உதயசங்கர்
உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நேற்றிருந்த வாழ்வியல் நடைமுறைகளும், பண்பாட்டு விழுமியங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி எல்லாம் மாறும் போது குழந்தைகளின் உலகம் மட்டும் மாறாதா என்ன? ஆம். மாறியிருக்கிறது. தலைகீழாக அந்த அத்தத்திலிருந்து இந்த அத்தத்திற்கு இடம் மாறியிருக்கிறது. முன்பு குழந்தைகள் வெறும் எண்ணிக்கை மட்டுமே. வீட்டில் வளர்ந்ததை விட தெருக்காடுகளில் வளர்ந்தது தான் அதிகம். படிப்போ, சோறோ, துணிமணியோ எதுவும் ஒரு பொருட்டில்லை. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமுடியாத அளவுக்கு வீட்டில் பொருளாதார நெருக்கடி, எண்ணிக்கை நெருக்கடி. பிள்ளைகள் எப்படியாவது எங்கிட்டாவது கஞ்சி குடிச்சி வளர்ந்து விடும் என்று நம்பினார்கள் பெற்றோர்கள். தன்னுடைய குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே பல தகப்பன்மார்களுக்குத் தெரியாது. வீட்டின் வறுமையிருளைப் போக்க எப்போது வேண்டுமானாலும் பள்ளியிலிருந்து குழந்தைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களே இந்தப் பணியைச் செவ்வனே செய்து விடுகிறார்கள். நீயெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஏண்டா உயிரை வாங்கறே.. மாடு மேய்க்கப் போக வெண்டியதானே.. என்றோ பேசாம தீப்பெட்டிக் கம்பெனிக்குப் போய் வேலை பாத்து வீட்டுக்கு நாலு காசு சம்பாதிச்சுக் கொடுக்கலாம்ல.. ஏண்டா எங்கழுத்த அறுக்கிறே.. என்றோ நாலு நல்ல வார்த்தைகளை நிதமும் உடல் ரீதியான வன்முறைப் பிரயோகங்களுடன் சொல்லிக் கொண்டேயிருந்தால் எந்தப் பையன் தான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்?
அப்படி இதெல்லாம் ஒண்ணும் ரெம்ப மாறிவிடவில்லை என்ற முணுமுணுப்பு கேட்கிறது. இப்படியான நிலைமை இன்னமும் சிறு நகரங்கள், கிராமங்களில் நீடித்து வருவது நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும் வேறுவகையில் மாற்றங்கள் உருவாகியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நேற்று குழந்தைகளாக இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இன்று ஒரு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய பெரியவர்கள் குழந்தைகள் மீது செய்கிற அழிம்பு தாங்க முடியவில்லை. முன்பு சொன்னது இல்லாமையினால், போதாமையினால் என்றால் இப்போது நடந்து கொண்டிருப்பது குழந்தைகளைப் பற்றிய அறியாமையால். தனக்குக் கிடைக்காதது, தான் ஆசைப்பட்டு ஏமாந்தது, ஏங்கித் தவித்தது, கனவு கண்டது, எல்லாவற்றையும் குழந்தைகள் மீது வரைமுறையின்றித் திணித்து குழந்தைகளை சூப்பர் ரோபோக்களாக மாற்றுகிற அவலமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதை நன்கு உணர்ந்து கொண்ட உலகமய முதலாளிகள் குழந்தைகள் வர்த்தகத்தில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அனைத்துப் பொருட்களையும் குழந்தைகள் மனதில் வைக்கும் விதமாக விளம்பரங்கள். அந்தப் பொருட்களின் தன்மை என்ன? அதன் விளைவுகள் என்ன? பின் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையோ விசாரணையோ இல்லாமல் குழந்தை கேட்டு விட்டது என்ற ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கோக், பெப்சி, போன்ற அமிலங்கள் நிறைந்த குளிர்பானங்கள், பல்சொத்தை, பிடிவாதம் போன்றவற்றை உருவாக்கும் சாக்லேட் வகைகள், கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் ஜங்க்புட் வகையறாக்கள்,என்று உணவைப் பற்றி எந்த அக்கறையுமின்றி குழந்தைகளை பொத் பொத்தென்று குட்டி ஜெயிண்டுகளாக வளர்த்து வருகிற கொடுமை ஒரு புறமென்றால்,
தன் கனவுகளின் கிட்டங்கியாக, தன் நிறைவேறா ஆசைகளை நிறைவேற்ற வந்த தெய்வப்பிறவி, தன் எதிர்கால வைப்புநிதி, என்றெல்லாம் குழந்தைகளை நினைத்து வீட்டை விட்டு வெளியில் விடாமல் வீட்டிற்குள் பாடப்புத்தகம், ரேங்க், என்ற பைத்தியக்காரத்தனமான வதைக்கூடத்துக்குள் குழந்தைகளைத் தள்ளி சித்திரவதை செய்கிற மனோபாவம் வளர்ந்து வருகிறது. இந்தச் சித்திரவதையைப் பொறுத்துக்கொள்வதற்காகச் சின்னஞ்சிறு வயதிலேயே லஞ்சமும் ஊழலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீ ஹோம் ஒர்க் முடிச்சா சாக்லேட் தர்ரேன்.. என்றோ நீ அந்தப் பாடத்தை படிச்சி ஒப்பிச்சா கார்ட்டூன் சேனல் பாக்க விடுவேன் என்றோ பெற்றோர்கள் பேரம் பேசுகிறார்கள். இப்படித்தான் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இவையும் இது போன்ற பல குழந்தைகள் பிரச்னைகளையும் பேச வேண்டியதிருக்கிறது. விவாதிக்க வேண்டியதிருக்கிறது.
கவிஞர் மு.முருகேஷின் உள்ளே வெளியே என்ற புத்தகத்தில் குழந்தைகளின் அறியப்படாத உலகம் பற்றி பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. குழந்தைகள் தினம் பற்றிய புரிதலிலிருந்து பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு, பாடச்சுமைக் குறைப்பு, பள்ளியில் ஆசிரியர் கற்க வேண்டியது, குழந்தைகள் விளையாட்டு, வாசிப்பின் அரசியல், கல்விமுறை மீதான விமர்சனம், சொந்த ஊரைத் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகளின் உரிமைகள், இயற்கையும் குழந்தையும், கோடை விடுமுறைக் கொண்டாட்டம், கனவுப்பள்ளி,என்று ஏராளமான சிந்தனைச் சிதறல்களை ஜனரஞ்சகமாக எழுதியிருக்கிறார் மு.முருகேஷ். குழந்தைகளைப்பற்றி, பள்ளிக்கூடம் பற்றி, கல்விமுறை பற்றி, எழுதியுள்ள மரியா மாண்டிசோரி, ஜான் ஹோல்ட், கிஜூபாய் பகேகே, பாவ்லோ பிரேயர், டோட்டோ சான், போன்ற பல சிந்தனையாளர்களின் சிந்தனைத் துளிகளை ஒரே புத்தகத்தில் வாசிக்கக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு.
குழந்தைகள் உலகம் உள்ளே வெளியே - மு.முருகேஷ்
விலை- ரூ40/
வெளியீடு- யுரேகா புக்ஸ்
சென்னை – 86
No comments:
Post a Comment