Thursday 12 July 2012

பேய், பிசாசு இருக்கா?

 

உதயசங்கர்

ghost

பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? இதென்ன கேள்வி?

கண்டிப்பா எல்லாம் இருக்கு. எங்க ஊர் கம்மாய்க்கரைக்கு மேல இருக்கிற புளியமரத்தில் பேய் இருக்கு. சுடுகாட்டுப் பக்கம் ராத்திரி நேரம் போகவே மாட்டாங்க. அங்கே கொள்ளிவாய்ப் பிசாசு அலையுமாம். ஊருக்கு தெக்காம இருக்கிற ஒத்தைப் பனை மரத்து வழியா ஒத்தையில யாரும் போக மாட்டாங்க. அதில் முனி இருக்குதாம். பஞ்சாயத்து ஆபீசுக்கு வடக்கே இருக்கிற கிணத்துப்பக்கம் நடுச்சாமத்திலே மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. சல்..சல்..சல்..னு சலங்கை சத்தம் கேட்குதாம். அம்மாடி நெனச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது. பயம்மா இருக்குது. வேற ஏதாச்சும் கேளுங்க.

இப்படித்தான் சொல்வீர்கள்

அநேகமாக எல்லாக்குழந்தைகளுமே இப்படி நம்புகிறவர்கள் தான். இப்படி குழந்தைகளாக இருந்து பெரியவர்களானவர்களும் இப்படி நம்புகிறவர்கள் தான். நாம் பார்க்கும் சினிமா, தொலைக்காட்சித் தொடர், படிக்கிற பேய்க்கதைப் புத்தகங்கள் பெரியவர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்கிற திகில் கதைகளிலும் இப்படிப்பட்ட பேய் பிசாசுகள், சர்வசாதாரணமாய் வந்து போகின்றன. பழிக்குப் பழி வாங்குகின்றன. இல்லையா?

ஏன் இந்தக் கதைகளில் வரும் பேய்கள் நம்மை பயமுறுத்துகின்றன? முதலில் அவை நம்மைப் போன்ற உருவத்தில் இல்லை. அடுத்தது சாதாரணமாக மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்கின்றன. பறந்து செல்வது, நினைத்தவுடன் நினைத்த உருவத்துக்கு மாறுவது, காற்றில் மறைந்து விடுவது, வித விதமான பொருட்களை, உதாரணத்துக்கு லட்டு, பணியாரம், வடை, முறுக்கு, போன்ற அதிருசியான பண்டங்களை வரவழைப்பது, இப்படி சாதாரணமாய் நடக்க முடியாத வேலைகளையெல்லாம், திரைப்படங்களில், புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், இந்தப் பேய்கள் செய்கின்றன இல்லையா?

இவை நம் மனதில் ஒரு பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

உங்கள் ஊரிலுள்ள எல்லாப் பேய்களுக்கும் ஒரு கதை இருக்கும். கேட்டிருக்கிறீர்களா? இதுவரை கேட்டதில்லை என்றால் இனிமேல் கேட்டுப் பாருங்கள். பேய்களைப் போலவே, பிசாசு, முனி, மோகினி, ரத்தக்காட்டேரிகளுக்கும் தனித்தனியே கதை இருக்கும்.

இந்தக் கதைகளில் பொதுவாக பின்வரும் காரணங்கள் இருக்கும்.

1. கொஞ்ச வயதில் திடீரென இறந்து போனவர்கள்

2. உற்றார் உறவினர்களின் கொடுமைகளினால் தற்கொலை செய்து கொண்டவர்கள்

3. ஏதாவது ஒரு காரணத்துக்காக கொலை செய்யப் பட்டவர்கள்

4. பழிக்குப் பழி வாங்க இறந்த பிறகும் அலைபவர்கள்

5. நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போனவர்கள்

இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். சரி இருக்கட்டுமே.

இப்போது சிலகேள்விகள் நமக்குத் தோன்றுகின்றன.

பெரும்பாலும் இந்த உருப்படிகள் எல்லாம் ஏன் ராத்திரியிலேயே சுற்றுகின்றன? அதுவும் ஏன் ஊருக்கு ஒதுக்குப்புறமான, இருட்டான இடங்களிலேயே வசிக்கின்றன? ஏன் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே அலைகின்றன? சர்வ வல்லமை படைத்த இந்தச் சங்கதிகள் இரும்பு, செம்பு, விளக்குமாறு, நெருப்பு, இவற்றை கண்டு மட்டும் பயந்து சாவதேன்? பேய்களே இல்லாத ஊர் இருக்கிறதா? மனிதர்களுக்கு மட்டும் தான் பேயா? விலங்குகள் பறவைகள், பூச்சிகள், எல்லா உசுப்பிராணிகளுக்கும் பேய் உண்டா?

மனிதர்களை விட வளர்ச்சியடைந்த மிருக இனம் இந்த உலகில் இல்லை. அந்த மனிதனே ஆதிகாலத்திலிருந்து இருட்டைக் கண்டு பயந்தான். கண் தெரியாத இருட்டில் பல ஆபத்துகளை எதிர்கொண்டான். அதனால் இருட்டு அவனை பயமுறுத்தியது. எனவே தாங்கள் வாழ்வதற்கு பேய்களும் இருட்டைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, தெருக்களில் பேய்கள் இருப்பதில்லை. அதிக ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் குடியிருப்பதாகச் சொல்வதும் நம்புவதும் எளிது.

என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா?

மனிதன் தான் பேய், பிசாசு, மோகினி, முனி, எல்லோரையும் உருவாக்குகிறான். மனிதர்கள் இருந்தால் தான் பேய்களும் இருக்கும். மனிதர்கள் இல்லாத ஊர்களில் பேய்களும் இருப்பதில்லை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஆகியவற்றுக்கு பேய்களோ, பிசாசுகளோ இல்லை. ஏனெனில் மனிதனுடைய மூளையில் தான் மற்ற அனைத்து யிரினங்களையும் விட கற்பனாசக்தியும், ஞாபகசக்தியும் அதிகம். மனிதன் மட்டும்தான் திரும்ப யோசித்துச் சொல்லும்படியான கனவுகளைச் காண்கிறான். நாம் இரவில் தூங்கும்போது காணும் பல கனவுகள் மறுநாள் காலையில் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? அதை நாம் நம்முடைய நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதில்லையா?

மனித இனத்தின் வளர்ச்சியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பழங்கால மனிதர்கள் உணவுப்பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தனர். அப்படி போகும்போது ஏற்கனவே அங்கே இருந்த மனிதர்களுடன் சண்டை போட நேர்ந்தது. அந்தச் சண்டைகளில் நிறையப் பேர் செத்துப் போனார்கள். எஞ்சி உயிர் பிழைத்தவர்களுக்கு தங்களுடனே இருந்து இறந்து போனவர்களைப் பற்றிய ஞாபகங்கள் இருக்குமல்லவா? அவர்களுடைய நடையுடை பாவனைகள், குரல், முகம், அவர்களது விருப்பு வெறுப்புகள் எல்லாம் தெரிந்திருக்குமல்லவா? மனிதமூளையின் ஞாபக செல் அடுக்குகளில் பதிவான இந்த விவரங்கள் கனவுகளில் திடீர் திடீரென காட்சிகளாக வந்தன. கனவுகளைப் பற்றியும், மூளையின் செயல்பாடுகளைப் பற்றியும் அறியாத பழங்கால மனிதர்கள் அவற்றை இறந்து போன மனிதர்கள் ஆவி ரூபத்தில் வந்து பேசுவதாக நினைத்தனர். ஒருவேளை, வேறு உலகத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கற்பனை செய்தனர். அறிவியல் பார்வையும், அறிவியலறிவும், சரியாக வளராத காலம் அது. எனவே இறந்து போனவர்கள் பேய்களாகச் சுற்றுவதாகச் சொன்னார்கள். சில பேருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ( ஹிஸ்டீரியா ) ஏற்பட்டு இறந்தவர்களைப் போலப் பேசவும், நடக்கவும் செய்தனர்.

அறிவியல் முன்னேற்றம் இல்லாத பழைய காலகட்டத்தில் உருவான பல மூடநம்பிக்கைகளைப் போல இந்தப் பேய், பிசாசுகள், பற்றிய மூட நம்பிக்கையும் உருவாகி விட்டது. இவை கதைகள் மூலமாக பரம்பரை பரம்பரையாகக் குழந்தைகளுக்குச் சொல்லப் பட்டு வருகின்றது. குழந்தைகளைப் பயமுறுத்த அவர்களைச் சொன்னபடி கேட்க வைப்பதற்காக பெரியவர்கள் சொல்கிற இந்தக் கதைகள் பசுமரத்தாணி போல மனசில் பதிந்து விடுகிறன. பெரியவர்களான பிறகும் இருட்டிலும், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் போகும் போது இந்தக் கதைகள் சிறு வயதில் ஏற்படுத்திய பய உனர்வுகளைத் தூண்டி விடுகின்றன. அந்த மாதிரியான நேரங்களில் இலை உதிர்ந்து விழும் சத்தம், பூச்சிகளின் கீச்சொலி, ஏன் நம்முடைய காலடிச் சத்தமே கூட பயமுறுத்துகிறது. சுற்றிலும் கேட்கிற சிறு ஒலிகளும், இருட்டும், சேர்ந்து அடிவயிற்றைப் பிசைகின்றன. பய உணர்வு தாக்குகிற முதல் உறுப்பு வயிறு என்பதால் வயிறு கலங்கி ‘ வெளிக்கி” வருவது போலவோ, ’ ஒண்ணுக்கு’ வருவது போலவோ உணர்வு தோன்றுகிறது. சிலருக்கு இந்தப் பய உணர்ச்சி காய்ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

மற்றவர்களுக்கு இது போதும். அவனை பேய் அடித்து விட்டது என்று சொல்லி விடுவார்கள். அப்புறம் இது கதை கதையாகக் கண்,மூக்கு,காது, வைத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்படியே இந்தக் கதைகளில் பேய், பிசாசுகள், வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

மற்றபடி இவை இருப்பதற்கு எந்த விதமான அறிவியல் அடிப்படையும் கிடையாது. அப்படியா?

ஆமாம். பூமி தோன்றியதிலிருந்து கோடிக்கணக்கான உயிரினங்கள் பிறந்து இறந்து விட்டன. அவையெல்லாம் பேய்களாக மாறினால் என்ன ஆகும்? அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் என்பது இயற்கையானது. ஒவ்வொரு உயிரினமும் தங்களுடைய பரிணாம வளர்ச்சியின் வழியாக தங்களது வாழ்நாளை அதாவது ஆயுளை உருவாக்கியுள்ளன. கொசுக்களுக்கு ஒரு வாரம், ஈக்களுக்கு ஒரு மாதம், பூனைக்கு பனிரெண்டு வருடம், யானைக்கு எழுபது வருடங்கள், மனிதனுக்கு நூறு வருடங்கள், ஆமைக்கு இருநூறு வருடங்கள் இப்படி…இப்படி… இது இயற்கையான ஆயுட்காலம்.

ஆனால் விபத்திலோ, நோயிலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ, எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இறந்து போகலாம். ஏன் தினசரி நம் காலடியில் நூற்றுக்கணக்கான எறும்புகள் இறந்து போகின்றன. அவையெல்லாம் பேய்களாக மாறி கடிக்க ஆரம்பித்தால்………

அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு விடுவோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகு கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்து இயற்கையாகவோ, அகாலமாகவோ, இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பேய்களாக மாறியிருந்தால் மக்கள் தொகை பெருக்கம் மாதிரி பேய்த்தொகைப் பெருக்கம் அதிகமாகி நாம் இருப்பதற்கே இடமிருக்காதே. நாம் இப்போது நின்று கொண்டிருக்கும் பூமிக்குக் கீழ், வசித்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்குக் கீழே பூமியில் நூற்றுக்கணக்கான வருடங்களாக இறந்து போன உயிரினங்களும், மனிதர்களும், மக்கி மண்ணாகிக் கிடக்கின்றனர். இது ஒரு தொடர் சங்கிலி. பிறப்பதும் இறப்பதும்.இப்போது புரிகிறதா? பேய்கள் எங்கேயிருக்கின்றன? நம்முடைய கற்பனையில் தான்.

மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியில் தான் உணர்ச்சி செல்கள் இருக்கின்றன. பயம், மகிழ்ச்சி, ஏமாற்றம், பாசம், சுகம், இப்படி உணர்ச்சிகளின் பிறப்பிடமாக ஹைபோதாலமஸ் இருக்கிறது. இந்த செல்களில் தூண்டுதல் ஏற்பட்டதும், நினைவிலிருந்து கற்பனைச் சித்திரங்கள், சினிமா, தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து உருவான பிம்பங்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன. உடனே நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பியின் ஆணையின் பேரில் அட்ரீனலின் சுரப்பி திபுதிபுவென சுரக்கிறது. உடனே உடலெங்கும் புல்லரிக்கிறது. வயிறு கலங்குகிறது. மற்றவை தொடர்கின்றன.

மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்தும் பூசாரிகள், சாமியார்கள், உருவாகி எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். இந்தப் பேய்களையும் பேயோட்டும் சாமியார்களையும் எளிதாக விரட்டி விடலாம். எப்படி? பேய்களுக்கு வெளிச்சம் என்றால் பயம். அதுவும் அறிவியல் வெளிச்சம் என்றால் அவ்வளவு தான்.

தலை தெறிக்க ஓடி விடும்.

4 comments:

  1. அழகான விளக்கமான பதிவு
    மனதில் பல வினாக்களை ஓடவிட்டு தெளிவுக்கான வழியினைச் சொல்லி செல்கிறது

    ReplyDelete
  2. அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு விடுவோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகு கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்து இயற்கையாகவோ, அகாலமாகவோ, இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பேய்களாக மாறியிருந்தால் மக்கள் தொகை பெருக்கம் மாதிரி பேய்த்தொகைப் பெருக்கம் அதிகமாகி நாம் இருப்பதற்கே இடமிருக்காதே./////அதுதான் இல்லியே...எங்க கதைப்படி செத்தவர்கள் கொஞ்சகாலம்தான் பேயாக உலவுவார்கள்...பிறகு வேறு பிறப்பு எடுப்பார்களே..ஆக இப்ப இருக்கிறவங்கள்ல எவ்வளவு பேர் கொஞ்சகாலம் பேயா இருந்தவங்களோ...

    பேய் என்பது இறந்தவர்களைப்பற்றிய எஞ்சிய நினைவுகள் உருவாக்கம் பெறுவதே.அவைகள் தொந்தரவும் செய்யலாம். அவைகளை(அல்லது அவர்களை) நம் ஆழ்மனதிலிருந்தே துடைத்து எறிந்துவிடவே 'நீத்தார்கடன்' என்ற இறந்தவர்களுக்காக செய்யப்படுகிற சடங்குகள்.(அது செத்தவர்களுக்காக அல்ல இருப்பவர்களுக்காக.ஆனாலும் சொல்லப்படுவது நீத்தார் கடன் என்றே).

    ReplyDelete
  3. மனிதனை விட பெரிய பேய் கிடையாது

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

    ReplyDelete