Tuesday, 2 September 2014

ஆசைராஜாவின் ஆசை

உதயசங்கர்Photo-0115

 

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவர் ஆசைப்பட்டார். அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே ஆசை கொண்டவர். அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தனர். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து ராஜாவிடம் கொடுத்தனர். இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அநுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச்சிறந்த உடைகள் அவரிடம் ஏராளமாய் இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்து விட்டது. அதேபோல உலகிலே மிகச்சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார். உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த உணவுப்பண்டங்களைச் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக் கொண்டுவந்து ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தனர். சிறிது நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்து விட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்து விட்டது. மிகச்சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகுநாள் நிற்க முடியவில்லை. ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிப்பிரதானிகள் கவலை கொண்டனர். உடனே நாடெங்கும் முரசறைந்து ஆசை ராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் முடித்துக் கொடுத்து நாட்டில் பாதியும் தருவதாக அறிவிப்பு செய்தனர்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லாமூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தனர். ஒவ்வொருத்தரும் விதம் விதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப்பொருட்கள், கலைப்பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தனர். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்து விடுகிறான். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான்.

ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான். அவனும் என்னவெல்லாமோ யோசித்துப்பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவர்சியைக் கலியாணம் முடிக்க முடியாமல் போய் விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான். அதைப்பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு.. “ என்று கேட்டாள். கடைசியில் அவனும் பாட்டியிடம் அவன் கவலையைச் சொன்னான். அவனுடைய பாட்டியும், “ அடக் கோட்டிக்காரப்பயலே இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக்கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்றுமுன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டு வந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லி விட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிப்பிரதானிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? “ என்று கேட்டனர். அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிப்பிரதானிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“ என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிப்பிரதானிகளும் ருசித்தனர்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கலியாணம் முடித்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளியமரங்களை நட்டு வளர்த்தார். அதன்பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கி விட்டது.

கதை சொன்னவர் – டி.சந்திரலேகா/ மருதன்வாழ்வு

நன்றி- தமிழ் இந்து

1 comment: