Tuesday, 16 September 2014

புதிய அகராதி

உதயசங்கர்

Mohan Das (98)

மண்டியா தேசத்து ராஜா ஒரு குண்டக்கமண்டக்க ஆள். அவர் நினைப்பது போலத்தான் மண்டியா தேசத்து மக்களும் நடக்க வேண்டும். பாவம் மக்கள். ஒரு நாள் மண்டியா தேசத்து மண்டு ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு எப்போதும் அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். சிலநேரம் தூங்கி மறுநாள் காலையில் எழுந்திரிப்பதும் நடக்கும். அதிலொன்றும் விசேஷமில்லை. ஆனால் காலையில் எழுந்து சாயந்திரம் எழுந்தது மாதிரியே நடந்து கொள்வார். அரண்மனையில் விளக்கேற்றச் சொல்வதும் காலை பத்து மணியை இரவு பத்து மணியென்று நினைத்து மறுபடியும் தூங்கப் போய் விடுவார். சிலசமயம் இப்படியே ஒரு வாரம் வரை கூட இரவும் பகலும் மண்டுராஜாவுக்கு மாறி விடும். அதனால் என்ன என்கிறீர்களா? அவருக்கு மாறி விட்டதென்றால் மண்டியா தேசத்துக்கே மாற வேண்டும். அதான் பிரச்னை. மண்டுராஜா ஏதாவதொரு நாள் ஏதாவதொரு காலப்பொருத்தத்தில் மறுபடியும் சரியான சுழற்சியில் வரும்வரை மண்டியா மக்களும் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்க வேண்டியதிருக்கும்.

இப்பேர்ப்பட்ட மண்டு ராஜாவைப் பார்க்க அரண்மனைக்கு ஒரு நாள் மத்தியானம் ஒரு செந்நாப்புலவர் வந்தார். அப்போது தான் ராஜா ஏப்பம் விட்டு விட்டு வெத்திலையை அரைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். செந்நாப்புலவரோ எப்படியாவது மண்டுராஜாவிடம் தன் மொழிப்புலமையெல்லாம் காட்டி ஏராளமான வெகுமதிகள் வாங்கிச் செல்லலாம் என்று ஆசைப்பட்டார். அதனால் ராஜாவைப் பார்த்து,

“பானை வயிறோனே

யானை நடையழகா

அறிவிற் சிறந்த அமுதோனே

அழகிற் சிறந்த அழகனே

இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். ராஜாவுக்கோ தூக்கம் வந்து விட்டது. அதோடு அவருடைய அழகைப் பற்றியும், அறிவைப் பற்றியும் அவருக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே செந்நாப்புலவர் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் கிண்டல் செய்கிறார் என்றும் நினைத்துக் கோபம் வந்தது. உடனே செந்நாப்புலவருக்கு ராஜாவைக் கேலி செய்ததற்காக நூறு கசையடி கொடுப்பதோடு இப்போது இருக்கிற மொழி அகராதியை மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்க வில்லையென்றால் அவருடைய தலையை சீவி விடும் படியும் ஆணையிட்டார்.

பாவம் செந்நாப்புலவர்! கெஞ்சிக் கதறி கசையடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஆனால் அகராதி எழுத வேண்டுமே. என்ன செய்ய… ஒரு முடிவு செய்தார். முட்டாள் என்றால் அறிவாளி என்று மாற்றினார். வருகிறேன் என்றால் வரமாட்டேன் என்று மாற்றினார். இப்படி எல்லாவற்றையும் நேரெதிராக மாற்றி எழுதி ராஜா கையில் கொடுத்து விட்டு மண்டியா தேசத்தை விட்டு ஓடியே போய் விட்டார். பொழுது போகாமல் இருந்த ராஜாவுக்கு இந்த அகராதி ரெம்பப் பிடித்துப் போய் விட்டது. உடனே நாட்டு மக்களுக்கு இந்த அகராதிப்படியே இனி பேசவேண்டும். எழுதவேண்டும் என்று ஆணையிட்டார். மன்னர் ஆணையாச்சே மீற முடியுமா? எல்லோரும் பள்ளிக்கூடம், வீடு, கடை, சாலை, எல்லாவற்றிலும் புதிய அகராதிப்படியே எல்லாம் மாற்றப்பட்டது. எப்படி?

வா என்று கூப்பிட்டால் போய் விடவேண்டும். போ என்று சொன்னால் வர வேண்டும். அதே போல தா என்றால் தரக்கூடாது. தராதே என்றால் தர வேண்டும். வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம். வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். மக்கள் குழம்பிப் போனார்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாங்க என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள். கடைகளில் பொருள் வேண்டும் என்று சொன்னால் வேண்டாம் என்று நினைத்து தரவில்லை. வேண்டாம் என்று சொன்னதையே தந்தார்கள். ராஜாவுக்கு ஜாலியாக இருந்தது. தினசரி அரண்மனை வேலையாட்களிடம் இந்தப் புதிய அகராதி விளையாட்டை விளையாடினார். அவர்கள் குழம்பிப் போய் ராஜா அழைத்தால் போவதா இல்லையா அழைக்காமலிருந்தால் அவரிடம் போய் நிற்க வேண்டுமா என்று புரியாமல் ராஜாவையேச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நாடே குழம்பிப் போயிருந்தது.

இந்த நேரத்தில் அருகிலிருந்த பிங்கிஸ்தான் நாட்டு ராஜா மண்டியா தேசத்தின் மீது போர் தொடுக்கப்போவதாக ஓலை அனுப்பியிருந்தார். மண்டியா தேசத்து ராஜா பயந்தாங்குளி அதுவும் போர் என்றால் அவ்வளவு தான். உடனே மந்திரியிடம் பதில் அனுப்பச் சொன்னார். மந்திரியும் பிங்கிஸ்தான் நாட்டுக்கு மண்டியா தேசத்து புதிய அகராதியின் படி ஓலை அனுப்பினார்.

“ நாங்கள் பலசாலி. போருக்குத் தயாராக இருக்கிறோம். உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்ட மாட்டோம். நீ ஒரு கோழை. போருக்கு வா..”

அவர் எழுதிய ஓலையைப் படித்த பிங்கிஸ்தான் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? மண்டியா தேசம் பிங்கிஸ்தானிடம் சரணடைந்தது. அப்போது தான் தெரிந்தது ஓலையின் புதிய மொழி அகராதி விவகாரம். மொழிபெயர்ப்பாளர் சொன்னார்.

“ நாங்கள் பலவீனமானவர்கள். போருக்குத்தயாராக இல்லை. உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்டி விடுகிறோம். நீ ஒரு பலசாலி. போருக்கு வர வேண்டாம்..”

பிங்கிஸ்தான் ராஜாவும் அந்த நாட்டு மக்களும் சிரிக்கிற சத்தம் கேட்கிறதா?

No comments:

Post a Comment