படி மறக்கமுடியும்? அவளை நிராகரித்தவனை இன்றும் நான் சபிக்கிறேன். வசந்தகால
வெள்ளத்தில் வரும் ஜெம்மா இன்றும் என்னுடைய லட்சியமாக இருக்கிறாள்.
ருஷ்ய எழுத்தாளர்கள் காதலைப் பற்றி எழுதும்போது காதல் தேவதையான
வீனஸின் மடியில் உட்கார்ந்து எழுதுகிறார்களோ என்று தோன்றும். டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி,
அந்தோன் சேகவ், அலெக்சாண்டர் குப்ரின், மாக்சிம்கார்க்கி, என்று ஒவ்வொருவரும் போட்டி
போட்டுக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் வாசிக்கும் போது அன்பின் சுடரொளி
மனம் முழுவதும் நிறைந்து அறிவும், உடலும் அன்பின் ஒளியை வீசும். இந்த உலகம் மிக அழகானதாக
மாறி விடும் ரசவாதத்தை உணரமுடியும். இந்தப் பிரபஞ்சத்தையே காதலிப்பவராக நம்மை மாற்றிவிடும்.
மனித வாழ்க்கையின் அர்த்தமே இந்த உன்னதக் கணங்கள் தானென்று தோன்றும்.
நம் வாழ்விலும் கடந்து சென்ற தூய அன்பின் நினைவுகளை மீட்டெடுக்க
முடியும். கதகதப்பான அந்த வெப்பத்தில் நடைமுறை வாழ்வின் கசடுகளைக் கழுவிக் கொள்ளவும்
சில கணங்களேனும் உன்னதஉணர்வு நிலைகளில் நாம் சஞ்சரிக்கவும் முடியும்.
காதல் முதல் காதல் எவ்வளவு விசித்திரமானது? எத்தனை எளிமையானது?
எத்தனை தூய்மையானது? இவான் துர்கனேவ் அவர்களே! நான் உங்களை என் இதயத்தின் அடியாழத்திலிருந்து
வாழ்த்துகிறேன். நீங்கள் உலக இலக்கிய வரலாற்றில் மூன்று காதல் கதைகளின் வழியாக நிரந்தரமான
இடத்தைப் பிடித்து விட்டீர்கள்.
ஆனால் பந்தலியோனே திட்டுவது சரிதான். எப்படித்தான் மனது வந்ததோ!
புகலற்ற, மாசுமருவற்ற தன்னுடைய ஓரப்பார்வையிலேயே பொங்கிப்பிரவகிக்கும் தன்னுடைய அன்பைத்
தெரிவித்த ஜெம்மாவை மறக்க எப்படித்தான் மனது வந்ததோ? எத்தனையோ இத்தாலியத் துன்பியல்
நாடகங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் மனதில் அடக்கிக் கொண்டு
யாருக்கும் தெரியாமல் ஜெம்மா கண்களைத் துடைத்துக் கொள்ளும் காட்சியை மட்டும் பந்தலியோனே
வால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை ஜெம்மாவைப் பார்க்கும்போதும் பந்தலியோனேவின்
நெஞ்சில் ஒரு கேவல் வெடித்துக் கிளம்பும். நீங்கள் அதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்
துர்கனேவ். ஏனெனில் கிழட்டுப்பந்தலியோனேவும் ஜெம்மாவின் மீது தூய அன்பைக் கொண்டிருந்தான்.
ஏன் கிழவர்களுக்குக் காதல் வரக்கூடாதா? நானே இருபது வயதிலும் ஜெம்மாவின் மீது அன்பு
செலுத்தினேன். இந்த அறுபத்திநாலு வயதிலும் எனக்கு அவள் மீதான் அன்பு குறையவில்லையென்பது
மட்டுமல்ல பெருகியிருக்கிறது.
அவளுக்காகத் தான் ஸானின் நடத்திய துவந்த யுத்தத்தில் துணையாளாகப்
போனான் பந்தலியானே.. அது வரை ஏற்றிராத அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அவன் எவ்வளவு
பயிற்சி எடுத்தான் தெரியுமா? ஏனெனில் ஜெம்மாவைப் பார்த்தவுடனேயே ஸானினின் கண்களில்
பொங்கித் திரையெறிந்த காதலை உணர்ந்து கொண்டான். ஜெம்மாவுக்கு இவனை விட மிகப்பொருத்தமான
கனவான் யாரும் இருக்க முடியாது என்று நினைத்தான். ஏற்கனவே ரோஸேல்லியின் குடும்பநண்பராகவும்,
வேலையாளாகவும் பாதுகாவலராகவும் இருந்த பந்தலியானே இப்படித்தானே யோசித்திருக்க முடியும்.
ஸானின் நீயும் தான் எவ்வளவு நல்லவன். ஜெம்மாவை நீ எந்தளவுக்கு
நேசித்திருந்தால் இருவர் சண்டைக்குத் துணிந்திருப்பாய். ஜெம்மாவின் மீதான உன் காதலுக்காக
உயிரையே பணயம் வைத்தாயே. எப்படி அந்த பசப்பல்காரி மாரியா நிக்கலாயெவ்னாவின் மோகவலையில்
வீழ்ந்தாய் ஸானின்?. தூய்மையான நேசத்தை விடவும் உடலிச்சை அவ்வளவு வலிமையானதா? எவ்வளவு
நுட்பமாக, எவ்வளவு ஆழமாக தூய காதலையும், உடலிச்சையையும் எதிர்நிலைகளில் வைத்து சதுரங்கம்
ஆடியிருக்கிறீர்கள் துர்கனேவ்.
தன் தூய காதலைப் பணயம் வைத்து ஆடித் தோற்றுப் போன ஸானினிடம்
தான் எனக்கும் பந்தலியானோவுக்கும் மனத்தாங்கல். ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியைப்
போல ஆண்களைத் தன் கால்களால் எத்தி விளையாடிய மாரியாவை எப்படிப் புரிந்து கொள்ளாமல்
போனாய் ஸானின்? புதிய புதிய ஆண்களைத் தேடி அடிமைப்படுத்திய மாரியாவை மட்டும் குறை சொல்ல
மாட்டேன். பந்தலியோனேவும் நானும் தான் மாரியாவின் மாளிகையில் பார்த்தோமே. அவளுடைய காலடியில்
அமர்ந்து அவளுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோமே. நீயும் பந்தலியோனேவைப்
பார்த்தாய். உன் முகம் வெளுத்து சவக்களை படிந்து விட்டதைக் கண்டு தான், உன் துரோகத்தைத்
தாங்க மாட்டாமல் தான் பந்தலியோனே சொன்னார்.
பெர்ரா புளூக்கோ ஸ்பிச்செபுப்பியோ
ஆமாம். அப்படித்தான் சொன்னார். உனக்குள்ளும் அந்தச் சாத்தான்
ஒளிந்திருக்கிறான். இல்லையென்றால் முதல் பார்வையிலேயே மாரியா நிக்கலாயெவ்னாவின் காமாந்தகத்தை
நீ அறிந்தும் அந்தக் காட்டுக்குள் போவாயா? அவள் பின்னாலேயே வளர்ப்பு நாயைப் போல அலைந்து
சீரழிந்து விரட்டப்பட்டப் பிறகு ஜெம்மாவைத் தேடினாயே.
நல்லவேளை. அப்போது பந்தலியோனே உயிருடனில்லை. பிராவு ரோஸேல்லியும்
உயிருடனில்லை. உன்னைத் தன் லட்சியக்கதாநாயகனாக நினைத்த எமிலியோவும் உன்னை முன்மாதிரியாக
நினைத்தே போரில் கலந்து கொண்டு உயிர் நீத்து விட்டான். ஒரு கணம் நீ நினைத்துப் பார்த்தாயா?
எவ்வளவு நம்பிக்கையுடன் ஜெம்மா உன்னை அனுப்பினாள்!
” முதல் காதல் என்பதே புரட்சி ஆகும். உருவாகி விட்ட
வாழ்க்கையின் ஒரே மாதிரிச் சரியான அமைப்பு ஒரு நொடியில் இடிந்து தகர்ந்து விடுகிறது.
இளமை தடையரணுக்குப் பின்னே போராடத் தயாராக நிற்கிறது. அதன் ஒளிவீசும் கொடி உயரே பறக்கிறது.
மேற்கொண்டு நேரப்போவது சாவோ, புதுவாழ்வோ, எது ஆயினும் அதற்குத் தன் உவகை பொங்கும் வணக்கத்தை
அது தெரிவிக்கிறது. “
இப்படிச் சொன்னது நீங்கள் தானே துர்கனேவ். மனிதனது அந்தரங்க
உனர்ச்சிகளுக்கும் வரலாற்றுப்பிரசனைகளையும் மிக அற்புதமாகப் பின்னித் தரும் உங்கள்
கலைத்திறன் போற்றத்தக்கது. கவித்துவமான உரைநடையில் வாசகனின் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டும்
கவிஞராகத் திகழ்கிறீர்கள். ஒரு குழந்தை கலைடாஸ்கோப்பைத் திருப்பித் திருப்பி புதிய புதிய காட்சிகளைப் பார்ப்பதைப்
போல மனித மனதின் ஆழங்களில் மூழ்கி ஒளிவீசும் முத்துகளை மட்டுமல்ல, இருள் படிந்த மூலைகளையும்
காட்டுகிற வல்லமை உங்கள் கலைத்திறனுக்கு இருக்கிறது துர்கனேவ்.
நீங்கள் என்ன தான் திட்டமிட்டு ஸானினை மாரியாவின் காமத்துக்குப்
பலி கொடுத்தாலும், உங்களையும் மீறி ஸானின் காலங்கடந்தேனும் மீண்டும் ஜெம்மாவைத் தேடி
வருகிறானே. ஆனால் அதைவிட எங்கள் ஜெம்மா! என்ன மாதிரியான அற்புதமான பெண் அவள்! ஸானினைச்
சபிக்கவில்லை. திட்டவில்லை. வெறுக்கவில்லை. அவளைப்போலவேயிருக்கும் மகளின் புகைப்படத்தை
ஸானினுக்கு அனுப்பி வைக்கிறாளே. இவான் துர்கனேவ் அவர்களே! உங்கள் திட்டத்தையும் மீறி
மனித மனதின் அடியாழத்தில் தூய அன்பின் ஒரு துளித்தேன் தங்கியிருப்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள்.
” காதல் என்பது துன்ப உணர்வு, வாழ்வின் மகத்தான மர்மங்களில்
ஒன்று, இயற்கையின் உற்பாத சக்திகளின் வெளிப்பாடு இது. இந்த ஆற்றலுக்கு முன்னால் மனிதன்
முற்றிலும் தற்காப்பு அற்றவன், புகலற்றவன். காதல் மனிதர்களை விதி போலத் தாக்குகிறது.
ஆர்வமாகப் பீரிடுகிறது. வாழ்க்கையில் கவிதை ஒளி பரப்புகிறது. பின்பு துன்பமாக முடிகிறது..”
இதையும் நீங்கள் தான் சொல்லியிருக்கிறீர்கள். வசந்த காலவெள்ளத்தை
வாசித்து முடித்தவுடன் ஒரு காவியச்சோகம் கவிவதை உணரமுடிகிறது. அந்தக் காட்சியில் ஸானின்
கையறுநிலையில் அடைத்துக் கிடக்கும் ரோஸேல்லி மிட்டாய்க்கடை முன்னால் நிற்கிறான். உள்ளே
முதல் நாள் முதல்முறை பார்த்த ஜெம்மாவின் புன்னகை உறைந்திருக்கிறது. ஸானின் பெருமூச்சு
விடுகிறான். பந்தலியோனேவும் நானும் கூட பெருமூச்சு விடுகிறோம். வாழ்க்கையென்னும் புதிரில்
மனிதனின் நிலை என்ன? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ருஷ்ய இலக்கியத்தின் கொடியை உலகமெங்கும் பறக்கவிட்ட இவான் துர்கனேவ்
அவர்களே! உங்களை ஜெம்மாவுக்காக, ஆஸ்யாவுக்காக, ஜெனயீதாவுக்காக நானும் பந்தலியோனேவும் வாழ்த்துகிறோம்.
காதலுடன்
உதயசங்கர்.
( வசந்த கால வெள்ளம் குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை )
புத்தகம் – வசந்த கால வெள்ளம் – இவான் துர்கனேவ்
வெளியீடு – பாரதி புத்தகாலயம்
No comments:
Post a Comment