Monday, 15 September 2014

ஜங்க் ஃபுட் தேசம்

உதயசங்கர்

child-obesity

மண்டியா தேசத்து ராஜா அரசவையில் உள்நாட்டு முதலாளிகளிடமும், வெளிநாட்டு முதலாளிகளிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார். எல்லா முதலாளிகளும் தங்களுக்குக் கிடைக்கும் லாபம் போதவில்லை. இன்னும் அதிகமான லாபம் கிடைக்க மண்டியாவில் சில சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்கள். இதெல்லாம் மந்திரிகளின் ஏற்பாடுதான். ஏனெனில் மந்திரிகளே வேறு ஆட்களின் பெயர்களில் நிறைய தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நடத்தி வந்தார்கள். ராஜாவுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. முதலாளிகளின் வேண்டுகோளை ஏற்று பொருட்களின் விலையை ஏற்றுவதற்கு சம்மதித்தார். அதற்கான சட்டங்களில் கையெழுத்து போடப் போகும்போது அரண்மனைக்கு வெளியே கூச்சல், குழப்பம் கேட்டது.

ராஜா எழுந்து அரண்மனை உப்பரிகைக்குச் சென்று பார்த்தார். கூட்டம் கூட்டமாக விவசாயிகள் அரண்மனையின் வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். உடனே மந்திரியிடம் அவர்களை உள்ளே அனுப்பும்படி ஆணையிட்டார். அவ்வளவு பேரையும் உள்ளே அனுப்பினால் தாங்காது என்று நினைத்த மந்திரி ஒரு இருபது பேரை மட்டும் உள்ளே அழைத்து வர சேவகர்களுக்கு ஆணையிட்டார் மந்திரி. இருபது விவசாயிகள் ராஜாவைப் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ராஜா அவர்களிடம்

“ உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்.. மாதம் மும்மாரி பெய்கிறதல்லவா.. மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கிறதல்லவா?..”

என்று அப்பாவியாய் கேட்டார். அதற்கு அந்த விவசாயிகள் “ ராஜாதிராஜாவே.. மழை பெய்து இரண்டு வருடங்களாகி விட்டது… விவசாயம் பொய்த்து விட்டது..விவசாய நிலங்கள் அழிந்து வீடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏதோ கொஞ்சநஞ்சம் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது… அதுவும் அழிந்து விடும் போல இருக்கிறது…நாங்கள் வாழ வழியின்றி தவிக்கிறோம்..”

என்று கண்ணீர் விட்டனர். அதைக் கேட்ட ராஜா மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையைக் குனிந்து கொண்டார். ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் ராஜா மந்திரியிடம் மாதம் மும்மாரி பெய்கிறதா என்று கேட்கும்போது அவர் ஆமாம் ராஜாவே என்று பதில் சொல்லுவார். ராஜா விவசாயிகளை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே வந்தார்.

வெளிநாட்டு முதலாளிகளிடம் “ உங்கள் லாபம் அதிகரிக்க இன்னொரு புது வழி இருக்கிறது. கொஞ்சநஞ்சம் நடந்து கொண்டிருக்கிற விவசாயத்தையும் நிறுத்தி விடச் சொல்கிறேன்.. ஆனால் உங்கள் கம்பெனியிலிருந்து விலை மலிவாக என் நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியுமா…”

என்று கேட்டார். உடனே அந்த முதலாளிகள் ஈயென்று பல்லைக் காட்டிய படியே, “ அப்படியே ராஜா.. உங்களுக்கு இலவசமாக ஆண்டு முழுவதும் உணவு கொடுத்து விடுகிறோம்.. ஏதோ ஏழை நாடுகளுக்கு எங்களால் இயன்ற சேவை….” என்று சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. உடனே நாடெங்கும் முரசறையச் சொன்னார்.

ஐந்து பைசாவுக்கு டர்கரும், பத்து பைசாவுக்கு கூட்சாவும், ஏழு பைசாவுக்கு பாண்ட்விச்சும் மூன்று பைசாவுக்கு காக்கா, டூப்சி, குளிர்பானங்களும் இருபத்திநாலு மணி நேரமும் வீட்டுக்கு வீடு கொண்டு வந்து கொடுக்கப்படும். வீட்டிலிருந்த படியே கூப்பிடுவதற்கு அல்லைபேசி இலவசமாகத் தரப்படும். ஆனால் அதிலிருந்து அழைக்கப்படும் ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். உணவுப்பொருட்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு வீடு விலையில்லா தொல்லைக்காட்சிப் பெட்டியொன்று வழங்கப்படும். ஆனால் அதில் விளம்பரங்களைத் தவிர வேறு எதுவும் ஒளிபரப்பாகாது. அப்படி நிகழ்ச்சிகள் இல்லாத சமயத்தில் தொல்லைக்காட்சிப் பெட்டியின் திரையில் கூட்சா தின்ற படி இருக்கும் ராஜாவின் அகன்ற முகம் மட்டுமே தெரியும். அதைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

இப்படியான அறிவிப்புகளை வெளிநாட்டு கம்பெனிகள் செய்ததைப்பார்த்து ராஜாவே மகிழ்ந்து போனார். இப்போது மக்கள் மூன்று வேளையும் கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, குருளைக்கிழங்கு சிப்ஸ், டப்பைக்கிழங்கு ஃபிங்கர்சிப்ஸ், என்று விதவிதமாகச் சாப்பிட்டுக் கொண்டு வீட்டிலேயே கிடந்தனர். விளம்பரங்கள் புதிது புதிதாக வந்தன. விளம்பரங்களில் மண்டியா தேசத்து மக்களின் மனங்கவர்ந்த சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் நடித்தனர். அவர்கள் சாப்பிடுவதனாலேயே மக்களும் அதைச் சாப்பிட்டனர். வியாபாரம் பெருகியது.

ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை மாற்றக்கூடாது. வெளிநாட்டு உணவுப்பொருட்களால் புதிய நோய்கள் உருவாகும் என்று மன்றாடினர். ஆனால் ராஜா கேட்கவில்லை. மந்திரியும் கேட்கவில்லை.

மண்டியா தேசத்தில் ஜங்க்ஃபுட் வியாபாரம் கொழித்து நடப்பதைக் கண்ட மற்ற வெளிநாட்டு முதலாளிகளும் இங்கே கடை விரித்தனர். ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைத்தனர். ராஜாவுக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம். ஆனால் நாட்டில் விவசாயம் இல்லை. ஒரு உணவுப்பொருள் கூட உற்பத்தி ஆகவில்லை. நாளாக நாளாக அரசாங்கத்தின் கஜானாவும், மக்களின் கைப்பணமும் கரைந்தது. சரியாக அந்த நேரத்தில் எல்லாவெளிநாட்டுக் கம்பெனிகளும் தங்களுடைய உணவுப்பொருட்களுக்கு விலையை ஏற்றி விட்டனர். மக்களால் வாங்க முடியவில்லை.

அதோடு இந்த கூட்சாவையும், டர்கரையும், பாண்ட்விச்சையும், காக்காவையும், டூப்சியையும் சாப்பிட்டு எல்லோரும் குண்ண்ட்ட்டாகி விட்டனர். சதை மலைகளைப் போல அசைந்து கொண்டிருந்தனர். உடல் மெலிய வெளிநாட்டு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்போது மண்டியாவின் பாரம்பரிய மருத்துவர் ஒருவர் எல்லோரும் மெலிவதற்கான மருந்துகளைச் சூத்திரமாக எழுதி வைத்திருக்கிறார் என்று ஒரு ரகசியப்பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. உடனே அந்த செய்தி மக்களிடம் பரவியது. பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவு இதுவே மந்திரம்.மக்கள் இதைப் படித்தார்கள். என்றாலும்  மண்டியா நாட்டுக்குச் சொந்தமான, பாரம்பரியஉணவுப்பொருட்கள் என்னவென்றே எல்லோருக்கும் மறந்து போனது. அந்த கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, போன்ற உணவுப்பொருட்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். அதைச்சாப்பிடாமல் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

உங்கள் நாட்டில் அப்படியெல்லாம் இல்லை அல்லவா? அதற்கப்புறம் அந்த மண்டியா நாட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா.. அந்த ஜங்க் ஃபுட் தேசம் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமையாகி விட்டது. அந்த நாட்டு தொல்பொருள்ஆய்வாளர்கள் மண்டியா நாட்டு பாரம்பரியமான உழவுத்தொழில் பற்றியும், உணவுப்பொருட்கள் பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

No comments:

Post a Comment