Sunday 7 October 2012

பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானதே..

black,and,white,drawing,face,girl,art,woman-a8619ec48f601bdb6c57c8a2d15adca9_h_large   

கமலாலயன்

 

மலையாளத்தில் எழுதிக் கொண்டிருப்பவரான கிரேஸியின் கதைகள் இரண்டாவது முறையாகத் தமிழுக்கு ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள், தேர்வு செய்யப்பட்ட ஒரு கதைத் தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆக எட்டுப்புத்தகங்களின் ஆசிரியர் கிரேஸி. கல்லூரிப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற பின் கணவர்- மகளுடன் கேரள மாநிலம் ஆலுவாவில் வசித்து வருபவர்.

” எப்படி நீங்கள் எழுத்தாளரானீர்கள்?” இந்தக் கேள்வி எழுதுகிறவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்படுகிறது. இந்தக் கேள்விக்கு யாரால் சரியாகப் பதில் சொல்ல முடியும் என்று கேட்கிறார் கிரேஸி. இருப்பினும் அவருக்குச் சொல்லுவதற்கு ஒரு பதில் இருக்கவே செய்கிறது. கிரேஸி பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு ஸ்லோகப் போட்டி நடந்திருக்கிறது. இவராக உருவாக்கிய ஒரு ஸ்லோகத்தை ‘ இப்படியான ஒன்றைக் கேள்விப் பட்டதேயில்லை.” என்று சகபிள்ளைகள் கோபிக்கின்றனர். அதைச் சொல்லுமாறு வாத்தியார் கேட்க இவருக்குச் சுத்தமாக அது மறந்து போகிறது. வாத்தியாரின் கேள்வியும் பிள்ளைகளின் கைகொட்டிய சிரிப்பும் இவரைக் கண்ணீரில் வழிந்தோடச் செய்கின்றன. அப்படி ஏதேதோ பூமிகளினூடே பிரயாணம் செய்து யாருக்கும் தெரியாமல் ஏராளமான நாலுவரிக் கவிதைகளைத் துண்டுக் காகிதங்களில் எழுதி ஒளித்து வைத்திருந்திருக்கிறார். எழுத்தில் வடிக்காதவற்றை மனசில் பத்திரப்படுத்தி அடைத்து வைத்திருக்கையில் பாடப்புத்தகத்தில் வாசித்த ஒரு கதையிலிருந்து கதையின் சாத்தியங்கள் குறித்துப் புரிந்து கொள்கிறார். தன்னுடைய சின்னச் சின்னத் துக்கங்களை கதையில் சொல்லி சிறிய கவிதைகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஒரு நாள் அந்தக் துண்டுக் காகிதங்களெல்லாம் சேர்ந்து அடுப்பிற்குள் ஏறி விழுந்ததையும் அவர் பார்க்க நேர்ந்திருக்கிறது. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஏற்ற வேலை இதொன்றும் இல்லையென்ற ஒரு தாக்கீது தீச்சூட்டுடன் பதிலாகக் கிடைக்கவும் செய்திருக்கிறது.

இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உற்று நோக்க முடிகிறது இவரால். தன் உயிரைப் போல இயற்கையை சிநேகிக்கத் தொடங்குகிறார். அப்போது தான் பெண்ணும் இயற்கையும் ஒன்றே என்ற ஞானம் கைவரப் பெறுகிறது. பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானது தான் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

கதைகள், புனைவுகளின் இனிமைகளால் நிறைக்கப்பட்டவையென நம்புகிறோம். பொழுதுபோக்குவதற்கு உதவுபவை, எழுதுபவர்களின் கற்பனையில் உதிப்பவை, அழகியல் அம்சங்களால் அணி செய்யப்பட்டவை. நேர்க்கோட்டுத் தன்மையிலோ அல்லது அநேர்க்கோட்டுத் தன்மையிலோ மரபு சார்ந்தும் நவீன கதை சொல்லல் முறை சார்ந்தும் அமைந்திருப்பவை என்று வடிவம் பற்றிய விளக்கங்களைக் கேட்டு வருகிறோம். அப்புறம் கதைகளின் உள்ளடக்கம்-பாடுபொருள்- இருக்கவே இருக்கிறது.

இப்படியான மனப்பதிவுகள் படைப்புலகம் சார்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இவை எல்லாமே உண்மைகள் தாம். ஒரு பெரிய உண்மையின் பகுதி உண்மைகள். இவற்றோடும் இவற்றுக்கு அப்பாலும் தான் வாழ்க்கையின் தரிசனம் நிகழ்கிற இடங்கள் உள்ளன. அந்த வாழ்க்கையில் ” காத்திருப்போரும் மௌனிகளும் தென்பட்டு மறைகிறார்கள் ( இந்தக் கதைகளில்) விரல்களுக்கு இடையே பிளேடுகளை மறைத்திருப்போரும் தமக்குள் அசையும் பெண்டுலம் உடைந்தோரும் திருடர்களும், ஏமாளிகளும், ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்கள் கால் வைத்த இடத்தில் எல்லாம் நிலம் சரிகிறது. பறக்கத் துவங்கினால் இறக்கை முறிகிறது. ஒரு பொழுதைக் கடப்பது இவர்களுக்கு ஒரு யுகத்தைக் கடப்பது போல.”

மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் கிரேஸி கதைகளின் தமிழ் மொழியாக்கத் தொகுப்பில் பின் அட்டையில் இடம் பெற்றுள்ளன. 23 கதைகள் மற்றும் கிரேஸியுடனான நேர்காணலும், ‘ எழுத்தாளனின் பிறப்பு’ என்ற அவரின் சுய அனுபவக் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றவை.

சின்னஞ்சிறிய கதைகள். ‘ ஒரு ஜனரஞ்சகக்கதையின் முடிவு ‘ மட்டுமே பெரிய கதை. 9 பக்க அளவு வந்துள்ள கதை. இத்தொகுப்பிலேயே இது ஒன்று மட்டுமே. பெரும்பாலான கதைகள் ஒன்றரையிலிருந்து மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகின்றன. பக்கங்களின் அளவு கொண்டு சிறுகதைகளை அளக்க முடியாது. அதிலும் கிரேஸியின் கதைகளை.

வாழ்க்கையின் பிரம்மாண்டமான துகள்கள் இந்தக் கதைகளில் சிதறிக் கிடக்கின்றன. எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் அநாதி காலந்தொட்டு அலைந்து கொண்டிருக்கிற துகள்களைப் போன்றே கண்ணுக்குப் புலப்படாத தொலைவில் மிதப்பவையாய் இவை இருக்கின்றன. நட்சத்திரம் விழுவதைப் பார்த்தால் கெட்ட சகுனம் என்பார்களாம். ஆனால் நட்சத்திர உலகில் கண்கள் நிலைத்திருக்கப் பார்த்திருக்கிற அந்தப் பெண்ணுக்கு விண்மீன் பொட்டுகள் சிதறிக் கிடக்கிற அந்த வானவெளி எத்தனை உபயோகமில்லாத வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைவுபடுத்துகின்றன. நட்சத்திரம் விழுவதைப் பார்க்கையில் கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படுகிறது அவளுக்கு.

அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் திருடவருகிறவன் தான் அவன். அவனுடைய விரல் நுனிகளில் இந்திரஜாலம், அவன் தொட்ட மாத்திரத்தில் சன்னல் கம்பிகள் வழி விட்டு ஒதுங்குகின்றன. அலமாரிகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் விரியத் திறந்து கொள்ள வைக்கிறவன் அந்தத் திருடன். அவன் அந்தப் பெண்ணின் மனக்கதவைத் திறந்து பார்க்கிற தருணம் தான் ‘ நட்சத்திரம் விழும் நேரத்தில் ‘ கதை. அரண்மனை போன்ற வீடும் உயர்ந்த உத்தியோகத்துக் கணவனும், காரும்- இப்படி எல்லாம் வாய்த்திருந்தும் கூட கருத்து மெலிந்திருந்த அவளுடைய கண்களில் தெரிந்த ஏராளமான துயரங்களின் முன்னால், காற்றில் அலையும் தீபஒளியைப் போல அவனுடைய முரட்டு இதயமும் கூட துடித்து விலகிப் போய் விடுகிறது. நடைமுறை வாழ்க்கையில் உண்மையான திருடர்கள் யார் எந்த வகையில் அவர்களை இனங்கண்டறிய முடியும். எப்படி அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்று வாழ்வது என்ற பல ஆதாரமான கேள்விகளை எழுப்புவதாக இந்தத் தலைப்புக்கதை அமைந்திருக்கிறது. ஒரு திருடனின் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண் இந்தப் பிண்ணனியில் அவனது நெஞ்சில் தஞ்சமடைந்திருக்கிற அந்த நேரம் எவ்வளவு விலைமதிப்பற்றதாக இருக்கிறது என்று மலைத்துப் போகிறோம்.

‘ காட்சிகளின் மறுபக்கம் ‘ கதை ஓர் அபூர்வப்பதிவு. ரயில்களின் சக்கரங்களில் ஏதேதோ காரணங்களால் சிக்கிச் சிதைந்து போகிற மனிதர்களின் அமானுஷ்யக் குரல்கள் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. அவை அவ்வப்போது மௌனமாக ஞாபகங்களில் மூழ்கிச் சலனமற்று நிற்கின்றன. மெதுவாக ஓடுகின்றன. ஆற்ற மாட்டாத இந்தத் துயர நினைவுகளின் குற்ற உணர்வுகளால் நீட்டி முழக்கிக் கூகூ வென அலறி ஓய்கின்றன. ஆடி அசைந்து பிரயாணம் செய்கின்றன. இப்படி ஆடி அலைந்து கடந்து சென்றது எல்லாம் புறக்காட்சிகளின் மறுபக்கத்தினூடாகவே என்று ரயிலின் ஞானக்கண்கள் உணர்கின்றன. அந்தக் காட்சிகளின் பயங்கரத்தை நினைத்து நடுங்கி நசுங்கிப் போன கனவினுடைய துர்நாற்றத்தின் வழியாக அது வேறொரு வாழ்க்கையை நோக்கி மூச்சுத் திணறியபடி செல்கிறது. பசியினால் கிராமத்திலேயே அழகாயிருந்த பாவத்தினால், பெற்ற அத்தனை பிள்ளைகளும் பெண்களாகவே பிறந்து விட்ட நிலையில் அவர்களைக் கரையேற்ற முடியாத இயலாமையால், அரசியல் களத்தின் வஞ்சகக் கயிற்றால், - தண்டவாளப்பாதைகளில் தலை வேறு முண்டம் வேறாக சிதைந்து போய்க் கிடக்கிற சகமனிதர்களின் துயரங்களைக் கண்களால் காண்கிறோமே தவிர ஒரு நாளும் அந்தக் காட்சிகளின் மறுபக்கத்தை உணர்கிறோமில்லை. ஆனால் இந்த உணர்வுகள் அத்தனையையும் அந்த ரயிலையே பேச வைத்து நமக்கு உணர்த்திவிட கிரேஸியால் முடிந்திருக்கிறது.

“ யாருக்காக யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இப்படிக் கதைகள் எழுதுகிறீர்கள்?” என்று வெறுப்பின் சூடு நிறைந்த கேள்விகள் பல கிரேஸியை எதிர்கொள்கின்றன. ‘ பெண்களுக்கு எழுத வேண்டிய விஷயங்கள் ஏராளமாயிருப்பினும் அநுபவங்கள் குறைவு தான். அப்படிக் குறைந்த அநுபவங்களைக் குறித்து எழுதுகையில் பிரச்னைகள் உண்டாகின்றன’ என்கிறார் கிரேஸி. ‘ எழுத்தில் நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும்’ என்று நாம் சுமக்க நேர்வது சிலுவையையே. இந்தச் சிலுவை யுத்தத்தில் எழுத்தாளர்கள் – உண்மையிலேயே ஆத்மார்த்தமாக எழுதுகிறவர்கள் – ஒவ்வொரு நாளும் பலவற்றை இழந்து தான் தீர வேண்டும், உயிரையுங்கூட.

‘ உயிரை விடுகிற அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்றைய எழுத்தாளர்களுக்குத் தியாகம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று உணர்கிறவர் கிரேஸி. ஆனால், “ எழுதும்போது நான் வாத்தியார் அல்ல.. பெண் கூட கிடையாது. என்னுடைய கதாபாத்திரம் சுதந்திரமாக எப்படி உருவாகும் என்று மட்டுமே நான் யோசித்துக் கொண்டிருப்பேன்.’ என்று துணிந்து முன் செல்கிறார். இலக்கிய வாழ்க்கையில் நீண்ட ஓர் இடைவெளி நேர்வது பலருடைய விதியாக இருக்கிறது. கிரேஸிக்கும்கூட. “ ஒரு சமயம் எனக்கு வாசிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை. இப்போது இவ்வளவாவது செய்ய முடிகிறதே’ என்று அவருக்குச் சந்தோஷமாயிருக்கிறது. ‘ இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. எவ்வளவு முடியும் என்று மட்டும் தெரிய வில்லை.” என மலைக்கவும் செய்கிறார்.

பொதுப்புத்தியில் உறைந்து போய்க் கிடக்கிற முன்முடிவுகளாகிய இருட்டில் ஒரோதா என்ற பெண் விசிறிக் கொண்டு நடக்கும் தீப்பந்தத்திலிருந்து தெறித்து விழுந்த பொறிகள் இந்தக் கதைகள் என்றாலும் கூட மிகையில்லை.

‘ பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கலாம், ஆனால் ஆபத்துக் காலத்தில் அவளுடைய துணைக்கு வேறோர் ஆள் தான் வர வேண்டியிருந்தது. அது யாரென்று தெரிய புராணத்தை ஒரு தடவை முழுவதுமாக அலசி ஆராய்ந்து பாருங்கள்..’ என்று உரக்கச் சிரிக்கிற கிருஷ்ணாவின் குரல் இருட்டைக் கீறி ஒளிர்கிற ஒரு தீப்பொறி தானே? ( பாஞ்சாலி கதை )

’பந்து உருண்டையாக இருப்பது இஷ்டம் போல உருட்டி விளையாடத்தானே?’ என்கிற அம்மாவின் கேள்வி ( பந்து )

’இதயத்திற்குப் போகிற வழி சரீரத்தினூடாகத் தான்’ என்று அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொல்கிற கர்த்தரின் திருமேனியில் சாய்கிற சிஸ்டர் ஏஞ்சல்மேரியின் கண்கள் பொங்கி வழிகின்ற தருணம் ( ரத்தமும் மாமிசமும் )

‘ மகளே மறக்கக் கூடாது. மனிதன் என்றால் ஞாபகங்கள் இருக்க வேண்டும் ‘ என்று மகள் பெரியவளாகும் வரையில் சொல்லுகிற குட்டிச் சங்கரன் மாஸ்டர் கண்களை மூடியதும் இருட்டைப் பார்த்து கூவியலறி அழைக்கிற மகளின் அவலக்குரல் ( ஞாபகங்கள் இருக்கவேண்டும் )

இப்படியாக ‘ நம்பிவிட முடியாத மனிதர்களின் மனதில் அலையும் இருட்காற்றும் அதை வெல்லும் ஒளிக்காற்றுமாய் கிரேஸியின் கதைகள் மனதின் பரிசுத்தத்தை வேண்டுகின்றன. அவரின் சொற்கள் மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளைக் கழுவிக் கரைத்து வெளியே வாரிப் போடுகின்றன. நமது நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்கி விடவும் அவரது சொற்கள் படைத்தவையாயிருக்கின்றன!

கிரேஸி மலையாளத்தில் எழுதிய கதைகளை உதயசங்கர் தமிழில் மூலமொழியின் வாசனை மறையாமல் மொழியாக்கித் தந்திருக்கிறார்.

நட்சத்திரம் விழும் நேரத்தில்.. Gracy

மலையாளமொழிச்சிறுகதைகள்

கிரேஸி

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு; வாசல், 40-டி/3 முதல்தெரு, வசந்த நகர், மதுரை- 625003

தொலைபேசி-9842102133

நன்றி- தீராநதி அக்டோபர் 2012

No comments:

Post a Comment