சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்
காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான்.
வெளிச்சத்தினால் கண்கள் கூசின. மறுபடியும் கண்களை மூடி கொஞ்சம் கொஞ்சமாய் கால்க்கண்களைத்
திறந்தான். அரைக்கண்களைத் திறந்தான். முக்கால் கண்களைத் திறந்தான். பிறகு முழுக்கண்களையும்
திறந்தான். இப்போது கண்கள் கூசவில்லை. மேலேயிருந்து கீழே பூமியை வேடிக்கை பார்த்தான்.
அப்படியே மெல்ல வானத்தில் காவல் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டான்.
கீழே ஒரு கூரை வீட்டின் முற்றத்தில் ஒரு சிட்டுக்குருவி அங்கும்
இங்கும் பறந்து கொண்டிருந்தது. அது ஓலைகளுக்கு நடுவில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்திருந்தது.
கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. இரண்டு குருவிக்குஞ்சுகளில் ஒன்று ரொம்பக்குட்டியாயிருந்தது.
ஆனால் அந்தக்குட்டிக் குட்டி குருவிக்குஞ்சு சுறுசுறுப்பாக இருந்தது. கூட்டுக்குள்ளேயே
அடைந்து கிடக்க முடியவில்லை. அங்கே சுற்றிச் சுற்றி வந்தது. அம்மாவிடம்,
“ நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா.. நான் எப்ப பறக்கலாம்?
சொல்லுங்கம்மா..” என்று கேட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாக்குருவி,
“ குட்டிக்குட்டி குருவிக்குஞ்சே! இறகு முளைக்கணும்.. சிறகு
முளைக்கணும்.. வால் முளைக்கணும்.. கால் வளரணும்.. அப்புறம் பறக்கலாம் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சே!
“
என்று சொன்னது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சுக்கு எல்லாம்
உடனே நடக்கணும் என்று நினைத்தது. அது தன்னுடைய உடலை மீண்டும் மீண்டும் பார்த்தது. அப்போது
உச்சி வெயில் வந்து விட்டது. நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சூரியன் அந்தக் கூரை
வீட்டுக்கு மேலே வந்து நின்றது.
வெளிச்சத்தினால் கண்கள் கூசிய குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு
கூட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது. சூரியன் சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து
அதற்கும் சிரிப்பு வந்தது. கிய்யா கிய்யா என்று சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சின்
சிரிப்புச்சத்தத்தை கேட்ட சூரியன் அங்கேயே நின்று விட்டது.
குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு சூரியனிடம், “ கிய்யா கிய்யா
சூரியன் மாமா சூரியன் மாமா நானும் உங்களை மாதிரி வானத்தில் பறந்து மிதக்கணும்…” என்று
பேசியது. அதற்கு சூரியன்,
“ ஆகா அதுக்கென்ன.. உன் சிறகுகளை அசைத்து மேலே பறந்து வா..” என்று
பதில் அளித்தது. உடனே குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு தன் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்தது.
என்ன ஆச்சரியம்! அது பறக்கத் தொடங்கிவிட்டது. ஆமாம். மேலே மேலே பறந்தது.
முதலில் ஊர்ந்து செல்லும் எறும்பு மேகங்களைக் கடந்தது. பின்னர்
தாவிக்குதிக்கும் முயல் மேகங்களைக் கடந்தது. அப்புறம் பாய்ந்து செல்லும் மான் மேகங்களைக்
கடந்தது. கர்ச்சித்துக்கொண்டிருந்த சிங்கமேகங்களைக் கடந்தது. கன்னங்கரேலென்று பிளிறிக்கொண்டிருந்த
யானை மேகங்களைக் கடந்தது. அப்படியே பறந்து பறந்து சூரியனுக்கு அருகிலேயே போய்விட்டது.
“ கிய்யா கிய்யா சூரியன் மாமா! சூரியன் மாமா! நான் வந்துட்டேன்..” என்று
கத்தியது. சூரியன் அந்தக்குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை தன் முதுகில் தூக்கி வைத்துக்
கொண்டது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கிறதல்லவா. அதற்கு
சிறகுகள் வலிக்குமல்லவா. அதனால் சூரியனின் முதுகில் உட்கார்ந்து உலகத்தை வேடிக்கைப்
பார்த்துக்கொண்டே வந்தது.
உலகத்தை வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.
இருட்டத் தொடங்கிவிட்டது. சூரியன் மாமாவின் காவல் நேரம் முடிந்து
விட்டது. இனி நிலா அத்தை வந்து விடுவாள். வேடிக்கை பார்த்துப்பார்த்து சோர்ந்து போய்
உறங்கி விட்டது குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு. உறங்கிக்கொண்டிருந்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை
அப்படியே பூப்போல சூரியன் நிலா அத்தையிடம் கொடுத்தது. நிலா அத்தை குளிர்ந்த தன் கரங்களால்
அதை வாரி அணைத்து அப்படியே கீழே இறங்கினாள்.
கூரை வீட்டிலிருந்த கூட்டில் பத்திரமாக அதை வைத்தாள். உறங்கிக்கொண்டே
நிலா அத்தையின் கைகளைப் பிடித்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை மெல்ல தட்டிக்கொடுத்தாள்.
குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு உறக்கத்தில் சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு
பெரிய குருவியாகி வானத்தில் அங்கும் இங்கும் சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பதாகக்
கனவு கண்டது.
நன்றி - வண்ணக்கதிர்
குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கிறதல்லவா. அதற்கு சிறகுகள் வலிக்குமல்லவா. அதனால் சூரியனின் முதுகில் உட்கார்ந்து உலகத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தது.
ReplyDeleteஅப்பா.. ரம்மியமான கற்பனை.குழந்தைகளுக்கு ரொம்பவும்
ReplyDeleteபிடிக்கும்.
ஆகச் சிறந்த கற்பனை....
ReplyDeleteசிறப்பு
குழந்தைகள் மிகவும் விரும்பக் கூடிய கதை.பாராட்டுகள் சார்!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDelete