Sunday, 8 April 2018

இந்துத்வாவின் சுயரூபம்


இந்துத்வாவின் சுயரூபம்

உதயசங்கர்
பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அவர்களுடைய பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் வட இந்தியாவின் வடமேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். ஈரான், பெர்சியப்பகுதிகளிலிருந்து நாடோடிகளாக சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள், சூரிய சந்திரர், நட்சத்திரங்கள், வானம் இவற்றின் மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவர்கள் அவர்கள். போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவே தான் அவர்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி, வாயு, வருணன், இடி, மின்னல், சூரியன், சந்திரன், ராகு, கேது, என்று எல்லோரும் வானத்திலேயே இருந்தார்கள். வானத்தில் இருக்கும் அவர்களை வணங்க நெருப்பை வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி வழிபட்டனர். ரிக் வேதப்பாடல்களில் எல்லாம் யாகச்சடங்குகளைப் பற்றிய விவரணைகள் இருப்பது யதார்த்தமானதில்லை.
ஆரிய இனக்குழுக்கள் இரவு நேரங்களில் தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக, சமைப்பதற்காக நெருப்பை வளர்த்தார்கள். அந்த நெருப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும், சிலர் நியமிக்கப்பட்டார்கள். அப்படி நியமனமான நெருப்புப்பாதுகாவலர்கள் தான் புரோகிதர்களாக பின்னர் உருவெடுக்கிறார்கள். வளர்ந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து, ஆடிப்பாடி, அவர்களுடைய பூர்வசரித்திரம், கலாச்சாரம், தெய்வ வழிபாடுகள், வாழ்க்கைவட்டச்சங்குகள், பிறப்பு, இறப்பு, பழக்கவழக்கங்களை பாடல்களாக மனனம் செய்து பாடிய ஒரு கூட்டமாக புரோகிதர்கள் மாறினார்கள். இப்படி மாறிய புரோகிதர்களே வேதங்களை இயற்றினர்.
இந்த ஆரிய இனக்குழுக்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். சிந்துசமவெளி, நதிக்கரை நாகரிகம், நதி, மண், செழுமை, வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், செடி,கொடி, பயிர், விளைச்சல், பெண் தெய்வங்கள், விவசாயம், என்று முழுக்க முழுக்க பூமித்தாயின் பன்மைத்தன்மையுடன் சிறந்து விளங்கிய நாகரிகம். ஒற்றைத்தன்மையுடைய நிரந்தரச்சூன்யமான, எல்லையற்றதான வான்வெளியும், உயிர்த்துடிப்புள்ள மாறிக்கொண்டேயிருக்கிற பன்மைத்தன்மை கொண்ட பூமியும் எதிர் எதிராக நின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் பன்மைத்தன்மையைக் கண்டு பொறாமை கொண்ட ஆரிய இனக்குழுக்கள் தங்களுடைய ஒற்றைத்தன்மையும், பாழ்வெளியுமான வானத்தை உயர்வாக, புனிதமாக, கற்பிதம் செய்தனர். அதனால் தான் பல்லுயிரைப் பெருக்கும் பூமியை, மண்ணை, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களைத் தாழ்வாக, தீட்டாகக் கற்பிதம் செய்தனர். அவர்களைச் சூத்திரப்பிரிவினராகவும், தீண்டத்தகாதப்பிரிவினராகவும், திட்டமிட்டு பிரித்தனர்.
எனவே தான் இன்றும் பார்ப்பனீயம் யாகச்சடங்குகளை முதன்மையாகக்கருதுகிறது. அவற்றைப்புனிதச்சடங்குகளாக மக்கள் மனதில் நிலைகொள்ள வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. மண் சார்ந்த பண்பாட்டுச்சடங்குகளை தாழ்வான இடத்தில் வைப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
எல்லாமதங்களிலும் பிரபஞ்சத்தின் தோற்றம், பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனிதகுலத்தோற்றம், எல்லாவற்றைப்பற்றியும் கதைகள் இருக்கும். ஆரியமதத்திலும் அத்தகைய கதை ரிக்வேதப்பாடல்கள் பத்தாவது தொகுதியில் 129 – ஆவது பாடலாக ” படைப்பு குறித்த பாடல் “  இயற்றப்பட்டிருக்கிறது. அதில் ஒரு ஏகம் உருவமற்ற பருப்பொருள் இருந்தது. அதுவே வெப்பத்தினாலும் காமத்தினாலும் தன்னை ஒருபிரபஞ்சமாக உருமாற்றிக்கொண்டது.
வர்ணாசிரமக்கோட்பாடுகளுக்கு ஆதரவாக பின்னால் இடைச்செருகலாக ரிக்வேதப்பாடல்களில் சொருகப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிற புருஷ சூக்தா ஒரு யாகச்சடங்காகவே தொடங்குகிறது. தேவர்கள் சேர்ந்து புருஷன் என்ற மகாமனிதனை யாகத்தில் பலியிட, அந்த யாகவேள்வியிலிருந்தே இந்தப்பிரபஞ்சமும், உலகமும், உயிர்களும், மனிதர்களும் தோன்றினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச்சொல்லும்போதே நான்கு வர்க்கங்களும்( பின்னால் வருணங்கள் ) தோன்றின என்று சொல்வதன் மூலம் வர்ணாசிர்மக்கோட்பாடுகளுக்கு ஒரு பழமையையும், பாரம்பரியத்தையும் உருவாக்குவதற்கான முயற்சியும் நடக்கிறது.
கி.மு.1500-வாக்கில் உள்ளே வந்த ஆரிய இனக்குழுக்கள் கி.மு. 1900- வாக்கில் வேதங்களை எழுதுகிறார்கள். அதற்கு முன்னால் அவை வாய்மொழிப்பாடல்களாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கலாம். ஏகம் என்றால் கடைசி உண்மை ஒன்று. ஆரிய இனக்குழுக்களின் தத்துவார்த்தமாக இன்றுவரை கடைப்பிடிக்கின்றனர். கி.மு.700-ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கிய உபநிடதங்களில், தங்களைப்பற்றிய உயர்வு, புனிதம், தனித்துவம், ஆகிய உள்ளடக்கமாகக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக இனக்குழுக்களிடமிருந்து தங்களுடைய தனித்துவத்தைப்பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் தங்களைப்புனிதமானவர்களாகக் காட்டிக் கொண்டார்கள்.
எண்ணற்ற இனக்குழுக்களில் கரைந்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் காரணமாக அகமணமுறையை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். தன்னைப் புனிதமாக உருவகிக்கும்போது இயல்பாக மற்றவர்களை புனிதமற்றவர்களாக வரையறுத்தது. ஏகம், அத்வைதம் என்ற தத்துவநிலைபாட்டை நிலைநிறுத்தும்போது, மற்றவற்றை பன்மைத்துவமானது எனவே தாழ்ந்தவை என்றும் கூற முற்பட்டது. பூர்வீக இனக்குழுக்களுக்கும் தாந்திரீகம், சாருவாகம் ஆசீவகம், சமணம், பௌத்தம், போன்ற மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தன. இந்த மதங்களிலெல்லாம் பன்மைத்துவம் பேசப்பட்டது. ஏகத்தத்துவத்தை மறுத்தது. இவற்றுக்கு இடையில் வாதப்பிரதிவாதங்களும் நடந்thaது ஏகத்தத்துவம் வருண அமைப்பு முறையைக் கண்டுபிடித்தது. அதன் மூலம் தன்னுடைய பிரம்மம், நிரந்தரம், புனிதம், என்ற கோட்பாடுகளை மக்களிடம் நடைமுறைப்படுத்தியது.
பக்தி இயக்கத்தின் எழுச்சியில் மீண்டும் பன்மைத்துவம் மெலெழுந்து வந்தது. ஏராளமான கடவுளர்கள், ஏராளமான வழிபாட்டு முறைகள், வட்டார அடையாளங்கள், குறியீடுகள், பண்பாட்டு நடைமுறைகள், வளர்ந்தன. யாகச்சடங்குகளையும், பார்ப்பனீயத்தலைமையையும், வேதங்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தன. ஏராளமான கடவுள்கள் சுயம்புவாகத் தோன்றினார்கள். இதைச் சூத்திர எழுச்சியாகப் புரிந்து கொண்ட பார்ப்பனீயம், இந்த எழுச்சியின் விளைவுகளை அங்கீகரிப்பது போல அங்கிகரித்து அப்படியே தன்னுடைய, ஏகத்தத்துவம், புனிதங்களுக்குள் ஸ்வாகா செய்து கொண்டது. முருக வழிபாடு, காளி வழிபாடு, போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
பிரம்மம் என்பதை தனிப்பெரும் தத்துவமாக கூறும் அறிவுஜீவிகள் பிரம்மத்தின் உள்ளீடு சாதியமைப்பு முறையை சூட்சுமக்கருத்துக்களாகச் சொல்வதை வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகின்றனர். உலகின் மிக உயர்ந்த உண்மையான பிரம்மத்திற்கும் உலகிற்கும் தீட்டு நிலவுகிறது என்று வேதாந்தம் சொல்வது தத்துவமல்ல. கர்மக்கோட்பாடு, சத்வ,ரஜச,தமச, குணங்கள் பற்றிய கோட்பாடுகள், புருஷசூக்தத்தில் சொல்லப்படுகிற வருண அமைப்பு முறை, தீட்டுக்கொள்கை போன்றவை நேரடியாகவே வருணாசிரம-சாதிக்கோட்பாடுகளோடு தொடர்புடையவையல்லாமல் வேறென்ன?
பிரம்மம் தன்னில் தானே நிலை கொள்ளவேண்டும். பிறவற்றோடு கலக்கக்கூடாது, அப்படிக்கலந்தால் தீட்டாகி விடும், எனவே பிரம்மம் உறுதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனது நிரந்தரத்தை, புனிதத்தை நிறுவுவதற்காக உலகம் மாயை, உடல் மாயை, உடலுழைப்பாளர்கள் மாயை, நிலம், இரும்பு, ரத்தம், பிறப்பு, இறப்பு, எல்லாம் மாயை என்றும் நிலத்தில், இரும்பில், ரத்தம் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ( மருத்துவர்) தோல் பதனிடுபவர்கள், பறை அடிப்பவர்கள், பௌதீகமாகச் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், என்று பலவேறு உழைப்பாளிகளை அது தீட்டுக்குரியவர்கள் என்று சொல்கிறது. இவற்றில் எல்லாம் கலந்து விடாமல் இருப்பதே பிரம்மத்தின்புனிதம் என்கிறது. பிரம்மம் என்று வருகிற இடங்களில் எல்லாம் பார்ப்பனீயம் என்று வாசித்துப்பாருங்கள். முடைநாற்றம் எடுக்கும் வருணாசிரம- சாதிக்கோட்பாடுகளின் அழுகிய முகம் தெரிகிறதா?
அரசியல் அதிகாரம் என்று வரும்போது எந்த சமரசத்துக்கும் தயாராகும் பார்ப்பனீயம் வெகுமக்களின் கடவுள்களையும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் அவர்களது பன்மைத்தத்துவத்தையுமே கூட கபளீகரம் செய்து மீண்டும் ஏகத்தத்துவத்தை எல்லாவற்றிலும் ( வேதம்- வருணாசிரமம் – சமஸ்கிருதம் ஜனரஞ்சகமாக ஹிந்தி ) நிலை நாட்ட போரிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆன்மீக(?) உண்மைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினால் மட்டுமே மீண்டும் மீண்டும்  பார்ப்பனீயத்துக்கு மக்கள் இரையாகாமல் பாதுகாக்க முடியும்.
ஆதார நூல்கள் –
1.   இந்தியக்கதை-ஏகம் அநேகம் சாதியம் – ந.முத்துமோகன்
2.   இந்தியா உருவான விதம் – ஷிரீன் மூஸ்வி ( டிச 17- ஜன 18 மார்க்சிஸ்ட் )

நன்றி - வண்ணக்கதிர்

Tuesday, 3 April 2018

மீனாளின் நீல நிறப்பூ


மீனாளின் நீல நிறப்பூ

உதயசங்கர்


பத்து நிமிடங்களுக்கும் மேலாக ராகவன் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே வாசலில் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும்போது மீனாள் உள்ளே சமையலறையில் மளிகைச்சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்பின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.. காலிங்பெல் அடித்து கொண்டேயிருந்தது. அவளுக்கும் கேட்டது. ஆனால் அவளுக்கு முன்னால் கண்ணாடி பாட்டிலில் இருந்த கடுகு அவளிடம்
“ அதெல்லாம் உன் பிரமை.. காலிங் பெல் அடிக்கவில்லை.. நீயே யோசித்துப்பார். சின்னவயசில் ராத்திரி தூங்கிக் கொண்டிருக்கும் போது இரண்டு மிருகங்களின் உறுமல் சத்தம் கேட்டது என்று அலறியிருக்கிறாய்… அப்போதெல்லாம் உன் அம்மா திட்டியிருக்கிறாளே.. என்னடி பிரமையா உனக்கு? என்று திட்டினாளே! மறந்து விட்டாயா?.....”
“ எனக்கென்னவோ நிஜமாவே காலிங் பெல் சத்தம் கேட்கிற மாதிரியே இருக்கு..”
கடுகுக்குக் கோபம் வந்து முகத்தைத் திருப்பிக் கொண்டது. இப்படித்தான் மீனாள் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள். அருகில் இருந்த துவரம்பருப்பு தன்னுடைய குரலை உயர்த்தியது.
“ ஏம்மா மீனா என்னையை மறந்துட்டீயே… நாளைக்கு ஒரு நாள் சாம்பார் வைக்கலாம்.. அவ்வளவுதான் இப்பவே வாங்கி வச்சுக்கோ.. உன் மாமனார் கிட்டே வாங்கிட்டு வரச்சொல்லி ஞாபகப்படுத்திக்கோ.. சும்மா அசடு மாதிரி ஷெல்பை பார்த்துகிட்டே நிற்காதே..”
“ காலிங் பெல் சத்தம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கேட்குதில்லை.?.”
” ஆமா கேக்கும்.. கேக்கும்.. இவளுக்கு மட்டும் தனியா கேக்கும்..”
அவள் உடனே து.பருப்பு பாட்டிலை எடுத்துப் பார்த்தாள். அவளுடைய முந்தானையால் பாட்டிலை ஒரு தடவை துடைத்தாள். பாட்டிலைத் தூக்கி வெளிச்சத்தில் பார்த்தாள். உண்மைதான் ஒரு நாளுக்குத்தான் சாம்பார் வைக்கலாம். அவளுடைய விரல் பட்ட இடத்தில் ரேகையின் தடம் படிந்திருந்தது. உடனே அதற்காகவே வைத்திருந்த துணியை எடுத்துத் துடைத்தாள். மறுபடியும் சன்னல் வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தாள். முகத்தில் ஒரு சிறு திருப்தி. இருந்த இடத்தில் து.பருப்பு பாட்டிலை வைக்கும்போது து.பருப்பு
“ என்ன பதிலைக்காணோம்..” என்று கேட்டது. ஒரு கணம் அடுக்களை வாசல்பக்கம் முகத்தைத்திருப்பி காதைத் தீட்டினாள். இப்போதும் காலிங்பெல் சத்தம் கேட்டது. தலையை ஆட்டி அந்தச் சத்தத்தை விரட்டினாள். து.பருப்பு இன்னமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
 ” எனக்கு மாமாவைப் பார்த்தாலே பயம்மாருக்கு… அவர் பார்க்கும்போது உடம்பில ஏதோ ஊர்ற மாதிரி இருக்கு… எதேச்சையா காப்பியோ.. பாலோ.. கொடுக்கும்போது அவர் விரல் பட்டாலே அதில ஒரு கெட்ட எண்ணம் என்னைத் தொட்டுப் பேசுது..”
என்ற அவளைப்பார்த்து தொலி உளுந்து கெக்கெக்கே என்று சிரித்தது.
“ மீனா.. உனக்கு எல்லாமே பிரமை தான் உன்னோட ஆறு வயசில ஒரு நாள் மதியம் பக்கத்து வீட்டு ஆண்ட்டி வீட்டுக்குப் போயிருந்தே.. ஆண்ட்டி இல்லை..ஆனால் அங்கிள் வா அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம்னு சொல்லி ஒரு சாக்லேட் கொடுத்தாரு.. விளையாடிகிட்டிருக்கும் போதே கவுனை அவுக்கச்சொன்னாரு.. அங்கிள் உன்னோட உடம்பை முரட்டுத்தனமா அமுக்கினாரு.. உனக்கு உடம்பு வலித்தது… அழுகையா வந்துச்சி.. நீ அழ ஆரம்பித்தபோது…. ஆண்ட்டி வந்துட்டாங்க.. அவங்க போட்ட  சத்தத்துல நீ கூப்பாடு போட்டு அழுதுட்டே.. பத்து நாள் காய்ச்சல் வந்து கிடந்தே.. டைபாய்டு காய்ச்சல்னு சொல்லி ஆசுபத்திரியில் சேர்த்து மறுபடியும் வந்தே… அதுக்கப்புறம் அப்பா தொட்டாக்கூட உனக்கு அந்த அங்கிள் தொட்ட மாதிரியே இருந்துச்சி.. அருவெறுப்பா.. ஐய்யோ…உவ்வே… அந்த அங்கிள் பண்ணினதையே இன்னமும் நீ நினைச்சிகிட்டே இருக்கே…”
மறுபடியும் காலிங்பெல் சத்தம் கேட்டது. மீனாள்,
“ எனக்குக் குழப்பமா இருக்கு.. காலிங்பெல் சத்தம் கேட்டுகிட்டேயிருக்கே..”
“ நீ எப்ப குழப்பம் இல்லாம இருந்தே..? இல்லாட்டி கலியாணம் முடிஞ்சி ஒரு வாரத்துக்கு ராகவனைத் தொடவிடலையே… எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு ஒரு மாதிரி இருக்குன்னு சொல்லியே பக்கத்தில அண்டவிடலை… அவன் கடைசியில என்ன செய்ஞ்சான்..வலுக்கட்டாயமா உன்னோட உறவு வச்சுகிட்டான்..”
என்று ப்ரு காபித்தூள் சொன்னதைக் கேட்ட மீனாளின் கண்களில் கண்ணீர் திரண்டது.
“ நான் என்ன பண்ணட்டும்… எனக்கு ஆம்பிளகளைக் கண்டாலே பிடிக்கல… பிளஸ் டூ படிக்கும்போது டியூஷன் போய்க்கிட்டிருந்தேன்… முத்தாரம்மன் கோயில் பக்கத்தில இருந்த ஒயின்ஷாப்பிலேர்ந்து வெளியே வந்த ஒரு பொறுக்கி நடுரோட்டில என்னைக்கட்டிப்பிடிச்சி…அதுதான் எனக்குத்தெரியும்.. நான் கத்திக்கூப்பாடு போடறேன்… ரோட்டில போற ஒருத்தர் கூட பக்கத்தில வரலை.. நானே மல்லுக்கட்டி அவங்கிட்டேருந்து பிடுங்கிட்டு ஓடினேன்… வீட்டுக்குப்போகிற வரை அழுதுகிட்டே போனேன்.. அம்மாட்ட சொன்னேன்.. அதுக்கு அவ நீ ஏண்டி அந்தத்தெரு வழியே போனேங்கிறா…. அப்பாவோ.. ஒம்மக ஒழுங்கா போயிருக்க மாட்டாங்கிறாரு… “
முந்தானையால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். பெருமூச்சு வந்தது. குக்கர் விசிலடித்தது. அவளுக்கு அந்தச்சத்தம் எப்போதும் பிடிக்கும். ஒவ்வொரு விசிலும் வருவதற்கு முன்னால் சுர்ர் சுர்ர்னு சிணுங்கிக்கிட்டிருக்கும் போது எந்தச் சிணுங்கலுக்கப்புறம் விசில் வரப்போகிறதென்று அவள் சரியாகச்சொல்லிவிடுவாள். சிலசமயம் அந்த விசிலோடு சேர்ந்து அவளும் விசிலடிப்பாள். ஐந்து விசில் வந்துவிட்டது. அடடா.. நாலு விசிலுக்கு மேலே வைத்தால் இந்த அரிசி கொஞ்சம் குழைந்து விடுகிறது. எல்லாம் இந்தப் ப்ரூ பாட்டிலிடம் பேசியதால் வந்த வினை. குக்கர் இருந்த பெரிய பர்னரை அணைத்தாள். சின்ன பர்னரில் இருப்புச்சட்டியைப் போட்டு எண்ணெய் ஊற்றினாள். எண்ணெய் அப்படியே சூடாக சூடாக குமிழ்குமிழாக நுரை வந்தது. நுரை அடங்கியதும் எடுத்து வைத்திருந்த கடுகு உளுந்தம்பருப்பைப் போட்டாள். கருப்பு வெள்ளை நிறத்தில் அடடா… டப் டிப் டப் டிப் என்று கடுகு வெடித்தது. சின்னதாக நறுக்கி வைத்திருந்த சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு கண்ணகப்பையால் கிண்டினாள். வெங்காயம் பொன்னிறமாய் பொரிந்ததும் பாகற்காய் சீவல்களைப் போட்டு புரட்டி விட்டுக்கொண்டேயிருந்தாள். பச்சை நிறம், கருப்பு, வெள்ளை, வெளிறிய ரோஸ் நிறம், கரும்பச்சை என்று நிறங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக தெரிந்த நிறம் மீனாளுக்குப் பிடித்திருந்தது. அவள் காய்கறி நறுக்கும்போது ஒவ்வொரு நிறமாக அருகருகில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பாள். காரட்டின் சிவப்புக்குப் பக்கத்தில் வெண்டைக்காயின் பச்சை. பீட்ரூட்டின் கருஞ்சிவப்புக்கு அருகில் வெண்பச்சை முட்டைக்கோஸ், என்று நிறங்களின் அழகை ரசித்துக் கொண்டேயிருப்பாள்.
ஒவ்வொரு பொருளாய் போடப்போட நிறம் மாறிக்கொண்டிருந்தது. பாகற்காயில் ரெண்டு உப்பையும் போட்டாள். மாமாவுக்கு அன்றாடம் பாகற்காய் வேண்டும். டையபடிக்ஸ். லேசாய் நீர் தெளித்து மூடி வைத்தாள். அப்படி நிமிரும்போதுதான் “ மீனா “ என்ற சத்தம் கேட்டது. உண்மையில் கேட்கத்தான் செய்கிறது. அவள் திரும்பும் போது அடுக்களைச்சுவரில் ஒட்டியிருந்த டைல்ஸிலிருந்து ஒரு முகம் தோன்றியது. கோரமாய் இருந்த அந்த முகத்தில் இருந்த புள்ளிகள் அம்மை தழும்புகள் விழுந்த மாதிரி மேடும் பள்ளமுமாய் தெரிந்தன. அந்த முகத்தைப் பார்த்தமாதிரியும் இருந்தது. பார்க்காதமாதிரியும் இருந்தது.
எப்போதும் அடுக்களை டைல்ஸைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அந்த வழுவழுப்பும் பளபளப்பும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது அதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்த முகத்தைப் பார்க்கப்பிடிக்கவில்லை. அதனால் நிமிர்ந்து பார்க்காமல் இருப்பு சட்டியிலிருந்த பாகற்காயை மீண்டும் மீண்டும் கிண்டிக்கொண்டேயிருந்தாள். கரண்டியில் எடுத்து ஒரு துண்டை நசுக்கிப் பார்த்தாள். நசுக்கிப்பார்த்த துண்டை வாயில் போட்டாள். வெந்து விட்டது.  அப்பாடா சமையல் முடிந்து விட்டது என்று ஆசுவாசமும் வந்தது. அய்யய்யோ அதற்குள் முடிந்து விட்டதே என்ற ஏக்கமும் வந்தது. கேஸ் ஸ்டவ்வை அணைத்தாள். பாத்திரங்களை கழுவப்போட்டாள். பாத்திரங்களின் கணங்..கணங்..சத்தம் அவளுக்கு உற்சாகமாக இருந்தது. திரும்பவும் பாத்திரங்களை எடுத்துப் போட்டாள். அதே சத்தம். அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. சிங்கில் இருந்த பைப்பைத் திறந்து விட்டாள். தண்ணீர் நுரையாகப் பொங்கியது. அந்த நுரைத்தண்ணீரில் கைகளை நீட்டினாள். கைகளில் தண்ணீர் படுகிற உணர்வேயில்லை. மேலே கரண்டிகள் வைத்திருந்த ஸ்டாண்டிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“ எவ்வளவு நேரமா கத்திக்கிட்டிருக்கேன்…. கதவைத் திறக்காளான்னு பாரு..”
அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். உயரே ஓடிக்கொண்டிருந்த ஃபேன் மிக மெலிதான சத்தத்தில் முனகியது.
“ என்னைச் சுத்தம் செய்ஞ்சி எவ்வளவு நாளாச்சி..”
அவள் நிமிர்ந்து பார்க்க ஃபேன் தன் மீது படிந்துள்ள தூசியைக் காட்டியது. உயரே சுவரின் மூலையில் சிறிய நூலாம்படை இருந்தது. அவள் முகத்தில் அதிருப்தியின் ரேகை ஓடியது. அவளுக்குத் தூசியோ, நூலாம்படையோ, அழுக்குத்துணிகளோ, இருக்கக்கூடாது. அவளே ஒரு நாளைக்கு நாலுவேளை குளிப்பாள். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் துணிகளைத் துவைப்பாள்.
சமையலறை அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது. இது அவளுடைய உலகம். இந்த உலகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைவதில்லை. அவளுக்கு மட்டும் தான் தெரியும். எப்போது சிலிண்டர் காலியாகும்? கோதுமை மாவு எத்தனை சப்பாத்திக்கு வரும்? எவ்வளவு உப்பு போட்டால் சாம்பார் மணக்கும்? கொத்துமல்லித்துவையலுக்கு எவ்வளவு புளி வைக்க வேண்டும்? பொன்னி அரிசிக்கு எத்தனை விசில் வைக்க வேண்டும்? டிகாஷன் காப்பித்தூள் எப்படி இருக்க வேண்டும்? இதெல்லாம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
இரவில் இருண்டு அழுது வடிந்து கொண்டிருக்கிற அடுக்களை அவள் நுழைந்ததும் தாயைக்கண்ட சேயைப் போல பொங்கிச் சிரிக்கும். அவளும் சிரிப்பாள். சில நாட்களில் நடுராத்திரி கூட படுக்கையறையிலிருந்து எழுந்து வந்து அடுக்களை விளக்கை எரிய விட்டு பார்த்துக் கொண்டே நிற்பாள். அங்கே இருக்கும்போது அவளுக்குள் ஒரு கதகதப்பு தோன்றும். அவளுடைய அம்மாவின் மடியில் தலை புதைக்கும்போது தோன்றுமே அதே மாதிரி.
அவள் கைகளைக் கழுவத் தண்ணீரைத் திறந்து விட்டாள். தண்ணீர் அவளிடம் சளசளவென்று,
“ நேத்திக்கி போட்ட மோட்டார்.. மறந்துராதே.. இன்னக்கி மோட்டார் போடணும்…”
என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கியது. அவள் தெரியும் தெரியும் என்று தலையாட்டினாள். கைகளை சேலையில் துடைத்துக் கொண்டே தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்தாள். இப்போதெல்லாம் கீழ்முதுகில் வலி சுளீரென்று வந்து வந்து போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை எடுத்து விட்டபிறகு தான் இந்த வலி. முதுகைச் சுவரோடு சேர்த்து அழுத்தினாற்போல உட்கார்ந்தால் கொஞ்சம் பரவாயில்லை. உட்கார்ந்து நீண்ட பெருமூச்சு விட்டாள். தலை கிர்ரென்றது. அப்படியே மார்போனைட் ஒட்டிய தரையில் தலை சாய்த்தாள்.
அவளுடைய கன்னத்தில் மார்போனைட்டில் இருந்த நீலநிறப்பூ மென்மையாகத் தொட்டது. உடம்பே குளிர்ந்தமாதிரி சில்லிட்டது. அவள் கிறங்கிப்போய் கண்களை மூடினாள். அவள் ஒரு பூந்தோட்டக்கடலில் மிதந்து கொண்டிருந்தாள். வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தன. விதவிதமான பூச்சிகளின் ரீங்காரம் காதுகளை நிறைத்தது. மஞ்சள் நிறவண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாய் பறக்கவும் பூக்களில் உட்காரவுமாய் இருந்தன. தேன்சிட்டுகளின் கீச்சட்டம் ஏற்ற இறக்கங்களோடு இசையென இசைத்தது. அவள் எல்லையில்லாத அந்தத் தோட்டத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய முதுகில் முளைத்திருந்த சிறகுகள் அவள் பறக்கும் பூக்களின் வண்ணங்களில் பிரதிபலித்தது. அவளுடைய முகத்தில் அபூர்வமான ஒரு அழகு மிளிர்ந்தது. அவள் பூக்களின் தேனைக் குடிக்க விரும்பினாள். அந்தத் தேன்சிட்டைப்போல விர்ரென்று காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்க விரும்பினாள். தூக்கணாங்குருவிக் கூட்டில் படுத்து உறங்க விரும்பினாள்.மூடிய இமைகளுக்குள் மீனாளின் கண்பாப்பாக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. நெற்றி சுருங்கிச் சுருங்கி விரிந்தது. மீனாள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவள் முகத்தில் அழகிய புன்னகை பூத்திருந்தது. அது நீலநிறத்திலிருந்தது.

வெளியே கூட்டம் கூடி கதவை உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

நன்றி - செம்மலர்
Sunday, 1 April 2018

பஞ்சு மிட்டாய்


பஞ்சு மிட்டாய்

உதயசங்கர்

இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று புலவர்கள் எழுதி வைத்தனர். அதை தினமும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தன. எந்த ராஜா ஆட்சியிலாவது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழமுடியுமா? உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? சரிதான். இடியூர் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்களேன்.
இடிராஜா திடீர் திடீரென்று தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேசுவார். அவர் தொலைக்காட்சியில் வருகிறார் என்றால் மக்கள் பயந்து நடுங்குவார்கள். அவர் தொலைக்காட்சியில் தோன்றி பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான். ஒரே இடிமின்னலைப்போல கர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவார். தன்னுடைய அகன்ற மார்பை விரித்து சுருக்கி கை கால்களை ஆட்டிப்பேசுவார்.
“நாடு நீங்கள் பிறப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நீங்கள் இருப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நீங்கள் வாழ்வதற்குத் தேவையான காற்று நீர் எல்லாம் கொடுத்திருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? எண்ணிப்பாருங்கள்! இன்று முதல் உங்களுடைய ஒரு வேளை உணவை நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள்! “
என்று ஒரு இடியை இறக்கி விடுவார். இன்னொரு தடவை உங்கள் ஒரு நாள் வருமானத்தைத் தியாகம் செய்யுங்கள் என்பார். உங்கள் ஒரு உடையைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் முடியைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் நகையைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் கனவைத்தியாகம் செய்யுங்கள். அதைத் தியாகம் செய்யுங்கள். இதைத் தியாகம் செய்யுங்கள். என்று இடிகளாகப் பொழிவார். பாவம். மக்கள் !
ஏற்கனவே விவசாயம் பொய்த்து விவசாயிகள் கடன் தொல்லையினால் எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே தொழிலாளர்கள் கிடைக்கும் கூலி போதவில்லை. பலநாட்கள் ஒருவேளையோ இரண்டு வேளையோ உணவைத் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
நாட்டுநிலைமை இப்படி இருந்தது.
ஆனால் இடிராஜாவின் அரண்மனையில் தினம் ஆறுவேளையும் விருந்து நடக்கும். இடிராஜாவின் சட்டை மட்டும் பல லட்சம் பொன் விலைக்குப் போகும். இடிராஜா எப்போதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்து போய்க்கொண்டேயிருப்பார்.
ஒருநாள் இடிராஜா கிமெரிக்கா நாட்டுக்குப்பயணம் போய் விட்டுத் திரும்பினார். அவருடைய அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை. ஒரே கூட்டம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், எல்லோரும் சேர்ந்து உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
” வாழவழியில்லை ராஜாவே!
வழி சொல்லுங்க ராஜாவே! “
இடிராஜாவுக்குக் கோபம் வந்தது. கூடியிருந்த மக்களைப்பார்த்து,
“ என்ன வழியில்லை வழியில்லை என்று அழுது கொண்டிருக்கிறீர்கள். பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து பிழையுங்கள். போங்கள். எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது..”
என்று சொல்லி விட்டார். அப்படியும் மக்கள் கலையவில்லை. உடனே குதிரைப்படையை அனுப்பிக் கலைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். குதிரைப்படை வந்து மக்களை விரட்டியடித்தது.
மறுநாள் நாடுநகரம் எங்கும் பஞ்சுமிட்டாய் விளம்பரம் செய்யப்பட்டது. அரண்மனை வங்கிகளில் இருந்து பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்வதற்குக் கடன் கொடுத்தார்கள். மக்கள் வரிசை வரிசையாக நின்று கடன் வாங்கினார்கள். எல்லோர் வீட்டிலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இயந்திரம் இருந்தது. எல்லோரும் பஞ்சு மிட்டாய் தயாரித்தார்கள். குச்சிகளில் சொருகப்பட்டப் பஞ்சு மிட்டாய்களை எடுத்துக்கொண்டு விற்பதற்காகத் தெருக்களில் அலைந்தார்கள்.
ஆனால் வாங்குவதற்கு ஆளில்லை. மக்கள் எல்லோரும் பஞ்சு மிட்டாய்களைத் தயாரித்து விற்றால் யார் வாங்குவார்.? குப்புசாமி தான் தயாரித்த பஞ்சுமிட்டாயை பக்கத்து வீட்டில் இருந்த வடிவேலனிடம் கொடுத்தார். உடனே வடிவேலன் தான் தயாரித்த பஞ்சு மிட்டாயை குப்புசாமியிடம் கொடுத்தார். வேறு என்ன செய்ய? அவரவர் தயாரித்த பஞ்சு மிட்டாய்களை அவர்களே தின்று தீர்த்தனர்.
ஆனால் அரண்மனை வங்கிகள் சும்மா இருக்குமா? கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டனர். வியாபாரம் ஆனால் தானே வட்டி கட்டமுடியும்? மக்கள் மறுபடியும் இடிராஜாவின் அரண்மனைக்குப்போனார்கள். இடிராஜா மக்களிடம்
“ அதனால் என்ன? நாம் பஞ்சு மிட்டாய்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம். “
அதைக்கேட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குப் போனார்கள். ஆனால் மறுநாள் பெரிய அதிர்ச்சி!
வெளிநாட்டு கம்பெனிகள் இடியூர் நாட்டில் விதவிதமான வெளிநாட்டு பஞ்சு மிட்டாய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர்.
மக்கள் அழுதனர். அவர்களுடைய அழுகுரல் கேட்டு மூன்று தேவதைகள் வந்தார்கள். நீலநிறத்தேவதை நீலநிறப்பொடியைத் தூவினாள். இடிராஜாவின் அரண்மனை சிறியதாகி, சிறியதாகி, குடிசையாகி விட்டது. கருப்பு நிறத்தேவதை கருப்புநிறப்பொடியைத் தூவினாள். இடிராஜாவின் முட்டாள்தனங்கள் எல்லாம் மக்களுக்குப் புரிந்து விட்டது. சிவப்பு நிறத்தேவதை சிவப்பு நிறப்பொடியைத் தூவினாள். அரண்மனை வங்கிகளில் இருந்த பணம் எல்லாம் எல்லோரிடமும் சரிசமமாக பகிர்ந்து கொடுக்கப்பட்டது. மக்கள் மகிழ்ந்தனர். நாடும் செழித்தது.
நன்றி - வண்ணக்கதிர்

Saturday, 31 March 2018

நேற்று மாலை குமாரபுரம் ஸ்டேஷனுக்கு கு.அழகிரிசாமி வந்திருந்தார்

நேற்று மாலை குமாரபுரம் ஸ்டேஷனுக்கு கு.அழகிரிசாமி வந்திருந்தார். அவருடன் கோவில்பட்டி பள்ளிக்கூடத்தில் மேல் வகுப்பு படிப்பதற்காக ரயில் ஏற வந்த சிறுவர்களைப்போல நானும் தீன் தோழரும் சிரிப்பையே உருவாகக் கொண்ட மாரியும் நின்றிருந்தோம்.
1960- ஆம் ஆண்டு அவர் எழுதிய குமாரபுரம் ஸ்டேஷனைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.குமாரபுரம் ஸ்டேஷன் ஒரு காட்டு ஸ்டேஷன் என்று எழுதிய தன் முதல் வரியைத் திரும்பவும் வாசித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அது இன்னமும் காட்டு ஸ்டேஷனாகவே இருக்கிறது. காலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அல்லது காலம் கு.அழகிரிசாமியின் காவியத்தில் சிறு கீறல் கூட விழாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
கு.அழகிரிசாமியை நேரில் கண்டதில்லை. அவர் எழுதிய கதைகளின் சாராம்சமான அன்பின் ஆகிருதியை மாலை நேர நிழலின் சாயலில் நீண்டு என் மீது விழுவதை உணரமுடிந்தது.
கலைக்க முடியாத ஒப்பனைகளின் ஒளிக்கீற்றை தனுமையின் பேரன்பை, கனிவின் நெகிழ்வை, ஒரு சிறு இசையின் ஆழத்தை, கமழ்ச்சியின் அழகை, குமாரபுரம் ஸ்டேசனில் நான் தரிசித்தேன்.
கு.அழகிரிசாமியின் ஆழ்ந்த மோனத்தை ஒன்றிரண்டு ரயில்கள் ஊடறுத்து மௌனத்தின் வலிமையை கூவிச் சென்றது.
இருள் கவியத்தொடங்கி விட்டது.
இனி இந்தக்குமாரபுரம் ஸ்டேஷன் இன்னொரு உலகமாக மாயம் செய்யும். குள்ளநரிகளும் முயல்களும், பாம்புகளும், பூச்சிகளும், சேடான்களும், வெருகுகளும் அலைந்து திரியும். அதில் நானும் ஒரு பூச்சி. அழகிரிசாமி ஸ்டேஷன் முன்னால் கிடந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து எதிரே விரிந்து கிடக்கும் புல்வெளியைப் பார்க்கிறார். சற்று தூரத்தில் அவருடைய சொந்த ஊரான இடைசெவல் மின்மினிப்பூச்சியைப் போல மின்னுகிறது. அங்கே அவருடைய உற்ற தோழனான கி.ரா. இருப்பதாகவும் போகும்போது அவரைப் பார்த்து விட்டுப் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்.
நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஒரு நீண்ட பெருமூச்சுடனும் பரவசத்துடனும் அழகிரிசாமியைப் பார்த்துக்கொண்டிருந்தோம் . எங்கள் தோள்களின் வழியே குமாரபுரம் ஸ்டேஷனும், கருவை மரங்களும்,விளாமரங்களும், புதர்ச்செடிகளும், கூடடைய வந்த பறவைகளும், கூட அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன. பூச்சிகள் இரவுப்பேரிசையின் சிம்பொனியை இசைக்க ஆரம்பித்திருந்தன.
அந்த இசைத்துகள்கள் எங்கள் மீது படர்ந்தபோது கு.அழகிரிசாமி எங்கள் அன்பிற்குரிய வண்ணதாசனாக நின்றார்.
இருமருங்கும் புற்களின் அணிவகுப்பின் நடுவே வரைந்த அழகிய சாலையில் மஞ்சளொளியில் அபூர்வமான முகபாவத்தில் வண்ணதாசன் இருந்தார்.
அவருக்குள் கு.அழகிரிசாமியின் ஆவி இறங்கியிருந்தது.
நாங்களும் அதன் துடிப்பை உணர்ந்தோம். சிறிய நடுக்கத்துடன் எங்கள் மூதாதையான கு.அழகிரிசாமியை வணங்கினோம்.
அப்படியே எங்கள் வண்ணதாசனையும்.

Sunday, 18 March 2018

குள்ளநரியின் கனவு


குள்ளநரியின் கனவு

உதயசங்கர்

கடம்பூர் காட்டில் உள்ள ஒரு புதரில் ஒரு குள்ளநரிக்குட்டி வாழ்ந்து வந்தது. அந்தக்குள்ளநரிக்குட்டி எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். படுசோம்பேறி. நிறையக் கனவுகள் காணும். தூங்கிக்கொண்டே உறுமும். தூங்கிக்கொண்டே ஊளையிடும். தூங்கிக்கொண்டே பற்களை நறநறவென்று கடிக்கும். அம்மாவும் அப்பாவும் தினம் திட்டுவார்கள்.
“ இப்படித் தூங்காதேடா… சோம்பேறியின் கனவு பலிக்காதுடா..”
“ சரிம்மா..” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் தூங்கிவிடும். அம்மாவும் அப்பாவும் குள்ளநரிக்குட்டிக்கு இரை தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அது புதரில் தூங்கியபடியே சாப்பிடும்.
அம்மாவும் அப்பாவும் இரை தேடுவது எப்படி? வேட்டையாடுவது எப்படி? என்று சொல்லிக்கொடுக்க அழைத்தார்கள். குள்ளநரிக்குட்டி வரவில்லை. கெஞ்சினார்கள். குள்ளநரிக்குட்டி வரவில்லை. மிரட்டினார்கள் குள்ளநரிக்குட்டி வரவில்லை.
சிறிது நாட்களில் குள்ளநரிக்குட்டி வளர்ந்து விட்டது. அம்மாவும் அப்பாவும் அதைத் தனியே விட்டு விட்டு போய் விட்டார்கள்.
குள்ளநரி புதரில் சோம்பேறியாகப் படுத்தபடியே கனவு கண்டது.
புதருக்கு அருகில் அதுவும் குள்ளநரியின் கால்களுக்கு அருகில் ஒரு முயல்குட்டி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களைத் திறந்த குள்ளநரி அதை அப்படியே லபக்கென்று பிடித்துத் தின்றது.
மறுபடியும் கண்களை மூடித்திறந்த போது ஒரு மான்குட்டி அதன் வாலுக்கருகில் நின்றது. உடனே அதை லபக் என்று பிடித்து விழுங்கியது.
குள்ளநரியின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. கண்களைத் திறந்த குள்ளநரி கண்டது கனவு என்று தெரிந்தது. வயிறு பசித்தது.
ஆனாலும் சோம்பேறித்தனம் விடவில்லை. மறுபடியும் கண்களை மூடியது. இப்போது கனவு வரவில்லை. பசியினால் வயிறு எரிந்தது. ச்சே அலையாமல் கொள்ளாமல் சாப்பிட முடியாதா? என்று நினைத்தது.
பசி பொறுக்காமல் புதரில் இருந்து எழுந்து வெளியே வந்தது. கனவில் கண்ட மாதிரி ஒரு முயலோ, மானோ, கௌதாரியோ, காட்டு எலியோ, எதுவும் கண்ணில் படவில்லை. கொஞ்சதூரம் நடந்து சென்று பார்த்தது. எதுவும் இல்லை. கொஞ்சதூரம் ஓடிச் சென்று பார்த்தது. எதுவும் இல்லை. பசியினால் கண்கள் மங்கியது.
ஒரு காட்டு எலி அதன் கண்முன்னால் ஓடியது. ஆனால் அதை எப்படிப்பிடிப்பது என்று தெரியவில்லை. ஒரு விட்டில் பூச்சி தாவிக்குதித்தது. அதை எப்படிப்பிடிப்பது என்று தெரியவில்லை. அது தான் வேட்டையாடப் பழகவில்லையே. அப்போது அதற்கு அம்மாவும் அப்பாவும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
“ சோம்பேறியின் கனவு பலிக்காது..”
பசியினால் சோர்ந்து உட்கார்ந்தபோது அதன் கால்களுக்கு முன்னால் ஒரு விட்டில்பூச்சி வந்து விழுந்தது. அப்படியே அசையாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரி முழுவேகத்தில் திடீரென்று அந்தப்பூச்சியின் மீது பாய்ந்து கால்களால் அமுக்கியது.
வேட்டையின் முதல் பாடத்தை குள்ளநரி கற்றுக்கொண்டது.
நன்றி- வண்ணக்கதிர்

Wednesday, 14 March 2018

பேய் பிசாசு இருக்கா?

நேற்றைய தினமலர் பட்டம் இணைப்பிதழில் பேய் பிசாசு இருக்கா? என்ற நூலிலிருந்து சில பகுதிகள்......

Sunday, 4 March 2018

ஆமையும் முயலும்


ஆமையும் முயலும்

உதயசங்கர்

ஒரு குளத்தில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக்குளத்தில் நீர் வற்றிக் கொண்டிருந்தது. புல், பூண்டுகள், பாசி, சிறிய மீன்கள், புழுக்கள், பூச்சிகள், எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஆமைக்குத் தீனி கிடைக்கவில்லை. ஆமை வேறு நீர்நிலையை நோக்கிப் போகவேண்டும் என்று நினைத்தது.
அதிகாலை ஆமை அந்தக் குளத்தை விட்டு மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தது. ச்சர்ர்ரக்…… ச்சர்ர்ரக்…. என்ற சத்தத்துடன் மெல்ல நடந்தது. அப்போது ஒரு புதரில் இருந்து திடீர் என்று ஒரு முயல் பாய்ந்து ஆமையின் முன்னால் வந்து நின்றது.
“ வர்றியா ஓட்டப்பந்தயம் ஓடலாம்.. போன தடவை நான் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.. இந்த முறை விட மாட்டேன்..”
என்று முயல் தன் நீண்ட காதுகளை விடைத்தபடி பேசியது. அதைக் கேட்ட ஆமை சிரித்துக் கொண்டே,
“ இல்லை நண்பா… நான் வரவில்லை.. நான் வேறு குளத்தைத் தேடிப் போகிறேன்.. இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டுமோ தெரியவில்லை..” என்று பதில் சொல்லியது.
“ போடா பயந்தாங்குளி… நீ இப்படி நடந்து எப்படிக் கண்டுபிடிப்பே.. என்னை மாதிரி நாலு கால்ல ஓடணும்… சும்மா சளக்கு சளக்குன்னு அன்னநடை நடந்துக்கிட்டிருக்கே…. இதிலே முதுகிலே சுமை வேற சுமந்துக்கிட்டிருக்கே…. அதைக் கழட்டிப்போடு.. எல்லாம் சரியாயிரும்..”
என்று சொல்லிக்கொண்டே பாய்ந்து குதித்துச் சென்று விட்டது.
ஆமையும் ஒரு கணம் யோசித்தது. முதுகில் உள்ள ஓடு இல்லை என்றால் இன்னும் வேகமாகப் போகலாம். முயல் சொன்னது சரிதான். ச்சே… என்ன கனம்! ஆமை முதுகை உதறியது. ஓடு கீழே விழவில்லை. வருத்தத்துடன் மெல்ல ச்சர்ரக்…. ச்சர்ரக்.. என்று நடந்து போய்க் கொண்டிருந்தது.
ஆமை கொஞ்சதூரம் தான் போயிருக்கும். எதிரே முயல் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தது. அதன் உடல் நடுங்கியது.
“ ஆபத்து.. ஆபத்து.. நரி துரத்துது… ஓடு..ஓடு… “  என்று முயல் கத்திக் கொண்டே தலைதெறிக்க ஓடியது. ஆமை நிமிர்ந்து பார்த்தது. கொஞ்சதூரத்தில் செவலை நிற நரி ஒன்று பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஆமை மெல்ல தன்னுடைய கால்களையும் தலையையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.
வேகமாக ஓடி வந்த நரி, ஆமையின் அருகில் வந்தது. அதை முகர்ந்து பார்த்தது. ஓட்டின் மீது வாயை வைத்து கடித்தது. கடிக்க முடியவில்லை. ஓடு கடினமாக இருந்தது. நரி தன்னுடைய மூக்கினால் ஆமையைத் தள்ளயது. ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த ஆமையை அசைக்க முடியவில்லை. ஆமையை இரண்டு முறை சுற்றிச் சுற்றி வந்தது நரி.
நரி பின்பு வந்த வழியே திரும்பிச் சென்றது.
நரி போன பிறகு ஓட்டிலிருந்து கால்களையும் தலையையும் வெளியே நீட்டியது ஆமை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஓட்டை உதறிவிட நினைத்தேனே என்று தன்னை நினைத்து வெட்கப்பட்டது.
இயற்கையன்னைக்கு நன்றி சொல்லியது.

நன்றி - வண்ணக்கதிர்


Wednesday, 21 February 2018

யானையும் பூனையும்

யானையும் பூனையும்

உதயசங்கர்காட்டில் இருந்த யானையாருக்குத் திடீர் என்று பெரிய கவலை வந்து விட்டது. யானையார் மிகவும் குண்டாக இருந்ததால் சந்து பொந்துகளில் நுழைய முடியவில்லை. பெரிய வயிறு இருப்பதால் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சட்டென ஒரு இடத்தில் உட்காரவோ எழுந்திரிக்கவோ முடியவில்லை. நின்று கொண்டே தூங்க வேண்டும். ச்சே..என்ன வாழ்க்கை! என்று யோசித்தது.
அப்போது யானையாருக்கு முன்னால் ஒரு பூனையார் ஒய்யாரமாக நடந்து போனார். அப்படி நடந்து போகும்போது ஓரக்கண்ணால் யானையாரைப் பார்த்துக் கொண்டே போனார். ஒல்லியாக இருந்த பூனையாரைப் பார்த்த யானையார் பெருமூச்சு விட்டார்.
இந்தப் பூனையாரை மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அங்கே பூனையாரும் பெருமூச்சு விட்டார். யானையாரைப் பாரு. ஒரு கவலை இல்லை. அவர் நடந்து வந்தாலே காடே அதிரும்ல. எல்லோரும் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவருக்கு உணவு எளிதாகக் கிடைக்கிறது. எங்கும் இலை தழைகள் தானே. நம்ம நிலைமை பதுங்கிப் பதுங்கி இரை தேடணும். பெரிய மிருகங்களைப் பார்த்தால் ஓடி ஒளியணும். ச்சே.. என்ன வாழ்க்கை! என்று யோசித்தது.
இரண்டு பேரும் இரவு உறங்கினார்கள். விடிந்தது. கண்விழித்துப் பார்த்தால்……………
யானையார் பூனையாரைப்போல ஒல்லியாக, சின்னதாக, மாறி விட்டார்.
பூனையார் யானையாரைப் போல பெரிதாக, குண்டாக மாறிவிட்டார்.
ஆகா! என்ன அற்புதம்! நினைத்த மாதிரி நடந்து விட்டதே என்று யானையாரும் பூனையாரும் ஆச்சரியப்பட்டனர்.
பூனையாக மாறிய யானையார் காட்டுக்குள் சந்து பொந்துகளுக்குள் பாய்ந்து ஓடினார். தன்னுடைய சிறிய தும்பிக்கையினால் தரையில் வளர்ந்திருந்த புற்களையும், சிறிய செடிகளையும் இழுத்தார். முடியவில்லை. பலம் இல்லாமல் பொதுக்கடீர் என்று மட்டமல்லாக்க விழுந்தார். அவருக்கு எதிரே வந்த சிங்கம், புலி, மான், மிளா, ஓநாய், நரி, ஏன் எலி கூட பயப்படவில்லை. எல்லோரும் யானையாரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். புலியார் உறுமிக்கொண்டே பூனையாக மாறிய யானையாரைப்பார்த்து ஓடிவந்தார். அதைப்பார்த்த பூனையாக மாறிய யானையார் உயிரைக்காப்பாற்ற தலை குப்புற விழுந்து எழுந்து ஓடினார். எப்படி கம்பீரமாக இருந்தோம். இப்படி பயந்து ஓடும்படி ஆகி விட்டதே! ச்சே.. என்ன வாழ்க்கை என்று நினைத்தது.
யானையாக மாறிய பூனையாரைப் பார்த்த சிங்கம், புலி, மான், மிளா, ஓநாய், நரி, ஏன் எலி கூட அலட்சியமாக எதிரே வந்தன. அதைப் பார்த்த யானையாக மாறிய பூனையாருக்குக் கோபம் வந்தது.
நான் யானையாக மாறிய பூனையார். ஜாக்கிரதை!
என்று அவர்களை எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தார்.
 தன்னுடைய மீசை முடி சிலிர்க்க தன்னுடைய பெரிய வாயைத்திறந்து ” மியாவ்.. மியாவ்.. மியாவ்..” என்று கத்தியது. அதைக் கேட்ட எல்லா விலங்குகளும் சிரித்தன.
யானையாக மாறிய பூனையாருக்கு அவமானமாகி விட்டது. ஓடி ஒளிந்து கொள்ள நினைத்தது. அவ்வளவு பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓட முடியவில்லை. ஒரு புதருக்குள் ஒளிந்து கொள்ள முடியவில்லை. எங்கே நின்றாலும் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. குனிந்து இரையைப் பிடிக்க முடியவில்லை. எல்லாம் அந்த ஓட்டம் ஓடுகின்றன. ச்சே. என்ன வாழ்க்கை! என்று நினைத்தது.
பூனையாக மாறிய யானை
யானையாக மாறி விட்டது.
யானையாக மாறிய பூனை
பூனையாக மாறி விட்டது.
     யானை யானையானது.

     பூனை பூனையானது.
நன்றி- மாயாபஜார்

Tuesday, 23 January 2018

குளத்தில் சத்தம்

குளத்தில் சத்தம்

உதயசங்கர்

நல்ல மழை. அல்லிக்குளம் நிரம்பி வழிந்தது. அல்லிக்குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூத்திருந்தன. அல்லி மலர்கள் அல்லிக்குளத்தின் கரையோரம் கொக்கு, நாரை, உள்ளான், பறவைகள் தண்ணீரில் அசையாமல் நின்று கொண்டிருந்தன. சிறுமீன்களோ, தலைப்பிரட்டான்களோ, புழு, பூச்சிகளோ, அந்தப்பக்கம் வந்தால் லபக் என்று வயிற்றுக்குள்ளே தள்ளிவிடத் தயாராக நின்று கொண்டிருந்தன. கவனமாய் தண்ணீருக்குள்ளேயே பார்த்துக்கொண்டு நின்றன.
சிலசமயம் அல்லிமலர்கள் மீதோ, அல்லி இலைகள் மீதோ உள்ளானும், நாரையும், கொக்கும், நடந்து சென்று இரை தேடின. நீர்க்காகம், குளத்தில் நீந்தியது. அவ்வப்போது தலையைக் குனிந்து தண்ணீருக்குள் குட்டிக்கரணம் போட்டு இரை தேடியது.
குளத்தில் அயிரை, கெண்டை, கெளுத்தி, உளுவை, மீன்களும் ஏராளமான தவளைகளும், தலைப்பிரட்டான்களும், நீந்திக்கொண்டிருந்தன. பகல் முழுவதும் தவளைகளின் சத்தம் காதைப்பிளந்தது. குளத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான சத்தம் வந்து கொண்டிருந்தது.
குளத்தின் கரையில் கூட்டம் கூட்டமாக தவளைகள் கூடிப் பேசிக்கொண்டிருந்தன. ஒரு குட்டித்தவளை மட்டும் அங்கும் இங்கும் தாவிக்குதித்துக் கொண்டே இருந்தது. அங்கே இருந்த வயதான தவளைகள், பெரிய தவளைகள், இளம் தவளைகள், குட்டித்தவளைகள், என்று எல்லோரிடமும் போய் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! என்று கத்தியது. அந்தக்குட்டித்தவளையின் உற்சாகத்தைப் பார்த்து மற்ற தவளைகளும் ஒன்று போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின.
அந்த சத்தத்தைக் கேட்டு கொக்குகளும், நாரைகளும், உள்ளான்களும், நீர்க்காகங்களும் ஒரு நொடி திகைத்து நின்றன. பின்னர் அவைகளும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின. அந்த சத்தத்தைக் கேட்டு அல்லி மலர்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. அல்லி மலர்கள் தலையாட்டுவதைப் பார்த்து குளத்தைச் சுற்றி நின்ற தென்னை மரம், மாமரம், வாகை மரம், புங்கை மரம், வேப்பமரம், எல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. மரங்கள் தலையாட்டியதும் உண்டான காற்றும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று பாடியது. காற்றின் பாடலைக் கேட்டு மேகங்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி!
அப்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்டது. ஒரு சாரைப்பாம்பு கரையோரம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. சாரைப்பாம்பின் சத்தம் கேட்டு மீன்கள் தண்ணீரின் ஆழத்துக்குப் போய் விட்டன. தவளைகள், சகதிக்குள் புதைந்து கொண்டன. குட்டித்தவளை மட்டும் இன்னமும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று குதித்துக்கொண்டிருந்தது.
அப்படி ஒரு குதி!
நேரே சாரைப்பாம்பின் முன்னால் போய் குதித்தது.. சாரைப்பாம்பு குட்டித்தவளையை உற்றுப் பார்த்தது. குட்டித்தவளை ஒரு கணம் கண்களை மூடித் திறந்தது. பிறகு சாரைப்பாம்பை தைரியமாகப் பார்த்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது.
சாரைப்பாம்பு ஒரு நொடி நின்றது. தன்னுடைய பெரிய வாயைத்திறந்தது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது. அது திரும்பிப் பார்ப்பதற்குள் குட்டித்தவளை குபீர் என்று குளத்துக்குள் பாய்ந்தது.
அவ்வளவு தான்!

Friday, 19 January 2018

பயத்துக்கு விடுதலை

பயத்துக்கு விடுதலை

உதயசங்கர்

ஊரிலேயே பெரிய தொலைதொடர்பு கோபுரத்தில் ஒரு பருந்து கூடு கட்டியிருந்தது. கூட்டில் இரண்டு பருந்துக்குஞ்சுகள் இருந்தன. நாள்முழுவதும் தாய்ப்பருந்து இரை தேடி இரண்டு பருந்துக்குஞ்சுகளுக்கும் ஊட்டி விட்டது. இரண்டு பருந்துக்குஞ்சுகளும் எதையும் வேண்டாம் என்று சொல்லாமல் நன்றாகச் சாப்பிட்டன. இப்போது அந்தக்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து விட்டன. இறகுகள் முளைத்து சிறகுகள் வளர்ந்து அழகாக இருந்தன.
தாய்ப்பருந்து குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்தது. மெல்ல தன்னுடைய மூக்கினால் ஒரு பருந்துக்குஞ்சை தள்ளிக் கூட்டின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. அந்தப் பருந்துக்குஞ்சு கூட்டிலிருந்து தானாகவே கீழே விழுந்தது. நேரே கீழே போய்க்கொண்டிருந்த குஞ்சின் சிறகுகள் தானாகவே மேலும் கீழும் அடிக்க ஆரம்பித்தன. பருந்துக்குஞ்சு இப்போது பறக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால் இன்னொரு பருந்துக்குஞ்சு கூட்டிலேயே பயந்து நடுங்கியது. கீழே எட்டிப்பார்க்கும். உடனே ஓடி கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொள்ளும். தாய்ப்பருந்து உள்ளே இருந்து பருந்துக்குஞ்சை மூக்கினால் தள்ளும். பருந்துக்குஞ்சோ அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொள்ளும். தாய்ப்பருந்து ..பயப்படாதே.. நீ கீழே இறங்கினால் பறந்து விடலாம். கூட்டிலேயே இருக்க முடியாது. பருந்து என்றால் பறக்க வேண்டும். பறந்து பார். பறத்தல் இனிது. பறத்தல் அழகு என்று உற்சாகப்படுத்தியது.
பருந்துக்குஞ்சு அம்மாவிடம் அம்மா எனக்குப் பயம்மா இருக்கும்மா. இவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? நான் கூட்டிலேயே இருக்கேன். நீ சாப்பாடு கொண்டு வந்து கொடு. என்றது.
தாய்ப்பருந்து கவலையுடன் பருந்துக்குஞ்சைப் பார்த்தது. சரி இரண்டு நாட்கள் போகட்டும் என்று விட்டு விட்டது.
பருந்துக்குஞ்சுக்குப் பயம் போகவில்லை.
அன்று காலை விடிந்தது. தாய்ப்பருந்து பருந்துக்குஞ்சை தன் மூக்கினால் தள்ளியது. பருந்துக்குஞ்சு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தது. தாய்ப்பருந்து தன் அலகினால் செல்லமாய் ஒரு தட்டு தட்டியது. பின்பு வேகமாக கூட்டிலிருந்து பருந்துக்குஞ்சைத் தள்ளியே விட்டது.
ஐயோ அம்மா என்று கத்தியபடியே கீழே வேகமாக விழுந்து கொண்டிருந்தது பருந்துக்குஞ்சு. திடீர் என்று அதன் சிறகுகள் அசைய ஆரம்பித்தன. காற்றில் சிறகுகளை விரித்து மிதந்தது. ஆகா! எவ்வளவு அழகு! பறத்தல் இத்தனை இனிமையா! இதற்காகவா பயந்து நடுங்கினோம். என்று வெட்கப்பட்டது. இப்போது பருந்துக்குஞ்சின் பயம் போயே போய் விட்டது.
தாய்ப்பருந்துடன் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பருந்துக்குஞ்சுகளும் அதோ பறந்து கொண்டிருக்கின்றன.
பாருங்கள்!

 5+

Wednesday, 17 January 2018

யார் அழகு?

யார் அழகு?

உதயசங்கர்

அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், மரப்பல்லி, அணில், எலி, சாரைப்பாம்பு, நல்லபாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், பச்சைபாம்பு, மஞ்சள்விரியன், மண்ணுள்ளி பாம்பு, புறா, காட்டுக்கோழி, கௌதாரி, காடை, மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, நீலச்சிட்டு, தேன்சிட்டு, மயில், கருங்குயில், புள்ளிக்குயில், என்று எல்லோரும் ஒன்று கூடுவார்கள். வருடத்துக்கு ஒரு முறை இயற்கையைப் போற்றி வழிபடுவார்கள்.
அந்த விழாவின் போது அங்கே கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம், ஓட்டப்பந்தயம், சடுகுடு, பாண்டி, கிளித்தட்டு, என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் நடக்கும். அன்று முழுவதும் யாரும் யாருடனும் சண்டை போடக்கூடாது. யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
பாட்டுப்போட்டியில் குயிலும், கிளியும், மைனாவும், போட்டி போட்டனர். குயில் ” குக்கூ குக்கூகுக்கூக்கூஊஊ “ என்று பாடிக்கொண்டிருந்தது.
கிளி “ கீகிகிகிகிக்கீக்கீக்கீ..” என்று கத்திக் கொண்டிருந்தது.
மைனா,” கெக்கேக்கெக்க்கே..” என்று ராகம் பாடியது.
நடுவராக இருந்த ஆந்தை தூக்கக்கலக்கத்தில் கண்ணை மூடி மூடித் திறந்து தலையாட்டிக் கொண்டிருந்தது. ஆந்தையாரின் தலையாட்டலைப் பார்த்து குயிலும் கிளியும், மைனாவும், இன்னும் சத்தமாகப் பாட ஆரம்பித்தன.
நடனப்போட்டிக்கு நடுவராக நத்தை இருக்க, மயிலும், கோழியும், புறாவும், ஆடின.
“ ஏன் இப்படி கையையும் காலையும் உதறிக் கொண்டிருக்கிறார்கள்?”
என்று நடுவர் நத்தை நினைத்தது. இப்படி காட்டின் பல பாகங்களிலும் வேறு வேறு போட்டிகள் நடந்து கொண்டிருந்தன.
காட்டின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அழகுப்போட்டியின் நடுவராக பருந்து உட்கார்ந்திருந்தது.
அழகுப்போட்டியில் ஆண்மயில் தன் தோகை விரித்து ஒய்யாரமாக நடந்து வந்தது.
மயில்புறா தலையில் கொண்டையும் பின்புறம் விரிந்த இறகுகளுமாய் நடந்து வந்தது.
சிட்டுக்குருவி தத்தித்தத்தி நடந்து வந்தது.
கிளி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து நடந்து வந்தது.
ஒவ்வொருவர் நடந்து வரும்போதும் கைதட்டலும் சீட்டி ஒலியும் ஆரவாரமும் தூள் பறந்தது.
ஆமை அன்னநடை போட்டு வந்தது.
நத்தை தன்னுடைய சங்குமுதுகை ஆட்டிக் கொண்டே வந்தது.
முயல் நீண்ட காதுகளை ஆட்டிக் கொண்டே துள்ளித் துள்ளி வந்தது.
நரி வாலை சுருட்டிக் கொண்டே பம்மிப் பம்மி வந்தது.
பாம்பு தலையைத்தூக்கி தன் படத்தைக் காட்டிக் கொண்டே வந்தது.
அணில் தன்னுடைய சாமரவாலைத் தூக்கிக்கொண்டு விருட்டென்று ஓடியது.
காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்து எல்லோரையும் பார்த்தபடி நடந்தது.
ஓணான் தன்னுடைய இரண்டு கண்களையும் உருட்டியபடி தலையை ஆட்டிக்கொண்டே நடந்தது.
எறும்பு யாரையும் கவனிக்காமல் விறுவிறுவென்று நடந்தது.
அழகுப்போட்டியின் முடிவு அறிவிக்கும் நேரம் வந்தது.
நடுவராக இருந்த பருந்து நீண்ட தன் சிறகுகளை விரித்து மடக்கியது. பின்னர் அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டது. எல்லோரும் காத்திருந்தனர். பின்னர் மேடையில் அதுவே ஒரு நடை நடந்து பார்த்தது.
கரகரப்பும் கீச்சுத்தன்மையும் கலந்த குரலில் தன்னுடைய தீர்ப்பை அறிவித்தது.
” அழகுப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகு. கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களும் அழகு. இயற்கையின் படைப்பில் எல்லோருமே அழகு. “
உண்மை தானே!
காட்டில் ஒரே ஆரவாரம்!. கைத்தட்டல்!. சீட்டி ஒலி!.
5+Monday, 15 January 2018

கோழியின் எச்சரிக்கை

கோழியின் எச்சரிக்கை

உதயசங்கர்

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்த பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாட்கள் அடைகாத்தது. இருபத்தியொராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக் கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது. ஒன்றும் அசையவில்லை. அந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளி விட்டது. அந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள்.
செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்து பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.
ஒரு குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு செவலை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு கருப்பு நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு கருப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு வெள்ளையில் கருப்புப்புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு சாம்பல் நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு செவலையும் கருப்பும் கலந்து இருந்தது.
எல்லாக்குஞ்சுகளும் கிய்யா..கிய்யா…கிய்யா…கிய்யா.. என்று போல குரல் எழுப்பிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
தாய்க்கோழி ” கெக்கெக்கெக் எல்லோரும் வாங்க “ என்று கேறியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் தாய்க்கோழியின் அருகில் வந்து நின்றன. ஆனால் சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் வரவில்லை. அந்தக்குஞ்சு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தது. தாய்க்கோழிக்குக் கோபம். உடனே கொஞ்சம் சத்தமாய், ” க்ர்ர்ர்ர்ர் எனக்குக் கோபம் வந்துருச்சி.. உடனே வா..” என்று கத்தியது.
தாய்க்கோழியிடம் இருந்து விலகியிருந்த சாம்பல் நிறக்குஞ்சு மெல்ல அலட்சியமாய் நடந்து வந்து அருகில் நின்றது. தாய்க்கோழி சாம்பல் நிறக்குஞ்சை முறைத்துப் பார்த்தது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை சாம்பல் நிறக்குஞ்சு.
செவலைக்கோழி குஞ்சுகளிடம்,
“ குழந்தைகளே நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்குங்க..
நான்  ‘ கெக் ‘ ன்னு சொன்னா கவனம்னு அர்த்தம்
’ கேகெக்கேகேகே ‘ ன்னு கூப்பாடு போட்டா ஆபத்து ஆபத்து ஓடி வாங்க!ன்னு அர்த்தம்.
கெ கெ கெ ன்னு மெல்லக்கூப்பிட்டா இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம்..
இன்னிக்கு இது தான் உங்களுக்கு பாலபாடம். எல்லோரும் கேட்டுக்கிட்டீங்களா? “
என்று பேசியது. அம்மா சொல்வதை எல்லாக்குஞ்சுகளும் ஆர்வத்துடன் கேட்டன. சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் காதில் வாங்காமல் வாய்க்குள்ளேயே கிய்கிய்யா கிய்யா கிய்கிய்யா கிய்யா என்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. செவலைக்கோழிக்குக் கவலையாக இருந்தது. இப்படி அலட்சியமாக இருக்கே இந்தச் சாம்பல் நிறக்குஞ்சு!
செவலைக்கோழி குஞ்சுகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
கருப்பு நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளை நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
கருப்பு வெள்ளைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
சாம்பல் குஞ்சு மட்டும் அம்மா சொன்னதைக் கேட்கவில்லை
சாம்பல் குஞ்சு கண்டபடி அலைந்து திரிந்தது. இரை தேடியது.
அன்று காலை செவலைக்கோழியும் குஞ்சுகளும் இரை தேடி குப்பைமேட்டை கிண்டிக் கொண்டிருந்தன. மேலே வானத்தில் பருந்து தன் நீண்ட சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருந்தது. அந்தப்பருந்தின் நிழல் கீழே பூமியில் விழுந்ததைப் பார்த்தது செவலைக்கோழி. உடனே செவலைக்கோழி, கேக்கேக்கேக்கே என்று அபாய எச்சரிக்கையைக் கத்தியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் அங்கங்கே கிடைத்த புதர்களுக்குள் பதுங்கிக் கொண்டன. செவலைக்கோழி சாம்பல் குஞ்சைத் தேடியது. காணவில்லை.
சிலநொடிகளுக்கு அப்புறம் சாம்பல் குஞ்சு ஒரு செடியின் மறைவிலிருந்து ஹாயாக கிய்கிய்யா கிய்கிய்யா கிய்கிய்யா என்று பாடிக்கொண்டே வெளியில் வந்தது. அது என்ன என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாம்பல் குஞ்சின் மீது பருந்தின் நிழல் விழுந்தது.
ஆ…ஐயோ… ஆபத்து வந்து விட்டதே… பருந்தின் இறகுச்சத்தம் சாம்பல் குஞ்சின் காதில் கேட்டது. அவ்வளவு தான் உயிர் போகப்போகிறது. இதோ பருந்தின் கால்களில் உள்ள கூர் நகங்கள் உடலைக் கிழிக்கப்போகிறது. என்ன செய்வது என்று சாம்பல் குஞ்சுக்குத் தெரியவில்லை. அப்படியே கண்களை மூடி உட்கார்ந்து விட்டது. கிய்யா கிய்யா கிய்யா
அப்போது ஆவேசமாய் செவலைக்கோழி பறந்து வந்து பருந்தின் மீது மோதியது. பருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து புரண்டது. என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே மேலே எழுந்து பறந்து போனது பருந்து.
சாம்பல் குஞ்சின் அருகில் செவலைக்கோழி நின்றது. கண்களை மூடி உட்கார்ந்திருந்த சாம்பல் குஞ்சின் தலையில் தன் அலகுகளால் மெல்லத் தடவியது. சாம்பல் குஞ்சுக்கு அப்போது தான் உயிர் வந்தது.
இப்போது செவலைக்கோழியின் சத்தத்துக்கு முதலில் வந்து நிற்பது யார் தெரியுமா?

நீங்களே சொல்லுங்கள். 
5+

Monday, 25 December 2017

காகம் கொண்ட தாகம்

காகம் கொண்ட தாகம்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் இரண்டு காகங்கள் இருந்தன. ஒரு காகத்தின் பெயர் ஒல்லிக்குச்சி. இன்னொரு காகத்தின் பெயர் குண்டுப்பாச்சா. அப்போது கோடைகாலம். அதனால் வெயில் அதிகமாக இருந்தது. காகங்களுக்குத் தாகம் எடுத்தது. எங்கும் தண்ணீர் இல்லை. காகங்களுக்குத் தொண்டை வறண்டு போய் விட்டது. மூன்று நாட்களாக ஒரு சொட்டுத்தண்ணீர் குடிக்கவில்லை. காகங்களால் பேசக்கூட முடியவில்லை.
ஒல்லிக்குச்சி காகம் தன்னுடைய நண்பனைச் சைகையால் அழைத்தது. அருகில் மெல்ல தத்தித் தத்தி நடந்து வந்தது குண்டுப்பாச்சா காகம். அதன் காதில்
“ கா..கா..கா..நாம் இங்கிருந்து போய்விடுவோம். இங்கே தண்ணீர் கிடைக்காது. வேறு இடத்தில் தண்ணீர் கிடைக்கலாம்.. வா.பறந்து போகலாம் கா கா கா.”
என்று சொல்லியது. குண்டுப்பாச்சா காகம் ஒரு சோம்பேறி. அது உடனே,
“ காகாகா காகாகா… கடவுள் கைவிட மாட்டார்…எப்படியும் மழை பெய்யும்… தண்ணீர் கிடைக்கும்.. ஏன் வீணாக அலைய வேண்டும்? பேசாமல் இங்கேயே இருப்போம்…கா  கா ”
என்று ஒல்லிக்குச்சிக்காகத்திடம் கத்தியது. ஒல்லிக்குச்சிக்காகம் மறுபடியும் குண்டுப்பாச்சா காகத்தை அழைத்தது. குண்டுப்பாச்சா காகம் அசையவில்லை. கண்ணை மூடி உறங்கியது.
ஒல்லிக்குச்சி காகம் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தை விட்டுப் பறந்தது. வெகுதூரம் பறந்தது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பரிதவித்தது. செடி கொடிகள் காய்ந்து கருகிப் போய் இருந்தன. தண்ணீர் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
ஒல்லிக்குச்சி காகத்துக்குச் சிறகுகள் வலித்தன. பறக்க முடியாமல் கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தது. அப்போது தூரத்தில் ஒரு குடிசை வீடு தெரிந்தது. அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு சிறுமி ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்தத் தண்ணீரை எடுத்து வர அவள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து போய் வந்தாள். அவள் தட்டில் தண்ணீரை ஊற்றியதும் அவளைச் சுற்றி சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள், புறாக்கள், சின்னஞ்சிறு வட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன.
அவள் தண்ணீரை ஊற்றியதும் எல்லோரும் அந்தத் தட்டைச் சுற்றி நின்று தண்ணீர் குடித்தன. ஒல்லிக்குச்சி காகம் அந்த முற்றத்தில் இறங்கியது. மெல்ல நடந்து தண்ணீர் இருந்த தட்டிலிருந்து தண்ணீரை சளப் சளப் என்று குடித்தது. தண்ணீரைக் குடித்தபிறகு தான் அதற்கு உயிர் வந்தமாதிரி இருந்தது. அந்தச் சிறுமியைப் பார்த்து
“ கா…கா…க்கா.. மிக்க நன்றி.. மிக்க நன்றி..”
என்று கத்தியது. அந்தச்சிறுமி ஒல்லிக்குச்சி காகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
ஒல்லிக்குச்சி காகம் மீண்டும் தட்டில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய நண்பன் குண்டுப்பாச்சா இருக்கும் ஆலமரத்தை நோக்கிப் பறந்தது. அப்போது ஒல்லிக்குச்சி காகம் நினைத்தது.
“ முயற்சி தான் கடவுள் “
நன்றி - வண்ணக்கதிர்Wednesday, 20 December 2017

ஒற்றுமையே பலம்

ஒற்றுமையே பலம்

உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு சிறிய காடு இருந்தது. அந்தக்காட்டில் அணில், ஓணான், மரவட்டை, சில்வண்டு, கருவண்டு, தேனீக்கள், குளவிகள், விட்டில்கள், கட்டெறும்பு, சிற்றெறும்பு, கடுத்தவாலி எறும்பு, கருப்பு எறும்பு, என்று எல்லாவிதமான பூச்சி வகைகளும் இருந்தன.
காட்டின் நடுவில் ஒரு கட்டெறும்புக்கூட்டம் புற்று கட்டி அதில் குடியிருந்தன.
ஒரு நாள் காலை புற்றின் வாசலில் ராட்சசன் போல ஒரு ஓணான் உட்கார்ந்திருந்தது. அதன் முதுகில் ஊசியான செதில்கள் இருந்தன. உடல் முழுவதும் கவசம் அணிந்தது போல தோல் சொரசொரப்பாக இருந்தது. அதன் முட்டைக்கண்கள் இரண்டு பக்கமும் தனித்தனியாக சுழன்றன. தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தது.
காலையில் உணவு தேடுவதற்கு வரிசையாக வேலைக்காரக் கட்டெறும்புகள் புறப்பட்டன. புற்றின் வாசலுக்கு வெளியே வந்தது தான் தெரியும். ப்சக் என்று எதோ பசை போல ஒட்டி இழுத்தது. அடுத்த நொடியில் ஓணாண் வயிற்றுக்குள் போய் விழுந்தார்கள் கட்டெறும்புகள்.
பதறி அடித்து புற்றுக்குள் வந்த வேலைக்காரக்கட்டெறும்புகள் ராணியிடம் சென்று முறையிட்டன. கட்டெறும்பு ராணி மெதுவாக வாசல் அருகே பாதுகாப்பாக நின்று ஓணாணைப் பார்த்தாள். அது தன் வாயிலிருந்து நீட்டி இழுக்கும் நாக்கையும் பார்த்தாள். அதன் உருவத்தைப் பார்த்து அவளுக்கே பயம் வந்தது.
இரண்டு நாட்கள் கட்டெறும்புகள் வெளியே போகவில்லை.
மறுநாள் காலை மறுபடியும் உணவு தேடி புற்றின் வாசலுக்கு வந்தால் அங்கே ஓணான் நின்று நாக்கை சுழட்டிக் கொண்டிருந்தது. அன்றும் ஒரு நூறு கட்டெறும்புகள் ஓணான் வயிற்றில் போய் விழுந்தன. புற்றை விட்டு வெளியே வரவே பயமாக இருந்தது.
இப்படியே இதை விட்டால் ஒரு கட்டெறும்பு கூட மிஞ்சாது என்று கட்டெறும்பு ராணி நினைத்தாள்.
அன்று இரவு அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தினாள். இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
அந்த முடிவு…………………
மறுநாள் காலை கிழக்கு திசையில் இருந்து சூரியன் உதித்தான். வெளிச்சம் வந்த உடனேயே புற்றின் வாசலுக்கு ஓணான் வந்து உட்கார்ந்து கொண்டது. எந்த சத்தமும் இல்லை. வாசலில் ஒரு கண்ணும் வெளியில் ஒரு கண்ணுமாய் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டிருந்தது ஓணான்.
திடீரென சரசரவென்று சத்தம். புற்றிலிருந்த அத்தனை கட்டெறும்புகளும் வாசல் வழியே வெளியே வந்தன. அவ்வளவு கட்டெறும்புகளைப் பார்த்ததும் ஓணான் திகைத்து நின்று விட்டது.
முன்னால் கட்டெறும்பு ராணி வந்தாள். பெரிய படை போல கட்டெறும்புகள் ஓணான் மீது ஏறிக் கடித்தன. ஓணானின் கண், மூக்கு, வாய், நாக்கு, கைகள், கால்கள், வால், செதில்கள், என்று உடம்பின் அத்தனை இடங்களிலும் கடித்தன.
தங்களுடைய ரம்பம் போன்ற பற்களால் வலிமையாகக் கடித்தன. ஓணானால் ஓடக்கூட முடியவில்லை.
அங்கேயே ஓணான் இறந்து விட்டது.
கட்டெறும்பு ராணி அனைவரிடமும் நம் ஒற்றுமையே நம் வெற்றி என்று முழங்கியது. கட்டெறும்புகளுக்கு அது ஏற்கனவே தெரிந்து விட்டது இல்லையா?
நன்றி - வண்ணக்கதிர்