Thursday, 18 October 2012

எங்கள் தாத்தாவின் காலத்தில் ஒரு மலை இருந்தது

உதயசங்கர்yaanaimalai

 

மலையொன்று இருந்தது

எங்கள் தாத்தாவின் காலத்தில்

மலையொன்று இருந்தது

கம்பீரமாய் வண்ணங்கள்

ஒளிவீசும் வானவில் கனவைப்போல

கடினசித்தமாய் எழுந்து நிற்கும்

காதலின் உறுதியைப் போல

பூமிவரலாற்றை எழுத முனைந்த

பேனா முனை போல

உவந்து அமிர்தம் சுரக்கும்

இயற்கையின் முலை போல

மலையொன்று இருந்தது

எங்கள் தாத்தாவின் காலத்தில்

மலையொன்று இருந்தது

ஒரு நாளிரவு

மைதாஸின் விரல் நீண்டு வந்து

மலையைத் தொட்டது

மின்னல் கணத்தில் மறைந்தது மலை

அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது

நகரத்து வீடுகளில் மலையின் பிரேதம்

எங்கள் தாத்தாவின் காலத்தில் ஒரு மலை

இருந்ததைச் சொல்ல

நாங்கள் அதைக் கொன்று புதைத்ததைச்

சொல்ல.

1 comment:

  1. எல்லோரும் சேர்ந்து மலைகளை கூட்டு கொள்ளை அடித்து விட்டார்கள்.
    இவர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.
    அருமை.

    ReplyDelete