Thursday 17 December 2020

ராத்திரி எனக்குப்பிடிக்கும்

 

ராத்திரி எனக்குப்பிடிக்கும்


உதயசங்கர்

ராத்திரி வந்துவிட்டாலே அவ்வளவுதான். குட்டித்தம்பி அதிரனுக்கு என்னவோ ஆகிவிடும். அம்மாவை விடாமல் சேலையைப் பிடித்துக் கொண்டே திரிவான். அம்மா உட்கார்ந்தால் அவனும் உட்கார்வான். அம்மா சமையல் செய்யும்போது அவனும் கூட நிற்பான். அம்மா தையல் மிஷனில் தையல் தைக்கும்போது அவனும் மடியில் உட்காரவேண்டும் என்று அடம்பிடிப்பான். அம்மா புத்தகம் வாசிக்கும்போது படிக்கவிடாமல் புத்தகத்துக்குள் தலையை நீட்டுவான். அம்மாவை அங்கும் இங்கும் அசைய விடமாட்டான்.

. ஒன்பாத்ரூம் போகவேண்டும் என்றாலும் அம்மா கூட வரவேண்டும். இதெல்லாம் போதாது என்று அம்மாவைத் தூக்கிவைத்துக்கொள்ளச் சொல்லி அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான் ஐந்து வயது பையனைத் தூக்கிக்கொண்டே அலைய முடியுமா? அதிரன் ஏன் தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்கிறான் தெரியுமா? பயம்!. இருட்டைக்கண்டு பயம்!.

ராத்திரியானால் இருட்டி விடுகிறது. இருட்டி விட்டால் விளக்கு வெளிச்சம் வேண்டும். இல்லையென்றால் கண் தெரிய மாட்டேங்குது. இருட்டில் ஏதேதோ சத்தம்வேறு கேட்கிறது. அதுவும் அந்த சத்தமும் பெரிதாகக் கேட்கிறது.

” டம் “

“ டமார்..”

” கீச்கீச்கீச் “

” கீ கீ கீ கீ “

“ கூகூகூகூவ்..”

“ குர்ர்ர்ர்ர்..”

“ கெக் கெக் கெக் “

இன்னும் என்னென்னவோ சத்தங்கள்! அதிரனுக்கு ராத்திரி நெருங்க நெருங்கப் பயம் வந்து விடும். தூங்கும்போதும் விளக்கு எரியவேண்டும் என்று அழுவான்.

“ அம்மா ராத்திரி வேண்டாம்.. போகச்சொல்லு… ம்ம்ம் போகச்சொல்லு..” என்று சிணுங்கிக்கொண்டே இருப்பான். அதிரன் சொல்வதைக் கேட்டு அம்மாவுக்குச் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்காமல் பொறுமையாக,

“ குட்டித்தம்பி! இரவும் பகலும் மாறி மாறி வர்றது இயற்கை.. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுத்துது.. அப்ப சூரிய வெளிச்சம் பூமிமேலே படும்போது பகலாக இருக்கும்.. சூரியவெளிச்சம் படாதபோது ராத்திரியா இருக்கும்.. என்ன தெரிஞ்சிதா? பகலில் சூரியன் வர்றது மாதிரி.. ராத்திரியிலே நிலா வரும்… பயப்படகூடாது.. எதுக்கும் பயப்படக்கூடாது.. ”

விளக்கமாகச் சொல்லுவார். அவன் அம்மாச் சொல்வதைக் கேட்பான். எதுவும் புரியாது. ஆனால் முழுவதும் கேட்பான். கேட்டு முடிந்ததும்,

“ அம்மா பயமாருக்கும்மா.. ராத்திரி வேண்டாம்மா..”

என்று சொல்ல ஆரம்பித்து விடுவான். அம்மா எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்து விட்டு கடைசியில்,

“ அதிரா! நான் ராத்திரிகிட்டே இனிமே நீ வராதே எங்க வீட்டுக்குட்டித்தம்பிக்குப் பிடிக்கலன்னு சொல்லிடறேன்.. இன்ன சரியா? “

என்று சொன்னார். அதன்பிறகு தான் அதிரன் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்கினான். அப்போது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த  இரவுத்தேவதை அதைக் கேட்டுவிட்டார். உடனே அவர் அதிரன் இருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அதிரன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான். இரவுத்தேவதை அவனைப் பூப்போலத் தூக்கிக்கொண்டு பறந்தார். குட்டித்தம்பி அப்படியே இரவுத்தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

“ அதிரா! ஏன் பயப்படுகிறாய்? “

“ என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை..”

“அப்படியா? இருள் என்பது குறைந்த ஒளி! அவ்வளவுதான்.. இப்போது பார்..”

அதிரன் முழுவதுமாகக் கண்களைத் திறக்கவில்லை. லேசாகத் திறந்து பார்த்தான். முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால் கொஞ்சநேரத்திலேயே எல்லாம் தெரிந்தன. அவனுடைய வீடு, வீட்டுக்கு முன்னால் இருந்த தோட்டம், அவனுடைய நண்பன் பாரியின் வீடு, அவர்களுடைய தெரு, அவன் மாலையில் விளையாடப்போகும் பூங்கா, எல்லாம் தெரிந்தன. உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரே அழகாகத் தெரிந்தது. கருப்பாக இல்லை. கரு நீலநிற வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. அவனுக்கு இப்போது பயம் குறைந்து விட்டது. அதிரன் கண்களை நன்றாகத் திறந்தான்.

ஆகா என்ன அழகு!

அப்போது தான் அந்த சத்தம் கேட்டது.

” டம் “  மறுபடியும் அதிரன் கண்களை மூடி இரவுத்தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். பயம் அடித்துப்புரண்டு கொண்டு வந்தது. இரவுத்தேவதையிடமிருந்து வந்த அம்மாவின் வாசனை அவனை அமைதிப்படுத்தியது.

இரவுத்தேவதை புன்னகையுடன் அதிரனை அவனுடைய வீட்டுக்கூரை மேல் பறக்கவைத்தார். என்ன ஆச்சரியம்! அவனுக்குச் சிறகுகள் முளைத்திருந்தன. அவன் கண்களைத் திறந்தான். அப்போது, அவனுடைய வீட்டின் அருகில் இருந்த மாமரத்திலிருந்து ஒரு பழுத்த இலை கிளையை விட்டுப் பிரிந்து மெல்ல காற்றில் இறங்கி தகரக்கூரையில் விழுந்தது. டம்மென்று சத்தம் கேட்டது.

இன்னொரு வேப்பமரத்திலிருந்து ஒரு காய்ந்த குச்சி டமார் என்று விழுந்தது.

தரையில் காய்ந்து கிடந்த சருகுகளின் மீது ஓடிக்கொண்டிருந்த எலி சின்னச்சின்னப் பூச்சிகளைப் பிடிக்கும் போது மகிழ்ச்சியில் கீச் கீச் கீச்கீச் என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. எலியைப் பார்த்த பூச்சிகள் கீகீகீகீ என்று இரைந்தன. கூகூகூகூவ் என்று புளியமரப்பொந்திலிருந்த ஆந்தை கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தது.

அதிரனின் வீட்டுக்கு அருகில் ஓடிய சாக்கடையில் தவளைகள் குர்குர்குர் என்று முனகிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்னால் இருந்த கோழிக்கூட்டிலிருந்து செவலைச்சேவல் அவ்வப்போது கெக்கெக்கெக் என்று கத்திக்கொண்டிருந்தது.

இப்போது அதிரனுக்குப் புரிந்து விட்டது. அவனுடைய முகத்தில் வெட்கம் வந்தது. இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தோம். அம்மாவை எவ்வளவு தொந்திரவு செய்து விட்டோம் என்று நினைத்தான்.

இரவுத்தேவதை அவனை அப்படியே பூப்போல அம்மாவுக்கு அருகில் படுக்கவைத்து விட்டு பறந்து போனாள். அதிரனுக்கு அப்போது ஒன்பாத்ரூம் வந்தது.

அவன் எழுந்து கழிப்பறை விளக்கைப்போடாமல் அம்மாவை எழுப்பாமல் போய் விட்டு வந்து படுத்துக் கொண்டான். காலையில் அம்மா எழுந்ததும் அதிரனிடம் கேட்டாள்,

“ என்னடா குட்டித்தம்பி! ராத்திரி அம்மாவை எழுப்பலை...” என்று கேட்டார். அதிரன் சிரித்துக் கொண்டே,

“ இனிமே ராத்திரின்னா எனக்கு பயமில்லம்மா! “ என்றான். அம்மா ஆச்சரியத்துடன்,

“ எப்படித்தம்பி! ஒரே ராத்திரியில மாறிட்டே..”

என்று கேட்டாள். அதைக் கேட்ட குட்டித்தம்பி அதிரன்,

“ தெரியலம்மா..” என்று சொல்லிச்சிரித்தான். அவனுக்குத் தூக்கத்தில் எல்லாம் மறந்து போய்விட்டதே…

கெக்க்கே கெக்கேக்க்க்கே..

Thursday 10 December 2020

புத்தகம் பேசுது

 

புத்தகம் பேசுது


உதயசங்கர்

நேற்று அபிக்கு எட்டாவது பிறந்த நாள். அவனுடைய அம்மாவும் அப்பாவும் அபியின் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி பாட்டுப்பாடி அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அம்மாவும் அப்பாவும் அவர்களுடைய நெருங்கிய நண்பர்களையும் அழைத்திருந்தார்கள். அதனால் வீடே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் அபியை வாழ்த்தவும், பாராட்டவும், பரிசுகள் கொடுக்கவுமாக இருந்தார்கள்.

அபிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவனுடன் வகுப்பில் எப்போதும் சண்டைபோடும் பிரபாகர் கூட அவனுடைய அம்மாவுடன் வந்து ஒரு பரிசைக் கொடுத்து விட்டுப்போனான். எக்கசக்கமான பரிசுகள்! எல்லாருக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அபிக்கு எப்போது எல்லாரும் வீட்டுக்குப் போவார்கள் என்றிருந்தது. அவனுக்கு பரிசுப்பொட்டலங்களைப் பிரித்து என்னென்ன பரிசுகள் வந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும் என்று ஆவல் இருந்தது. ஆனால் நண்பர்களுடன் விளையாடுவதில் நேரம் போவதே தெரியவில்லை.

நண்பர்கள் போனவுடனே அபிக்குத் தூக்கம் வந்து விட்டது. அவன் தூங்கப்போய் விட்டான். அவனுடைய படிப்பு மேசையின் மீது அத்தனை பரிசுப்பொட்டலங்களும் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பார்த்தவுடன் வந்த தூக்கம் கலைந்து விட்டது. ஏதாவது ஒரு பொட்டலத்தைப் பிரிக்கலாம் என்று நினைத்து எடுத்தான். அந்தப் பொட்டலத்தில் ஒரு அழகிய பேனா அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது.

அப்படியே ஒவ்வொரு பொட்டலமாகப் பிரித்தான்.

ஒரு டெடி பியர் பொம்மை.

ஒரு கால்குலேட்டர்

ஒரு காம்பஸ் பாக்ஸ்

ஒரு வீடியோ கேம்ஸ்

க்ரேயான்ஸ்

செஸ் போர்டு

பேங்க் கேம்ஸ்

பெரிய கார்

பெரிய ஹெலிகாப்டர்

கேம்ப் ஹவுஸ்

மேட்சிங் ப்ளாக்ஸ்

கோட் சூட்

டி சர்ட்டு

கலர் பென்சில் பாக்கெட்

என்று ஏராளமான பரிசுப்பொட்டலங்கள் இருந்தன. பெரிது பெரிதான அட்டைப் பெட்டி பரிசுப் பொட்டலங்களுக்கு நடுவில் வண்ணக்காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பரிசுப்பொட்டலத்தைப் பிரித்தான். அது ஒரு புத்தகம். புத்தகத்தைப் பார்த்ததும் திருப்பிக் கூட பார்க்கவில்லை. அப்படியே அதைத் தள்ளிவைத்தான். ஏற்கனவே பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அதைப்படிப்பதற்கே நேரமில்லை. மறுபடியும் புத்தகமா? என்ற எண்ணம் தான் அவனுக்குத் தோன்றியது.

எல்லாவற்றையும் பார்த்து முடித்ததும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.  உறக்கமும் மறுபடியும் வந்து விட்டது. அவன் படுத்ததும் உறங்கி விட்டான்.

திடீரென ஏதோ ஒரு சத்தம் கேட்டு அவன் கண்விழித்தான். ஒரு குயிலின் கூகூக்க்கூ கூகூ என்ற சத்தம் கேட்டது. என்ன இது? நடு ராத்திரியில் குயில் சத்தம். எங்கிருந்து வருகிறது? என்று யோசிப்பதற்குள் சிட்டுக்குருவிகளின் கீச் கீச்.. கேட்டது. கூடவே புறாக்களின் குர்ர்ம்ம்ம் குர்ர்ம்ம்ம் என்ற சத்தம் வந்தது. மயிலின் க்க்யாவ் க்க்யாவ் அகவலும் கொக்கின் குர்க் குர்க் சத்தமும் மாறி மாறிக் கேட்டது. அவன் பயத்துடன் சுற்றிப்பார்த்தான். எதுவுமில்லை. மறுபடியும் உற்றுக்கேட்டான்.

மைனாக்களின் க்ளவ் க்ளவ் என்ற சத்தம் கேட்டது. அவனுடைய அபார்ட்மெண்ட் வீட்டுக்கருகில் மரங்கள் கிடையாது. தூரத்தில் இருக்கும் பூங்காவில் தான் மரங்கள் இருந்தன. ஆனால் இந்தச் சத்தமெல்லாம் அவனுடைய அறைக்குள் கேட்கிறதே. அவன் எழுந்து உட்கார்ந்தான். கொஞ்சம் நிதானமாகக் கேட்டுப்பார்த்தான்.

ஆமாம். சத்தம் அவனுடைய மேசையிலிருந்து தான் வருகிறது. ஒருவேளை ஏதாவது பொம்மையிலிருந்து வருகிறதோ. எழுந்து விளக்கைப்போட்டு விட்டு மேசைக்கருகில் போனான். இப்போது அமைதியாக இருந்தது.

ஒவ்வொரு பரிசுப்பொட்டலமாக எடுத்துப் பார்த்தான். அப்படி சத்தம்போடுகிற மாதிரி எந்தப்பொம்மையும் இல்லை. கடைசியில் அவன் ஓரமாய் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான். அபி புத்தகத்தைத் தொடும்போதே புத்தகம் அதிர்ந்தது. அப்போது தான் அந்தப்புத்தகத்தின் தலைப்பை வாசித்தான்.

நம்மைச் சுற்றிலும் பறவைகள்

அட்டைப்படத்தில் ஏராளமான பறவைகள் இருந்தன. 

மயில், குயில், மைனா, காகம், புறா, கொக்கு, சிட்டுக்குருவி, தேன் சிட்டு, பருந்து, ஆந்தை, கழுகு, ராஜாளி, செம்போத்து, நீர்க்காகம், நாரை, காடை, கௌதாரி, பனங்காடை, உள்ளான், தவிட்டுக்குருவி, அன்னம், 

எல்லாம் சிறகுகளசைத்து பறந்து கொண்டிருந்தன. தங்களுடைய அலகுகளைத் திறந்து பாடிக் கொண்டிருந்தன. அந்தப் பாட்டின் இசையையே அபி கேட்டான். அபியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்தது. அவன் ஆர்வத்துடன் புத்தகத்தின் அடுத்த பக்கத்தைத் திருப்பினான்.

அவன் இதுவரை காணாத ஒரு புதிய உலகம் அவனை வரவேற்றது.

நன்றி - செல்லமே சிறார் இதழ்