Sunday 14 September 2014

நோயும் ஆரோக்கியமும் - ஒரு உளவியல் மற்றும் தத்துவப்பார்வை

 

உதயசங்கர்

abstract-landscape-paintings-common-thread 

நோய் என்பது ஒரு வெளிப்பாடு, ஒரு இருத்தல் நிலை, ( state of being ) ஒரு குறிப்பிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் உடலும் மனமும் மேற்கொள்ளும் செயல். அந்த வெளிப்பாடு அல்லது செயலின் மூலமாகவே உயிரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். உயிர் வாழ்வததொன்றே உயிரின் உச்சபட்ச லட்சியம். அந்த லட்சியத்துக்காக புறவயமாகவும், அகவயமாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது உயிரியக்கம். அந்த மாற்றங்களையே நாம் பொதுவாக நோய் என்கிறோம் இந்த மாற்றங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அகவயமான, புறவயமான நெருக்கடிகள் ஒட்டு மொத்த உயிரியக்கத்தில் நிரந்தரமாக ஏற்படுத்தும் மாற்றங்கள். ( chronic ) இரண்டாவது அவ்வப்போது தற்காலிகமாக புறவயமாக ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க உடலோ மனமோ மேற்கொள்ளும் செயல்கள். ( acute ). மூன்றாவது விபத்து, அறுவைச்சிகிச்சை, போன்ற வெளிப்படையான தாக்குதல்களுக்கு ( mechanical injuries ). ஈடு கொடுத்து உயிரியக்கம் ஏற்படுத்தும் மாற்றங்கள்.

நோய் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவதாக ஒட்டுமொத்த உயிரியக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள், அடுத்ததாக குறிப்பிட்ட இடங்களில், உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது நெருக்கடியில் உயிரியக்கம் உயிர் மீட்சிக்காக எடுக்கும் நடவடிக்கையினால் மட்டுமே அந்த உயிர் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிய உதாரணமாக தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும் போது உயிரியக்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் நுரையீரல்களைப் பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கையான தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை அந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை. அது நோய் அல்ல. அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை. இந்தச் செயலுக்கு மருந்துகளோ, இதைச் சரி செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது.

ஒரு குறிப்பிட்ட நெருக்கடிநிலையில் உயிரியக்கம் அந்த நெருக்கடி நிலையிலும், அந்த நெருக்கடிநிலையிலிருந்து மீண்ட பிறகும் உயிர் வாழ வேண்டியுள்ளது. இதற்காக அந்த நெருக்கடிநிலைக்கு ஏற்றவாறு ஒரு தனித்தன்மையுள்ள நிலையை உயிரியக்கம் மேற்கொள்கிறது. அத்தகைய நிலைதான் நோய் நிலையாக ஆகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணங்கிப் போவதற்காக உயிரோடிருப்பதைத் தொடர்ந்து இயக்கும் உயிர் இயக்கம் சார்ந்த எதிர்வினையே நோய். அதாவது நமது உயிரியக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் தனித்தன்மையுள்ள நிலை.

நோய் என்பது நீக்கப்பட வேண்டியதல்ல. மாற்றப்படவேண்டிய ஒன்று.

மேலே குறிப்பிட்ட நெருக்கடியோ, சூழ்நிலையோ, இல்லாத போதும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பதான பாவனையில் உயிரியக்கம் எடுக்கும் அதே நடவடிக்கைகள் அதாவது தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை தான் சரி செய்யப்பட வேண்டியவை. இதையே நோய் என்கிறோம். கடுமையான நெருக்கடிகளிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள உயிர் மேற்கொள்ளும் நடவடிக்கையே நோய் என்று புரிந்து கொணடோமானால் இந்த நடவடிக்கைகள் உயிரியக்கத்தில் சில பதிவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவுகள் மீண்டும் இதே போன்ற சூழ்நிலை அல்லது நெருக்கடிகள் வரும்போது மட்டுமே மீண்டும் இதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் உயிரியக்கத்தில் ஏற்பட்ட நலிவு காரணமாக இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதாவது இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் தான் நலமாக இருக்கமுடியும் என்ற தவறான பதிவு காரணமாக உண்மையில் நெருக்கடியான சூழ்நிலையில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இப்போது அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை இல்லாத போதும் தேவையான நடவடிக்கை என்ற பாவனை ஏற்பட்டு நிகழ்கிறது. அதன் மூலமே உயிர் தன்னை மீட்டுக் கொண்டதாகக் கற்பிதம் செய்கிறது. இந்தக் கற்பிதமே நோய்.

துரத்திவரும் அல்சேஷன் நாயிடமிருந்து தப்பிக்க ஓடுவது என்பது தான் அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் செய்ய வேண்டிய பொருத்தமான எதிர்ச்செயல். ஆனால் எந்த நாயும் துரத்தாத போதும் அல்லது குட்டி நாய் துரத்தும் போதும் தலை தெறிக்க ஓடும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் தான் நோய்நிலை. ஒரு முறை ஏற்பட்ட அநுபவமானது ( நெருக்கடிநிலை ) தங்களுடைய வேர்களின் மூலம் சில அனிச்சையான செயல்களை உருவாக்கி விடுகிறது. அந்த அநுபவத்தின் மூலம் ஏற்பட்ட நோய்நிலை தன் வேர்களை உயிரியக்கத்தில் விட்டுச் செல்வதன் மூலம் எத்தனை முறை பூட்டிய வீட்டின் பூட்டை இழுத்துப் பார்த்தாலும் மனம் சமாதனமடைவதில்லை என்பது மட்டுமில்லாமல் அனிச்சைச் செயலாக மாறி விடுவதும் உண்டு. பூட்டை இழுத்துப் பார்க்கும் நடவடிக்கை திருடர்களைப் பற்றிய நியாயமான பயத்தினால் அந்தச் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆனால் எந்த திருட்டுப் பயமும் இல்லாத போதும் பூட்டை இழுத்துப் பார்க்கும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் நோயாக மாறி விடுகிறது. அப்படி அனிச்சைச் செயலைச் செய்வதன் மூலமே அவர் தான் நலமாக இருப்பதான உணர்வைத் தருகிறது. ஆனால் தொடர்ச்சியான பொருத்தமற்ற எதிர்ச்செயல்கள் நோயின் ஆணிவேராக உருப்பெறுகின்றது. இந்த நோயின் வேர்கள் உயிரியக்கத்தில் வேர் கொண்டு விடுவதால் நாளடைவில் இதன் வளர்ச்சிப்போக்கில் விதை செடியாகி மரமாகி பூத்து காய்த்து கனிந்து விடுவதைப் போல இந்த நோய்நிலையும் பரம்பரை நோயாக மாறுகிறது.

நோயிலிருந்து மீட்டல்

ஒரு நெருக்கடிநிலைக்கு பொருத்தமற்ற எதிர்ச்செயலைச் செய்வதன் மூலம் நோய்நிலை உருவாகிறது. அதாவது அல்சேஷன் நாய்க்கும் குட்டி நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடியாமல் அல்சேஷன் நாய்க்கு எடுத்த எதிர்ச்செயலையே குட்டி நாய்க்கும் எடுக்கிறது உயிரியக்கம். இந்த நோய்நிலையைக் குணப்படுத்த பொருத்தமற்ற எதிர்ச்செயலை மாற்ற வேண்டும். நீக்கக்கூடாது. அதாவது பின்னால் துரத்திவருவது அல்சேஷன் அல்ல. அது ஒரு குட்டி நாய். அல்சேஷன் அளவுக்கு பயங்கரமானதோ, ஆபத்தானதோ இல்லை. அதற்கு தலைதெறிக்க ஓடும் எதிர்ச்செயல் தேவையற்றது. அல்சேஷனைக் கண்டு ஓடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று உயிரியக்கம் உணரவைத்தலே நோயிலிருந்து மீட்டல் ஆகும். அப்படி உணரும்போது உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயலை பொருத்தமான நெருக்கடிநிலை அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும்.

ஆரோக்கியம்

இதற்கு மாறாக ஆரோக்கியம் அந்தக் கணத்தில், அந்தக் கணத்தின் உயிர்த்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி ( கூடுதலாகவோ குறைவாகவோ அல்லாமல் ) எதிர்வினை புரிவதும், எதிர்கொள்வதும், சூழ்நிலையின் பரிமாணத்துக்கேற்ப துடிதுடிப்புடன் செயல்படுவதும், நெருக்கடியின் தன்மைக்கேற்ப உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதும் இயற்கைவிதிகளுக்கேற்ப உயிர் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் நிகழ்கிறது. சரியான சூழ்நிலையில் வளர்ந்து வரும் செடி பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதன் மூலம் சரியான சமயத்தில் சரியான காலத்தில் பூக்கிறது. அந்தப் பூக்கள் மணம் வீசி அனைவருக்கும் மகிழ்வூட்டுகிறது. ஆரோக்கியம் ஒன்றே எந்தத் தடையுமின்றி தன்னை முழுமையாகத் அர்ப்பணிக்கத் தூண்டுவது. எல்லா நரம்புகளும் முறுக்கேற்றப்பட்ட, வாசிப்பதற்குத் தயாராக உள்ள வீணை போன்றது ஆரோக்கியம். அதில் எல்லாஸ்வரங்களும், எல்லாராகங்களும் அலைகடலென பொங்கி வரும். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. எந்தத் தயக்கமோ, பயமோ, பிரமையோ, பலகீனமோ கிடையாது. இசைவெள்ளமென பாய்ந்து பரவத் தயாராக இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு நரம்பு பலகீனமாக இருந்தாலோ, அறுந்து போயிருந்தாலோ, அந்த வீணையால் முழுமையான, பரிபூரணமான இசையைத் தர முடியாது. என்ன முயற்சி செய்தாலும் இசை ஊனமாகவே தான் பிறக்கும்.

எனவே ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள்.

ஆரோக்கியமும் சிலபல முன்நிபந்தனைகள் கொண்டது. ஒரு தனிமனிதனோ, மனிதக்கூட்டமோ ஆரோக்கியமாக இருக்க அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டும் காரணிகளாக இருக்க முடியாது. அவர்கள் வாழும் சமூகம், ஏற்றதாழ்வுகளில்லாத, சமத்துவமான, எல்லோருக்கும் இடமளிக்கிற, எல்லோரையும் அங்கீகரிக்கிற, எல்லோருக்கும் சமவாய்ப்பு தருகிற, போட்டி,பொறாமைகள் இல்லாத, பள்ளம் மேடில்லாத, நீதியான, அறவுனர்ச்சிமிக்க சமுகமாக இருக்கும்போதே சமூகம் முழுமைக்குமான உண்மையான ஆரோக்கியம் சாத்தியம். அதுவரை ஆரோக்கியம் என்பது தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் பெரும்போராட்டமே.

Camera360_2014_1_12_113310

No comments:

Post a Comment