Wednesday, 19 February 2025

குழந்தைகளைக் கொண்டாடும் இளங்காற்று!

 

குழந்தைகளைக் கொண்டாடும் இளங்காற்று!

உதயசங்கர்



மனிதனுடைய வாழ்க்கையில் எந்த ஒருபருவத்தையும் மீண்டும் மீட்டெடுக்கவோ, வாழ்ந்து அனுபவிக்கவோ முடியாது என்பதை மனிதன் தன் வாழ்வின் அந்திப்பொழுதிலேயே அறிந்து கொள்கிறானென்பது அவனுடைய துர்வாய்ப்பு. ஒருவேளை அவன் அதை முன்பே அறிந்திருந்தால் தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் பெருஞ்செல்வந்தனொருவன் கஞ்சத்தனமாய் எண்ணியெண்ணிப் பிதுக்கித்தள்ளும் நாணயங்களைப் போல தன் நாட்களைப் பொக்கிசமாகப் பாதுகாத்து, எச்சரிக்கையாக செலவழித்து, மனங்குளிர அனுபவித்து, நினைக்கும்போதெல்லாம் நெகிழ்ந்து, வாழ்வை ஒரு பேராலினைப் போல ஆனந்தமாய் வாழ்ந்திருப்பான் என்று தோன்றுகிறது. அவன் மட்டுமல்ல சமூகமும் இன்னும் இன்னும் உயர்ந்திருக்கும்.

மற்றெல்லாப்பருவத்தை விடவும் குழந்தைப்பருவமே ஒருபோதும் திரும்பாத பருவம் மட்டுமல்ல. ஒரு மனிதனின் ஆளுமை உள்ளுறைந்து வளர்கிற பருவம். சமூகத்தில் அவன் என்னவாகப்போகிறான் என்பதை சிற்பியின் கலையுருவாய் உருக்கொள்ளும் பருவம். அன்பும், நம்பிக்கையும், பாசமும், நேசமும், படைப்பூக்கமும் ஊற்றென பொங்கித் ததும்புகிற பருவம். குழந்தைகள் ஒவ்வொருவரும் தான் எதிர்கொள்கிற சாதாரணத்தைத் தங்களுடைய மாயவித்தையால், தங்களுடைய படைப்பூக்கத்தால் அற்புதமான உலகமாய் மாற்றுகிறார்கள். அந்த உலகத்தைப் புரிந்துகொள்ளாமல் தான் பெரியவர்கள் குழந்தைகளை சாதாரணத்துக்குள் கரகரவென இழுத்து வந்து கட்டிப்போடுகிறார்கள். இன்றைய உலகின் அத்தனை கண்டுபிடிப்புகளும் குழந்தைப்பருவக்கற்பனைகளின் வளர்ச்சியென்பதை பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.

காயையும் பழத்தையும் ஒன்றெனப்பாவிப்பதாலேயே குழந்தைகள் எதையும் நீண்டநேரம் மனதில் வன்மமாய் தேக்குவதில்லை. அவர்கள் அன்புமயமானவர்கள். அவர்கள் பெரியவர்களை நம்புகிறார்கள். பெற்றோர்களை நம்புகிறார்கள். ஆசிரியர்களை நம்புகிறார்கள். அவர்களுடைய அந்த நம்பிக்கையே அவர்களுடைய கண்களின் வழியே அன்பின் பேரருவியாகக் கொட்டுகிறது. ஆனால் பெரியவர்களின் லாபநட்ட, காரணகாரிய நடைமுறை வாழ்க்கை அந்தப் பேரருவியைக் காணமறுக்கிறது. அதுமட்டுமல்ல. குழந்தைகளை அவமானப்படுத்தவும், மட்டம் தட்டவும், தண்டிக்கவும், செய்வதன் மூலம் வெறும் களிமண்ணைப் போல நினைக்கிறது. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. நாம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அவர்கள் நமக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கும் மகிழ்ச்சியையே கொடுப்பார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாகக் கொள்ளாத சமூகம், கல்வி, பெற்றோர், ஒருபோதும் குழந்தைகள் தங்களுக்கு மகிழ்ச்சியையே கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்க உரிமையில்லை.

நாம் கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவுமான ஏராளமான விஷயங்களை குழந்தைகள் தங்கள் இயல்பிலேயே கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அந்த நல்லியல்புகளை பிழைப்புவாதத் தந்திரங்களினால் மாற்றுகிறோம். குழந்தைகளின் உலகத்தில் இருக்கும் வெகுளித்தனமும், அறியாமையும், நம்பிக்கையும், விட்டுக்கொடுத்தலும், அல்லன மறத்தலும், எல்லையில்லாக்கற்பனையுமே பெரியவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய நற்பண்புகள். ஆனால் நாம் குழந்தைகளுக்கு நற்பண்புகளை நீதிநெறிகளை, அறவிழுமியங்களை போதித்து நல்வழிப்படுத்தப் படுத்தவேண்டுமென்று நினைக்கிறோம். நாம் ஒருபோதும் கடைப்பிடிக்காத அந்த விழுமியங்களைக் குழந்தைகளிடம் திணிக்கும்போது அவர்கள் இந்த உலகத்தின் போலித்தனத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார்கள். தங்களுடைய சிறப்பான பண்புநலன்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறார்கள். குழந்தைகளைப் பற்றிய நம் சமூகத்தின் பார்வை தலைகீழாக மாறவேண்டியுள்ளது.

குழந்தைகள் எதைச் செய்யவேண்டுமென்று நாம் நினைக்கிறோமோ அதை நாம் செய்யவேண்டும். அவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று நாம் நினைப்பதை ஒருபோதும் அவர்கள் முன்னால் செய்யக்கூடாது. இதைச் சமூகமும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், கடைப்பிடித்தாலே குழந்தைகள் தங்களுடைய ஆளுமைத்திறனுக்குத் தேவையானதைஎ நம்மிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள்.

பா.தென்றல் எழுதியுள்ள வண்ணத்துப்பூச்சிகளும் வானவில்லும் நூலின் சிறப்புகள் என்னவென்றால் முதலில் அது எழுதப்பட்டிருக்கும் பாணி. நம்முடைய தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு நண்பரைப் போலப் பேசுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமே அறிவுரை என்ற வார்த்தையே பிடிக்காது. அதை ஆசிரியர் உள்ளும் புறமாக உணர்ந்ததினாலேயே எந்த இடத்திலும் குரலை உயர்த்தாமல் மனதுக்கு நெருக்கமாகப் பேசும் அந்தக் குரலைக் கேட்காமலிருக்க யாராலும் முடியாது. அந்தக் குரலிலுள்ள நம்பிக்கை, குழந்தைகளின் மீதான பேரன்பு, நம் சமூகத்தின் மீதான மெல்லிய விமரிசனம், அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த யோசனைகள், புறக்கணிக்க முடியாத முக்கியத்துவத்தைக் கோருகிறது.

பா.தென்றல் ஆசிரியராக இருந்து இந்த நூலை எழுதியிருப்பதால் அன்றாடம் அவருடைய பள்ளி அனுபவங்களிலிருந்து குழந்தைகளின் உளவியல் குறித்த பார்வையை வெளிப்படுத்துவதால், குழந்தையியலாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், குழந்தை செயல்பாட்டாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய நூலாகவும் மாறியிருக்கிறது. நூலின் எளிமை குறித்துச் சொல்லியாகவேண்டும். நூல் நெடுக ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் கவிதைகள், பாடல்கள், மேற்கோள்கள், சினிமா, சுயமுன்னேற்றமடைந்தவர்களின் பதிவுகள், இவை மட்டுமல்லாமல் நம்முடைய அன்றாடநாளின் அனுபவங்களையே தான் சொல்லவந்த கருத்துக்குச் சாதகமாக்கி எழுதியிருக்கிற பாங்கு, எடுத்ததும் படித்து முடித்துவிடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் குழந்தைகளின் கல்வி, வகுப்பறை அரசியல், குழந்தைகளின் உளப்பாங்கு, ஆசிரியர்களின் வறட்டுத்தனமான அதிகாரம், பெற்றோர்களின் அலட்சியம், என்று ஏராளமான சிந்தனை விதைகளைத் தூவிச் செல்கிறார். ஊருக்கு உபதேசம் என்றில்லாமல் நடைமுறையில் அவருடைய வகுப்பறையை எப்படி ஜனநாயகப்பூர்வமாக இயக்குகிறார் என்பதையும் சொல்கிறார். குழந்தைகள் நலன் சார்ந்த பல பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளையும் சொல்வது மிகுந்த சிறப்பு.

தினமும் பூ கொண்டு வந்து கொடுத்து டீச்சரை அழகு பார்க்கும் குழந்தையும், தன்னுடைய தோழியை அழைப்பது போல ஹாய் தென்றல் அழைக்கும் சிறுவனும் வெளிக்காட்டுவது மாசற்ற அன்பையல்லவா. இப்படித்தானே குழந்தைகளிடம் பெரியவர்கள் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும். எப்போதும் அதிகாரச்சவுக்கைச் சொடுக்கியபடியே குழந்தைகளைப் பயமுறுத்துவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்? அப்படியென்றால் குழந்தைகள் அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ள விட்டு விடுவதா? என்று சட்டாம்பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அவர்களையும் மனக்கண்ணில் கண்டே, குழந்தைகளின் மீதான பார்வை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டுமென்பதையும் கூடச் சொல்லி விடுகிறார்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதின் அவசியம், குழந்தைகள் கதைப்புத்தகங்களை வாசிப்பதின் அவசியம், அவை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் பேசுகிறார். குழந்தைகள் ரோபோக்களல்ல. நிறைவேறாத நம்முடைய ஆசைகளின் குப்பைக்கிடங்குகளுமல்ல. அவர்கள் தனித்துவமிக்கவர்கள். அவர்களை ஆற்றுப்படுத்துவதும், வழிகாட்டுவதும் மட்டுமே நாம் செய்யவேண்டிய முதலும் முடிவுமான வேலையென்று மயிலிறகால் வருடுவதைப் போலச் சொல்லியிருக்கிறார் பா.தென்றல்.

“ குழந்தைகளை வளர்க்காதீர்கள், அவர்களை வளரவிடுங்கள் ” என்ற மாமேதை லெனினின் பொன்மொழியை நாம் உணரவேண்டும். அந்த வகையில் இந்த நூல்  பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு கையேடாக விளங்கும்.

 இந்த நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல உலகப்புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் தாஸ்தயேவ்ஸ்கி, “ மிக மிகச்சிக்கலான விஷயத்தில் கூட அற்புதமான நல்லதொரு ஆலோசனையை ஒரு குழந்தையால் தரமுடியும் என்பது பெரியவர்களுக்குத் தெரிவதில்லை..” என்று சொல்கிறார். எவ்வளவு உண்மை!

நாம் பெரியவர்கள் தான் சாதாரண விஷயங்களைக் கூடச் சிக்கலாக்கி விடுகிறோம். சில வார்த்தைகளில், சில சைகைகளில், சில மணித்துளி நேரச் செலவழிப்பில், சில செய்கைகளில், சரிசெய்ய வேண்டியவற்றை இடியாப்பச்சிக்கலாக்கி விரோதம் பாராட்டுகிறோம். வண்ணத்துப்பூச்சிகளும் வானவில்லும் நூலின் முதல் அத்தியாயத்தில் புத்தகப்பை மாறிப்போனதால் வீட்டுப்பாடம் எழுதமுடியாதே என்று அழுதுகொண்டிருக்கும் குழந்தையிடம் தென்றல் சொல்கிறார்,

“ பாப்பா.. இன்னிக்கு உனக்கு வீட்டுப்பாடம் கிடையாது.. ஒன்னும் படிக்க வேணாம் ஜாலியா விளையாடிட்டு வா.. நாளைக்கு உன் பையை வாங்கித் தாரேன்..”

முதலில் நம்ப முடியாத குழந்தை ஆசிரியரின் ஹைபையைப் பார்த்துச் சிரிக்கிறது. அந்தக் கணத்தில் தென்றல் குழந்தையாகியிருக்கிறார். அதனால் தான் எளிய தீர்வை அவரால் சொல்லமுடிந்திருக்கிறது. இப்படித்தான் ஆசிரியர்கள் குழந்தைகளைப்போலவே யோசித்தார்களென்றால் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் இனிப்பாக இருக்கும்.

இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள் பா.தென்றல்!

வாழ்த்துகளுடன்

உதயசங்கர்.

( வானவில்லும் வண்ணத்துப்பூச்சியும் நூலுக்கு எழுதிய முன்னுரை )

No comments:

Post a Comment