Friday, 21 February 2025

புளிக்கும் திராட்சை

புளிக்கும் திராட்சை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடுகிற ஆற்றங்கரைக்குச் சற்று தூரத்தில் ஒரு திராட்சைத்தோட்டம் இருக்கிறது. கிராமத்தலைவரான மொட்டை மாதவனின் தோட்டம். அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைப்பழத்தைப் பறிக்க முடியாது என்று கதைப்பாட்டி சொன்னார்.

 போய்ப்பார்த்தால் தெரியும் என்று பதுங்கிப்பதுங்கிப் போய்ப் பார்த்துவிட்ட வந்த பூனைக்குட்டி சின்னுவிடமும் நாய்க்குட்டியிடமும் சொன்னது,

“ பயங்கரம்.. மொட்டை மாதவன் அங்கே ஒரு பெரிய வேட்டை நாயை அவிழ்த்து விட்டிருக்கிறான்.. ஒரு தடவை பார்த்தால் போதும்.. ராத்திரி தூக்கம் வராது.. கெட்ட கனவுகள் வந்து கூப்பாடு போட வேண்டி வரும்.. அப்படிப் பயங்கரமாக இருக்கு..”

என்று சொன்னது.

ஒரு நாள் நடுமதியத்தில், பசியால் வாடிய குள்ளநரி பம்மி, பம்மி, திராட்சைத்தோட்டத்துக்குள் ஒளிந்து பதுங்கி போவதைப் பார்த்தார்கள். மூன்று பேரும் குள்ளநரியின் பின்னாலேயே போனார்கள்.

கசுமலா காக்காவும் பின்னால் பறந்தது. குலைகுலையாகத் தொங்கிக் கொண்டிருந்த திராட்சைப்பழங்களைப் பார்த்த குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது. பிறகு ஐந்தாறு முறை குதித்துப் பார்த்தது. திராட்சைப்பழத்தைப் பறிக்கமுடியாதென்று தெரிந்து விட்டது.

திரும்பி வரும்போது தான் சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

” நரியண்ணே.. திராட்சைப்பழம் கிடைக்கலையா? “ என்று நாய்க்குட்டி கேட்டது.

“ யாருக்கு வேணும் புளிப்பாய் இருக்கிற திராட்சைப்பழம்? “ என்று குள்ளநரி சொன்னது. அப்போது கசுமலா காக்கா சொன்னது,

“ நரியண்ணே நில்லுங்க.. நான் இரண்டுமூன்று கொத்திக் கொண்டு வருகிறேன்..”

கசுமலா காக்கா நிறைய திராட்சைப்பழங்களைக் கொத்திக் கொண்டு வந்தது. எல்லாரும் சேர்ந்து பாட்டுப்பாடி தின்று முடித்தார்கள். அவர்களுடைய ஆட்டத்தையும் பாட்டையும் வேட்டை நாய் கேட்டது. மூக்குமுட்ட இறைச்சி சாப்பிட்டு தூக்கமயக்கத்தில் இருந்தது. ஒரு முறை உறுமிவிட்டு அப்படியே திரும்பிப் படுத்து உறங்கி விட்டது. அந்த முழக்கத்தைக் கேட்ட உடனே மீதி இருந்த திராட்சைப்பழங்களைப் பொறுக்கினார்கள்.சத்தம் போடாமல் எல்லாரும் அந்த இடத்தை விட்டு ஓடியே போய் விட்டனர்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள் 

No comments:

Post a Comment