மனிதமனத்தின் விசித்திரம் அது அன்பால் மட்டுமே நிறையுமாறு விதிக்கப்பட்டிருப்பது. ஆனாலும் மனிதர்கள் அதைப் புரிந்து கொள்ளாது வேறு வேறு உருப்படிகளால் நிறைக்கப் பார்ப்பது, பின்னர் தவறவிட்ட அன்பே வந்து தட்டும்போது திறந்து கொள்ள இயலாது தவிப்பது, தவறான சாவியால் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பூட்டு பின்பு சரியான சாவிக்கும் இசைவு தர இயலாத நிலைக்குத் தள்ளப்படுவது போல் தவிக்கின்றனர் மனிதர்கள். திறந்து கொள்ளத் தயாராக இருந்த பூட்டை நமது பொறுப்பின்மை உடைத்துப் போடுகிறது. அன்பின் வரம் மறுக்கப்பட்டவர்களை சாத்தான் சுவீகரித்துக் கொள்கிறான். ஒரு போதும் மறுதிறப்பு இல்லாத உலகம் அவனுடையது. சாத்தானின் அடையாள அட்டையைப் பெற்றவர்கள் அடுத்த கணமே அவனுக்கான முகவர்கள் ஆகி விடுவது அவனது வரம். எங்கே தான் இல்லை சாத்தானின் ஆட்சி? சொற்கள் கூடத் தேவையில்லை. பார்வையாலேயே கூட அல்லது மறுக்கப்படுகிற பார்வையாலேயே கூட அவனது உலகம் அடுத்தடுத்த சதுர அடியை வென்று முன்னேறமுடிகிறது.
அவரவர் சொந்த வாழ்க்கையை- முழு வாழ்க்கையைக் கூட அல்ல, ஒரே ஒரு நாளில் கடந்து வந்த அனுபவங்களை, ஒரு மீள்பார்வை பார்க்கமுடியுமானால் நம்மிடமும் இருக்கக்கூடும் ஒர் அடையாள அட்டை. மீள்பார்வைக்குக் கண்களை இறுக்க மூடிக் கொண்டு உட்கார்ந்தால் தான் சாத்தியம் என்று கருத வேண்டியதில்லை. உயிரை உருக்கும் ஓர் இசை கேட்பவரை அவர்கள் பிறக்காத காலத்திற்கும் முன்பான ஒரு யுகத்தில் கொண்டு நிறுத்துவதில்லையா! சிறந்த இலக்கியம் நமக்குள் பார்த்துக் கொள்ளும் ஓர் அகக்கண்ணாடியை மெலிதான கதியில் முன் வைக்கிறது. நாம் வாழும் காலத்தில் சிறுமைப்படுத்தப்படும் மதிப்பீடுகளை, மலினமாக்கப்படும் பண்புகளை கை விடப்பட்ட மெல்லியல்புகளை ஒரு காட்சிச் சித்திரமாக நமக்குள் ஒட்டிக்காட்டும் வல்லமை புனைவுகளுக்கு உண்டு. உள்ளம் பதைக்கத்தக்க எத்தனை விஷயங்களை வெறும் செய்தியாக நாம் கடந்து செல்கிறோம். சரி அப்புறம் என்ற சொற்கள் அத்தகைய விஷயங்களின் மீதான வன்முறை அன்றி வேறென்ன? ஒரு சிறுகதை நம்மை விசாரணைக்கு உட்படுத்தும் அளவு கருப்பொருள் நிறைந்தது.
‘ நட்சத்திரம் விழும் நேரத்தில் ‘ சிறுகதைத் தொகுப்பு மலையாள எழுத்தாளர் கிரேஸி அவர்கள் படைத்திருக்கும் நுட்பமான புனைவுகளின் ஒரு திரட்டு. ‘ஓங்கி மண்டையில் அடித்தாற் போல் நம்மை உலுக்கி விழித்தெழச் செய்யாத ஒரு புத்தகத்தை ஏன் மெனக்கெட்டு படிப்பானேன்’ என்றார் காஃப்கா. கிரேஸியின் கதைகள் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் வெவ்வேறு முறையில் மண்டையில் மட்டுமல்ல கன்னத்திலும் பளார் பளாரென்று அறைவது போலிருக்கிறது. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்குக் கூட மீண்டும் அவற்றுக்குள்ளே தான் பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது. மிகுந்த வித்தியாசமான கோணத்தில் மிகச் சிறிய கட்டமைப்புக்குள் எப்படி கிரேஸி அத்தனை வலிமையான கதைகளைப் படைக்கிறார் என்பது ஓர் அதிர்ச்சி அனுபவம் என்றால் எப்படி அதே வலுவோடு அதைத் தமிழில் உதயசங்கர் வழங்குகிறார் என்பது அடுத்த அதிர்ச்சி.
கல்லு என்னும் முதல்கதை, காமவெறிக்கு இலக்காகும் கதியற்ற ஒரு கிராமத்து இளம்பெண்ணுக்குத் தடுப்புக்காவல் அரண் அமைத்து காக்கத் துடிக்கிற ஒரு தாயின் காத்து அவனையும் வீழ்த்தியே மரிக்கிறாள். பின்னர் கல்லுவைத் தவறான பார்வை பார்த்து நெருங்கும் எவனுக்கும் முன்பாக இறந்துபட்ட தாயின் கொடி போன்ற இரண்டு கரங்களும், கோபத்தீ எரிகிற முகமும் வந்து நிற்கிறது. விசாரணை செய்யும் சாக்கில் அவளை அடையத் துடிக்கும் போலீஸ் அதிகாரியும் சரி, வேறெவனும் சரி ஒன்றே போல் இந்தப் பிணக்காட்சியைப் பார்த்துத் திணறி விழுகின்றவர்களே. கதை அங்கே முடிவதில்லை. தன் மீது காதல் கொண்டிருக்கும் வாலிபனிடம் அவள் வெட்கம் விட்டு என்னைக் கட்டிக் கொள்ளேன் எனும்போது அவனோ, இம்மாதிரியாகத் தங்கள் வாழ்வின் குறுக்கேயும் பிணக்காட்சி வரக்கூடும் என்று சொல்லி நடுங்கி மறுத்து விடுகிறான். த்னது வடிவத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் பெருகும் நிராசையின் பரிதவிப்பில் கல்லு தரையில் உருண்டு கதறுகிறாள். சமூகத்தில் தூய்மையான அன்புப் பெருவெளி கிடையாதா என்று இந்தக் கேட்பதாக எனக்குப் பட்டது. பெண் உடல் ஆண்களின் எல்லா மூர்க்கத்தனத்தையும் மறுகேள்வியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சமூக நியதியின் முன்பாகத் தான் நீளுகின்றன கார்த்துவின் கொடி போன்ற இரண்டு கைகளும் பிச்சுவாக்கத்தி குத்தி நிற்கிற நெஞ்சும்,கோபத்தீ எரிகிற முகமும்..
பெண்ணுடல் குறித்த அலட்சியம் அல்லது அவமதிப்பு அல்லது ஆதிக்கம் இந்தத் தொகுப்பின் மற்ற பல கதைகளிலும் வெவ்வேறு களத்திலிருந்து பறித்து வந்து தரப்படுகிறது. ’பொம்மைக்குழந்தை’ கதையில் மனமுதிர்ச்சி அடையாத இளம்பெண்ணை பொம்மைக்கான அவளது ஆர்வத்தைப் பயன்படுத்தி வசப்படுத்தும் ஆண். ‘ நாங்கள் பாவம் செய்யாதவர்கள் ‘ சிறுகதையில் இன்னதென்று தெரியாமலே அலைவுறும் தம்பியின் எதிரே கூட்டத்தால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண், அதைப்பார்த்தும் குறுக்கிடக் கையாலாகதவர்களாக வேடிக்கை பார்ப்போர், ‘ சீதாயாணம் ‘ கதையில் தனது பொருளாதாரத் தேவைக்காக மேலதிகாரிக்கு மனைவியையே படையலிடும் கணவன், வேலைக்காரப்பெண்ணை என்னவும் பேசலாம் என்று சொற்களாலேயே பலாத்காரம் செய்யும் சூழலைச் சொல்லும் ‘ இது ஜோசப்பினுடைய கதை, அன்னாவுடையதும்’ தனது எண்ணங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கத் தெரியாது சிதறும் பெண்ணைப் பங்கு போட்டுக் கொள்ளும் புறவுலகம் குறித்தது ‘ ஒரு ஜனரஞ்சகக் கதையின் முடிவு ‘
‘ பந்து ‘ கதை ஒரு விளையாட்டு வீரனின் மனைவியை முக்கியப் பாத்திரமாகக் கொண்டது. எப்போதும் தனது திறனுக்கான பாராட்டுக் கரவொலியைப் புலன்களில் உணர்ந்தால் மட்டுமே இயங்க முடியும் என்றிருக்கிற கணவனிடம் சமதையான தாம்பத்திய உறவுக்குப் பாதை பிடிபடாது தவிக்கும் அவள் த்னது சுகதுக்கங்களை அவனது விளையாட்டு வெறியிடம் ஒப்புக் கொடுத்து விட்டுத் திணறுகிற அனுபவத்தைப் பேசுவது உண்மையில் மாறுபட்ட புனைவு.
‘ பாஞ்சாலி ‘ கதை மறுவாசிப்பு என்று அமையாத ஆனால் உருவகமாக திரௌபதையின் அவஸ்தைகளை எடுத்து வைக்கிறது. பாலியல் சேட்டைகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கும் வேறு சொந்த உணர்வுகள் ஏதுமற்ற உருவமாகத் தன்னை நினைக்கும் கணவனை அவனது பாணியிலேயே கதறடிக்கிறாள் கிருஷ்ணா.
தொகுப்பு முழுவதுமே சாட்டையடியான கதைகள் நிறைந்திருக்கின்றன என்றாலும் ஒரு சில வியப்புக்குரிய தளத்தில் பின்னப்பட்டிருக்கின்றன. ஒரு சாதாரண ரயிலின் பயணத்தை, அதன் விதவிதமான கூவல்களை, வேகம் கூட்டுதலை, தணித்தலை, வழியில் ஏதாவது ஓரிடத்தில் கொஞ்சம் நின்று விட்டு நகர்வதை ஆட்டங்களோடு செல்வதை யார் தான் சிறு வயதிலிருந்தே கவனிக்காதிருந்திருக்க முடியும்… அதற்கு கிரேஸி முன்வைக்கும் காரணங்கள் அசாத்திய புனைவிலிருந்து எழுவது. வறுமை, பட்டினி, அரசியல் அராஜகம், வன்கொடுமை, போன்ற நிலைமைகளின் விளைவாகத் தண்டவாளங்களின் ஊடே கொலையுண்டோரும், தற்கொலை புரிந்தோரும் ரயில் எஞ்சினுக்கு முன் வைக்கும் வேண்டுகோளுக்கு உயிரற்ற அந்த வண்டித் தொடர் தனது இருதயத்திலிருந்து கொடுத்த உறுதிமொழியைத் தான் காலகாலமாக வழி நெடுக இப்படியான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்கிறது ‘ காட்சிகளின் மறுபக்கம் “ சிறுகதை.
மந்திரக்கண்ணாடி சிறுகதை மனிதத்தன்மை படைத்த ஒரு கள்வனின் கதை. பள்ளிச்சிறுமியை திருமண ஆசை காட்டிச் சீரழித்து விட்டு அவளை மையப்ப்டுத்தும் தொழிலில் முதல் வாய்ப்பைத் தனக்குத் தருகிற கேடுகெட்ட நண்பனுக்குத் தெரியாமல் அந்த அபலைப் பெண்ணை தப்ப விடுகிறான் அவன். தலைக்குப்பின் ஒளிவட்டம் தோன்றிய தேவனாய் தன்னை உணர்த்தும் ஒரு மந்திரக்கண்ணாடி முன் நிற்பவன் சிறைப்பறவையைத் தப்பவிட்ட கோபத்தில் நண்பன் வந்து தாக்கும் போது தானும் சாத்தானாக உருமாறுவதை அதே கண்ணாடியில் விசனத்தோடு பார்க்கும் இடத்தில் முடிகிறது கதை.
தலைப்புக்கதை ஒரு கவிதை. இதன் நாயகனும் திருடன் தான். ஆனால் அவனை உய்ர்ந்த இடத்தில் பொருத்தி அனுப்புகிறாள் அவன் திருடப்போன இல்லத்தின் பெண்மணி. அதன் பின்புலம் வேத்னையானது. முற்றத்தில் எதற்கோ நடந்து கொண்டிருக்கும் அவளை அவனும் முதலில் தவறானவளாக நினைத்துப் பிறகு திருத்திக் கொள்கிறான். அது அவன் இதுவரை பெறாத அனுபவ வெளியாக இருக்கிறது. அவளோ அவனோடு நடந்தபடி நட்சத்திரங்களைக் காட்டி அதில் வீழும் ஒன்றைக் குறித்தான விவரிப்பில் இறங்குபவள் ஒரு கட்டத்தில் நீ யார் என்று அவனைக் கேட்கிறாள். நான் திருடன் என்பவனிடம் எனது கணவரும் திருடர் தான் அவர் திருடுவது பெண்களின் புனிதத்தை..நீ? என்று அவள் கேட்கும் கேள்வியின் அதிர்ச்சிக் கணத்தில் அவன் காணாது விலகிப் போய் விடுகிறான்.
‘ ஒரோதாவும் பிரேதங்களும் ‘ கதை கவித்துவ நடையில் அமைந்த முக்கிய படைப்புகளில் ஒன்று. ரத்தமும் மாமிசமும் புதிரான மொழியில் கன்னிகாஸ்தீரிகளின் அலைவுறுதலைப் பேசுகிறது.
இப்படியாக விரியும் இந்தக் கதைகளின் கருவைக் காட்டிலும் காந்தப்புலத்தை வரைவது போன்ற நேர்த்தியோடு புள்ளிகளை கிரேஸி வைத்துக் கொண்டே போய் இணைத்துக் கலப்பது தான் வாசிப்பின் கொடை என்பது முக்கியமானது. கதைகளைக் காட்டிலும் கிரேஸியின் அப்பட்டமான மொழி கதைக்களத்தின் தன்மையை வாசகரின் உள்ளத்தில் சட்டென்று பற்றி எரியத் தக்கதாய் அதிர்ந்து பார்ப்பதாய் அய்யோ என்று இரங்குவதாய், ஓ..என்று கதறுவதாய் அமைந்திருப்பது எளிதில் கடக்க முடியாதது. குலசேகர மன்னன் ஒவ்வொரு முறை இராமாயாணம் கேட்கும் போதும் சீதையை மீட்டெடுக்கப் படையோடு கடற்கரைப் பக்கம் போய் விடுவான் என்று புராணிகர்கள் சொல்வர். இந்தக் கதைகளை வாசிக்கையில், கதையில் அப்படியான ஒன்றுதலோடு, நடக்கும் அநீதியை இடைமறித்து நாம் ஏதும் செய்யமாட்டோமா என்று பரிதவிக்கத் தக்க உணர்வுகளை கிரேஸியின் அசாத்திய எழுத்து நடை தூண்டுகிறது. தமிழிலும் அதன் வலுவைப் பெயர்த்துக் கொண்டு வந்ததில் உதயசங்கரின் ரசனை தோய்ந்த பணி மிகுந்த பெருமிதம் ஊட்டுவது.வாசல் பதிப்பகம் பாராட்டுக்குரியது. ‘ இருட்டைத் தீப்பந்தத்தால் கீறுவது ‘ என்ற தலைப்பிலான அற்புதமான அறிமுகம் ஆழமிக்கது.
கிரேஸியின் கதைகளைப் போலவே பின் இணைப்பாக சேர்க்கப்பட்டிருக்கும் அவரது நேர்காணலும், கட்டுரை ஒன்றும் சலனங்களை ஏற்படுத்த வல்ல தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவரது துணிவான எழுத்தை விடவும், அது குறித்த ஆர்ப்பாட்டம் அற்ற அவரது பதில்களில் ஒலிக்கும் நேர்மை சமூகத்தின் பாசாங்குகளைச் சுட்டெரிக்கிறது, அவரது கதைகளைப் போலவே.
நட்சத்திரம் விழும் நேரத்தில்
கிரேஸி
தமிழில்- உதயசங்கர்
வெளியீடு- வாசல் பதிப்பகம்
40-டி/3 வசந்த நகர் முதல் தெரு
மதுரை-625003
9842102133
நன்றி – புத்தகம் பேசுது அக்டோபர் 2012
நண்பரே, உங்களுடைய பதிவுகளைப் படிக்க மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் எழுத்துக்கள் சிறியவையாகவும், வரிகளுக்கிடையே உள்ள இடைவெளி குறைவாகவும் உள்ளதால் படிக்க சிரமமாக இருக்கிறது. இக்குறைகளை நிவர்த்தி செய்தால் உங்கள் பதிவிற்கு வருகை கூடும்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.