Friday, 7 February 2025

அரசனும் சட்டையும்

 

அரசனும் சட்டையும்

லியோ டால்ஸ்டாய்

தமிழில் - உதயசங்கர்



ஒரு அரசர் மிகவும் நோய்வாய்ப்பட்டார்.

“ யார் என்னுடைய நோயைக் குணப்படுத்துகிறார்களோ.. அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியத்தைப் பரிசாகக் கொடுக்கிறேன்..”

என்று அறிவிப்பு செய்தார்.

அந்த நாட்டு அறிஞர்கள் கூடி ஆலோசித்தார்கள். மன்னரின் நோய் தீர வழிகளை ஆராய்ந்தார்கள். வழி எதுவும் தெரியவில்லை.

ஒரே ஒரு அறிஞர் மட்டும் நோய் தீர ஒரு வழி சொன்னார்.

“ மகிழ்ச்சியான மனிதனின் சட்டை – அது தான் மருந்து.. அரசர் அதை அணிந்து கொண்டால் உடனே குணமாகி விடுவார்..”

அவ்வளவு தான். அரசர் நாடு முழுவதும் மகிழ்ச்சியான் மனிதனைத் தேட பணியாளர்களை அனுப்பினார். அவர்கள் ஒரு இடம் விடாமல் தேடினார்கள். தூரத்து ஊர்களிலும் தேடினார்கள். பக்கத்து ஊர்களிலும் தேடினார்கள். பணம் படைத்த மனிதர்களிடமும் தேடினார்கள். ஏழைகளிடமும் தேடினார்கள். ஆனால் ஒரு மனிதன் கூட மகிழ்ச்சியாக இல்லை.

சிலரிடம் பணம் இருந்தது. ஆனால் நோயாளியாக இருந்தார்கள். சிலர் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் ஏழைகளாக இருந்தார்கள். சிலர் செல்வமும் ஆரோக்கியமும் உடையவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மோசமான மனைவியோ, ஒழுக்கக்கேடான குழந்தைகளோ இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல் இருந்தது.

ஒரு நாள் அரசரின் மகன் ஒரு குடிசையைக் கடந்து செல்லும்போது, உள்ளேயிருந்து ஒரு மனிதனின் குரல் கேட்டது.

“ கடவுளே.. உனக்கு நன்றி.. இந்த நாள் நல்ல நாள்.. இன்று கடுமையாக உழைத்தேன்.. நன்றாகச் சாப்பிட்டேன்.. இப்போது உறங்கப் போக வேண்டும்.. இதற்கு மேல் என்ன வேண்டும்? “

அரசரின் மகனுக்கு மகிழ்ச்சி பொங்கியது.  அவன் தன்னுடைய பணியாளர்களை அழைத்து அந்த மகிழ்ச்சியான மனிதனுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பணம் கொடுத்து அரசருக்காகச் சட்டையை வாங்கிக் கொண்டு வரச் சொன்னான்.

அவர்களும் அங்கே சென்றார்கள். 

அந்த மனிதனிடம் சட்டையைக் கேட்டார்கள். 

ஆனால் அந்த மகிழ்ச்சியான மனிதன் மிகவும் ஏழை. 

அவனிடம் சொந்தமாக ஒரு சட்டை கூட இல்லை.

நன்றி - சோவியத் லிட்டேரச்சர் - 1979

புக் டே.

No comments:

Post a Comment