Thursday 31 May 2012

ஒரு புதிர்க்கதை

abstract-landscape-paintings-common-thread  

தொலைந்து போனவர்கள்

சாத்தியங்களின் குதிரையிலேறி

வனத்தினுள்ளோ

சிறு புல்லினுள்ளோ

கடலுக்குள்ளோ

சிறு மீனுக்குள்ளோ

மலையினுள்ளோ

மரத்திலுறைந்தோ

எங்கோ

எப்போதோ

எப்படியோ

தொலைந்த பின்னும்

ஆற்று மணலைப் போல

கதைகளாகத் திரும்புகிறார்கள்

கொலையுண்டதாகவோ

நோய்வாய்ப்பட்டதாகவோ

பெரும்பணக்காரனாகவோ

ரவுடியாகவோ

பிச்சையெடுத்துக் கொண்டோ

சாமியாராகவோ

காமாந்தகனாவோ

பைத்தியக்காரனாகவோ

அகதியாகவோ

போராளியாகவோ

தியாகியாகவோ

வேற்று நாட்டிலோ

வேற்று ஊரிலோ

எண்ணற்ற கதைகளாக

கலந்து விடுகிறார்கள் காற்றில்

உயிருடன் இருந்தாலும்

மரணித்திருந்தாலும்

யாரும் விடை காணமுடியாத

யாருக்கும் விடை தெரியாத

கதைகளை எழுதிய எழுத்தாளராக

என்றும் புதிராய்

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்..தொலையாத நானோ?

Wednesday 30 May 2012

பரியும் நரியும்

உதயசங்கர்

அவர் கேட்டது நியாயமாகத் தான் தெரிந்தது. ஆனால் ரயில்வே பார்சல் கிளார்க் அநியாயத்துக்குச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். திருவண்ணாமலை ஸ்டேஷனில் எனக்கு அன்று இரவுப் பணி. அப்போது தான் மதுரை- திருப்பதி எக்ஸ்பிரஸ் வண்டி திருவண்ணாமலை ஸ்டேஷனை விட்டு போயிருந்தது. அதற்கப்புறம் தான் இந்தப் பிரச்னை. மதுரை-திருப்பதி வண்டியில் பொதுவாகவே நிறையப் பார்சல்கள் வந்திறங்கும். அன்று ஒரு விசித்திரமான ஒரு பார்சலும் வந்திருந்தது. பார்சலைப் பெற்றுக் கொண்டதற்காக கையெழுத்து போட்டு விட்டு வந்த பார்சல் கிளார்க் மயில்சாமி என்னைப் பார்த்து

“ பாருங்க சார் சொறி நாயையெல்லாம் புக் பண்ணி அனுப்புறாங்க.. காலக்கொடுமையைப் பார்த்தீங்களா..”

என்று சொல்லி அங்கலாய்த்தார். நானும் புன்னகைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் பார்சல் போர்ட்டர் சூசை ஒரு நாயைக் கரகரவென இழுத்துக் கொண்டு வந்தார். அது வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. இவரும் விடமாட்டேன் என்று இழுத்துக் கொண்டு வந்தார்.

“ வா சனியனே.. வா.. நாய்க்குக் கூடத் தெரியுது.. நா ஒரு இளிச்சவாய்ப் பையன்னு.. இந்த பாரு ஒழுங்கா மரியாதியா வந்தேன்னா ஆச்சி.. அப்பால என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”.

என்று நாயுடன் பேசிக்கொண்டே வந்த சூசையின் சத்தம் கேட்டு நான் ஸ்டேஷன் அறையை விட்டு வெளியே வந்தேன். ஒரு செவலை நாய். மெலிந்து வாடிப்போயிருந்தது. முதல் பார்வையிலேயே சொல்லி விடலாம் அது ஒரு தெரு நாய் என்று, அப்படி ஒரு லட்சணம் பொங்கி வழிந்தது. அது பலிபீடத்தில் வெட்டப் போகிற கிடாயைப் போல நான்கு கால்களையும் தரையில் பிறாண்டிக் கொண்டே வந்தது. அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிறை அங்கிருந்த தூணில் கட்டி விட்டு மற்ற பார்சல்களை எடுக்க போனார் சூசை.

அப்போது தான் ஸ்டேஷன் அறைக்குள் அவர் நுழைந்தார். மிகவும் பெரிய மனிதத் தோரணையிலிருந்த அவர் பார்சல் கிளார்க்கிடம் அவர் கையிலிருந்த ரசீதைக் கொடுத்தார். பார்சல் கிளார்க் மயில்சாமியும் அவரை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு அவரிடம் இருந்து ரசீதை வாங்கிச் சரிபார்த்து பதிவேட்டில் பதிந்து அவரிடம் கையெழுத்து வாங்கினார். கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்த அவர்,

“ நாய் எங்கே? “

என்று கேட்டார். அதற்கு மயில்சாமி அலட்சியமாக,

” அதான் வெளிய இருக்குல்ல.. பிடிச்சிட்டுப் போங்க..”

என்று சொன்னார். அவர் வெளியே போய் பார்த்து விட்டு மறுபடியும் உள்ளே வந்தார். மயில்சாமியைப் பார்த்து,

“ எங்கே கெட்டிப் போட்டிருக்கீங்க..”

என்று கேட்டார். ஏற்கனவே ஒரு பார்சல் டேலி ஆகாதக் கவலையில் இருந்த மயில்சாமி எரிச்சலுடன்,

“ அந்தா தூணில கிடக்குல்ல..”

என்று சொல்ல அவர் திரும்பிப் பார்த்தார். அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியாததைப் போல சுற்றிச் சுற்றி எல்லாத் திசைகளிலும் பார்த்தார். பிளாட்பாரம் முழுவதும் தன் கண்களை மேய விட்டார். அங்கே அந்தத் தெரு நாயைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்போது அவர் எரிச்சலுடன்,

“ சார்.. நான் அனுப்புன நாய எங்கே?”

என்று கேட்க அதே மாதிரிக் குரலில் மயில்சாமி,

“ நீங்க அனுப்புன நாய் அங்க..”

என்று சொல்ல அந்தப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்து விட்டது.

“ ஹலோ நான் அனுப்புனது.. பொமரேனியன் வொயிட் டாக்.. இதென்ன தெரு நாயக் காட்டிறீங்க..”

“ நீங்க என்ன புக் பண்ணினீங்களோ எனக்குத் தெரியாது..இங்க வந்தது இது தான்..”

“ அதென்ன இப்படிப் பொறுப்பில்லாம பேசறீங்க.. ஐ வில் கம்பிளைண்ட் திஸ் மேட்டர் டு யுவர் ஜி.எம்.”

என்று கொதித்துப் போனார். நான் இது தலையிட வேண்டிய தருணம் என்று உணர்ந்தேன். உடனே அவரிடம் ,

” சார் கொஞ்சம் பொறுங்க..” என்று சொல்லி மயில்சாமி பக்கமாய்த் திரும்பி,

” சார் அந்த நாய்க்குப் பதிலா வேற நாயை இறக்கிட்டாரா சூசை..?”

என்று என்னுடைய சந்தேகத்தைக் கேட்டேன். உடனே மயில்சாமியும் சற்று அமைதியானார். எழுந்து வெளியே போய்,

“ சூசை.. சூசை..”

என்று கத்தினார். அப்போது தான் பார்சல்களை ஏற்றிக் கொண்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த சூசை,

“ தோ..வர்ரேன் சார்..”

என்றார். அருகில் வந்ததும் அவரிடம் நான்,

“ என்ன சூசை நாய மாத்திகீத்தி இறக்கிட்டீங்களா?”

என்று கேட்டேன். அதற்கு அவர்,

“ இல்லீங்க சார்.. அந்த டாக் பாக்ஸ்ல இந்த ஒரு நாய் தான் இருந்திச்சி.. ஏன் என்னவாம்..”

என்று பதில் சொல்ல மறுபடியும் குழப்பம். மயில்சாமி,

“ இவரு..பொமரேனியன் அதான் சடைசடையாமுடி இருக்குமே அத்த அனுப்புனாராமாம் என்னா இது இங்கே தெரு நாயா இரிக்கிதேங்கிறாரு சூசை..”

என்று சொன்னார். எனக்கும் ஒன்றும் புரிய வில்லை. மதுரையிலிருந்து புக் பண்ணின நாய் எப்படி இப்படி அவதாரம் எடுக்கும். கார்டு இருக்கிற பெட்டியிலேயே டாக் பாக்ஸ் இருக்கும். அவரை மீறி எதுவும் செய்யமுடியாது. அந்த பெட்டியில் அடைத்து அதை பூட்டு போட்டு பூட்டி விடுவார் கார்டு. எங்கே இறக்க வேண்டுமோ அங்கே தான் அந்தப் பெட்டியைத் திறப்பார். அப்படி இருக்கும் போது ..ஒரு வேளை அந்தப் பெரிய மனிதர் பொய் சொல்கிறாரோ.. அவரிடம் ரயில்வேயின் நடைமுறைகளை விவரித்தேன். அப்படி மாறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று விளக்கினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர்,

“ நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா என்னோட ஜிம்மியைப் புக் பண்ணி டாக் பாக்ஸ்ல அடைச்சிட்டு அதைச் சமாதானப் படுத்துறதுக்காக பிஸ்கட் வாங்கி அந்தக் கார்டு கிட்ட கொடுத்துட்டு அதே டிரெய்ன்ல தானே நானும் வர்ரேன்..”

என்று சொன்னதைக் கேட்ட எங்களுக்குத் தலைசுற்றியது. பரி எப்படி நரியானது? என்று தெரியவில்லை. அவர் அந்தத் தெருநாயை ஸ்டேசனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். அதோடு கம்பிளையண்ட் புத்தகத்தை வாங்கி புகாரும் எழுதிக்கொடுத்து விட்டுப் போனார். அந்தப் புகாருக்காக யார் யாரோ வந்தார்கள். விசாரித்தார்கள். ஆனால் அந்தப் புதிர் இன்று வரை விடுபடவேயில்லை.

இப்படித்தான் ஒரு நாள் கசங்கிய சட்டையும் பேண்டும் கலைந்த தலைமுடியுடன் மிகவும் பணிவுடன் வந்த ஒரு ஆள், மயில்சாமியிடம்,

“ சார் டிரெய்ன்ல புளி புக் பண்ணனும்..சார்.. எப்ப கொண்டு வரணும் சார்.”

என்று கேட்டான். மயில்சாமி அவனிடம்,

“ எத்தனை கிலோ இருக்கும்..”

என்று கேட்க அவன் சற்று யோசித்து,

“ ஒரு நூறு நூத்தம்பதுகிலோ இருக்கும் சார்..” என்று சொன்னான்.

உடனே மயில்சாமி முகத்தில் பிரகாசம் ஒளிர்விட,

“ எந்த ஊருக்கு? “10222447-the-hand-drawn-sketch-of-the-severe-tiger

என்று கேட்டார். அதற்கு அவன்,

“ தஞ்சாவூருக்கு..”

என்று சொன்னான். உடனே அவனிடம் மயில்சாமி எப்போது கொண்டுவரவேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று விலாவாரியாகச் சொல்லிக் கொடுத்தார். அவன் அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினான். மறுநாள் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றான்.

மறுநாள் மயில்சாமி சொன்ன நேரத்துக்கு அவன் ஸ்டேஷனுக்கு வந்து விட்டான். மயில்சாமி ஏதோ ஒரு பதிவேட்டில் தலைகுனிந்திருந்தார். நான் அவன் உள்ளே நுழைந்ததுமே மேஜை மீது ஏறி விட்டேன்.என்னுடன் அப்போது பணியில் இருந்த கலியன் ஒரு வினோதமான ஊளையிட்டான். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. இத்தனைக்கும் தலை நிமிராமலே இருந்தார் மயில்சாமி. வந்தவன்,

“ சார் புளி..கொண்டு வந்திருக்கேன்…”

என்றான். மயில்சாமி ஏறிட்டுப் பார்க்காமல்,

“ புளியை நல்லா பேக் பண்ணிட்டயா?

என்று கேட்டார். அவன் அமைதியாக, 

“ அதான் சார் எப்படி பேக் பண்ணனும்னு சொன்னிங்கன்னா செய்ஞ்சுடலாம்..சார்..”

என்று சொல்ல அப்போது தான் தலையை நிமிர்த்திக் கொண்டே,

“ என்னய்யா.. சாக்குமூட்டையில அடைக்கத் தெரியா….”

என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அப்படியே பாதி வார்த்தையில் நின்று, வாய் குழறி மொழியில்லாத குரலில் ஏதேதோ சத்தங்களை எழுப்பினார். முகம் பயத்தில் வெளிறி விட்டது.

அங்கே எங்களுக்கு முன்னால் ஒரு நிஜப்புலி நின்று கொண்டிருந்தது.

Tuesday 29 May 2012

மறுப்பதற்கான உரிமை

உதயசங்கர்mother-and-child-bob-botha

குழந்தைகள் தங்களுக்குப் பிடிக்காதவற்றை மறுக்கிறார்கள். தங்களுடைய செயல்களின் மூலம் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். உடனே பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். திருத்துவதாகச் சொல்லி வதைக்கிறார்கள். குழந்தையிடமிருந்து வருகிற எதிர்ப்பை பொறுக்க முடியாது. ஏனெனில் குழந்தையைவிட பெரியவன் தான் என்ற அகங்காரம். தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம். பெற்றோர், ஆசிரியர், அண்ணன், அக்கா என்று குழந்தையை விட மேலான வளர்ச்சிப்படி நிலையில் இருப்பதால் தனக்குக் கீழே இருப்பவர்கள் தான் சொல்வதற்குக் கீழப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வு.

“முளைச்சி மூணுஇலை விடலை... அதுக்குள்ளே

வேண்டாம்.. முடியாதுன்னு பிடிவாதத்தைப் பாரு...”

என்ற வார்த்தைகள் பேசப்படாத வீடுகள் இருக்குமா என்பது சந்தேகம். அதோடு மட்டுமல்ல, குழந்தையிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்தால் உடனே அடங்காமை, கீழ்ப்படியாமை, சொன்னபடி கேட்காமை என்று சொல்லி குழந்தைகளின் மீது விதவிதமான அடக்குமுறைகளைச் செலுத்த முனைகிறோம். இல்லையென்றால், “அடியாதமாடு படியாது” பிள்ளையை அடித்து வளர்க்கணும், கறிவேப்பிலையை ஒடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? போனற சொலவடைகளை, பழமொழியை அதன் அர்த்தம், காலப்பொருத்தம் தெரியாமலே இன்னமும் உளறிக்கொண்டு திரிகிறோம்.

உலகத்திலேயே மிக அதிகமாக எல்லாவிதமான வன்முறைகளுக்கும் இலக்காகிறவர்கள் குழந்தைகளும், பெண்களும் தான். உடல் ரீதியான வன்முறையில் உயிரிழப்பவர்கள் ஏராளம். அதுமட்டுமல்ல, பட்டினி போடுதல், தனிமைப்படுத்துதல், சுதந்திரமாக அலைய விடாமல் தடுத்தல், சுடுசொல், முறைத்தல், அதட்டுதல், பயமுறுத்தல், நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் அச்சுறுத்தல், பின்விளைவுகளைச் சொல்லி மிரட்டுதல், அடிக்க முனைதல் இவைகள் எல்லாமே வன்முறையின் வேறு வேறு வடிவங்கள் தான். சமபலமில்லாத, சார்ந்து வாழ்கிற எதிர்கொள்வதற்கு முடியாத யாரொருவர் மீதும் உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பிரயோகிப்பது அவமானகரமான குற்றமாகும்.

எல்லாக் குழந்தைகளும் எப்போதும் தங்கள் எதிர்ப்பையோ, மறுப்பையோ காட்டுவதில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகே அவர்களுக்கேயுரிய தனித்துவக்குணங்கள் உருவாகத் தொடங்கும் போதே தங்களுடைய விருப்பு வெறுப்புகளை எதிர்ப்பாக மறுப்பாக வெளிக்காட்ட முனைகிறார்கள். ஒரு மரத்தின் இலைகளைத் தோராயமாகப் பார்க்கும்போது எல்லாம் ஒன்று போலத் தெரியும். ஆனால் கூர்ந்து ஒவ்வொரு இலையாக உற்றுப்பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும், அளவிலும், பருமனிலும் இருப்பதைக் காணலாம். நிறத்தின் அடர்த்தியிலும், உணவு தயாரிக்கிற, நீரை உறிஞ்சுகிற, உட்கொள்கிற கரியமில வாயுவிலிருந்து, வெளிவருகிற பிராணவாயு வரை எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு சிறிய இலையுமே தனித்துவமிக்கதாகவே திகழ்கின்றன. அது போலத்தான் குழந்தைகளும். வளரும்போதே தனக்கென்று தனிருசி, விருப்புவெறுப்புகள், உறக்கம், விழிப்பு, உணவு, விளையாட்டு என்று தனித்துவமிக்க பழக்கங்களோடு வளர்கின்றனர். குழந்தைகளின் பரம்பரைக் குணாதிசயங்கள், சூழ்நிலை, உள்ளுணர்வு, படைப்பூக்கம், ஆழ்மனப் பிரதிபலிப்புகள் எல்லாமும் சேர்ந்து இவற்றைத் தீர்மானிக்கின்றன. குழந்தைக்கு ஒவ்வாததை பிடிக்காததைச் செய்யும்போது அல்லது செய்யச் செல்லும்போது குழந்தைகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுகின்றனர். மறுப்பைப் பதிவு செய்கின்றனர்.

பெரியவர்கள் முதலில் குழந்தைகளின் எதிர்ப்பை மதிக்க வேண்டும். மறுப்பை அங்கீகரிக்க வேண்டும். நாம் அதை அங்கீகரிக்கிறோம் என்பதைக் குழந்தைகள் அறியச் செய்யவேண்டும். சில நேரங்களில் அவர்களுடைய எதிர்ப்பிற்கான காரணங்கள் நமக்கு அற்பமானவையாக இருக்கலாம். மறுப்பிற்கான காரணங்கள் அர்த்தமில்லாதவையாக இருக்கலாம். உண்மையில் குழந்தைகள் காட்டுகிற எதிர்ப்பைக் கண்டு நாம் பெருமகிழ்வு கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தை தனக்கான தேவைகளை விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து குழந்தையின் மீது கோபம் கொள்வது, எரிச்சல் படுவது, அடிப்பது போன்றவற்றை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தை தன்னுடைய பிரத்யேகமான தேவைகளைத் தெரிந்து கொள்ளவே முடியாது. அது மட்டுமல்ல எந்தச் செயலையும் தனக்குப் பிடிக்கிறது என்றோ, பிடிக்கவில்லை என்றோ தேர்வு செய்ய முடியாமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் அடிபணிவது, சொன்னபடி கேட்பது, கோழையாக இருப்பது, சிறிய சலுகைகளுக்கு தங்களையே இழக்க நேர்வது போன்ற எதிர்விளைவுகள் உருவாகிவிடும்.

அதிகமாக அடக்குமுறைகளுக்கு உள்ளாகிற பெண் குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் மறுப்பையும், எதிர்ப்பையும் அங்கீகரித்து அனுமதிக்க வேண்டும். அடக்கியே வளர்க்கப்படும் பெண் குழந்தைகளை மிகச்சுலபமாக ஏமாற்றப்படுவதற்கும், இழிவுபடுத்தப்படுவதற்கும் நேரிடும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் அந்தக் குழந்தைகளுக்கு நன்றாக அறிமுகமானவர்களாலேயே நிகழ்கிறது. குழந்தைகளின் பரிபூரண நம்பிக்கையை தங்களுடைய வக்கிரபுத்தியினால் பயன்படுத்துகிற கொடூரமனம் கொண்டவர்களாக பலர் இருக்கிறார்கள். பல சமங்களில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் சிறு சிறு சலுகைகளுக்கு தன்னை இழந்து விடுகிற கொடுமையும் நேர்ந்து விடுகிறது. எனவே முதலில் குழந்தைகளுக்கு மறுப்பதற்கான உரிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மறுத்துப் பழகும்போது தங்களை ஒரு தனித்துவமான ஆளுமையாகக் குழந்தைகள் உணர்வார்கள். தங்களுடைய சுயமரியாதை குறித்த பெருமிதம் ஏற்படும். அப்போதுதான் பெண் குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு எதிரான எல்லாவித வன்முறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும் ஆன்மவலிமை உருவாகும்.

குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பதற்கு பெரியவர்களுக்கு சில குணாதிசயமாற்றங்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் முன்னால் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் அருவெறுப்பான தன் அதிகாரச் சாட்டையை வீசாமலிருக்க வேண்டும். உண்மையான அன்போடு குழந்தைகளின் செயல்களை உற்றுக் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும். இப்படியான மாற்றங்கள் பெரியவர்களிடம் வரவேண்டும்.

அப்படியென்றால் குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் செய்ய எதுவுமே இல்லையா? குழந்தைகள் செய்கிற காரியங்கள் எல்லாமே சரியானதா? அவர்கள் காட்டுகிற எதிர்ப்போ மறுப்போ, தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தால் என்ன செய்வது? அனுபவச் செறிவில்லாத அவர்களுடைய ஆளுமை தானாக எப்படி வளரும்? இது போன்ற கேள்விகள் எல்லோருக்கும் வரலாம்.

நாம் எல்லோருமே நம்முடைய குழந்தைகள் மிகப்பெரிய ஆளுமையாக வளரவேண்டும் என்று தான் மனப்பூர்வமாக ஆசைப்படுகிறோம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் எதற்காக ஆசைப்படுகிறோமோ அதற்கு எதிரான செயல்களைச் செய்கிறோம். அப்படிச் செய்யும்படி இந்த சமூக அமைப்பு அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்வித்துறை, நீதித்துறை, காவல்துறை மற்றும் பண்பாட்டு அமைப்புகள், மத நிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிதலுள்ள குடிமகன்கள் மட்டுமே தேவை. எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிகிற ஒரு சமூக மனநிலையை உருவாக்க எல்லாவிதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருகிற சூழலில் மறுப்பதற்கான உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யோசித்துப்பாருங்கள்.

நகரம் பார்த்த சின்னக்குருவி

உதயசங்கர்sparrow

முன்பு ஒரு நாள் ஒரு குருவி காட்டிலிருந்து நகரத்துக்குப் பறந்து போய் விட்டது. அங்கேயிருந்து திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. காட்டிற்குத் திரும்பி வந்த பிறகு எல்லாக் குருவிகளிடமும் அது அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிச் சொல்லியது. அதைக் கேட்ட எல்லாக் குருவிகளும் உச் உச் என்று பரிதாபப்பட்டன. எங்கே சென்றாலும் நகரத்துக்கு மட்டும் போய் விடாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கீச்சிட்டது. சரி சரி என்று எல்லாக்குருவிகளும் தலையாட்டின. அவைகளில் கொஞ்சம் துடுக்குத்தனம் கொண்ட குருவி ஒன்றும் இருந்தது. அது சேட்டைக்காரக் குருவி. யார் என்ன சொன்னாலும் நம்பாது. ஆபத்தான பல காரியங்களைச் செய்யும். அப்பா அம்மா எத்தனையோ தடவை இப்படி இருக்காதே என்று சொல்லியும் அது கேட்கவில்லை. இப்போது அந்தக் குருவிக்கு நகரத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்து விட்டது.

ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் நகரம் இருந்த திசையை நோக்கிப் பறந்தது. தூரத்திலிருந்து பார்க்கும் போது கவர்ச்சியாகத் தான் தெரிந்தது.ஆனால் நகரத்தை நெருங்க நெருங்க அனல் வீசியது. புகை மூட்டமாக இருந்தது.கருப்பாய் கண்களை மறைத்தது. எப்படியோ சமாளித்து நகரத்துக்குள் சென்று விட்டது.

வானம் வரை முட்டுகிற மாதிரி கட்டிடங்கள், காட்டிலுள்ள மரங்களை விட ரெண்டு பங்கு, மூன்று பங்கு, உயரமாய் இருந்தன. வண்ணமயமாய் எல்லாம் ஒளி வீசின. எல்லாக் கட்டிடங்கள் மீதும் வட்டமாகவும், குச்சி குச்சியாகவும் கம்பி வலைகளும், வட்டமான தட்டுகளும் இருந்தன. அவைகளை ஆண்டெனாக்கள் என்று நகர மக்கள் சொன்னார்கள். கார்கள், மோட்டார்சைக்கிள்கள், மொபெட்டுகள், எல்லாம் மின்னல் வேகத்தில் பறந்து சென்றன. எல்லா இயந்திரங்களும் புகையைக் கக்கின. பெரிய பெரிய சாலைகள், பெரிய பெரிய ஆலைகள், கடைகள், இடைவிடாத போக்குவரத்து என்று நகரம் ஒரே இரைச்சலாக இருந்தது. மனிதர்கள் அங்குமிங்கும் பாய்ந்து பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். ஏதோ அவசரமோ, ஆபத்தோ,என்று நினைக்கும்படி இருந்தது அவர்களுடைய ஓட்டம். தான் ஒரு புது உலகத்துக்குள் வந்துவிட்டது போல எல்லாம் வேடிக்கையாகவும் விநோதமாகவும் தெரிந்தது குருவிக்கு. அது ஒவ்வொரு இடமாக அமர்ந்து அமர்ந்து பறந்து சென்றது.

அப்போது தான் திடீரென்று அது கவனித்தது. நகரத்தில் ஒரு மரம் கூட இல்லை. செடிகளோ கொடிகளோ இல்லை. சின்னக்குருவிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வீடுகளுக்குள் தொட்டிச் செடிகள் இருந்ததை சன்னல் வழியே பார்த்தது. அது காலை நேரம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள்.எல்லோர் கைகளிலும் ஒரு பாட்டில் தண்ணீர். குருவிக்கு இன்னொரு அதிசயமும் காத்திருந்தது. நகரத்தில் ஒரு நதியோ, ஓடையோ, குளமோ, குட்டையோ, இல்லை. அட என்னடா இது!

தண்ணீருக்கு எங்கே போவார்கள்? அடுத்த சாலைத் திருப்பத்தில் கடைகளில் தண்ணீரை பைகளிலும், பாட்டில்களிலும், பெரிய பெரிய டப்பாக்களிலும் அடைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்த உடனே குருவிக்குத் தாகம் எடுத்தது. நேரம் ஆக ஆக சூரியன் நெருப்பாக மாறிக் கொண்டிருந்தது. நகரமே அடுப்பு போல சூட்டினால் கணகணத்தது. குருவிக்கு மூக்கு காந்தல் எடுத்தது. சிறகுகளுக்குள் வெக்கைக் காற்று புகுந்து வேதனை அளித்தது. எங்கேயாவது ஒரு மடக்குத் தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தது. நகரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. நகரத்தின் ஓரத்தில் கருப்பாய் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூடச் செல்லமுடிய வில்லை. அவ்வளவு நாற்றம். ஒரே குப்பையும் கூளமுமாக அந்தத் தண்ணீர் ஓடியது. அதைச் சாக்கடை என்றார்கள். அழுக்கான, கிழிந்த உடைஅணிந்த சில மனிதர்கள் அதில் கூட இறங்கி எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குருவிக்குத் தலை சுற்றியது.

“தண்ணீர்…தண்ணீர்..” என்று கதறியது. கீச் கீச் என்ற அதன் மெல்லிய குரல் ஆரவாரமான போக்குவரத்து சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. யாரும் குருவியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மனிதர்கள் சாவி கொடுத்த இயந்திரப் பொம்மைகள் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள்.

குருவியினால் சிறகினை அசைக்கக் கூட முடியவில்லை. விர்ரென்று தலை சுற்றியது. பறக்கவும் முடியாமல், கீழே இறங்கவும் முடியாமல் தலைகீழாகக் குருவி சாலையின் ஓரத்திலிருந்த நடைமேடையில் ‘பொத்’ தென்று விழுந்தது. உடம்பை அசைக்க நினைத்தும் முடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக குருவிக்கு நினைவு தவறிக் கொண்டிருந்தது. தண்ணீரே இல்லாத இந்த நகரம்.வெறும் பாட்டில் தண்ணீரிலும் பாக்கெட் தண்ணீரிலும் உயிர் வாழும் மனிதர்கள். குருவிக்குக் கண்கள் சொருகின. நினைவு மங்கியது. செத்து போய் விடுவோமோ என்று நினைத்தது. இந்த பூமியில் அன்பு, தயை, கருணை, இரக்கம், பச்சாதாபம், எல்லாம் அழிந்து விட்டதா?

அப்போது திடீரென மழைத்துளிகளைப் போல தண்ணீர் அதன் உடலெங்கும் பொழிந்தது. ஒரு கணம் உடல் சிலிர்த்தது. மெல்லக் கண்களைத் திறந்த போது நான்கைந்து குழந்தைகள் முதுகில் புத்தகச் சுமையுடன் தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அதில் ஒரு குழந்தை தான் தன்னுடைய பாட்டிலில் இருந்து நீரைக் கையில் ஊற்றி குருவியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு குழந்தை, “போதும்டி..இந்தத் தண்ணி தான் சாயங்காலம் வரைக்கும்.. காலி பண்ணிராதே..அம்மா திட்டுவா..” என்று சொன்னாள். அதைக் கவனிக்காமல் எல்லாக்குழந்தைகளும் குருவி வாயைத் திறப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். “ஐயோ..பாவம்..” என்றாள் ஒரு குழந்தை. உடனே கையைக் குவித்து நீரை ஊற்றி குருவியின் வாய்க்கு அருகில் கொண்டு வந்தாள் இன்னொரு குழந்தை. குருவி ஆசை தீரத் தண்ணீர் குடித்தது. ரொட்டிப் பொறுக்குகளை இன்னொரு குழந்தை கையில் ஏந்தினாள். அதன் சுவை குருவிக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் நாலைந்து வாய் தின்று வயிறை நிரப்பியது. அதற்கு உடனே நகரத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று தோன்றியது. ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே எழுந்து பறந்தது.

சிறிது தூரம் பறந்த குருவி திடீரெனத் திரும்பி வந்து குழந்தைகளின் தலைக்கு மேலே சுற்றிச் சுற்றிப் பறந்து ‘கீச் கீச்’ சென்று தனது மொழியில் நன்றி சொல்லி விட்டுப் பறந்தது. குழந்தைகள் ஆரவாரமிட்டனர்.

குருவிக்கு குழந்தைகளின் குதூகலத்தைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. என்றாவது ஒருநாள் இந்தக் குழந்தைகள் வசம் இந்த நகரம் வரும் போது எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தது. பின்பு நகரத்தை விட்டு வேகவேகமாகக் காட்டை நோக்கிப் பறந்து சென்றது.

dep_2432274-Children-Art

Monday 28 May 2012

மறுக்கும் பக்குவம்

child-obesitykoke

உதயசங்கர்

 

இப்போது பெரியவர்களாக இருக்கும் பெரும்பான்மையோருக்கு தங்கள் பாலியகாலம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. எல்லா வீடுகளிலும் குஞ்சும் குறுமானுமாக குழந்தைகளின் நெருக்கடி. போதும் போதாத வருமானம், அப்போதும் இருந்த விலைவாசி, வேலையின்மை, நிரந்தரமான எதிர்காலப் பயத்திலேயே வாழ்நாளைத் தள்ளிக் கொண்டிருந்த பெற்றோர்கள். ஒண்டிக்குடித்தனம், வாடகை வீடு, தண்ணீர் பிரச்சனை, உணவுப்பற்றாக்குறை என்று ஏராளமான குறைகளுடனே வளர்ந்தவர்கள் இன்றிருக்கும் பெரியவர்கள். இதோடு மட்டுமா? வீட்டில் அடி உதை பள்ளிக்கூடத்தில் தண்டனைகள், வெளியில் குழந்தைகள் என்றாலே ஏளனம் என்று எப்போதும் மனம் சோர்வுறும் வகையிலேயே வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்களுடைய குழந்தைப்பருவம் போல தங்களுடைய குழந்தைகளுக்கும் அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் அது நியாயம் தான்.

தங்கள் பெற்றோரை விட சற்றே கூடுதலான வசதி வாய்ப்புகளைப் பெற்ற இன்றைய பெரியவர்கள், அதிலும் குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள், இன்னொரு விபரீதமான முடிவெடுத்து குழந்தைகளின் ஆளுமையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தாங்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த எதிர்மறைச்சொற்களான இல்லை முடியாது வேண்டாம் இவற்றைத் தங்களுடைய குழந்தைகள் கேட்கவே கூடாது என்று தீர்மானமான முடிவெடுக்கிறார்கள். தாங்கள் அடைந்த ஏமாற்றங்களைத் தங்களுடைய குழந்தைகள் அடையவே கூடாது என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொள்கிறார்கள். தனக்குக் கிடைக்காத எல்லாமும், தான் ஆசைப்பட்ட எல்லாமும் தங்களுடைய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றார்கள். இதன் விளைவாக தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த உணவு, சிறந்த உடை, சிறந்த கல்வி (?) சிறந்த இருப்பிடம் சிறந்த விளையாட்டுகள், சிறந்த பொழுதுபோக்குகள் இன்னும் சிறந்த சிறந்த என்று எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவற்றை தேர்ந் தெடுக்க ஆசைப்படுகின்றனர். படித்து நல்ல அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற மத்தியதர வர்க்கத்தினரின் குணநலன்களை யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ முதலாளிகளும், வியாபாரிகளும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே பெரும்பாலான இன்றைய பொருட்களின் விளம்பரங்களில் குழந்தைகள் வருகிறார்கள். நம்மிடம் அந்தப்பொருட்களின் சிறப்புகளைப்பற்றி ஒரு விஞ்ஞானியைப் போல ஆனால் குழந்தைத்தனத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அத்தோடு அந்தப்பொருள்தான் உலகத்திலேயே சிறந்த பொருள் என்றும் அதை வாங்குவதின் மூலமே பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையை செய்ததாக, அர்த்தமாகும் என்று எமோசனலாக, செண்டிமெண்டலாக, மனதைத்தொடுகிறார்கள் பல விளம்பரங்களின் முடிவில் பெருமிதமான உணர்வில் கண்கலங்கும் பெற்றோர்களின் குளோசப் முகங்களும், மகிழ்ச்சியில் திளைக்கும், பெற்றோர்களை நன்றிப்பெருக்கோடு அணைத்து மகிழும் குழந்தைகளின் குளோசப்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் மனநிலையும் குழந்தைகளின் மன நிலையும் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சாதாரணமாக எந்தப்பொருள் வாங்கினாலும் அந்தப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் நம்மிடம் கிடையாது. விளம்பரம் செய்தால் போதும் அது நல்ல பொருள்தான் அதிலும் சினிமா, கிரிக்கெட். நடசத்திரங்கள், குழந்தைகள், பெண்கள் வந்து சிபாரிசு செய்தால் அது கண்டிப்பாக மிகச்சிறந்த பொருளாகத்தான் இருக்கும் என்ற மூடநம்பிக்கை பெரும்பான்மையோருக்கு இருக்கிறது மூடநம்பிக்கை எதில் வேண்டுமானாலும் வரலாமே உடனே அந்தப்பொருளை வாங்கிக் குழந்தைக்குக் கொடுப்பதில் ஒரு ஆனந்தம், சாக்லேட், பி°கட், கோக், பெப்சி, பற்பசை, கொசுவர்த்தி, சோப், நகைகள், கார், கணினி, ஹெல்த் டிரிங்க்°, ஜங்க் புட்°, என்று எல்லாவற்றிற்கும் குழந்தைகள் வருகிறார்கள். பெற்றோர்களும் அகமகிழ்ந்து அவரவர் வசதிக்கேற்ப வாங்கித் தருகிறார்கள். பின்பு பெருமையுடன் “சாப்பிடும் போது எம்பையனுக்கு எப்பவும் கோக் இருக்கணும்..... என்ன சொல்ல முடியுது இந்தக்காலத்து பிள்ளைங்ககிட்ட..... என்றோ” இவ.... “இந்த சேவு மிக்சர் எல்லாம் சாப்பிட மாட்டா.... ஒன்லி சாக்லேட், பர்கர், பிட்ஸா, சாண்ட்விச்... அவ படிக்கிற °ஸ்கூல் இண்டர்நேஷனல் °ஸ்கூலாச்சே.... அதான்.....”

என்றோ பெருமையுடன் பேசுகிற பெற்றோர்களும், குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி, ஆங்கிலக்கனவானாக வளர்க்க நினைக்கும் பள்ளிக்கூடங்களும் தாய்மொழியை வேலைக்காரர்களின் மொழி என்று நினைக்கிற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழலும் சில பல தலை முறைகள் தமிழ் வாசிக்கத் தெரியாமலும், எழுதத்தெரி யாமலும், அப்படியே எழுதத்தெரிந்தாலும் எழுத்துப் பிழைகளும் அர்த்த விபரீதங்களும் நிறைந்ததாக எழுதுகிற தலைமுறைகள் வந்திருப்பதற்கு பெற்றோர்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற போதம் இல்லாமல் எதிர்காலத்தலைமுறைகளை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

கோக், பெப்சியில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட், ஹைட்ரேகுளோரிக் ஆசிட்டினால் இரைப்பையில் அரிப்பு, புண்கள் ஏற்படும் என்று தெரியாதா? சாக்லேட்டில் உள்ள கோக்கோவினால் குழந்தைகளின் பற்கள் சொத்தை விழுவது மட்டுமல்ல, பிடிவாத குணமும் அதிகரிக்கும் என்று தெரியாதா? ஜங்க்புட்°களால் உடல்பருமனும், சிலருக்கு கேன்சரும் வரும் என்றுதான் தெரியாதா? இப்படிக்கேட்டால் நிறைய்யப்பேர் அய்யய்யோ...உண்மையில் தெரியாது என்று சொல்வார்கள் இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் விளம்பரக்காட்சிகளின் மனோவியல் தாக்குதல்களுக்கு முன்னால் எப்போதோ கேட்கவோ, வாசிக்கவோ நேர்கிற அறிவார்ந்த, பகுத்தறிவு பூர்வமான விளக்கங்கள் எடுபடுவது சிரமம்தான்.

ஆனால் குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா? இந்தக்குழந்தைகள் பெரியவர்களாகி வெளியுலகை சந்திக்க நேர்கிற போது, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தச் சமூகத்தின் குரூரம் முகத்திலறையும் போது என்ன ஆவார்கள் என்று யோசித்திருக்கிறோமா? எனவே குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கித் தருகிற, அங்கீகரிக்கிற மனநிலையைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். குழந்தைகளிடம் மறுக்க வேண்டும். பக்குவமாக, மென்மையாக, ஆனால் அழுத்தமாக மறுக்க வேண்டும். குழந்தைகள் முதலில் ஏமாற்றமடையலாம். அழுது புலம்பலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மௌனமாக ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் பெற்றோர்களுக்கு மறுக்கின்ற பக்குவம் வேண்டும். நல்ல விஷயங்கள் எது எது என்று பெற்றோர்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளிடம் கெட்ட விஷயங்களைப் பற்றி விளக்க முடியும். இதமான மனநிலையில் குழந்தைகளிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. சொல்கிற விஷயம் குறித்து நமக்கு சந்தேகம் இருக்கக் கூடாது. தெளிவாக, பெருமிதமான உணர்வோடு அவற்றைப்பற்றி எடுத்துச்சொல்லும்போது அதே பெருமித உணர்வும் தெளிவும், பக்குவமும் குழந்தைகளிடம் ஏற்படும். தங்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு நல்ல விஷயங்களையேச் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை வளரும். அதற்கு முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுவரவேண்டும். அந்த விழிப்புணர்வைப் பெற பெற்றோர்கள் முன்வரவேண்டும் வருவார்களா?

Sunday 27 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

220px-Kamala_das

கமலாசுரய்யா

தமிழில்- உதயசங்கர்

சமூகம் அங்கீகரித்துள்ள ஆசார அனுஷ்டானங்களை நான் விமரிசிப்பதற்கு பல காரணங்களிருக்கிறது. அழிகின்ற மனிதசரீரம் தான் இந்த ஆசாரங்களுக்கு அடிப்படை. அழியாத மனிதஆத்மாவில் அதை கண்டறிய முடியாதென்றால் மனித மனத்திலாவது இறுகிவிடாத உத்தமும் வந்தனமும் கூடிய ஆசாரத்தையே நான் நம்புகிறேன். சமூகத்தை ஒரு குரூபியாகவும், ஒரு மூதாட்டியாகவும், நான் பார்க்கிறேன். துவேஷம் நிறைந்த மனதுள்ளவர்களையும், பொய் சொல்லுகிறவர்களையும், வஞ்சிப்பவர்களையும், சுயநலமிகளையும், மிகவும் ரகசியமாகக் கொலை செய்தவர்களையும், இந்தக் கிழவி ஒரு கம்பிளியினால் அன்போடு போர்த்தி விடுவாள். இந்தக் கம்பிளியின் தயவை வெறுப்பவர்கள் வெளியில் குளிரில் விரைத்து விடுகின்றனர். பொய்கள் சொல்லியும், நடித்தும், நம்பிக்கைத் துரோகம் செய்தும், பலரையும் வெறுத்தும், இந்த ஆசாரப் போர்வைக்கடியில் சூடும், சுகமும், உள்ள ஓரிடம் எனக்கும் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் நான் ஒரு எழுத்தாளராகியிருக்க மாட்டேன். என்னுடைய நெஞ்சில் அடைத்துக் கொண்டு நிற்கிற சத்தியங்கள் ஒரு நாளும் வெளிச்சத்தைப் பார்த்திருக்காது. இலக்கியவாதியினுடைய முதல் கடமை அவனே அவனை ஒரு பரிசோதனை மிருகமாக்குவது தான்( guinea pig ) . வாழ்க்கையனுபவங்களிலிருந்து தப்பித்துப் போக அவன் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. பனியின் குளிர்மையையும், தீயின் வெம்மையையும், அவன் அனுபவிக்க வேண்டும். அவனுடைய கால்களுக்கு நோக்கம் கிடையாது. அவை கொலைகாரியின் இடத்திற்கும் கூட்டிச் செல்லும். அவனுடைய புலன்கள் உறுதி குறைந்தே இருக்கும். அவன் சிரிக்கவும், ப்போதையில் மிதக்கவும், சுகிக்கவும், நோய் பீடித்து சுயநினைவின்றி கிடக்கவும், ஏங்கி ஏங்கி அழவும் செய்வான். மனிதவாழ்வின் நாலாபக்கங்களைப் பற்றி எழுத வேண்டியது தான் அவனுடைய முக்கியமான காரியம். மனிதசரீரம், முடிவில் நெருப்புக்கோ, மண்புழுக்களுக்கோ, இரையாகி விடும். மனிதன் பூமியின் இரை. பூமியை அவன் தன்னுடைய எலும்பினால் ஊட்டப் படுத்துகிறான். ஆனால் அவனுடைய வார்த்தைகள் அழிவில்லாதது. காலத்தினால் விழுங்கமுடியாத சத்திய வாசகங்கள். அவனை இடையிடையே நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும்.

இலக்கியவாதி எதிர்காலத்தோடு மோதிரம் மாற்றிக் கலியாணநிச்சயம் முடிந்த ஒரு ஆள். அவன் பேசுவது உங்களோடு இல்லை. உங்களுடைய பின்தலைமுறைக்காரர்களோடு. அந்த ஞானம் என் மனதில் இருப்பதினால் மட்டும் தான் உங்களில் சிலர் எறிகின்ற கற்கள் அவனுடைய உடலைக் காயப்படுத்தினாலும் அவன் அமைதியாக இருக்கிறான்.

Saturday 26 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்

அப்பணசாமி

நான் ஏன் எழுதுகிறேன்? நான் ஏன் எழுதத் தொடங்கினேன்? நான் எப்படி எழுதத் தொடங்கினேன்? எப்படி யோசித்தாலும் இப்போது எனக்குக் கிடைப்பது ஒரே பதில்தான்!

எழுதுவதுதான் எனக்கு மிக எளிதான தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. மிகவும் கூச்சசுபாவியான எனக்கு எழுதுவதுதான் தனிமையில் மேற்கொள்ளக்கூடிய காரியமாக இருந்திக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவருக்கான எளிதான சிறந்த தொடர்பு சாதனத்தைத் தேட முற்பட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பலருக்குப் பேசுவதே மிக எளிதான தொடர்பு சாதனமாக இருக்கலாம். சிலருக்கு ஓவியம், வேறு சிலருக்குக் கவிதை, இசை, பாடல், கதை சொல்லுவது, பாட்டுக் கட்டுவது என பல வடிவங்களில் ஒன்று அவரவருக்கானதாக இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை எனது பதின்மப் பருவத்தில் நான் எனக்குள் சுருங்கிப் போனேன். எனது கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்லுவதில் தயங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது எழுதினால் மட்டுமே எனது எண்ணங்களைச் சிறப்பாகத் தெரிவிக்க முடியும் என்ற நம்பிக்கை - நான் ஏழாவது படிக்கும்போதே ஏனோ எனக்கு ஏற்பட்டிருந்தது.

அநேகமாக எனது முதல் எழுத்து எனது 12ஆவது வயதில் எழுதிய போஸ்ட் கார்டு காகிதம் (கடிதம்)தான் என்று என்று நினைக்கிறேன். அது எனது அப்பாவுக்கு எழுதிய முதல் கடிதம். எனது வாழ்க்கையில் எனது அப்பாவுக்கு இரண்டே இரண்டு கடிதம்தான் எழுதியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. முதல் கடிதம் எழுதி சுமார் 25 வருசம் கழித்தே இரண்டாவது கடிதம் எழுத நேர்ந்தது. அக்கடிதத்துக்குப் பிறகு என் அப்பாவை நான் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. 296354_223030614425623_100001560597711_608844_2065706084_n

நான் எனது ஏழாவது வகுப்பை ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அங்கேயே பள்ளியும். கிறித்துவ மிஷனரி நடத்திய தர்மப் பள்ளிக்கூடம். ஹாஸ்டலுக்கும் பீஸ் கிடையாது. எனது ஊரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவு. தப்பித்துக்கூட ஓட முடியாது. எந்தப் பக்கம் ஆனாலும் குறைந்தது 5 கி.மீ நடந்து கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிடித்து விடுவார்கள். பிடித்துவிட்டால் காலில் சங்கிலி போட்டு பிணைத்து விடுவார்கள். எனக்கு அதற்கெல்லாம் தைரியம் இல்லை. இருந்தாலும் இந்த வருசம் எப்படியும் தொலையட்டும், அடுத்த வருசம் இங்கு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை; இங்கு மட்டும் இருக்கக்கூடாது என்பது எனது வைராக்கியம். கிட்டத்தட்ட அங்குதான் தனிமை நோய் அல்லது தனிமை சுகம் என்னைப் பீடித்து இருக்கலாம்.

எனது வைராக்கியத்தை அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது என்ற ஆராய்ச்சியின் முடிவாகத்தான் கடிதம் எழுதும் யோசனை பிறந்தது. மூணு காசுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி நாலே நாலு வரி எழுதிப் போட்டேன். எழுதிப்போட்டேன் என்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. முதலில் எழுதுவதற்கு ஒரு ரகசியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். கார்டு வெளியே தெரியாதபடி உடலுக்குள் மறைத்து வைக்க வேண்டும். சர்ச்சுக்கு எதிர் தெருவில் இருக்கும் போஸ்டாபிஸ் திண்ணையில் ஏறி அதில் தொங்கும் பெட்டியில் போட வேண்டும். அப்போது ஒரு சுடுகஞ்சிகூட பார்த்திருக்கக் கூடாது. அப்படியான சாதனையோடு அந்தக் கடிதத்தை எழுதிப் போட்டேன். எந்த வரிசையிலும் முதலாவது நிற்கும் அளவுக்குக் குள்ளம். இப்போது யோசிக்கும்போது பாதிரியாரின் பார்வையை மீறி எந்தக் கடிதமும் அந்த ஊரைவிட்டுப் போயிருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதுஎனது எழுத்தில் மயங்கித்தான், என்னை அப்பா, அங்கிருந்து விடுவித்தார் என மிகவும் நம்பினேன். அதனால் என்னால் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை அப்போதே துளிர் விட்டிருந்தது.

தொடர்ந்து வகுப்புகளிலும் கேள்விக்கான பதில்களை எழுதும் போது நானே வாக்கியம் அமைத்து எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பதில்களின் நடுவே தந்திரமாக எனது சொந்த வாக்கியங்களைச் சேர்த்துவிடுவேன். தமிழ்க் கேள்வித்தாளில் எனக்குப் பிடித்த கேள்விப் பகுதி வியாசம் (கட்டுரை) எழுதுவதாகவே இருந்தது. அதற்கு எந்த ஆசிரியருக்கும் 10க்கு 6 மார்க்குமேல் போட மனசு வராது.

அப்புறம் வீட்டில் தீப்பட்டிப் பசை நாற்றத்துக்குப் பயந்து தப்பித்து எங்கள் தெரிவில் உள்ள நூலகத்தில் ஒளிந்து கொள்ளும் பழக்கமும் இருந்தது. அங்கு என்னை அறியாமல் வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ராசு நல்லபெருமாள், கு. அழகர்சாமி ஆகியோரின் புத்தகங்களைப் புரட்டிய நினைவும் இருக்கிறது. அவற்றில் என்னை ஆச்சரியப்பட வைத்தது தாகூர் கதைகளின் மொழிப்பெயர்ப்புப் புத்தகம் ஒன்று. அதில் நமது வீடுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் போலவே கூறப்பட்டிருந்தது. வீட்டில நடப்பதை எழுதினால் அதுவும் கதைதான் என்பதை அக்கதைகள் புரியவைத்தன.

வெகுசீக்கிரத்தில் நான் கணக்குப் புலி ஆகி விட்டேன். கணக்குப் பாடம் தவிர எதுவும் ரசிப்பது இல்லை. கடைசி வரை கணித மாணவனாகவே கழித்து விட்டேன். அதனால் பள்ளிக்கூட நாள்களில் கவிஞனாகும் கனவெல்லாம் இல்லை. படிப்பெல்லாம் முடியும் நேரத்தில் நண்பர்களில் பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்தப் புத்தகத்தை நானும் வாசிக்க ஆரம்பித்தேன்.

தண்டவாளத்தைத் தாண்டிப்போனால் சில புத்தகங்களைக் கண்ணில் காண்பிப்பார்கள். அப்படி ஜெயந்தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், நீல பத்மநாபன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வாசிக்கக் கிடைத்தது. ஒரு தொகுப்பின் தலைப்பு: சம்மதங்கள். பெரும்பாலும் நமது குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளே கதைகளாக இருந்தன. எனக்கு ஒரே ஆச்சரியம். இதுதான் கதையா? அப்படின்னா ‘நம்ம கிட்ட எவ்வளவோ கதைகள் இருக்கே! என நினைத்தேன். ஏனென்றால் என் வீடு இது போன்ற சண்டைகளுக்கு ஜில்லாவிலேயே பிரபலமான வீடு. அப்போது நாமும் இதுபோல கதைகள் எழுத முடியும் என மீண்டும் நினைத்தேன். அதற்கேற்ற மாதிரி நான் ஏன் எழுதுகிறேன்? நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்? நான் பயின்ற பல்கலைக் கழகங்கள் என்பன போன்ற எழுத்து குறித்த மார்க்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய். அலெக்சி டால்ஸ்டாய், சோலோகவ், பிளாக்கனோவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் (லியோ டால்ஸ்டாய், சோலகோவ். பிளாக்கனவ் எழுதிய கட்டுரை/புத்தகங்களின் தலைப்புகள் திடீர் என நினைவுக்கு வரவில்லை) படிக்கக் கிடைத்தன. அந்தப் புத்தகங்களில் எழுத்து என்பது ’பயிற்சிதான்; தொடர்து முயற்சி செய்தாக் யாரும் எழுத்தாளனாகிவிட முடியும் என்பதைத் திரும்ப, திரும்பக் கூறினர். இவ்வாறு எனக்குக் கிடைத்த தொடர் நம்பிக்கை எழுதாமல் முடியாது என்ற நிலையை உருவாக்கியது. எழுதத் தொடங்கினேன்.

மேலும் அது ரகசிய உலகமாக இருக்கிறது. பேசினால் சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனால் எழுத்தில் திருத்தி எழுத முடிகிறது. எண்ண ஓட்டங்களுக்கும் அதை எழுதிமுடிப்பதற்கும் இடையேயான் இடைவெளி பாதுகாப்பானதாக இருக்கிறது. எழுதுவது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் செயலாக இருக்கிறது. எழுத்து. கள்ளுக் குடித்தது போன்ற போதையைத் தருகிறது. அது பத்திரிகையில் பிரசுரமாகும்போது நான் உயரமானவனாக உணர்கிறேன். என் எழுத்தால் வாசக மனதைக் ககக்கிப்பிழிந்துவிட நினைக்கிறேன். அது அழியாது என நினைக்கிறேன்.

இவ்வளவும் தெரிந்தும் நான் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது மீதி புராணம்!

Friday 25 May 2012

பறவையின் அழுகை

LADY

பகலைக் குடைந்து இரவுக்குள்

ஊர்ந்து வரும் காமப் புழுக்கள்

வெடித்துப் பிளந்த உடலெங்கும்

காமசரிதைகளை எழுதிச் செல்லும்

ஓடிக்கொண்டிருக்கும் நாயின்

உலர்ந்த நாக்கில் ஒட்டிய

பகல்ஞாபகங்களின் மீது

இருள் போர்வையெனப்

போர்த்தும் காமம்

அடைத்த கடையில் அடைக்கலமான

பசித்த இரவின் கண்களில்

சினிமா நடிகையின் திமிர்த்த

முலைகள் குத்த புரண்ட இரவு

தலை சொறிந்து கைகளில்

தீர்க்கும் காமம்

நிசப்த வெளியெங்கும்

பிரவகிக்கும் காமப்பேராறு

கிசுகிசுக்கும் பேரோசை

சற்றே மௌனம் காக்கும்

காமம் தவறிய ஒற்றைப்

பறவையின் அழுகையில்.

Thursday 24 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

K._Ayyappa_Paniker_(1930_–_2006)

கே. அய்யப்பபணிக்கர்

தமிழில்- உதயசங்கர் 

எதை வைத்து எழுதுகிறாய்? என்று கேட்டால் “ பேனாவை வைத்துத் தான் “ என்று சொன்ன பைத்தியக்காரனை மறந்து விடுங்கள். பேனாவும் பென்சிலும் இல்லாமல் எழுதுகிறவர்களுடைய சிந்தனை பெருகி வருவதில்லையா? ஒரு வாக்கியத்தில் பதில் சொல்கிற கேள்வியல்ல எதற்காக எழுதுகிறாய்? என்ற கேள்வி. பலருக்கும் பல லட்சியங்கள் உள்ளன. லட்சியம் என்று ஒன்று தனியாக இல்லாதவையும் பார்க்கலாம். பணத்திற்காகவோ, கௌரவத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ, மக்கள் செல்வாக்குக்காகவோ, ஆத்ம திருப்திக்காகவோ, எழுதுகிறவர்கள் உள்ளனர். எழுதாமலிருக்க முடியாததினால் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும் சிலர் சொல்ல முடியும். எல்லாப் படைப்புகளுக்கும் ஒரே லட்சியம் கிடையாது. ஒரே படைப்புக்கு பல லட்சியங்களூம் இருக்கலாம்.

எழுதுவதற்காகவே எழுதுகிறவர்கள் இருப்பது போல எழுதி முடிப்பது வரை எதற்காக எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். ‘ ஆத்மதிருப்தியோ அல்லது பிரச்சாரமோ,’ இதில் ஏதோ ஒன்று எழுத்தாளனின் லட்சியம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உலகத்தைச் சீர்படுத்துவதற்காகவும் எழுதலாம். உலகத்தைச் சீரழிப்பதற்காகவும் எழுதலாம். சுயதிருப்தியைத் தவிர வேறு லட்சியமில்லாத எழுத்தாளர்களும் உண்டு. இது தான் என்னுடைய லட்சியம் என்று சொல்லிவிட்டதால் மட்டும் அது லட்சியமாக இருந்து விடாது. ஒன்றைச் சொல்லி விட்டு வேறொன்றைச் செய்வது எழுத்தாளர்களுக்கு வழக்கம் தான். இங்கே சொன்ன எல்லாவிதத்திலும் நான் எழுதியிருக்கிறேன் என்பதையும் சேர்த்துச் சொன்னாலே இந்த சிந்தனையோட்டத்தை நிறுத்தமுடியும்.

Wednesday 23 May 2012

விளையாட்டே வாழ்க்கை

 

உதயசங்கர்

 

இளம் பருவத்தில் எல்லா உயிரினங்களும் ஓடி, குதித்து, பாய்ந்து, விளையாடித், தங்களுடைய உடலை உறுதி செய்கின்றன. உள் உறுப்புகளை இதயம், நுரையீரல், சிறுநீரகம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று எல்லாப்பகுதிகளும் சீராக இயங்கவும், வெளி உருவான எலும்புகள், தசைகள், அவற்றின் சக்தி, வலிமை கூடவும் விளையாட்டை உயிரினங்களின் உள்ளுணர்வோடு இணைத்து விட்டிருக்கிறது இயற்கை. குழந்தையும் அப்படித்தான். பிறந்த குழந்தை தன் கை கால்களை உதைப்பதில் துவங்கி அழுவது வரை தன் உடலின் எல்லாப்பகுதிகளையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சியே. இந்த முயற்சிகளின் விளைவாகவே குழந்தை வேகமாகவும், திடமாகவும் தன் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து போகிறது. குழந்தையின் தன்னம்பிக்கையும் வளர்கிறது.

பொதுவாக குழந்தை இருந்த இடத்தை விட்டு நகராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருக்கும் வரை பெற்றோர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். ஆனால் எப்போது குழந்தை இருந்த இடத்திலிருந்து அசைய ஆரம்பிக்கிறதோ அப்போதே அவர்களைக் கவலை வந்து தொற்றிக்கொள்கிறது. குழந்தை அசையாமல் ஒரே இடத்தில் இருந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தை அசைய ஆரம்பித்ததும் அவர்கள் கவனம் முழுவதும் குழந்தைகயின்பால் திரும்பிவிடுகிறது. அங்கே போகாதே, இங்கே போகாதே அதை எடுக்காதே இதை எடுக்காதே என்றோ பாத்து பாத்து கீழே விழுந்துரப் போற.. அடிகிடி பட்டா என்ன செய்யமுடியும்... என்றோ எச்சரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதெல்லாம் குழந்தையின் மீது பெரியவர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பின் விளைவு தான் என்றாலும் குழந்தைக்குத் தன்னுடைய சுதந்திரமான சுயேட்சையான வளர்ச்சியில் ஏற்படும் இடையூறாகவேத் தெரியும். தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தன் உடலில், மனதில் புதிய,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தித் தன் கண்டு பிடிப்புகளினால் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறது குழந்தை. திரும்பிக் குப்புறப்படுக்க முயற்சி செய்கிறது, அதற்காக நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து முயற்சித்து தன் உடலையே தூக்கித் திருப்பிப் போடுகிறது. அதோடு தன் தலையையும் நிமிர்த்துகிறது. அதே போலவே தவழ ஆரம்பிப்பது தன் முதுகெலும்பு உரம்பெற உரம் பெற உட்கார முயற்சிப்பது, உட்கார்ந்த பிறகு எழுந்து நிற்க முயற்சிப்பது, நின்றபிறகு ஒவ்வொரு அடியாக தத்தக்கா பித்தக்கா என்று நடக்க முயற்சிப்பது பிறகு எழுந்து குழந்தை தன் உள்ளுணர்வின் வழியே கிடைத்த தூண்டுதல்களினால் புதிதாகக் கண்டு பிடித்து பெருமகிழ்ச்சி கொள்கிறது. எல்லா தூண்டுதல்களையும் இயற்கையாகவே குழந்தை பெற்றிருக்கிறது.

பெரியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் செயல்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பது தான் குழந்தையிடம் அவநம்பிக்கையான வார்த்தைகளைப் பேசாமல், குழந்தையின் இயல்பான முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். குழந்தை விழுவது, எழுவது இயல்பு. தன்னுடைய ஒவ்வொரு செயலின் மூலமும் அதன் விளைவின் மூலமும் குழந்தை ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறது என்பதை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே குழந்தை என்ன செய்தாலும் அல்லது குழந்தைக்கு என்ன நேர்ந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள் என்று சொல்வதாக அர்த்தமில்லை..play

பெரும்பாலான பெரியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுவதில் சம்மதமில்லை. வீட்டிற்குள்ளேயே விளையாட வேண்டும், வீட்டில் பெரியவர்கள் வாங்கிக்கொடுத்திருக்கும், கார், பைக், ஹெலிகாப்டர், °பைடர்மேன், ஹீமேன், பார்பி, டெடிபியர், நாய்க்குட்டி போன்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு அமைதியாக சமர்த்தாக சத்தம் போடாமல் ஓடி ஆடாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே யாருக்கும் தொந்தரவு செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது இந்த கண்டிஷன்கள்! பெரியவர்களான நம்மாலேயே ஒரு இடத்தில் ஒரே மாதிரி ஐந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார முடிவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகளிடம் வைக்கிற இந்தக் கோரிக்கைகள் எவ்வளவு மோசமானவை. தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் புதிது புதிதாய் பரவசத்தின் உச்சநிலையிலேயே அனுபவிக்கத் துடிக்கும் குழந்தைகளை இப்படியான கட்டுப்பாடுகளால் கட்டிப் போடுவது சரியாக இருக்குமா?

ஏன் குழந்தைகளை வெளியே சென்று விளையாடவிடுவதில் பெருந்தயக்கம்? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகளிடம் பெற்றோர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அறிவியல் பார்வையற்ற அன்பு, வெறி, பாசம், பொசசிவ்னெஸ், என்று சொல்லலாம். இந்த உணர்வுகளின் விளைவாகக் குழந்தையின் பாதுகாப்பையே பிரதானப் படுத்துகிறார்கள். இதனால் குழந்தை எப்போதும் தங்களுடைய கண்முன்னால், கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தை வெளியே சென்று விளையாடினால் ஏதாவது நிகழ்ந்து விடுமோ? என்ற நிரந்தர அச்சம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தாய்மார்கள் இந்தப் பதட்டம் காரணமாக நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாக வேறொரு காரணமும் இருக்கிறது. முன்பு எல்லாக் குடும்பங்களிலும் மூன்றுக்கு மேள்பட்ட குழந்தைகள் இருந்ததினாலும், சமூக, பொருளாதார வசதிக்குறைவினாலும் குழந்தைகள் மீது இப்போதிருக்கும் அளவுக்கு அக்கறை செலுத்த பெரியவர்களால் முடியவில்லை. ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்ததை விட வெளியில், தெருவில், மைதானத்தில் இருந்தது அதிகம். இதனால் ஏழ்மையின்,இல்லாமையின் நெருக்கடிகளினூடேயும் குழந்தைகள் சற்று சுதந்திரமாக இருக்க முடிந்தது. ஆனால் இப்போது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. மத்தியதர வர்க்கத்தினரின் சற்றே மேம்பட்ட சமூகப்பொருளாதார வசதியும், தாங்கள் தங்களுடைய இளம் வயதில் அனுபவிக்காதது, ஆசைப்பட்டது, எல்லாவற்றையும் தங்களுடைய குழந்தைகள் அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையும் சேர்ந்து குழந்தைகளின் சுதந்திரத்தை அதிலும் குறிப்பாக விளையாடும் சுதந்திரத்தை பறித்துவிட்டது. இந்தச் சித்திரம் முழுமையானதில்லை. இன்னமும் மைதானங்களில், கிராமங்களில் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதென்பது கவலையளிக்கிற விஷயமாக இருக்கிறது.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடி அடிபட்டால், காயம்பட்டால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கெட்டுப்போய் விட்டால், விளையாட்டிலேயே கவனம் குவிந்து படிப்பில் அக்கறை குறைந்து போய் விட்டால், என்று ஏராளமான பயங்கள் பெரியவர்களுக்கு. எனவே என்ன செய்கிறார்கள் தெரியுமா? பேசாமல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் உட்கார வைத்து விடுகிறார்கள். கார்ட்டுன் சேனலோ, சுட்டியோ, போகோவோ, ஏதோ ஒரு சேனலின் கையில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு அதோடு கையில் டைரி மில்க், எக்ளேர், சாக்லேட் வகையறா, குர்க்குறே, லே°, லிட்டில் °கார்ட்ஸ்° வகையறா என்று எல்லாவித பாக்கெட் நொறுக்குத் தீனிகளையும் கையில் கொடுத்துவிட்டு °°..... அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் இயல்பான இயற்கைத் தூண்டுதல்களுக்கு மாறாக ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல எந்த உடல் உழைப்புமின்றி சர்க்கரையும், எண்ணெயும் கொழுப்பும், புரதமும் கூடவே அன்பளிப்புகளாக கெமிக்கல்ஸ் லையும் உட்கொண்டு குண்டாகிக்கொண்டே வருகிறார்கள். தாங்கள் தங்கள் அருமைக்குழந்தைகளை எதிர்கால நோயாளிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் பெரியவர்கள் குழந்தைகளின் பருமனை “கொழுகொழுன்னு எப்படி இருக்கு குழந்தை” என்று மற்றவர்கள் பாராட்டைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓடியாடி விளையாடாமல் உடலில் சேரும் சர்க்கரையும், கொழுப்பும் எப்படி வளர்சிதை மாற்றமடையும்? உடலோடு சேர்ந்து உரம் தருமா? யோசிக்கவேண்டாமா? பள்ளிக்கூடங்கள் அதிலும் பல மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களின் உளவியலை தெரிந்து கொண்டதால் மைதானங்கள் இல்லாமல் பள்ளிக்கூடங்களைக் கட்டுகின்றனர். பி.டி. பீரியட், என்ற வகுப்பு அட்டவணையில் மட்டும் இருக்கிறது. பெற்றோர்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. குழந்தைகள் தான் பாவம் தவித்துப்போகிறார்கள். குழந்தைகள் நம்முடைய எதிர்கால சமுதாயம் என்பதை முதலில் பெரியவர்கள் உணரவேண்டும். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை மிக்க, தீரமிக்க, சமூகம் ஆரோக்கியமான, தீரமிக்க, குடிமகன்களாலேயே உருவாகும். இன்றைய குழந்தைகள்தான் நாளைய குடிமக்கள் என்பதை உணர்ந்து அவர்கள் ஆரோக்கியமாக வளர அவர்களை விளையாட விடுங்கள். வீணான பயங்களை விரட்டியடியுங்கள்.

Tuesday 22 May 2012

ஓடிய புத்தகங்கள்

School_Books_Royalty_Free_Clipart_Picture_081220-013873-169042

ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் ஒரு நாள் பக்கத்திலிருந்த நகரத்திற்குப் போனார். அங்கே உள்ள பெரிய புத்தகக் கடைக்குள் நுழைந்தார். ஏராளமான புத்தகங்கள் அந்தக் கடையில் இருந்தன. வாத்தியாரைப் பார்த்த கடைக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்,

“ வாங்க ஐயா.. வாங்க புதிய புத்தகங்கள் நிறைய்ய வந்திருக்கு.. பாருங்க..”

என்று வாத்தியாரிடம் புத்தகக் கடைக்காரர் சொன்னார். அதற்கு வாத்தியார்,

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. எனக்கு ஒரு அடி நீளம் முக்கால் அடி அகலத்தில பத்துப் புத்தகங்கள்..முக்கால் அடி நீளம் அரை அடி அகலத்தில பத்துப் புத்தகங்கள்..ம்..அப்புறம் அரை அடி நீளம் அரை அடி அகலத்தில இருபது புத்தகங்கள் வேணும்..கிடைக்குமா?”

என்று கேட்டார். உடனே கடைக்காரர்,

”என்ன புத்தகங்கள் வேண்டும்..ஐயா.. அரசியல், இலக்கியம், அறிவியல், தத்துவம், மருத்துவம், பொதுஅறிவு, சுயமுன்னேற்றம்,என்று ஏராளமான தலைப்புகளில் இருக்கிறது..என்ன புத்தகங்கள் வேண்டும் என்று சொன்னால் நான் அதை எடுத்துத் தருகிறேன்..”

என்றார். அதற்கு அந்த வாத்தியார்,

“ என்ன புத்தகங்களாக இருந்தாலும் பரவாயில்லை.. அளவு தான் முக்கியம். அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்..”

என்று சொன்னார். புத்தகக் கடைக்காரருக்கு எதுவும் புரியவில்லை.

” அதில்லை ஐயா.. புத்தகங்களை நீங்கள் பார்க்க வேண்டாமா?”

என்று மீண்டும் கேட்டார், புத்தகக் கடைக்காரர்.

“ சரி..உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.. புதிதாய் வீடு ஒண்ணு கட்டியிருக்கேன்..அதில் புத்தகங்களுக்கென்று ஒரு அலமாரியும் கட்டியிருக்கிறேன்..அதில் வைப்பதற்குத் தான் புத்தகங்கள் வேண்டும்..அதில வைக்கிறதுக்குத் தான் புத்தகங்கள் வேண்டும்..புத்தகங்கள் இருந்தால் பார்க்கிறவங்களுக்கு ஒரு மதிப்பா இருக்கும்ல! அதுக்குத்தான் அலமாரியோட அளவைச் சொன்னேன்.. எந்தப் புத்தகங்களா இருந்தாலும் சரி.. நாம என்ன படிக்கவா போறோம்..எல்லாம் ஒரு ஷோவுக்குத் தானே”

என்று விளக்கமாய் சொன்னார் வாத்தியார். புத்தகக்கடைக்காரர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகங்களைத் தேடத் தொடங்கினார்.

அவர் அளவு பார்த்து புத்தகங்களை எடுக்க புத்தகங்கள் அலறின. என்னை விட்டு விடுங்கள்..என்னை விட்டு விடுங்கள் என்று கதறி அழுதன. வியாபாரம் ஆயிற்றே என்ன செய்ய முடியும்? என்று கடைக்காரர் வாத்தியார் கேட்ட அளவுப் படியே புத்தகங்களை எடுத்துக் கட்டிக் கொடுத்தார்.

வாத்தியார் புது வீட்டில் புத்தகங்களைக் கொண்டு போய் அடுக்கினார். பின்னர் கண்ணாடிக் கதவுகளைச் சாத்திப் பூட்டும் போட்டு விட்டார். அவருக்கு இப்போது திருப்தியாக இருந்தது. இரண்டு நாள் கழித்து புதுமனை புகுவிழா வைத்திருந்தார்.

இரவில் புத்தகங்கள் தாங்கள் சிறைப் பட்டதை நினைத்து கண்ணீர் சிந்தின. அப்போது குழந்தைகள் புத்தகம்,

“ நான் சின்னஞ்சிறு குழந்தைகளை என் சிறகில் ஏற்றிக் கொண்டு இந்த உலகின் அற்புதங்களைக் காட்டலாம்..கதை கதையா சொல்லி குழந்தைகளை சந்தோசப் படுத்தலாம்..என்று நினைத்திருந்தேன்..”

என்று புலம்பியது. அறிவியல் புத்தகம் குறுக்கிட்டு

“ அறிவியலின் வளர்ச்சியை எல்லோரிடமும் சொல்லி சாதி மத மூடநம்பிக்கைகளிலிருந்து எல்லோரையும் விடுவித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.”

என்று படபடத்தது. உடனே ஆரவாரமாய் பேச ஆரம்பித்த அரசியல் புத்தகம்,

“ எல்லாவற்றிலும் இருக்கிற அரசியலைப் பற்றிச் சொல்லவேண்டும்..உண்மையான அரசியல் எது என்பதைப் பற்றியும் எது நமது அரசியல் என்பதைப் பற்றியும் சொல்லவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்..”

என்று வருத்தத்துடன் முடித்தது. அப்போது ஒரு கனத்தகுரல் கேட்டது,

“ செயலற்ற வாழ்வே மாயம்..விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எல்லாத் தத்துவங்களுக்கு நடுவே வாழ்க்கையை மாற்ற முடியும் நம் வாழ்க்கை நம் கையில் தான் என்று சொல்கிற தத்துவத்தைப் பத்திச் சொல்லவேண்டும்..என்று காத்திருந்தேன்..”

குரல் வந்த திசையில் ஒரு தத்துவப் புத்தகம். இப்படி எல்லாப் புத்தகங்களும் புலம்ப ஆரம்பித்தன். என்ன செய்யலாம்? என்று எல்லாப் புத்தகங்களும் சேர்ந்து ஆலோசித்தன. ஒரே முணுமுணுப்பு. கிசுகிசுப்பு.

புதுமனை புகுவிழா அன்னிக்கு காலையில் வாத்தியாரும் விருந்தினர்களும் வீட்டிற்குள் வந்து பார்த்தனர். புத்தக அலமாரியின் கண்ணாடிக் கதவுகள் உடைந்து நொறுங்கியிருந்தன.அலமாரி தட்டுகளில் ஒரு புத்தகத்தைக் கூட காணவில்லை.

எல்லாப் புத்தகங்களும் இரவோடு இரவாக அந்த வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டன.

modernshelves14

Monday 21 May 2012

கூண்டுப் பறவை-- தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்.verity_harpy_aug07

செர்யோஷாவின் பிறந்த நாளைக்கு நிறையப் பரிசுகள் கிடைத்தன.பம்பரங்கள்,சாய்ஞ்சாடும் குதிரை, படங்கள் எல்லாம் கிடைத்தன.ஆனால் மிகச் சிறந்த பரிசு அவனுடைய மாமாவிடமிருந்து தான் கிடைத்தது. பறவைகளைப் பிடிப்பதற்கான கூண்டு. சிறிய மரச்சட்டகத்தில் வலை அடித்த கூண்டு.

கொஞ்சம் தானியங்களை உள்ளே போட்டு கூண்டை தோட்டத்தில் வைத்து விட்டால் போதும். தானியங்களை தின்பதற்கு ஏதாவது ஒரு பறவை உள்ளே வந்ததும் அதன் மரக் கதவு தானாக மூடிக்கொள்ளும்.செர்யோஷாவுக்கு ரொம்ப சந்தோசம். அவனுடைய அம்மாவிடம் காட்டுவதற்கு ஓடினான்.

அவள் அதைப் பார்த்துவிட்டு,”ரொம்ப மோசமான விளையாட்டு சாமான்,ஏன் பறவைகளைப் பிடித்து துன்பப் படுத்தணும்”.என்று சொன்னாள்.

அவன்,”நான் அவற்றைப் பிடித்துக் கூண்டில் அடைச்சு வைப்பேன்.அவை எனக்காகப் பாடும்.நான் அதுகளுக்கு சாப்பாடு கொடுப்பேன்” என்றான்.

செர்யோஷா கொஞ்சம் தானியங்களை அந்தக் கூண்டுக்குள் போட்டு, அதைக் கொண்டு போய் தோட்டத்தில் வைத்தான்.அவன் ரொம்ப நேரமாகக் காத்திருந்தான்.ஒரு பறவையும் வரவில்லை.

அவனைப் பார்த்து பறவைகள் பயந்தன.கூண்டின் அருகில் கூட பறக்கவில்லை.செர்யோஷா இரவு உணவுக்காகவீட்டிற்குள் போய் விட்டான்.கூண்டை தோட்டத்திலேயே விட்டு விட்டான். சாப்பிட்டு விட்டு வந்து பார்க்கும் போது கூண்டு அடைபட்டு இருந்தது. ஒரு சிறிய பறவை முட்டி மோதிக் கொண்டிருந்தது.பல்லை இளித்தபடியே செர்யோஷா கூண்டத்தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

“அம்மா, இங்கே பாருங்க! நான் ஒரு பறவையைப் பிடிச்சிட்டேன்.அநேகமாக அது நைட்டிங்கேலாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அதோட இதயம் எப்படி துடிக்குது பாருங்க..”என்று அவன் சொன்னான்.

அம்மா அவனிடம்,”இது பாடும் சிஸ்கின் பறவை அதை துன்பப் படுத்தாதே..கூண்டைத் திறந்து அதைப் போக விடு..” என்று சொன்னாள்.

”இல்லம்மா நான் அதுக்கு சப்பாடு கொடுப்பேன்.குடிக்கத் தண்ணீரும் கொடுப்பேன்..”என்றான் செர்யோஷா.

செர்யோஷா சிஸ்கினை கூண்டில் அடைத்து, அதற்குத் தானியங்களும் தண்ணீரும் வைத்தான். ஒரு இரண்டு நாட்களுக்குத் தினமும் கூண்டைச் சுத்தம் செய்தான்.ஆனால் மூன்றாவது நாள் அவன் அந்தச் சின்னப் பறவையை மறந்தே போனான். தண்ணீர் மாற்றவும் தீனி போடவும் மறந்து போனான்.

“பாத்தியா, நான் சொன்னேன்ல, நீ அந்தப் பறவையை மறந்துட்டீல்ல.அதை வெளியில விட்டிரு..” என்று அம்மா சொன்னாள்.

உடனே செர்யோஷா “இல்லை..நான் மறக்கலை.. இதோ..நான் உடனே கூண்டைச் சுத்தம் செய்து, தண்ணீர் மாத்தப் போறேன்..” என்று சொன்னான்.கூண்டுக்குள் கையை விட்டு அதைச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.பயந்து போன சிஸ்கின் கூண்டுக் கம்பிகளில் முட்டிமோதியது.செர்யோஷா கூண்டைச் செய்து முடித்து விட்டு தண்ணீர் எடுத்து வரப் போய்விட்டான்.அம்மா தான் அவன் கூண்டை மூடாமல் போய் விட்டதைக் கவனித்தாள்.

அவள்,அவனைக் கூப்பிட்டாள்,”செர்யோஷா! கூண்டை மூடிட்டுப் போ! இல்லேன்னா அந்தப் பறவை வெளில போய் காயப் படுத்திக்கப் போகுது..”

அவள் சொல்லி முடிக்குமுன்பே அந்த சிறிய சிஸ்கின் கூண்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டுபிடித்து விட்டது.அதன் வழியே சந்தோசமாக தன் சிறிய சிறகுகளை விரித்து பறந்தது. சன்னலைத் தேடி அறையெங்கும் அலைந்தது.சன்னலில் கண்ணாடி இருப்பது தெரியாமல் வேகமாக அதில் முட்டியது. அப்படியே சன்னலின் அடியில் பொத்தென்று விழுந்தது.

செர்யோஷா ஓடி வந்து அதைத் தூக்கி கூண்டுக்குள் வைத்தான்.சிஸ்கின் உயிருடன் இருந்தது.அது சிறகுகளை விரித்து மூச்சுத்திணறலோடு கிடந்தது.செர்யோஷாவுக்கு அதைப் பார்த்து பார்த்து கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அம்மா! நான் என்ன செய்ய?” என்று அழுதுகொண்டே கேட்டான்.

”இனி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது” என்று அம்மா சொன்னாள்.

செர்யோஷா நாள் முழுதும் அந்தக் கூண்டின் அருகிலேயே,சிஸ்கின் வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.இரவு அவன் படுக்கப் போகும்போது அது உயிருடனே இருந்தது.அவனுக்கு ரொம்ப நேரமாய் தூக்கம் வரவில்லை.கண்களை மூடும் போதெல்லாம் சிஸ்கின் மூச்சுத் திணறலோடு துடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. காலையி எழுந்ததும் கூண்டை நோக்கி ஓடினான்.அங்கே சிஸ்கின் தன் சிறிய கால்கள் விரைத்திருக்க இறந்து கிடந்தது.

அதன் பிறகு செர்யோஷா பறவைகளை ஒரு போதும் பிடிக்கவில்லை

Sunday 20 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

உதயசங்கர்DSC01492

நான் ஏன் எழுதுகிறேன்? இந்தக் கேள்வியை முதல்முதலாக 1980 ல் ஒரு சில கவிதைகள் மட்டுமே எழுதியிருந்த எங்களிடம் அண்ணாச்சி கவிஞர்  விக்ரமாதித்தியன் கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஏதோ பெரிய புதிர் போலவும் அதற்கு சரியான பதில் சொல்லவில்லையென்றால் இலக்கிய வேதாளம் ஓடிவிடும் போலவும் அண்ணாச்சி ஒரு நீண்ட இடைவெளி கொடுத்து எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அப்பவே இது என்னடா பெரிய தொரட்டா போச்சி என்று தோன்றியது. என்னுடன் இருந்த நாறும்பூநாதன் ஏதோ சொன்னான். என்ன சொன்னான் என்று இப்போது நினைவிலில்லை. அவனுக்குப் பின்னால் பம்மிக் கொண்டிருந்த நானும் அவன் சொன்னதையேத் திரும்பச் சொன்னேன். அண்ணாச்சியின் முகத்தில் நிராசை தெரிந்தது. அப்போதே முடிவு பண்ணியிருக்கணும் இவனுங்க ஒரு பயலும் வேதாளத்துகிட்ட மாட்ட மாட்டாங்கன்னு. ஆனால் எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொண்டது. புதுசா யாராச்சும் எழுத வந்தாங்கன்னா அவங்க கிட்ட முதல்ல இந்தக் கேள்வியைக் கேட்டு அவங்க பயந்து முகம் கோணுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று தெரிந்து விட்டது.

ரெம்ப நாளைக்கு எல்லாவற்றையும் பார்த்து பயப்படுவதைப் போல இந்தக் கேள்வியைப் பார்த்தும் பயந்து கொண்டிருந்தேன். யாராவது பெரிய எழுத்தாளர்களைப் பார்க்கப் போனால் இந்தக் கேள்வியைக் கேட்டு விடுவார்களோ என்று பயந்து கொண்டேயிருப்பேன். இதற்கான ரெடிமேடான பதில்களையும் யோசித்து உருவேற்றிக் கொண்டிருந்தேன்.

சமூகத்துக்காக எழுதுகிறேன்.

சமூகமாற்றத்துக்காக எழுதுகிறேன்.

எனக்காக எழுதுகிறேன்.

நான் தெரிந்து கொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக எழுதுகிறேன்

எழுதாமலிருக்க முடியாது அதனால் எழுதுகிறேன்

இப்படி…இப்படி.. இப்படி…

இவை எல்லாவற்றிலும் திருப்தியில்லை. இவற்றில் ஏதோ ஒரு பகட்டு இருப்பதாகத் தோன்றியது. ஒரு பொய்மையின் மர்மப்புன்னகை நெளிகிறது. உண்மையாக இல்லையென்று நினைத்தேன். இத்தனை வருடங்கள் கழிந்த பிறகு தான் எனக்குச் சில விஷயங்கள் புரிந்தது.

நான் ஏன் எழுதுகிறேன் என்றால் நான் பயந்தாங்குளியாக இருப்பதானால். சிறு பிராயத்திலிருந்தே நான் பயந்தவனாக இருக்கிறேன். அம்மாவைப் பார்த்து பயந்திருக்கிறேன். அப்பாவைப் பார்த்து பயந்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தைப் பார்த்துப் பயந்திருக்கிறேன். என்னுடைய சின்ன உருவத்துக்கு முன்னால் ஆஜானுபாகுவாக கையில் பிரம்புடன் நிற்கிற வாத்தியார்களைப் பார்த்து பயந்திருக்கிறேன். வெளியே விளையாடப் போகும் போது என்னைக் கேலி செய்கிற நண்பர்களைப் பார்த்துப் பயந்திருக்கிறேன். கடைக்காரர்களின் மிரட்டலுக்குப் பயந்திருக்கிறேன். என்னுடைய தவறினாலோ, என் அம்மாவின் தவறினாலோ தவறான பொருள் வாங்கி வந்ததை மாற்றப் பயந்திருக்கிறேன். புதிய மனிதர்களிடம் பேசப் பயந்திருக்கிறேன். புதிய இடங்களுக்குப் போகப் பயந்திருக்கிறேன். எனவே எனக்குள்ளே ஒரு தனி உலகத்தை சிருஷ்டிக்கத் தொடங்கினேன். அந்த உலகத்தில் என்னை விட வயது குறைந்த பெண்பிள்ளைகளை மட்டும் சுதந்திரமாக சேர்த்துக் கொண்டேன். அவர்களோடு விளையாடுவதில், அவர்களோடு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் பெருமகிழ்ச்சி கொண்டேன். நான் உருவாக்கிய கதைகளை அவர்கள் ஆர்வத்துடன் கேட்டார்கள். அவர்கள் முகத்தில் தோன்றிய அபூர்வ உணர்ச்சிகளில் நான் திருப்தியுடன் மூழ்கித் திரும்பத் திரும்ப கதைகளை உருவாக்கினேன்.. ஒரு வேளை இந்த பயத்திலிருந்து என் எழுத்து தோன்றியிருக்கலாம்.

நான் ஏன் எழுதுகிறேன் என்று வேறுவகையில் யோசித்தால் என்னுடைய தாழ்வுணர்ச்சியினால் என்றும் சொல்லலாம். சரியான பயந்தாங்குளியாக இருப்பவன் வேறு எப்படி இருக்க முடியும்? என்று தோன்றுகிறதல்லவா. உண்மை தான். வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பேன். தெரிந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தயக்கத்தினால் வாத்தியாரிடம் அடி வாங்குவேன். வாய் வரை வந்த பதில் என்னைக் கைவிட்டு மீண்டும் பயத்தின் காரிருளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். பதில் தெரிந்தும் சொல்ல முடியாத தாழ்வுணர்ச்சி என்னைக் கௌவ நான் விதியின் கையில் ஒப்புக் கொடுத்து விட்டு வருவதை ஏற்றுக் கொள்வேன். இதனால் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால் ஆசை அறையுலுற்று ஏதாவது போட்டியில் கலந்து கொண்டு விட்டால் அவ்வளவு தான். மீண்டும் என்னை இந்தப் பயமும், தாழ்வுணர்ச்சியும் தங்களுடைய பதுங்குக்குழிக்குள் அமுக்கி விடும். வழக்கம் போல அவமானத்தோடு திரும்புவேன். எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வத்தோடு இறங்கிக் கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். எல்லோர் கவனமும் என் மீது விழ வேண்டும் என்று ஆசைஆசையாக இருக்கும். ஹாக்கி, கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், செஸ், என்று விளையாட்டுகளை விளையாடிப் பார்த்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் தெருவில் வீட்டுவீட்டுக்குத் துட்டுப் பிரித்து நாடகம் போட்டிருக்கிறேன். புகுமுகவகுப்பில் ஒரு பெண்ணை ஒரு தலையாகக் காதலித்துப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் எல்லாஇடங்களிலும் எனக்கு முன்னால் என்னுடைய பயமும், தாழ்வுணர்ச்சியும் போய் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும். சபைகளில் கவர்ச்சியாகப் பேசத் தெரியாது. மிகுந்த தயாரிப்போடு போயிருந்தாலும் வசனமும், காட்சியும் மறந்த நாடக நடிகனைப் போல உளறிக்கொட்டி விட்டு வருவேன். மற்றவர் உரிமைக்காக உரத்துப் பேசுவேன். ஆனால் என்னுடைய நியாயமான உரிமையைப் பேச கூச்சப்படுவேன். யாராவது சண்டை போட்டால் பயம் வந்து விடும். யாராவது சத்தமாகப் பேசினால் அவர்கள் சொல்கிறபடி கேட்டுக் கொள்வேன். இத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டிருந்தும் எனக்குரிய நியாயமான இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. ஆனால் அதற்காக யாரிடமும் பொதுவெளியில் குறைப்பட்டுக் கொண்டதில்லை. ஏனெனில் இந்த உலகம் இலக்கிய உலகத்தையும் சேர்த்துத் தான் என்னைப் போன்ற பலஹீனர்களுக்கானதில்லை என்றும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன் என்று மற்றுமொரு வகையில் யோசித்தால், பயமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவர்கள் எளிதில் மன அழுத்தம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். என்னைச் சுற்றி இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற அத்தனை துயரங்களும் என்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகின்றது. ஒரு சித்ரவதையோ, வன்முறையோ, ஒவ்வொரு முறையும் என் மீது நிகழ்வதாகவே உணர்கிறேன். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களையும் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்களுடைய மனது மானிட மனதெனவே அதில் தோன்றும் வக்கிரஎண்ணங்களோ, கொடூரக் குணங்களோ, கொலைபாதகங்களோ, என் மனதில் தோன்றுவதாகவே நினைக்கிறேன். சித்ரவதை செய்பவனும், சித்ரவதைக்கு ஆளாகின்றவனும் நானே என்று தோன்றுகிறது. எனவெ புற உலகம் என்னை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. அதிலிருந்து மீளவும் அதைப் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கிறேன். இதனால் எல்லாம் நான் ரெம்பவும் நல்லவன் என்று கற்பனை செய்து விட வேண்டாம். நான் ரெம்ப பயந்தவனாகவும், தாழ்வுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பதினால் வேண்டுமானால் நல்லவனாக இருக்கிறேன் என்பது என் கணிப்பு. நான் என்ன யோசிக்கிறேன் என்பதை விட மற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் என்று யோசிப்பதிலேயே என் பெரும்பகுதி வாழ்க்கையை கழித்திருக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன் என்றால் மேலே எழுதப் பட்ட பயம், தாழ்வுணர்ச்சி, மன அழுத்தம், இவைகளைச் சமாளிப்பதற்கு, அல்லது இவற்றிலிருந்து மீள்வதற்கு, அல்லது தப்பிப்பதற்கு என்று சொல்லலாம். ஏனெனில் எழுத்து என் ரகசிய உலகமாக இருக்கிறது. அதில் என்னால் எந்த பயமோ, தாழ்வுணர்ச்சியோ, மன அழுத்தமோ இல்லாமல் கம்பீரமாக, சுதந்திரமாகத் இருக்கமுடிகிறது. நான்  ‘ இருக்கிறேன் ‘ என்பதை எழுதும் போது உணர்கிறேன். அதற்காகவே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் ரகசிய உலகின் உயிருக்குள்ளே எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும், ஜனநாயக உணர்வுடனும், சமத்துவமாகவும், அறவுணர்ச்சியுடனும் வாழுகின்ற ஒரு உலகம் உருவாகும் கனவை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அந்த உலகில் தான் என்னைப் போன்ற பயமும் தாழ்வுணர்ச்சியும் கொண்டவர்கள் எழுதாமலிருக்கவும் அதன் மூலம் வாசகர்களைத் தொந்திரவு செய்யாமலிருக்கவும் வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறேன்.

Saturday 19 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

கவிஞர்.கி.சச்சிதானந்தன்

தமிழில்- உதயசங்கர்.

பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகத் தான் என்பது தான் என்னுடைய உடனடியான பதில். காரணம் என்னுடைய குடும்பத்தில் தாய்வழியில் பைத்தியத்தின் பாரம்பரியம் உண்டு. பாட்டி, பெரியம்மா, சின்னம்மா, மூன்று பேருக்கும் இந்த நோய் பிடித்திருக்கிறது. அம்மா அதிலிருந்து மீண்டு தப்பிப்பிழைத்தது அவளுடைய தீவிரமான பக்தியினால் தான் என்று நினைக்கிறேன். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அவளுடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் இந்த நோய் உறவு கொண்டாடியிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தபடியால் அதைத் தெரிந்தே வைத்திருந்தோம். என்னுடைய தரிசனமும், கனவும், ஆனந்தமும், துக்கமும், எல்லாவற்றையும் கவிதைகளாக வெளிப்படுத்த முடியாமல் போயிருந்தால் எனக்கும் பைத்தியம் பிடித்திருக்கும் என்று உறுதியாகத் தோன்றுகிறது.220px-Sachidanandan

ஏதோ ஒரு லட்சியத்துக்காகத் தான் நான் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். பனிரெண்டு பதிமூன்று வயதில் பெரிய லட்சியங்கள் உருவாக வழியில்லை இல்லையா? கவிதை வந்த பாதையும் நிச்சயமாகத் தெரியாது. பாலிய கால அனுபவங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது எனலாம். துஞ்சனின் ராமாயணத்தைத் தினசரி பாராயாணம் செய்ததோ, நிரந்தரமான மழையின் தாளங்களோ, பசுக்களோடும், காக்கைகளோடும், இறந்துபோன மாமன்மாரோடு உயிருடன் உள்ள மனிதர்களோடு பேசுவதைப் போலப் பேசிக் கொண்டிருந்த அம்மாவோ, தாய்ப்பால் கூடவே ஊட்டிய யோகப்பயிற்சியோ, சில ஆரம்பகால ஆசிரியர்களின் வழி வந்த காவியப்பயிற்சியோ, மிகவும் தனியனும், மௌனியும் சிந்தனாவாதியாகவும் இருந்த ஒரு சிறுவனின் கனவுத்தரிசன விசித்திரம் தானோ கவிதைகளாக வெளிப்பட்டது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் பங்கு உண்டு என்று சொல்லலாம்.

வளர்ந்தபோது கவிதைக்கென்று சில இலக்கணங்கள் உண்டென்று தெரிந்து கொண்டேன். நானும் நானுமாக, நானும் மக்களுமாக, நானும் இயற்கையுமாக, நானும் தெய்வமுமாக, - அந்த பிரக்ஞைக்கு என்ன அர்த்தம் கற்பித்துக் கொண்டாலும் சரி – பேசிக் கொள்வதற்கான ஒரு வழியாக அதனை நான் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு அனுபவத்தையும் நான் கவிதையனுபவமாகப் பார்ப்பதில்லை. பசி, காதல், அழாகு, புரட்சி, கருணை, பக்தி, எல்லாவற்றோடும் அது கலந்திருக்கிறது. என்னுடைய மிகத் தீவிரமான நம்பிக்கை கவிதை. அதனுடைய உள்ளர்த்தங்கள், சாஸ்திரங்களுடைய, மதத்தினுடைய, அரசியலுடைய, உள்ளர்த்தங்களைப் போலச் சரிதான் என்று நான் நினைக்கிறேன். நான் எழுதியதெல்லாம் சிறந்தவையல்ல என்று மற்றெல்லோரையும் விட நன்றாக எனக்குத் தெரியும். உலகத்திலுள்ள கவிதைகளிலெல்லாம் நாம் நினைவு கூர்வது ஐந்தாறு எழுத்துமுறைகளையே. சில வேளைகளில் ஒரேயொரு எழுத்துமுறையை மட்டும் தான். அப்படியானால் ஒரு கவிஞனுடைய மற்ற எத்தனையோ எழுத்துமுறைகள் இந்த ஐந்தாறு எழுத்துமுறைகளை எழுதுவதற்கான தயாரிப்பு மட்டும் தானா? அவற்றிற்கு தனக்கேயுரித்தான அடிப்படையோ, அர்த்தங்களோ இல்லையா? அப்படி நினைப்பது சரியல்ல. மிகவும் சாதாரணம் என்று நினைக்கிற கவிதைக்குக்கூட ஒரு தனித்துவம் உண்டு. கவிஞனுடைய வாழ்க்கையில், எழுதும் முறையில் அதற்கொரு முக்கியத்துவம் உண்டு.

என்னுடைய எல்லா எழுத்துமுறைகளும் சிறந்தவையல்ல என்பது சொல்லவேண்டிய மற்றொரு விஷயம். விமரிசனத்தை நினைத்துக் கொண்டு ஒரு வரியும் நான் எழுதவில்லை. குழந்தைப்பருவத்தில் கவியரங்கங்களில் பங்கெடுத்திருக்கிறேன். அதை மொழிப்பாடத்தின் பரீட்சையாக மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்று கவிதை என்னுடைய இயல்பாகவும் பிரியமான எதிர்வினையாகவும் ஆகி விட்டது. உண்மையைத் தேட, சுதந்திரத்தைப் பற்ரிச் சிந்திக்க, அநீதியை எதிர்கொள்ள, அனுபவத்தின் பின்னங்களில் சஞ்சரிக்க, எனக்குக் கிடைத்த ஒரேயொரு வழி. அதனால் தான் கவிதை அடைக்கலம் தருகிற செயல்பாடு எனவும், எப்போதும் திறந்திருக்கிற கண் எனவும், பாவிகளில்லாத மதம் எனவும் பல காலமாக எழுதி வந்திருக்கிறேன்.

Thursday 17 May 2012

அன்பின் பேராற்றில்………….

bava_chelladurai_thumb[6]karuna 

வேலை கிடைத்தும் நிம்மதியில்லை. கோவில்பட்டியின் ஞாபகங்கள் என்னைக் கொத்தித் தின்றன. கல்லூரி முடித்த நாளிலிருந்து வேலைக்கான ஆர்டர் வாங்கிய நாள்வரை கோவில்பட்டி நண்பர்களோடும், தமுஎச தோழர்களோடும், தான் வாழ்ந்து வந்தேன் என்று சொல்லலாம். வீடு உண்பதற்கும், உறங்குவதற்குமான தற்காலிக உறைவிடமாகவே இருந்தது. பல சமயங்களில் உண்பதும், உறங்குவதும் கூட நண்பர்களோடு வெளியே வெளியூரில் என்று ஆகி விட்டிருக்கிறது. அத்தனை நண்பர்களையும், தோழர்களையும் விட்டு விட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வெயிலில் எரிந்து கொண்டிருந்தேன்.அதுவும் நான் இது வரை கண்டிராத வட ஆற்காடு மாவட்டம். விசித்திரமான வட்டார மொழி. புதிய நிலப்பரப்பு. புதிய மனிதர்கள்.இவர்களுக்கு நடுவே திருவண்ணாமலை அருகில் திப்பக்காட்டுக்கு நடுவில் இருந்த வேளானந்தல் ரயில்வே ஸ்டேசனில் வேலை. அங்கே மனிதவாடையே இல்லை. மனிதர்கள் என்று ஸ்டேசனில் வேலை பார்த்த நாங்கள் மட்டும் தான் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு திரிந்தோம். மனிதர்களைத் தவிர வகைவகையான பாம்புகள், நட்டுவாக்காலி, ஜலகண்டச் சிலந்திகள், தேள்கள், இரவில் படையெடுக்கும் அத்தனை வகையான பூச்சியினங்கள், அவைகளின் விசித்திரமான சப்தங்கள், ஊளையிடும் நரிகள், பறவைகளின் விதம்விதமான குரரொலிகள் என்று எல்லாம் நிறைந்திருந்தது.

நான் அதிகபட்சம் எங்கள் ஓட்டுச்சாய்ப்பு வீட்டில் தேளைப் பார்த்திருக்கிறேன். அதைக் கூட நான் அடித்ததில்லை. அம்மாவோ, இல்லை அப்பாவோ,அடிப்பார்கள். ஏன் தம்பிகூட அடித்திருக்கிறான். நான் அருகிலேயே போக மாட்டேன். சின்ன வயதில் எனக்கிருந்த ஏராளமான பயங்களில் தேள் பயமும் ஒன்று. அது எங்கள் வீட்டுச் சுவரில் எங்கோ உயரத்தில் இருந்ததைப் பார்த்து போட்ட கூப்பாட்டில் தெருவே திரண்டு விட்டது. அப்பேர்க்கொண்ட தைரியசாலியான என்னை இப்பேர்க்கொண்ட ஸ்டேசனில் அப்பாயிண்ட்மெண்ட் செய்திருந்தார்கள். எனக்கு அங்கே இருந்த மரம், செடி, கொடி, எதைப்பார்த்தாலும் பயமாகவிருந்தது. எல்லாமே பாம்புகளாகத் தெரிந்தது. அது வரை நான் படித்திருந்த இலக்கியம், அரசியல், தத்துவம், எல்லாம் என்னைக் கைவிட்டன. அங்கேயிருந்த ரயில்வே தொழிலாளர்கள், சகநிலைய அதிகாரிகள் பேசிய மொழியே புரியவில்லை. அவர்கள் ரயில்வே சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிகாரிகளைப்பற்றி, அன்றாடம் நடந்த ரயில்வேதுறை சார்ந்த நடவடிக்கைகள் பற்றி, தீரவே தீராமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பொழுது போவதற்காக முறைபிறழ் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள்.

எனக்கு இவை இரண்டும் ரசிக்கவில்லை. அப்போது தான் நான் கதகதப்பாய் இருந்த உலகம் வேறு. வெளியே இருக்கிற உலகம் வேறு என்று மண்டையில் உறைத்தது. எப்படியாவது மீண்டும் அந்த கதகதப்பான உலகத்துக்குள் போய்விட ஆசைப்பட்டேன். அதற்காக என் வேலையை விடவும் தயாரானேன். தனிமை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்றது. யாரிடமும் வாயார பேச முடியவில்லை. மனதார பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கொண்டு போன புத்தகங்களையும் மீண்டும் மீண்டும் படித்தாயிற்று. தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டு சிசர் சிகரெட்டுகளாக ஊதித் தள்ளினேன். நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன். தினமும் குறைந்தது நான்கு கடிதங்களாவது எழுதித் தள்ளினேன். அது வரை சரியாகக் கூடப் பேசியிராத நண்பர்களுக்குக் கூடக் கடிதம் எழுதினேன். என்னைத் தனிமையின் கொடூரச் சித்திரவதையிலிருந்து யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என்று ஏங்கித் தவித்தேன். மூச்சு முட்டும் இந்தத் தனிமைச் சுழலிலிருந்து கை கொடுத்துக் காப்பாற்ற யாரும் இல்லையா? தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் தலைக்கு மேலே கையைத் தூக்கி காப்பாற்றச் சொல்லும் உயிர்வாதையாய் அந்தக் கானகத்தின் நடுவிலிருந்து கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் யார் காதிலும் அது விழவில்லை. நான் நூறு கடிதம் போட்டால் பதிலுக்கு ஐந்து கடிதம் வந்தது. எல்லோரும் எரிச்சலும், சலிப்பும் அடைந்தார்கள். சில நண்பர்கள் கோணங்கி, பாரதி, சாரதி, முத்துச்சாமி, வேளானந்தல் ஸ்டேசனுக்கே வந்து ஆறுதல் சொன்னார்கள். ஒருநாள் திருவண்ணாமலையில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தபோது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளிக்கூடம் இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகம் தற்செயலாகக் கண்ணில் பட்டது. உள்ளே பெரிய மீசையுடன் தோழர் ஒருவர் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பற்றி விசாரித்தேன். அவர் தான் அதே தெருவில் இருந்த பல்லவன் ஆர்ட்ஸில் மாலை நேரம் சென்று பார்க்கச் சொன்னார்.

அன்று நேரமாகி விட்டதால் ரயிலுக்கு ஓடி விட்டேன். மறுநாள் மாலை படபடக்கும் நெஞ்சோடு பல்லவன் ஆர்ட்ஸை நெருங்கினேன். அங்கே பளபளக்கும் முகத்தோடு மெல்லியமீசையோடு படம் வரைந்து கொண்டிருந்த இளைஞரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கூடவே என்னை விட கருப்பாய் ரெண்டு இளைஞர்கள் இருந்தார்கள். நான் பேசி முடித்ததும் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியர் பல்லவன் சிரித்துக் கொண்டே எழுந்து, பின்னாலிருந்த இளைஞர்களிடம்,

“ யெப்பா உங்க ஆளு வந்துட்டாருப்பா..”

என்று சொன்னார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த அந்த இளைஞர்கள் தங்களை என்னிடம் அறிமுகம் செய்த போது அவர்கள் இருவரும் தமிழ்க்கலை இலக்கிய உலகத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகப் போகிறார்கள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள், எல்லாநாளும் கார்த்திகையாக வாழ்வைக் கொண்டாடுகிற, கலைஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற, தமிழின் மிகமுக்கியமான படைப்பாளியாக உருவாகியிருக்கிற பவா செல்லத்துரையும், மாற்றுத்திரைப்பட, குறும்பட, ஆவணப்பட,இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிற குறும்பட இயக்குநர், பண்பாட்டுப்போராளி, கருணாவும் தான்.

அன்றிலிருந்து நானும் அவர்களை விடவில்லை. அவர்களும் என்னை விடவில்லை. என் தனிமைத்துயர் நீங்க எனக்குக் கிடைத்த மாமருந்தாய் அவர்கள் இருந்தனர். எனவே அது வரை பேசாத பேச்செல்லாம் பேசினேன். எனக்குத் தெரிந்த அத்தனை விசயங்களையும் அவர்களிடம் கொட்டினேன். நவீன இலக்கியம் குறித்த முற்போக்கு இலக்கியம் குறித்த, அரசியல் குறித்த, தத்துவம் குறித்த, புரட்சி குறித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த, அத்தனை விசயங்களையும் சொல்லித் தீர்த்தேன். வேளானந்தல் ஸ்டேசனில் பணி முடிந்ததும் திருவண்ணாமலைக்கு ஆவலோடு ஓடி வந்து விடுவேன். அவர்களோடு அவர்கள் போகிற இடங்களுக்கெல்லாம் கூடவே அலைந்து திரிந்தேன். அங்கே பவாவின் வீட்டில் பெரும்பாலான சமயங்களில் சாப்பிட்டேன். பவாவின் அம்மாவைப் பார்க்கிற போதெல்லாம் ஒரு செவ்வியல் கதாபாத்திரத்தைச் சந்திக்கிற உணர்வு தோன்றும். அவர்களின் அன்பும் பரிவும், பவாவைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்கிற வார்த்தைகளும் ஓலைக்குடிசையும் அதன் சாணவாசமும் ஒரு வங்காள நாவலுக்குள் நானும் பங்கேற்கிற மாதிரியே உணர்வேன். பவாவின் அப்பா மத்திய அரசு ஊழியன், ஸ்டேசன் மாஸ்டர்,என்ற மரியாதையுடன் ஒரிரு வார்த்தைகள் என்னுடன் பேசி விட்டு அகன்று விடுவார். அந்தச் சிறு வயதிலேயே பவாவுக்கு ஊரிலுள்ள அத்தனை பேரைத் தெரிந்திருந்தது ஆச்சரியமாகவிருந்தது. எல்லோரிடமும் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுத் தான் வருவார் பவா. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருப்பதும், செய்யவிருப்பதும் தெரியும். யாரையும் குறை சொல்லத் தெரியாத ஒரு பேராளுமையின் சாயலை அப்போதே நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு அது பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோவில்பட்டிக் குணம் எனக்கு இருந்தது. அதைச் சில சமயங்களில் சொல்லியுமிருக்கிறேன். பவா என்னுடைய வார்த்தைகளை ஒரு புன்னகையில் ஒதுக்கி விடுவார்.

பவாவின் எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் என்ற கவிதை நூல் அப்போது வெளியாகியிருந்தது. எனக்கு அது அவ்வளவு உவப்பாக இல்லை. ஆரம்பகால ரொமாண்டிக் தன்மையை அது தாண்டவில்லை என்று விமர்சனம் செய்த ஞாபகம் இருக்கிறது. பல சமயங்களில் பவாவும் கருணாவும் சைக்கிளில் வேளானந்தல் ஸ்டேஷனுக்கு வந்து விடுவார்கள். எனக்கு உற்சாகம் கரைபுரள பேசிக் கொண்டிருப்பேன். கருணா கேலியாக,

“ ரேடியோவை ஆன் பண்ணுங்க..”

என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். எல்லாத் துறைகளைப் பற்றிப் பேசுகிற ஒரு ஆளாக என்னை நானே கற்பிதம் செய்து கொண்ட காலம் அது. நிறைய நண்பர்கள், தோழர்கள், பவா, கருணா, மூலமாகக் கிடைத்தார்கள். பல்லவன், கவிஞர் வெண்மணி, உத்ரகுமார், பாஸ்கர், வெங்கடேசன், சந்துரு, பாலாஜி, சுகந்தன், போளூர்கோவிந்தன், ஃபீனிக்ஸ், என்று எத்தனை நண்பர்கள். திக்குத் தெரியாத காடாக இருந்த திருவண்ணாமலை இப்போது எனக்கு என் சொந்த ஊர் போல ஆயிற்று.

எல்லா நண்பர்கள் வீட்டிலும் ஒரு வேளையாவது சாப்பிட்டிருக்கிறேன். என் மீது அவர்கள் காட்டிய அன்புக்கு மாற்றாக என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை. பவாவும், கருணாவும், ஒரே கதாபாத்திரத்தின் வெவ்வேறு முகங்கள் என்று நான் நினைத்திருந்தேன். உணர்ச்சிமயமான, கருணைபொங்கும், வாழ்வைக் கவித்துவமாய் பார்க்கும் பவாவும், கறாரான, நடைமுறைவாதியான, உண்மையை நேருக்குநேராய் வெடிப்புற பேசுகிற,கருணாவும் இணைந்து அப்போது திருவண்ணாமலையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் பல புதிய மாற்றங்களை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது. அதற்கு திருவண்ணாமலையும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. குறிப்பாக இன்று தமிழகமெங்கும் ஒரு மாற்றுக் கலாச்சாரக் கலைவிழாவாகக் கொண்டாடப்படும் கலை இரவு திருவண்ணாமலை கொடுத்த தமிழகத்துக்குக் கொடை.அந்தக் கொடை வழங்கிய காலத்தில் நானும் அங்கேயிருந்தது என் பாக்கியம். எல்லா நண்பர்களின் அயராத உழைப்பு இருந்ததென்றாலும் குறிப்பாக பவா, கருணாவின் பங்களிப்பு மகத்தானது.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி யாவர் வீட்டிலும் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். என் சொந்த ஊரில் கூட அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை. நான் அந்த ஊரை விட்டு இனி வேறெங்கும் போகப்போவதில்லை என்று தான் நினைத்திருந்தேன். திருமணம் முடித்து வந்த பிறகு திருவண்ணாமலையில் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்கள் வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும், தமுஎச கூட்டங்களுக்கும் என் மனைவிமல்லிகாவை அழைத்துச் சென்றேன். புதிதாக வந்த ஊரில் புதுப் பொண்டாட்டிகிட்ட என் பவுசைக் காட்டவேண்டும் என்ற ஆசை தான் காரணம். பவாவின் அம்மாவின் உபசரிப்பில் மல்லிகா நெகிழ்ந்து போனாள். பவாவின் அம்மாவும் எங்களுக்கென்றே தனியாக சோறு சமைத்து பவாவிடம் கொடுத்து வேளானந்தலுக்குக் கொடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று முடிவு செய்த பொழுதில் எனக்கு விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள பூவனூருக்கு பதவி உயர்வு உத்தரவு வந்தது.

முதல் முதலாய் வேளானந்தல் வரும்போது இருந்த உதயசங்கர் இப்போது மாறி விட்டான். தன்னம்பிக்கை மிக்கவனாக, எதையும் எதிர்கொள்ளும் தைரியமிக்கவனாக, புதிய சூழ்நிலைகளை வரவேற்பவனாக, மாறி விட்டான். இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் திருவண்ணாமலை நண்பர்கள், தோழர்கள். குறிப்பாக பவாவும், கருணாவும். அவர்களை என் உதாரணபுருஷர்களாக நான் மனதில் வரித்துக் கொண்டேன். இன்று தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஸ்தலமாக எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக, 19, டி.எம். சாரோன் உருவாகியிருக்கிறது. சொந்த அண்ணன் தம்பி வீட்டிலேயே போய்த் தங்க முடியாத நிலைமையில் உறவுகள் சிடுக்காகிப் போயிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விருதாக்கோட்டிகள் என்று உறவுகள் ஏளனம் செய்யும் காலம். அவர்களைப் போற்றிக் கொண்டாடி போஷிப்பதற்கு மகத்தான அன்பு வேண்டும். அது பவாவிடம் பேராறாய் பிரவகித்து வெள்ளமென பாய்ந்தோடுகிறது. இன்று இருப்பது எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் எழுதிய பவா அல்ல. இன்று தமிழ்ச் சிறுகதையின் மிக முக்கியமான எழுத்தாளராகவும், தன்னுடைய எழுத்தின் வசீகரத்தால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிற நூல்களின் படைப்பளியாகவும் திகழ்கிறவர் பவா.

இன்று பவா என்கிற அந்த அன்புப் பேராற்றில் எல்லோரும் ஒரு கை அன்பள்ளிப் பருகி நெகிழ்ந்து போகிறார்கள். ஆனால் அந்தப் பேராறு சுனையூற்றாய் இருக்கும்போதே தரிசித்திருக்கிறேன்.பேராற்றில் பலமுறை முங்கிக் குளித்திருக்கிறேன். குளித்துக் கொண்டுமிருக்கிறேன். ஈரம் சொட்ட சொட்ட..இப்போதும்…இன்னமும்

Wednesday 16 May 2012

குழந்தையின் ஆளுமை

father  

“மிகவும் நெருங்கிப் பழகி வருவதன் காரணமாக, குழந்தையிடம் மறைந்து கிடக்கும் பெருமை வெளிக்குத் தெரிவதில்லை. குழந்தை சிரிக்கிறது. அழுகிறது ஆனால் வெளிப்படையாகத் தெரியும் இந்தச் சிரிப்புக்கும், அழுகைக்கும் மறைவில் எத்தனையோ குணபாவங்கள் இருக்கின்றன..”

- மரியா மாண்டிசோரி

சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்த கள்ளமும் கபடமும் கொண்டே நாம் இந்த உலகத்திடம் வேற்றுமை பாராட்டுகிறோம். ஆனால் குழந்தை இந்த உலகத்தில் பிறந்த கணம் முதல் எல்லோரின் மீதும், எல்லாவற்றின் மீதும் வேற்றுமை பாராத அன்பைச் செலுத்துகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புணர்வோடு எறும்பிடமும் அன்பு செலுத்துகிறது. மரப்பாச்சி பொம்மையிடமும் தன் அன்பைத் தெரிவிக்கிறது. அதற்குத் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ, தான் பிறந்த சாதிபற்றியோ, மதம் பற்றியோ அதன் தன்மைகள் குறித்தோ, விளைவுகள் குறித்தோ தெரியாது. தான் முட்டாள் என்றோ அறிவாளி என்றோ தெரியாது. தன் வீடு சிறியது என்றோ பெரியது என்றோ தெரியாது. தன்னுடைய பெற்றோர்கள், உற்றவர்கள் நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ தெரியாது. இந்த உலகம் எவ்வளவு கொடியது என்றோ எவ்வளவு அற்புதமானது என்றோ தெரியாது. ஆனால் குழந்தைக்கு ஒன்று மட்டும் தெரியும். தான் காணும் உணரும் எல்லாவற்றின் மீதும் தீவிரமான அன்பைச் செலுத்தத் தெரியும்.

இப்படி பரிசுத்தமான, களங்கமற்ற குழந்தையிடம் தான் பெரியவர்கள் எல்லாவிதமான கபடங்களைச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். தான் பிறந்த மதம், சாதி பற்றிச் சொல்கிறார்கள். அது எவ்வளவு உயர்வானது அல்லது எவ்வளவு இழிவானது என்று சொல்கிறார்கள். குழந்தையை சுற்றியுள்ள உலகத்தை குழந்தைக்கு எதிர்மறையாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். எல்லாப்பொருட்களையும் எல்லா மனிதர்களையும், வெளிச் சூழலையே விரோதியாகக் காட்டுகிறார்கள். குழந்தை முதன்முதலாக பயப்படுகிறது. எல்லாவற்றின் மீதும் அதற்குச் சந்தேகம் வருகிறது. யாரையும் நம்பமுடியாமல் இந்த உலகத்தையே அவநம்பிக்கையோடு பார்க்கிறது. களங்கமில்லாத அதன் அன்பின் அடித்தளம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிச் சிதைகிறது. பயமும், பாதுகாப்பின்மையும் பொங்க இந்த உலகத்தையே வெறுக்கத் தொடங்குகிறது. சமூகம் ஒருபோதும் இதை உணர்வதில்லை. பெரியவர்களும் இதை உணர்வதில்லை. அவர்கள் குழந்தைக்கு அறிவூட்டிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் குழந்தையிடம் ஊட்டப்பட்ட இந்த வெறுப்பு உள்ளே கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களிடம் ஆளுமைச் சிதைவை ஏற்படுத்துகிறது. உண்மையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? குழந்தைக்கு அறிவூட்டுவதல்ல. குழந்தை பிறந்தது முதலே கற்றுக் கொண்டேயிருக்கிறது. தன் அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அழுகை, சிரிப்பு என்ற இரண்டு உணர்ச்சி வெளிப்பாடுகளிலிருந்து இன்னும் நுட்பமான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தெரிந்து கொள்கிறது. பயம், கோபம், ஏக்கம், நிராதரவு, திருப்தி, ஆவல், உற்சாகம் என்று பல விதமான உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிறது. எனவே கற்றுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும், குழந்தையின் முன்னால் செய்யத் தகாதனவற்றை செய்யாமலிருப்பதும் எல்லாவற்றுக்கும் மேல் குழந்தையின் ஆளுமையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வேண்டும்.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமிக்க ஒரு ஆளுமை உள்ளே மறைந்திருக்கிறது. அந்த ஆளுமை தனக்கான தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தக்க சூழ்நிலைக்காக துளிர்க்கவோ, பூக்கவோ வேண்டி மறைந்திருக்கிறது.

விதைக்குள் அடங்கியிருக்கும் விருட்சமாய் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆளுமையை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். எல்லாக்குழந்தைகளிடமும் உடனே தெரிந்து விடும் அளவில் இல்லாமலிருக்கலாம். சில குழந்தைகளின் ஆளுமையைக் கண்டு பிடிக்க சிறிது சிரமம் ஏற்படலாம். சிறிது காலம் ஆகலாம். ஆனால் எல்லாக்குழந்தைகளிடமும் ஒரு ஆளுமை ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு பிடித்து வெளிக்கொணர வேண்டும். அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் துணை நிற்க வேண்டும். அதற்குத் தேவையான ஒளியையும், காற்றையும், நீரையும் தரவேண்டியது நம் கடமை. வளரும் போது ஒவ்வொரு ஆளுமையும் இந்த பூமிக்கு தன்னுடைய பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கூடமும், பெற்றோர்களும் சமூகமும் யோசிக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது நம் சமூகத்தில்? யாருமே குழந்தையின் ஆளுமை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்வது இல்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நினைப்பது இல்லை. அப்படியே குழந்தைகளின் ஆளுமைத்திறன் துளிர்த்து வெளிப்பட்டாலும் அதைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எறிந்து விடுகிறோம். ஏனென்றால் செம்மறியாட்டு கூட்டத்தை விட மோசமான மந்தை புத்தி கொண்டவர்களாக பெரியவர்கள் இருப்பது தான். வாய் திறந்து மழலை பேசும் பருவத்திலேயே குழந்தையிடம் நம்முடைய ஆசைகளைத் திணித்து விடுகிறோம். அப்போதும் என்ன இப்படியா ஒரு சமூகம் முழுக்க ஒரே விதமான ஆசையைக் கொண்டிருக்கும்? பாருங்கள் எல்லா குழந்தைகளும் கிளிப்பிள்ளையைப் போல தாங்கள் இஞ்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்றோ ஒப்பிக்கும். அந்தக் குழந்தைகளுக்கு பொறியாளர் என்றால் யார் என்றோ, மருத்துவர் என்றால் யார் என்றோ சற்றும் தெரியாத பருவத்தில் நம் ஆசையை அப்படிக்கூடச் சொல்ல முடியாது, மந்தைபுத்தியின் விளைபொருளான நம் ஆசையை குழந்தையிடம் திணக்கிறோமே. இதை விட வேறு என்ன அவலம் வேண்டும்?

உலகம் பூரா வெறுமனே பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும் நிறைந்து விட்டால் போதுமா? ஏன் இப்படி? நம்முடைய சமூக அமைப்பு சில திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொறியாளர், மருத்துவர் என்ற கல்வியை மதிப்புமிகு வியாபாரப் பொருட்களாக்கி அதை விற்பனை செய்யும் தந்திரங்களில் ஒரு சமூகத்தையே சிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமூகத்துக்கு அறிவியல் அறிஞர்கள் தேவையில்லையா? ஓவியர்கள் தேவையில்லையா? கணித மேதைகள் தேவையில்லையா? கட்டடக்கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தேவையில்லையா? இயற்கையியலாளர்கள் தேவையில்லையா? வரலாற்று ஆய்வாளர்கள் தேவையில்லையா? தொல்லியல் அறிஞர்கள் தேவையில்லையா?

சுற்றுச்சூழல் அறிஞர்கள் தேவையில்லையா? நிர்வாகவியல் அறிஞர்கள் தேவையில்லையா? வேளாண்துறை விஞ்ஞானிகள் தேவையில்லையா? மெக்கானிக்குகள் தேவையில்லையா? விளையாட்டு வீரர்கள் தேவையில்லையா? இது போல எண்ணற்ற துறைகளும் தானே இந்த உலகம். அப்புறம் எப்படி இந்த மந்தைபுத்தி உருவாகிறது?

குழந்தைகள் வளரும் போதே அவர்களது ஆளுமைத் திறனின் முளைகள் மலரத்தான் செய்யும். அது ஓவியத்தில் இருக்கலாம். பிரித்து இணைக்கும் செயல்பாடாக இருக்கலாம். கணிதத்திலாக இருக்கலாம். கதை சொல்வதாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இடையூறு செய்யாமல், அடக்கி ஒடுக்காமல், அந்தந்தத் துறையில் வளர்வதற்கான உதவிகள் புரிந்தாலே போதும். குழந்தைகளின் அடிப்படையான அன்பு எல்லோரையும் எல்லாப் பொருட்களையும் நேசிக்கிற மனோபாவம் எந்தக் காயமுமின்றி அடக்குதலும் இன்றி வெளிப்படும். எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைக்கும் புதிய சமுதாயம் மலரும். அதிக மதிப்பெண் என்ற தந்திரவதைக்கூடத்துக்குள் குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்காதீர்கள். ஒரே வகை மாதிரியான ஜெராக்ஸ்   சமூகத்தை உருவாக்காதீர்கள்....

Tuesday 15 May 2012

ததும்புதல்

 Artwork-Sorrow

உன்னிடம் அதைச் சொன்னபோது

மூச்சு முட்டிச் செத்து மிதந்தன சொற்கள்

அப்போது தான் எனக்குத் தெரிந்தது

நான் அதைச் சொல்லிவிட்டேன் என்று

எப்படியும் சொல்லவேண்டியது தான்

என்றாலும் அப்படிச் சொல்லியிருக்கவேண்டியதில்லை

சந்தித்த முதல் கணத்திலேயே

இந்த இறுதிக் கணமும் சூல் கொண்டு விட்டது

ஆனாலும் இப்போது அதைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை

பாலைவெயிலின் கசகசப்பாகவிருக்கலாம்

முந்தின நாள் பிடித்த நீர்க்கோர்வையினால்

அடுத்தடுத்து வந்த தும்மல்களினால் இருக்கலாம்

எதிரே காற்றில் அலைவுறும் காய்ந்தமலரின் கடைசித்

துடிப்பாக இருக்கலாம்

சிரித்த உன் உதடுகளின் கீற்றில்

ஒளிந்திருந்த கைப்பாக இருக்கலாம்

எப்படியிருந்தாலும் அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை

அதுவும் அந்த நேரத்தில் சொல்லியிருக்கவேண்டியதில்லை

அந்தக் கணத்திற்குப் பெறுமதியான நிதானத்தையோ

சொற்களுக்கிடையான அமைதியையோ

ஆழ்ந்த உணர்ச்சியையோ

ததும்புகிற கடைசி முத்தத்தையோ

எதையுமே தராமல் எதையுமே பெறாமல்

அறிவின் கூர்வாளால் குத்திக் கிழித்த

நிணச் சொற்களால் அதைச் சொல்லியிருக்கவேண்டியதில்லை

ஒருவேளை சொல்லாமலும் இருந்திருக்கலாம்

கனவில் சுவைத்த அன்பின் ஒரு துளியைத் தேடி

வெறுமையின் இருள்வெளியில்

பேசாமலே பிரிந்திருக்கலாம் ஒரு நாள்

Sunday 13 May 2012

கவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும் கண்ணனின் காதலும்

kavaskar 

எல்லோரையும் போல எங்களோடு சேர்ந்து ஹாக்கி தான் விளையாடிக் கொண்டிருந்தான் கண்ணன். கல்லூரிக்குச் சென்றதும் திடிரென்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கி விட்டான். அதற்கு எங்களையெல்லாம் கூப்பிடவுமில்லை. ஹாக்கி விளையாடும் போது எப்போதும் எங்களோடயே சுத்துற கண்ணன் கிரிக்கெட் விளையாடப் போகும்போது மட்டும் எங்களை யாரையுமே கூப்பிடவில்லை. அது மட்டுமில்லை, அவன் நாங்கள் எல்லோரும் விளையாடுகிற காந்திமைதானத்தில் விளையாடவில்லை. மேட்டுத்தெருவில் போய் சுந்தரேசனோடு விளையாடினான். மேட்டுத்தெரு முழுவதும் பிராமணர்கள் குடித்தனம் தான். சுந்தரேசனின் அப்பா வக்கீலாக இருந்தார். சுந்தரேசன் எங்களுடன் கல்லூரியில் புகுமுகவகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். கோ.வெ.நா.கல்லூரியில் எங்கள் செட்டில் தான் முதன்முதலாக கோஎஜூகேஷன் ஆரம்பித்தது. அதனால் கல்லூரியில் ரெம்பக் கண்டிப்பு. பெண்கள் வரும்போது நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூடாது. வாத்தியார்கள் எல்லோரும் கண்கொத்திப் பாம்பாக அலைந்து திரிந்து எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் கைகால்களைக் கட்டிப்போட்ட மாதிரி இருந்தது. அதுமட்டுமல்ல சாதாரணமாக நிமிர்ந்து பார்க்கும் பழக்கமே போய் விட்டது. எல்லோரும் தலையைக் குனிந்தபடியே ஓரக்கண்ணால் பார்த்தபடியே கல்லூரிக்குள்ளும் வெளியிலும் திரிந்தனர்.

எங்கள் ஓரக்கண் பார்வை வேறு ஒரு சிக்கலையும் ஏற்படுத்தியது. பல பேர் இந்தப்பார்வையைக் கவனித்து விட்டு தவறாக நினைத்துக் கொண்டு போகவும், சிலர் என்ன கண்ணுல ஏதும் கோளாறா? என்று கேட்கும்படியும் ஆயிற்று. கண்ணனின் நடவடிக்கையில் பெரும் மாற்றங்களைக் கவனித்தோம். ஏனோதானோவென்று நடையும் உடையும் கொண்டிருந்தவன், ரெம்பக் கோளாறா உடை உடுத்த ஆரம்பித்தான். தன்னுடைய கருத்த முகத்துக்கு மூன்று வேளையும் லக்மே காலமைன் கிரீம் பூசி எப்பவும் மூஞ்சியில் வெள்ளையடிச்ச மாதிரி திரிந்தான். ஸ்டைலாக இருப்பதற்காக குளித்து ஈரத்தலையில் சீப்பை வைத்து வரிவரியாக வளைவுகளை ஏற்படுத்த மெனக்கெட்டான். அது கழுதை காய்ஞ்சதும் மறுபடியும் சிலுப்பிக்கிட்டுதான் நின்னது. நாங்கள் சந்தேகப்பட்டோம். பய எங்கினியோ கவுந்துட்டான் போல இருக்கே.. அதுக்கு இன்னோர் காரணமும் இருந்தது. இப்பல்லாம் கண்ணன் எங்க கூட சேர்ந்து இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும் சுந்தரேசன் பய கூடத் தான் சுற்றினான். கிரிக்கெட்..கிரிக்கெட் கிரிக்கெட் எப்ப பார்த்தாலும் கிரிக்கெட் தான்.

ஒரு நாள் காலையில் ஆறரை மணி இருக்கும். கெமிஸ்ட்ரி நோட்டு வாங்குவதற்கு கண்ணனுடைய வீட்டுக்குப் போனேன். அவன் அங்கு இல்லை. அவனுடைய அம்மா அவன் சுந்தரேசன் வீட்டுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இவ்வளவு சீக்கிரமாகவா? அன்று கல்லூரியில் அவனிடம் கேட்டபோது காலை ஆறு மணியிலிருந்து சுந்தரேசன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பயிற்சி எடுப்பதாகச் சொன்னான். அதேபோல மாலை கல்லூரி விட்டு வந்தவுடன் போய் விடுவான். அவனுக்கு உண்மையிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து விட்டதோ என்ற சந்தேகமும் வராமலில்லை. கல்லூரி நூலகத்திலிருந்து டோனி கிரேக் எழுதிய - புத்தகத்தின் பெயர் மறந்து விட்டது - பேட்டிங் சம்பந்தமான புத்தகத்தைக் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தான். அப்போது பத்திரிகைகள், ரேடியோவைத் தவிர செய்திகளைத் தெரிந்து கொள்ள வேறு மீடியாக்கள் கிடையாது. எப்போதாவது தான் நேர்முக வர்ணனையை ரேடியோவில் கேட்க முடியும். அதுவும் ஆங்கிலம் பதினைந்து நிமிடங்கள் என்றால் ஹிந்தியில் அரைமணிநேரம் வர்ணனை ஒலிபரப்பாகும். கண்ணன் அந்த நேர்முகவர்ணனையைத் தவற விடுவதேயில்லை. அதிலும் கவாஸ்கர் விளையாடுகிறார் என்றால் இன்னும் சிரத்தையோடு கேட்டுக் கொண்டிருப்பான். என்ன விளங்கியதோ என்னவோ அவன் ஒரு நேர்முகவர்ணனையை எங்களுக்குச் சொல்லுவான். நாங்களும் அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவோம். வேறு வழி? எங்களூக்குத் தான் விளையாட்டே தெரியாதே. அவன் செய்ஞ்ச அலட்டலைத் தாங்கமுடியவில்லை. சுப்பையா தான் ‘ எல இது சரிப்பட்டு வராது.. நாமளும் இறங்கிற வேண்டியதான்னு சொன்னான்.

அப்புறம் என்ன? நாங்களும் கிரிக்கெட் விளையாடப்போனோம். அப்ப தான் பய வண்டவாளம் எங்களுக்குத் தெரிஞ்சது. சுந்தரேசன் வீட்டுக்கொல்லைப்புறத்திலிருந்து பார்த்தால் எங்க கூடப் படிக்கிற நளினியின் வீடு தெரிந்தது. அதுக்குத் தான் ஐயா இந்த உடை உடுத்தி, அலங்காரம் பண்ணி, அதகளம் பண்ணியிருக்காரு. அன்னிக்கு முழுதும் கண்ணனைக் கேலி செய்து கொண்டேயிருந்தோம். எல்லோரையும் போல முதலில் மறுத்தவன், கடைசியில் உண்மையை ஒத்துக் கொண்டான். நாங்களும் அவனை உற்சாகப்படுத்தினோம். அவன் கிரிக்கெட் விளையாட வந்ததென்னவோ நளினிக்காகத்தான் என்றாலும் கிரிக்கெட் அவனைப் பிடித்துக் கொண்டது. கிடைத்த நேரங்களில் எல்லாம் கிரிக்கெட் பயிற்சி எடுத்தான்.

ஒரு முறை ரேடியொ நேர்முக வர்ணனையில் கவாஸ்கர் ஸ்கொயர்கட் த பால் டு த ஃபென்ஸ் என்ற வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்த ஸ்கொயர்கட் என்ற வார்த்தை அவனைப் பிடித்துக்கொண்டது. டோனி கிரேக்கின் புத்தகத்தில் அதற்கான விளக்கம் படத்தோடு இருந்தது. ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே போகிற பந்தை ஃபேக்புட் போய் பேட்டை ஸ்கொயரான கோணத்தில் பிடித்து வருகின்ற பந்தை மிடில் ஆஃப் த பேட்டில் படுகிறமாதிரி கட் செய்கிற போது பந்து கல்லி திசைக்கும் பாயிண்ட் திசைக்கும் இடையில் பாம்பைப் போல சரசரவென ஓடிப் போகும். இதைப் படித்ததிலிருந்து கண்ணன் பயிற்சியின் போதெல்லாம் ஸ்கொயர்கட் ஷாட் அடிப்பதற்கே முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் அது அவ்வளவு சுலபமாக வரவில்லை.

கல்லூரி கிரிக்கெட் டீமில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினான். பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி எங்களுடைய கல்லூரியில் நடந்தது. அந்தபோட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டிருந்தது எங்கள் கல்லூரி. போட்டி நடந்த போது நளினி தவறாமல் ஆஜரானாள். கண்ணனுக்கு உற்சாகம் பொங்கிவிட்டது. அவனுக்காகத் தான் அவள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருகிறாள் என்று எங்களிடம் சொன்னான். நாங்களும் நம்பினோம். போட்டியில் அபாரமாக விளையாடியது எங்கள் கல்லூரி. அந்த ஆண்டு பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதைக் கல்லூரியின் ப்ரேயரின் போது அறிவித்த முதல்வர் அந்த அணியில் விளையாடியவர்களை கூப்பிட்டுப் பாராட்டினார். அன்று மாலை கல்லூரி முடிந்தபிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நளினி கண்ணனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கிறாள். அது போதாதா? கண்ணனுக்குத் தலைகால் புரியவில்லை. அதுக்கப்புறம் பெரும்பாலான நேரங்களில் சுந்தரேசன் வீட்டுக்கொல்லைப்புறம் தான் அவனுடைய வாசஸ்தலமாக இருந்தது. இவனுடைய நோக்கும்போக்கும் சுந்தரேசனுக்குத் தெரியாமலில்லை. அவனுக்கு ஒரு நம்பிக்கை. இந்தக் கருவாப்பயலப்போய் நளினி காதலிப்பாளா? அதனால் பெருந்தன்மையாக இருந்து விட்டான். ஆனால் அவனுடைய வீட்டில் அப்படி இருப்பார்களா என்ன? அவர்கள் சுந்தரேசனுக்குக் கொடுத்த கொடையில் சுந்தரேசன் கிரிக்கெட்டையே மறந்து விட்டான். இதற்குள் ஊருக்குள் ஒரு முக்கியமான கிரிக்கெட் விளையாட்டு வீரனாகிவிட்டான் கண்ணன். கோவில்பட்டி கிரிக்கெட் கிளப் அணியில் சேர்ந்து வெளியூர் அணிகளோடு போட்டிக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.

மற்ற நேரங்களில் சுந்தரேசன் வீட்டுக்கு முன்னால் ரோட்டில் இருந்த ஆலமரத்தடியில் இருந்தான். படிப்பதும் அங்கே தான். வேறு சில பையன்களைச் சேர்த்துக் கொண்டு அந்த மரத்தடியிலேயே கிரிக்கெட் பயிற்சியும் செய்தான். அப்போதும் கவாஸ்கரின் ஸ்கொயர்கட்டை விடாமல் பயிற்சி செய்தான். அத்துடன் ஒரு கண்ணை நளினியின் வீட்டில் வைத்திருந்தான். அவளூடைய வீட்டில் சின்ன அசைவு தெரிந்தாலும் உடனே அங்கே பார்ப்பான். நளினி எங்காவது வெளியே போனால் கூடவே போனான். அவளுடைய கடைக்கண் பார்வைக்காக அந்த ஆலமரத்தடியில் தவம் கிடந்தான். சில நாட்களில் எங்களுக்குப் போரடித்து விட்டது. கந்தசாமி தான் ” எல எள்ளு எண்ணெய்க்குக் காயுது.. நாம எதுக்குல எலிப்புழுக்கை மாதிரி கூடக் காயணும்..” என்று சொல்லி எங்களைத் தடுத்து விட்டான். ஆனாலும் வானிலை அறிக்கை மாதிரி அவ்வப்போது கண்ணன் எங்களிடம் அன்னன்னய நிலவரத்தைச் சொல்லி ஆலோசனைகள் பெற்றுக் கொள்வான்.

நளினி சினிமாவுக்குப் போனால் அவனும் சினிமாவுக்குப் போனான். அவள் ஃபேன்சி ஸ்டோருக்குப் போய் ஹேர்பின்னோ, வளையலோ வாங்கினால் இவன் பின்னாலேயே போய் சேஃப்டி பின் வாங்கினான். இரண்டு பேருமே தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் வந்து எங்களிடம் சொல்லி விளக்கம் கேட்பான். நாங்களும் அவனவனுக்குத் தோணிய மாதிரி விளக்கம் அளிப்போம். ஆனால் எல்லா விளக்கமும் அவனுக்குச் சாதகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அப்போது தான் அவனுடைய அன்னிய பொருளாதார நிலைமைக்கேற்ப செட் புரோட்டாவோ, வெறும் டீயோ கிடைக்கும். எனவே அவனுடைய காதல் ஜோதி அணையாமல் பார்த்துக் கொண்டோம். எவ்வளவோ பொழுதுகளை இது குறித்துப் பேசியே கழித்திருக்கிறோம்.

எங்கள் பரீட்சையெல்லாம் முடிந்து விட்டது. ரிசல்ட் வரும்வரை முழு நாளும் எங்களுக்குத் தான். ஒன்றாகவே ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். துலுக்கபட்டியில் உள்ள சிமிண்ட் ஃபேக்டரி அணியுடன் போட்டியென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை கண்ணன் கோவில்பட்டி கிரிக்கெட் கிளப் அணியோடு துலுக்கபட்டி போய் விட்டான். அந்தப் போட்டியில் இன்ஸ்விங் ஆகி வந்த பந்தை ஸ்கொயர்கட் செய்யப்போகிற மாதிரி ஆஃப் ஸ்டெம்ப்புக்குக் குறுக்கே போக பந்து மாயம் போல நாடியில் வந்து தாக்கியது. அவ்வளவு தான். பந்திலுள்ள தையல் வெட்டி ரத்தம் களகள வெனக் கொட்டியது. உடனே மருத்துவமனைக்குப் போய் தையல் போட வேண்டியதாகி விட்டது. அன்னிக்கு வீட்டிலும் அர்ச்சனை நடந்தது. அதனால் இரண்டு நாட்களாக ஆலமரத்தடிப்பக்கம் போக வில்லை. மூன்றாவது நாள் கன்ணன் அங்கே போனான். நளினியின் வீட்டில் எந்த அரவமும் இல்லை. அது மட்டுமில்லை வீடு பூட்டியிருந்தது. எங்கோ ஊர்வழி போயிருப்பார்கள் என்று நினைத்தானாம் முதலில். எதுக்கும் கேட்டு வைப்போம் என்று தற்செயலாக அந்தப்பக்கம் சுந்தரேசனிடம் கேட்டிருக்கிறான். அவன்,

“ உங்கிட்ட சொல்லலியா… அவா எல்லாம் குடும்பத்தோட காலி பண்ணிண்டு பெங்களூர் போயிட்டா “

என்று சொல்லி விட்டுப் போனானாம். போகும்போது ஒரு நமுட்டுச் சிரிப்பு வேறு சிரித்திருக்கிறான். கண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்திருந்த சமயத்தில் தான் நான் அவனைத் தேடிப் போனேன். அவன் அழுகிற மாதிரி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தத் தெருவில் கண்ணனுடைய கிரிக்கெட் விளையாட்டுச் சேக்காளியான கிச்சான் வந்தான். கண்ணனிடம்,

“ அண்ணா ஸ்கொயர்கட் பிராக்டீஸ் பண்ணுவோமா? “ என்று கேட்டான். அதற்கு அந்த ஆலமரமே அதிரும்படியாகக் கத்தினான்.

“ ஒரு மயிரும் வேண்டாம். ”

Saturday 12 May 2012

வெண்ணிற இரவுகள் போர்த்திய நகரம்

dostovesky

கரிசல் நகரமான கோவில்பட்டியில் மேமாத வெயில் பொழிந்து நகரம் தைப்பாறிக்கொண்டிருந்த இரவு. வேர்வையின் கசகசப்பும் புழுக்கமும் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது. நானும் ரெங்கராஜுவும் ஆளுக்கொரு சிகரெட்டைப்பிடித்தபடி காந்திமைதானத்தில் உட்கார்ந்திருந்தோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திடீரென்று மாயம் போல காற்று குளிர்ந்தது. சில நிமிடங்களிலேயே பனிபொழிய ஆரம்பித்து விட்டது. அப்போது தான் கவனித்தேன். இரவின்மீது வெண்ணிறத்தைப் போர்த்திய தாஸ்தயேவ்ஸ்கி எங்களருகில் உட்கார்ந்திருந்தார். நான் ரெங்கராஜிடம் கிசுகிசுத்தேன். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் தாஸ்தயேவ்ஸ்கி என்ற முணுமுணுத்தேன். ரெங்கராஜுவும் திரும்பிப் பார்த்தார். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி எங்களைப் பார்க்கவில்லை. இருளை ஊடுருவி துளைத்துச் சென்று கொண்டிருந்தது அவரது பார்வை. ஒரே நேரத்தில் ஒரு குழந்தையின் கண்களைப் போல களங்கமற்றும் ஒரு பைத்தியக்காரனின் கண்களைப் போல உன்மத்தம் ஏறியும் ஒரு குற்றவாளியின் கண்களைப் போல வன்மத்துடனும் ஒரு ஞானியின் கண்களைப் போல ஒளியுடனும் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவரது விழிகள்.

என்னால் ரொம்பநேரம் பொறுமையாக இருக்க முடியவில்லை. மெல்லச் செருமினேன். அவருடைய கவனம் கலையவில்லை. குளிர்ந்த இரவின் கதகதப்பில் உணர்ச்சிமிக்க அவரது உதடுகள் துடித்தன. நாஸ்தென்கா. எனக்கு அந்தப் பெயரைக்கேட்டதுமே ஒரு விரல் சொடுக்கில் கோவில்பட்டி நகரமே பீட்டர்ஸ்‡ பர்க் நகரின் சாயல் கொண்டு விட்டது. இதோ நானும் ரெங்கராஜுவும் ஆற்றங்கரையில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறோம். எங்கள் மீது இரவின் அமைதி இனிமையாய் இறங்கிக் கொண்டிந்தது. நடுநிசி நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் தன் கனவுகளைக் கண்டுகொண்டிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு அடுத்த பெஞ்சில் எனதருமை நாஸ்தென்காவும் அந்த கனவுலகவாசியும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அந்தக் கனவுலகவாசியின் நாடகப்பாங்கான, உணர்ச்சிக் சுழலில் திணறிய குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது. தன் வாழ்வில் கனவுகளைத் தின்று, கனவுகளைச் சுவாசித்து, கனவுகளால் தன்னைச் சுற்றிப் பின்னிய கூட்டிற்குள் அன்பின் ஒரு துளிச்சுவைக்காக ஏங்கி பீட்டர்ஸ்பர்க்கின் இரவுகளில் அலைந்து திரியும் கனவுலகவாசியும், கண்தெரியாத பாட்டியின் கண்டிப்பில், ஊக்கினால் பாட்டியின் உடையோடு தன் உடையையும் சேர்ந்து மாட்டி ஒரு கைதியைப் போல வாழ்ந்து வருகிற, காதலுக்காக, ஆதரவான ஒரு வார்த்தைக்காக ஏங்கி கொண்டிருக்கிறார்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்க வாசிக்க உன்னதமான அன்பின் பேரொளியும் ஏக்கமும் துயரமும் எங்கள் மீது கவிந்து பெருகிறது. உலக இலக்கியத்தில் இவ்வளவு உணர்ச்சிபூர்வமான ஒரு காதல் கதையைப் படிக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்.

ரூஷ்யாவின் மகாகலைஞன் தாஸ்தயேவ்ஸ்கியின் கலைமேதமை எங்களை வியப்பிலாழ்த்தியது. அன்று இரவு முழுவதும் அருள் வந்தவர்களைப் போல நகரத்து வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தோம். கதையின் பல பகுதிகளை மனப்பாடமாக ஒப்பிக்க முயற்சி செய்ததும் நினைவிலிருக்கிறது. இருபதுகளின் நடுவில் பார்க்கிற எல்லாவற்றின் மீதும் காதல் ததும்பிக்கவியும் பருவத்தில் நாங்கள் இருந்தோம். எங்களுடைய மனக்கிளர்ச்சியை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டே வந்தோம். தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி, அவருடைய கலை ஆளுமையைப் பற்றி அவருடைய நாவல்களைப் பற்றி என்னவெல்லாமோ பேசினோம்.

1821ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்த தாஸ்தயேவ்ஸ்கி 1849ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்தவர். வாசிக்கிற யாரையும் ஆழ்ந்த உணர்ச்சிகளுக்குள் ஆழ்த்திவிடும் எழுத்து தான் தாஸ்தயேவ்ஸ்கியுடையது. அன்றாட நடைமுறை வாழ்வின் புறவயமான சித்தரிப்பிற்குப் பின்னுள்ள ஒரு யதார்த்தத்தைத்தான் தாஸ்தயேவ்ஸ்கி தனது படைப்புகளின் வழியாக உலகிற்குக் காட்டினார். வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று மட்டுமல்ல அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்த விரும்பினார். இவருடைய பெரும்பாலான படைப்புகளில் சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள சிறிய பணியாளர்களும் வேலையற்றவர்களும் குற்றவாளிகளும், மனநிலை பிறழ்ந்தவர்களுமே முக்கியக் கதாபாத்திரங்கள். இதனாலேயே தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் சாதாரண கதாபாத்திரங்கள் கூட ஒரு அசாதாரணத்துவத்தை பெறுகின்றனர்.

தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளில் மற்றெந்த ரஷ்ய இலக்கியவாதிகளை விடவும், நகர்ப்புற நவீன மனிதனின் பிரச்சனைகளை சிக்கலான வாழ்வின் பின்னங்களை அதிகமாக எழுதியவர். மனித மனதின் ஆன்மீக நெருக்கடிகளின் இருட்குகையினுள் ஒளி பாய்ச்சிய கலைஞன் தாஸ்தயேவ்ஸ்கி. மனதின் அடுக்குகளை விரிக்க விரிக்க அது ஒரு மாயாஜாலம் போல ஒளியும் இருளுமாக காட்சி தருகிறதே. அந்த ஒளியையும் இருளையும் அப்படியே காட்சிப்படுத்தியவர் தாஸ்தயேவ்ஸ்கி. யாருக்காக ஒருவன் சாகவும் தயாராக இருக்கிறானோ அவனையே அவன் கொல்வதும் நேசிப்பவர்களை வெறுக்கவும், வெறுப்பவர்களை நேசிக்கவும், மர்மமும் விந்தையுமிக்க வாழ்வின் கணநேரத் தூண்டுதலினால் தான் சற்றும் நினைத்திராத காரியங்களைச் செய்ய நேர்வதும் அல்லது திட்டமிட்ட காரியங்களை கைவிட நேர்வதுமான மனதின் விசித்திரங்களை, ஒரே நேரத்தில் பேரன்பும் குரோதமும், பெருங்கருணையும் குரூரமும், பாவங்கள் செய்யும் தூண்டுதல்களும், பாவமன்னிப்பைக் கோரும் உருகுதல்களும் என்று புதிராய் விளங்கும் மனதின் இருண்ட பக்கங்களை ஆராய்ந்தவர் தாஸ்தயேவ்ஸ்கி. மனிதன் என்று விடுகதைக்கு விடைதேடி அலைந்தவர் தாஸ்தயேவ்ஸ்சி.

உளவியல் என்ற அறிவியல் துறை உருவாகத் தொடங்கியது 1860 - 70 காலகட்டத்தில் தான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற படைப்புகளான இரட்டையர்கள், பாவப்பட்டவர்கள், குற்றமும் தண்டனையும், முட்டாள், போன்றவை இதற்கு முன்பே ஏற்கனவே வெளியாகிவிட்டன. உளவியலின் தந்தை என்று கூறப்படும் பிராய்டின் உளவியல் கருதுகோள்கள் பலவற்றுக்கும் ஆதாரமாக தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இருந்தன. அதே போல நனவோடை உத்தி என்று உணர்ச்சிப் பிரவாகமான உத்தியை அற்புதமாக தன்படைப்புகளில் முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தாஸ்தயேவ்ஸ்கிதான். அவர் மறைந்த மூன்றாண்டுகளுக்கு பின்னரே நனவோடை உத்திபற்றி மேற்கத்திய இலக்கிய உலகம் பேச ஆரம்பித்தது.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் சிக்கித் துயருறும் மனசாட்சியை உடையவராக இருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி இந்த மனசாட்சியின் தர்மசங்கடமே அவரது கதாபாத்திரங்களின் எண்ணற்ற போராட்டங்களுக்கும், ஆன்மீக துயருக்குமான முக்கியமான காரணம், சுதந்திரம் அன்பு இவைதான் மனித வாழ்க்கையின் முதுகெலும்பு என்று உறுதியாக நம்பினார் தாஸ்தயேவ்ஸ்கி. அன்பின் மேல் கட்டி எழுப்பப்படும் வாழ்க்கையே முழுமையான மனிதத் தன்மையுடையதாக இருக்கும் என்று நினைத்தார். இருண்ட வாழ்க்கையின் ஷேக்ஸ்பியர் என்ற புகழப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி ருஷ்யா உலக இலக்கியத்திற்கு வழங்கிய கொடை.

இப்போதும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெண்ணிற இரவின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது. களங்கமற்ற காதலின் நெருக்கடி, தவிப்பு, அர்ப்பணிப்பு, மனதில் எவ்வளவு ஒளியைப் பாய்ச்சுகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையும், காதலும் பொங்குகிறது. வெண்ணிற இரவுகளின் நாஸ்தென்காவும் அந்த கனவுலகவாசியும் தங்கள் காதலை அறிவித்து குழம்பி மயங்கி. இரவெல்லாம் பீட்டர்ஸ்பர்க்கின் புறவழிச்சாலைகளில் ஆற்றங்கரையில் சுற்றித் திரிகையில் நம் மனம் குதூகலிக்கிறதே. நாஸ்தென்கா ! என தருமை நாஸ்தென்கா என்று அவளுடைய கரங்களைப்பற்றிக் கொள்ள ஆவல் பொங்குகிறதே. நானும் ரெங்கராஜுவும் பொங்கித் திரை எறியும் காதல் உணர்வுகளுடனேயே அன்று பிரிந்து சொன்றோம்.

என் வீடு இருந்த அந்தக் குறுகலான சந்து மிகப்பெரிய வீதியாக விரிந்தது. வெண்ணிற நிலவொளியின் கீழே யாரையோ எதிர்பார்த்தவண்ணம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தேன். இருளின் கடைசியிலிருந்து சுடரும் ஒளியைப் போல என் நாஸ்தென்கா வருவாளோ ? ஏதோ அரவம் கேட்டது. நான் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன். அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறது நிலவு. நான் நின்று கொண்டிருக்கிறேன் இப்போதும், என் நாஸ்தென்காவுக்காக.