படைப்பும் படைப்பாளியும் வாசகனும் – சில குறிப்புகள்
1. எந்தவொரு கலைப்படைப்பின் முதல் நோக்கம் கலை இன்பமே. அந்தக் கலையின் இன்பமே வாசகனை படைப்புக்குள் ஈர்க்கிறது.
2. வாசகனின் மனதில் மெல்லுணர்வுகளை மீடடி படைப்பு அனுபவத்தை அவனுக்கு கடத்துகிறது.
3. படைப்பிலிருந்து கிடைக்கும் அநுபவப்பகிர்வின் வழியாக நாம் புரிந்து கொள்கிற சிந்தனைத்தளம்.
4. இது ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனின் பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தின் முடிவில் படைப்பாளியும் வாசகனும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். சந்திக்காமலும் போகலாம்.
5. படைப்பாளி - வாசகன் உறவு நீண்ட பிரயாணத்தில் உடன் வரும் சகபயணியைப் போன்றது. முதலில் சாதாரணமாகத் துவங்கும் உறவு ஒரு கட்டத்தில் மிக முக்கியமானதாகி விடுகிறது.
6. வாசகன் இல்லையெனில் உலகச்செவ்வியல் படைப்பேயானாலும் அது வெறும் காகிதக் குப்பை தான்.
7. இன்னொரு வகையில் வாசகன் தன்னுடைய வாசிப்பின்வழி படைப்பாளியின் கைகோர்த்து பயணம் செய்கிறான்.
8. கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள் மின்னலெனக் கருக்கொண்டு மனதில் வளர்கின்றன.
9. வளர்ச்சியின் வேகமும், ஆழமும், கலைஞனின் மொழி ஆளுமை, படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும்.
10. வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பிறக்கலாம். அப்போது காகிததில், கணிணியில் பதிவு செய்யும் நிகழ்வு நடக்கிறது.
11. கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம்.
12. அந்த உத்வேகம், படைப்பின்சிறு பொறி நின்று நிதானித்து நன்றாக அடைகாக்கப்பட்டு, முழு உருவம் அடைந்த பிறகு வெளிவந்திருக்கிறதா அல்லது அவசரமாக, அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனும் கண்டுபிடித்து விடுவான். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.
13. கலைஞனிடம் பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடைகிறது.
14. ஒவ்வொரு வாசகர் வாசிக்கும் போதும் அது அவரிடத்தில் அவருடைய உணர்ச்சித் தளம், சிந்தனைத்தளம், ஆகியவற்றில் செயல்பட்டு பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாகிறது.
15. கலைஞனித்திலிருந்து வெளிப்படும் படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
16. படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கரங்களால் தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல் தற்காலிக உறக்கம் கொள்கிறது. மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.
17. படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம். பல தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். இதற்கு வாசகனின் நுண்ணுணர்வு, இலக்கியப்பயிற்சி, சமூக அக்கறை, இவை காரணங்களாக இருக்கும். எனவே ஒரே படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும்.
18. பாதைகள் தெரியாத கும்மிருளாய் படைப்பு இருந்து அதில் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்யும் படைப்பாளிகளும், படைப்புகளும் உண்டு.
19. படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ, நேரடியான,செய்தியாகவோ, பிரச்சாரமாகவோ, படைப்பு விளங்குமானால் அது காலத்தால் நிராகரிக்கப்படும்.
20. எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் பிரச்சாரமே. ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறைகளில் கலையின் விதிகள் தொழிற்பட்டிருக்கும்போதே அது கலையாக மாறுகிறது. கலையின் விதிகளே அல்லது கலைத்துவமே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது.
21. படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் அதைப் படைப்பிற்கான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும்.
22. ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.
23. ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது.
24. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.
25. எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான் வாசகனுக்கும் ஏன் படைப்பாளிக்கும் கூட படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.
26. படைப்பிற்கும் வாசகனுக்குமான உணர்வு விதைக்கும் விளைவதற்குமான ஒப்புமையுடன் உள்ளது.ஒரு வைரஸ் புறவய நிலையில் உயிரற்றும் ஒரு தாங்கு (ஹோஸ்ட் )உயிரியினுள் உயிர்ப்புடன் இயங்குவதையும் போல என்று சொல்லலாம்.
27. ஒரு படைப்பாளி படைப்பை தன்வய உணர்வில் ( subjective ) படைத்தாலும், படைப்பாக வெளிவந்தபின்பு ( objective ) தார்மீகமாக அது சமூகத்தின் உடமையாகிவிடும்.
28. படைப்பின் மீதான வாசகனின் கண்ணோட்டங்களும் விமர்சனங்களும் சமூகப்பார்வையை உருவாக்கவும் மதிப்பீடுகளை மாற்றவும் செய்யும். இதற்கு படைப்பாளி தன் படைப்பின்வழி ஒரு சிந்தனை மற்றும் உணர்வூக்கியாக இருக்கிறான்.
29. படைப்பாளி குருபீடத்தில் இருக்க வேண்டியதில்லை. அவன் படைப்பும் அவனுடைய சுயமான படைப்பும் அல்ல. சமூகமே படைப்பையும் படைப்பாளிகளையும் வாசகர்களையும் உருவாக்குகின்றது.
30. தன்னைக் குருவாகவும் வாசகர்களைச் சீடர்களாகவும் நினைக்கின்ற சிந்தனை சநாதன நிலப்பிரப்புத்துவத்தின் மிச்ச்ச சொச்சமே.
31. முதலாளித்துவம் எல்லாவற்றையும் விற்பனைப்பொருளாக்கி விடும். எனவே விளம்பரங்களின் மூலம் விற்பனையை பெருக்கிக் கொள்ளும். அதில் படைப்பும், படைப்பாளியும், வாசகர்களும் கூட அடங்குவர்.
32. நவீன முதலாளித்துவம் இப்போது பொருட்களுக்காக மனிதர்களை படைத்து கொண்டு இருக்கிறது. அதாவது படைப்புகளுக்காக வாசகர்களையும் திட்டமிட்டு உருவாக்குகிறது. அந்த முதலாளித்துவ விதிக்கு கலை இலக்கியமும் தப்புவதில்லை
32. படைப்பின் இயக்கவியல் விதிகளை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் நம்முடைய தத்துவப்பார்வை இருக்கிறது.
No comments:
Post a Comment