Showing posts with label விமரிசனம். Show all posts
Showing posts with label விமரிசனம். Show all posts

Saturday, 27 June 2026

அன்புள்ள திரு.ப.முகமது ஜமிலுதீன் அவர்களுக்கு,

 

அன்புள்ள திரு..முகமது ஜமிலுதீன் அவர்களுக்கு,



வணக்கம். செப்டம்பர் மாத தாமரையில் உங்களுடைய சிறுகதையானகுழந்தையைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. இன்றைய சமூக நிலையில் இது போன்ற கதைகள் அவசியம் தேவை என்று நான் உணர்கிறேன். மனித சமூகம் கலை என்னும் மாயாஜாலத்தைக் கண்டு பிடித்தது என்பது மிக முக்கியமான பாய்ச்சல் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் கலையில் தான் ஒருவன் தன்னை அறிந்து கொள்கிறான். தன்னைச் சுற்றிலுமுள்ள சமூகத்தை உணர்கிறான். தன்னையும் சமூகத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஒரு மேன்மையான சமூகத்தையும், ஒரு மேன்மையான மனிதனையும் கண்டடைவதே கலைஞனின் லட்சியமாக என்றென்றும் இருந்து கொண்டேயிருக்கிறது. அதற்காகவே உலகம் முழுவதும் இத்தனை கோடிப்பக்கங்கள் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் ஒரு சமூகத்தின் குணாம்சத்தை அரசியல்பொருளாதாரம் தானே தீர்மானிக்கிறது. அந்த அரசியல்பொருளாதாரம் சுரண்டலை அடிநாதமாகக் கொண்டிருந்தால் சமூகமும் அதே வழியில் அடியொற்றிச் செல்லும். அந்தச் சுரண்டலை ஆதரிக்கிற, அதற்குச் சாதகமான மனநிலையை மக்களிடம் உருவாக்கவே மதம், சாதி, நீதித்துறை, காவல், கல்வி, என்று எல்லாத்துறைகளும் இயங்கும். இத்தகைய சூழலில் மானுட மேன்மையை விரும்புகிற கலைஞனின் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது. அவன் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறவனாக, சமூகத்தின் ஈரத்தைப் பாதுகாப்பவனாக, மானுடச்சுடரை அணைந்து விடாமல் தன் இருகைகளினால் அணைத்துக் கொள்பவனாக இருக்கிறான். அப்படிப்பட்ட கலைஞனாக நீங்கள் இருக்கிறீர்கள்!

கலையும் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அதன் பிரச்சாரம் நுட்பமானது. லட்சக்கணக்கான நுட்பமான இழைகளால் நெய்யப்பட்ட ஆடையைப் போன்றது. ஆடையைப் பார்க்கிற யாருக்கும் அதன் நுட்ப இழைகள் உடனே தெரிவதில்லை. அந்த ஆடையின் அழகும் வண்ணமும் அதன் வடிவமும் தான் முதலில் பிடிக்கிறது. இதைத்தான் அழகியல் உணர்ச்சி என்றும் கலை இன்பம் என்றும் சொல்கிறோம். ஆனால் அந்த கலை இன்பத்துக்குப் பின்னால் இருக்கும் உள்ளடக்கமே அந்தக் கலையின் ஆயுளைத் தீர்மானிக்கிறது. ஆக எந்த ஒரு உள்ளடக்கமும் கலாபூர்வமானதாக இருக்கும் போது அது நீடூழி வாழ்வாங்கு வாழ்கிறது.

குழந்தை கதையில் சாதித்தலைவரின் மகன் சாதிய உணர்வின்றி சமத்துவ உணர்வோடு இருக்கிறான். அவன் ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்த சக மாணவனோடு விளையாடி மகிழ்கிறான். அதைக் கண்ட சாதித்தலைவர் தன் பையனைக் கண்டிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பையனை தண்டிக்கிறார். அதனால் கோபமுற்ற சாதித்தலைவரின் பையன் அவரிடம் பேசுவதை நிறுத்தி விடுகிறான். ஒன்றல்ல இரண்டல்ல பதினைந்து வருடங்கள். அத்தனை காலம் தன் மகன் பேசாததிற்கு தன்னுடைய சாதிப்பற்று தான் காரணம் என்று உணரவில்லை. அதே சாதிய ஆணவத்தோடு தான் நடந்து கொண்டிருக்கிறார். எதிர்பாராத சம்பவத்தினாலே அவருடைய மனம் மாற்றமடைகிறது. அவர் சாதியப்பாகுபாட்டை விட்டொழிக்கிறார். இது தான் முதன்மையான கதை என்று சொல்லலாம்.

கலைஞன் இந்த கேடு கெட்ட சமூகம் எப்படி இருக்கிறது என்று சொன்னால் மட்டும் போதாது. அது எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். சமூகத்தை விமரிசன பூர்வமாகப் பார்ப்பது மட்டுமல்ல அதை மாற்றிக் காட்ட வேண்டும். கலைஞன் தான் ஆசைப்படுகிற மாதிரி கதாபாத்திரங்களைப் படைக்கவும் அவர்களைத் தன்னுடைய படைப்பில் உலவ விடுவதற்கும் முழு உரிமை உண்டு. ஆனால் கலை தனக்கான இயங்கியலைக் கொண்டிருக்கிறது. அந்த இயங்கியல் கலையில் தொழில்படும் போது வேறொன்றாக மாறுகிறது. கலையின் தர்க்கம் சமூகத்தர்க்கம் அல்ல. ஒரு கலைப்படைப்பில் கதாபாத்திரங்களின் உருவாக்கமும் அதன் சித்தரிப்பும் அதன் வளர்ச்சியும் அதன் மாற்றமும் மிக முக்கியமானது. அது வாசகன் தனித்தனியே பிரித்தறிய முடியாதபடிக்கு ஒன்றோடொன்று இணைந்து கலந்து பூரணமானதாக இருக்க வேண்டும். அந்தப் பூரணமான கதாபாத்திரங்களே நம் நெஞ்சில் என்று நிலைத்திருக்கும்.

அப்படிப்பட்ட பூரணமான கதாபாத்திரமாக ராக்கம்மா இருக்கிறாள். குழந்தை கதையில் வருகிற சாதித்தலைவரின் திமிர், அதன் வீழ்ச்சி, சாதித்தலைவரின் பையனிடம் உள்ள பிடிவாதம், சமத்துவ உணர்வு இதையெல்லாம் விட கதையில் வருகிற ராக்கம்மா தான் யதார்த்தமாகவும், பூரணமாகவும், கலைஞனின் ஆசைப்படியும் உருவாகியிருக்கிறாள். ராக்கம்மாவின் தயை, சுயமரியாதை, கண்ணியம், எல்லாம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரமே ராக்கம்மா தான் என்று நான் நினைக்கிறேன். இந்த ராக்கம்மாவைப் படைப்பதற்காகவே நீங்கள் மெனக்கெட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! கதையில் எனக்குப் படுகிற சில குறைகள் கதாபாத்திரங்கள் இயல்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் கதை நிகழ்வுகள் நாடகத்தனமாக இருக்கிறதோ என்று அஞ்சுகிறேன். சூழ்நிலைச் சித்தரிப்புகள் யதார்த்தமாக இல்லாததாலோ என்னவோ கதாபாத்திரங்களின் எண்ட்ரியும் எக்சிட்டும் செயற்கையாக இருப்பதைப் போல உணர்கிறேன். இதையெல்லாம் சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியாது. என்றாலும் என் மனதில் பட்டதைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

( அருமை நண்பர் மறைந்த எழுத்தாளர்.ப.முகமது ஜமீலுதீனுக்கு 2015-ல் எழுதிய கடிதம் )