Sunday, 21 May 2017

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்

உதயசங்கர்

நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள். வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது. மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின் கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு  இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது. அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள். ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின் தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,
 “ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா! பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”
என்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய் புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால் அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள் அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை. மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும் பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது. அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத் திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம் ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில் வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.
 ” என்னடா ஆச்சு..? ஏண்டா இப்படி பண்றே..”
“ எலேய் உனக்குத்தெரியலையா…? அவகூட ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”
“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே வாரா..”
“ கண்ணைத்திறந்து நல்லாப்பாரு…”
“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”
“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”
தூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும், எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார் அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும் தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப் போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும் ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல் உணர்ந்திருந்தாள்.
ஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ, அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள். அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது. மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மகேஷின் தைரியமே அவன் தானே.
ஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில் ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி. ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான். மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும் மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப் பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.
ஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர் செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட் அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான். ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின் நண்பன் தான்
“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து பயப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”
என்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி? கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள்? ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை. அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.
“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல் தனியா எங்கேயும் போறதில்லை..”
அதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான். ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான். எப்போதாவது,
“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.
அதற்கு மகேஷ் சிரித்தவாறே
“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”
என்று அலட்சியமாகச் சிரிப்பான்.
“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”
என்று கட்டைக்குரலில் சொன்னான் மகேஷின் நண்பன்.
 ஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான். சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில் சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள். 
இடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில் மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து வெளிப்பட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத் தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம் அதிகம் இல்லை.
மகேஷின் இதயம் துடிக்கிற சத்தம் அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள் விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள் உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா?
அன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால் இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.
“ நீ அவளோட வாழ்றதுக்காக நான் அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா? “
என்று கேட்டான். மகேஷுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.
மகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான். ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச் சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள். ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும் இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
ஒரு வழியாகத் திருமணம் முடிந்து சென்னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா. அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.
எப்படி நான்குபேரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும், சேர்ந்து ஒரே குரலில்  
“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்? “ என்று கேட்கிறார்கள்.


 நன்றி - மலைகள்.காம்

No comments:

Post a Comment