முயலும் ஆமையும்
உதயசங்கர்
காட்டுக்குள்ளே ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் ஒரு வயதான
ஆமை வாழ்ந்தது. மிகவும் வயதான ஆமை. ஆமை எவ்வளவு காலம் வாழும் தெரியுமா? நூற்றைம்பது
வயது வரை வாழும். சில சமயம் குளத்திலிருந்து வெளியேறி மெல்ல மெல்ல நடந்து ஆற்றங்கரைக்குப்
போகும். சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் குளிக்கிற இடத்துக்கு வரும்.
வெயிலில் காய்ந்து கொண்டே விளையாட்டை ரசிக்கும். கதைப்பாட்டியிடம் உலக நடப்புகளைப்
பேசும்.
காட்டுக்குள்ளே ஒரு குட்டி முயல் இருந்தது. அதுவும் இடையில்
குதித்து ஓடும். ஒரு நாள் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது ஆமை வந்தது. சற்று நேரத்தில் குட்டி முயலும் வந்தது. ஆமை
கேட்டது.
“ இது யாரு? பார்த்தால் தாடிக்காரரைப் போல இருக்கு..”
குட்டி முயல் சொன்னது,
“ ஆமை மாமா தானே.. பந்தயம் நடந்த கதை எனக்குத் தெரியும்..”
“ போடா சின்னப்பயலே! உன்னுடைய முப்பாட்டனுடன் ஓடி வெற்றி பெற்றவனாக்கும்.இப்போது
நூறாவது வயதிலும் நான் உன்னைத் தோற்கடிப்பேன்...”
என்று ஆமை சொன்னது. அதைக் கேட்ட குட்டி முயல் உறுதியுடன் சொன்னது,
“ சரி.. பந்தயம் வைத்துக் கொள்வோம்.. என்னுடைய முப்பாட்டனின்
தோல்விக்குப் பதில் சொல்லிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்.. இப்போதும் உலகம் முழுவதும்
குழந்தைகள் என்னுடைய முப்பாட்டன் தோற்றதைச் சொல்லிச் சிரிக்கிறார்கள் இல்லையா? அதை
இன்றுடன் தீர்த்து வைக்கிறேன்..”
ஓட்டப்பந்தயத்துக்கு இரண்டு பேரும் தயாரானார்கள். வயதான ஆமை
பயத்துடன் எல்லாரையும் பார்த்தது. பூனைக்கு குட்டி முயலின் நிறமும், பேச்சும் பிடிக்கவில்லை.
பூனை ஆமையிடம் சொன்னது,
“ நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அங்கே போய்ச் சேரும்போது இவன்
வாலைக் கடித்தபடி தொங்கினால் போதும் மற்றது எல்லாம் தானாக நடக்கும்..”
இரண்டு பேரும் தயாரானதைப் பார்த்த கதைப்பாட்டி மூட்டையிலிருந்து
ஒரு விசிலை எடுத்து ஊதினாள். வேக வேகமாக முன்னால் ஓடிய குட்டி முயலின் பின்னாலேயே ஓடிய
ஆமை குட்டி முயலின் வாலைக் கடித்தபடி தொங்கியது. முக்கால்வாசி தூரம் கடந்த பிறகும்
ஆமையின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை. வேகமாக வாலைச் சுழற்றியது. காற்றில்
ஆமை குட்டிக்கரணம் போட்டுக் கொண்டே எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது.
சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்
“ ஹிபிப் ஹிபிப் ஹூர்ரே..” என்று ஆரவாரம் செய்தபடி ஓடினார்கள்.
முயல் அதே வேகத்தில் காட்டுக்குள் ஓடிப் போய் விட்டது.
நன்றி - பறயாம் நமுக்கு கதகள்
No comments:
Post a Comment