Thursday 18 May 2017

ஆறுகால் பூச்சியும் ஆயிரங்கால் புழுவும்

ஆறுகால் பூச்சியும் ஆயிரங்கால் புழுவும்

உதயசங்கர்

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. வராந்தாவில் நின்று கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வந்தனா. அப்போது வீட்டு வாசலில் கருப்புசிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அந்தப்பூச்சியைப் பார்த்த வந்தனா கத்தினாள்.  
“ அப்பா பூச்சி..பூச்சி… “  அவளுடைய சத்தத்தைக் கேட்டுவிட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அப்பா
“ எங்க இருக்கு பூச்சி..”
வந்தனா சுட்டிக்காட்டினாள். அதைப்பார்த்த அப்பா,
“ ஓ இது ரயில்ப்பூச்சி “ என்று சொன்னார்.
“ ரயில்ப்பூச்சியா? “
“ ஆமாண்டா செல்லம்… அப்படித்தான் நாங்க சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது கூப்பிடுவோம்….”
என்றார் அப்பா. அதைக்கேட்ட வந்தனா,
“ அப்பா ரயில்ப்பூச்சி கதை சொல்லுங்களேன்…”
என்று சொன்னாள். அப்பா உடனே,
“ கதை வேணுமா?… சயின்ஸ்…வேணுமா?..” என்று கேட்டார் அப்பா.
“ முதல்ல கதை…” என்று வந்தனா சொன்னதைக் கேட்ட அப்பா சிரித்தார். வராந்தாவில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து வந்தனாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார். ரயில்ப்பூச்சியின் கதை.
பூமியில் அப்போது தான் ஒவ்வொரு உயிராகத் தோன்றிக்கொண்டிருந்தன. இயற்கையன்னை தன் படைப்புகள் ஒவ்வொன்றாய் படைத்துக் கொண்டிருந்தாள். முதலில் ஒரு செல் உயிரியான அமீபாவைப் படைத்தாள். ஒரு செல் உயிரியான அமீபாவிலிருந்து இரண்டு செல் உயிரியான ஆமீபா தோன்றியது. இரண்டு செல் ஆமீபாவிலிருந்து நாலு செல் உயிரியான இமீபா தோன்றியது. இமீபாவிலிருந்து எட்டுசெல் உயிரியான ஈமீபா தோன்றியது. இப்படியே புழுக்கள் தோன்றின. கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் தோன்றின. எந்த எந்த இடத்தில் உருவானதோ அந்த அந்த இடத்தின் நிறம் புழுக்களுக்குக் கிடைத்தது. மண்ணுக்குள் தோன்றியதால் மண்ணின் நிறம் மண்புழுக்களுக்குக் கிடைத்தது. பூக்களில் தோன்றிய புழுக்களுக்கு பூக்களின் வண்ணவண்ண நிறம். இலைகளில் தோன்றிய புழுக்களுக்கு இலைகளின் பச்சை நிறம். மரங்களில் தோன்றிய புழுக்களுக்கு மரத்தின் நிறம். எல்லாப்புழுக்களும் தங்களுடைய உடலை தள்ளிக்கொண்டு ஊர்ந்தன. அப்படித்தள்ளி தள்ளிப்பழகியதில் அவைகளின் உடம்பு சுருங்கி விரிய ஆரம்பித்தது. வேகமாகப் போக முடியவில்லை. ஓரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து போய்க்கிடலாம். அவ்வளவுதான். இப்படி விதவிதமான புழுக்கள் தோன்றி மண்ணில் ஊர்ந்தன.
அதன் பிறகு பூச்சிகள் தோன்றின. கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் தோன்றின. பின்னர் சிறிதுபெரிதாய் ஏராளமான பூச்சிகள் தோன்றின. ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு நிறம். இயற்கையன்னை தன் திறமைகளைப் பயன்படுத்தி வண்ணங்களைத் தீட்டினாள். கூடுதலாக ஒவ்வொரு பூச்சிக்கும் சிறகுகளைப் படைத்தாள். சிறகுகளோடு ஆறு கால்களையும் கொடுத்தாள். தன்னுடைய ஒரு படைப்பு இன்னொரு படைப்பு மாதிரி இருக்கக்கூடாது என்று கவனமுடன் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தாள். உலகம் பூச்சிகளால் நிறைந்தது. பூச்சிகள் பறந்து திரிந்து கொண்டேயிருந்தன. விதம் விதமான பூச்சிகள் பறந்து அலைவதைப் பார்த்த இயற்கையன்னைக்கு மகிழ்ச்சி.
கீழே மண்ணில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்கள் தலையைத் தூக்கிப் பார்த்தன. பூச்சிகள் அங்கிட்டும் இங்கிட்டும் பறந்தன. தன்னுடைய கால்களினால் வேகமாக நடந்தன. பூச்சிகள் சிரமப்பட்டு ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை பூச்சிகள் ஒரு நொடியில் பறந்து கடந்தன. மேலே பறக்கும் பூச்சிகள் கீழே ஊர்ந்து கொண்டிருக்கும் புழுக்களைத் தாழ்வாக நினைத்தன. சில பூச்சிகள் புழுக்களைச் சுற்றி வந்து கும்மியடித்தன. கேலி பேசின. புழுக்களுக்கு அவமானமாக இருந்தது. இயற்கையன்னை தங்களை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்தன.
ஒரு சமயம் இத்தினூண்டு கடுகு மாதிரி இருந்த பூச்சி மரத்தில் மரப்பட்டைகளுக்குக் கீழே பேசாமல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கருப்பு, சிவப்பு வரிசையாகக் கோடு போட்ட புழுவை தன் சிறகுகளால் விர்ர்ர்ர்…..விர்ரென்று அடித்து எழுப்பியது.
“ பார்த்தியா… எப்பூடி.. நான் நினைச்சா பறப்பேன்… இல்லைன்னா நடப்பேன்…எனக்குப் பெருமையா இருக்கு நல்லவேளை உங்களைப்போல மூட்டை மாதிரி உடம்பை இழுத்து இழுத்து தேய்ச்சிக்கிட்டே போக வேண்டியதில்லை ஹா…ஹா…ஹா..”
என்று வக்கணை வழித்தது. அந்தக்கருப்புசிவப்புப் புழுவுக்கு வருத்தமாகி விட்டது.
“ டேய் நாம்பாட்டுக்குப் பேசாம என் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன்…. நீ ஏன் வந்து வம்பு பண்றே….”
“ டேய் உடம்புதேய்ச்சி… நம்ம ரேஞ்சே வேறே…. உனக்குத் தெரியணும்ல….”
இதைக்கேட்ட கருப்புசிவப்புப்புழுவுக்குக் கோபம் வந்து விட்டது. அவ்வளவு தான். உடனே தன்னுடைய உடம்பைத் தேய்த்து தேய்த்து அந்த மரத்தின் உச்சிக்குச் சென்றது. உச்சியில் நின்று தலையைத் தூக்கியது.
“ ஏ..இயற்கையன்னையே! எங்களை நீ ஏமாத்திட்ட… உன்னோட குழந்தைகள்ல ஒருத்தர நல்லாக்கவனிச்சி ஒருத்தர கவனிக்காம விட்டுட்டியே… இதுக்கு ஒரு பதில் சொல்லு..”
என்று சொல்லியது. அதோடு வானத்தைப் பார்த்தபடியே அன்னந்தண்ணி குடிக்காமல் பட்டினி கிடந்து இயற்கையன்னையை வேண்டி தவம் இருந்தது. ஏழுபகல், ஏழு இரவு கழிந்தது. கருப்புசிவப்புப்புழு மெலிந்து துரும்பாகிவிட்டது. எட்டாவதுநாள் காலையில் கருப்புசிவப்புப்புழுவுக்கு முன்னால் ஒரு ஒளி தோன்றியது. பச்சிலைசெடிகொடிகளை ஆடைகளாய் உடுத்திய இயற்கையன்னை கருப்புசிவப்புப்புழுவின் முன்னால் தோன்றினாள்.
“ நான் யாரையும் குறைவாகவோ மிகையாகவோ படைக்கவில்லை. இந்த பூமியில் இன்னும் படைக்கவேண்டிய படைப்புகள் ஏராளமாக இருக்கின்றன. எந்த ஒரு படைப்பும் மற்றொன்றைப் போல இருக்கக்கூடாது அப்போது தான் இயற்கையின் சமநிலை எப்போதும் நிலைத்திருக்கும்… எல்லா உயிர்களும் எனக்குச் சமமானவை தான்….”
என்று அன்பாகச் சொன்னாள். அதைக் கேட்ட கருப்புசிவப்புப்புழு கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ இல்லை அன்னையே! எங்களால் வெகுதூரம் போகமுடியவில்லை…. எங்களுக்கு சிறகுகள் அல்லது கால்கள் வேண்டும்…. தயை புரியுங்கள்…”
அதைக்கேட்ட இயற்கையன்னை கலகலவென்று சிரித்தாள். அவ்வளவு தான் கருப்புசிவப்புப்புழுவுக்கு கால்கள் முளைத்தன. உடலில் ஒரு இடம் விடாமல் கால்கள். ஆயிரங்கால்கள் முளைத்தன. கருப்புசிவப்புப்புழுவுக்குச் சந்தோசம். தன்னுடைய பின்னங்கால்களில் நின்று உடலைத்தூக்கி இயற்கையன்னைக்கு நன்றி சொன்னது. இயற்கையன்னை புழுவிடம் விடைபெற்று மறைந்தாள்.
கருப்புசிவப்புப்புழு இப்போது முன்னாலும் வேகமாக ஊர்ந்தது. பின்னாலும் வேகமாக ஊர்ந்தது. எப்படி வேண்டுமானாலும் திரும்ப முடிந்தது. சுருண்டு படுத்துக்கொள்ள முடிந்தது. மரத்தின் உச்சியிலிருந்து அமைதியாகத் திரும்பியது. மெல்ல கீழே இறங்கி தன்னுடைய இருப்பிடமான மரப்பட்டையின் பின்னால் போய் படுத்துக் கொண்டது.
இப்போது இயற்கையன்னையிடம் தவமாகப் பெற்ற ஆயிரங்கால் பூச்சியை மரவட்டைப்பூச்சி என்றும் ரயில்ப்பூச்சி என்றும் குழந்தைகள் அழைத்தார்கள். குழந்தைகள் எப்படி அழைத்தாலும் அழகு தானே!


 நன்றி - வண்ணக்கதிர்

2 comments: