Tuesday 24 July 2012

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1

Yajna_14150

 

உதயசங்கர்

 

பண்பாடு என்பதன் பொருளாக ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள், அந்த இனக்குழுவின் தோற்றம், வளர்ச்சி, தங்களை நிலை நிறுத்துவதற்கான போராட்டம்,பெருமை, இவற்றைப் பிரதிபலிக்கிற நடைமுறை வாழ்க்கையையும், கருத்துருவான வாழ்க்கையையும் சொல்லலாம். இதை வெளிப்படுத்தவே சடங்குகள் என்று சொல்லப் படும் பண்பாட்டு நிகழ்வுகளை வாழ்க்கை முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அறிவியல் வளராத காலகட்டத்தில் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்துருக்களுக்கு ஏற்பவும், பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து அதைத் திரும்பச் சொல்லும் முறையிலும் சடங்குகளின் நடைமுறை இருந்தது. ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுக்குள்ளும் சடங்குகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டன. அது அந்த இனக்குழுவின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குமப்பால் உளவியல் ரீதியாக அந்த இனக்குழுவின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, உற்பத்தி உறவுகளின் ஊடாடல், இவற்றை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. பண்பாட்டு, சடங்குகள், இவற்றின் அடிநாதமாக கொண்டாட்ட மனநிலை இருப்பதைக் காணலாம். அடுத்தது இனக்குழு கூடி வர்த்தமானங்களை, சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு இடமாக அந்த விழாக்கள் அமைகின்றன. தங்களுடைய பூர்வீகத்தை, மூதாதையரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு தங்கள் இனக்குழு அடையாளத்தை உறுதி செய்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. தங்களுக்கேயுரிய பண்பாட்டு அசைவுகளை மீளவும் ஒரு சடங்காக செய்து பார்க்கிற நிகழ்வாகவும் பண்பாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன.

என்று பிராமணியம் தன்னுடைய மனுதர்மசாஸ்திரத்தின் மூலம் இந்திய சமூகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டுவந்ததோ அன்றிலிருந்து பண்பாட்டு நிகழ்வுகளில் பிராமணமதச்சடங்குகளும் இடம் பெற ஆரம்பித்தன. அவற்றை இடம் பெறச் செய்வதில் இந்து சமயமும், புராண, இதிகாசங்களும் பெரும்பங்காற்றின. அதற்கு முன்பு வரை இருந்த நாட்டார்சமய மரபின் இளகிய தன்மையை இறுகச் செய்தது பிராமணமதம் தான். பிராமண மதத்துக்கான அரசு அங்கீகாரம், ஆதரவு மற்ற நாட்டார்சமய மரபுகளையும் மேல்நிலையாக்கத்தினை நோக்கி உந்தித் தள்ள ஆரம்பித்தது. மனுதர்மசாஸ்திரத்தின் உருக்குபோன்ற விதிமுறைகளை மாற்றவோ, உடைக்கவோ முடியாததினால் பிராமண மதத்தின் சடங்குகளைப் போலச் செய்தலின் மூலம் தங்களையும் அந்தக் கண்ணிக்குள் சேர்த்துக் கொள்கிற யத்தனம் நால்வருணங்களில் உள்ள கீழ்வருணங்களிலும், அவர்களைப் பார்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் செய்தனர். அரச ஆதரவு பெற்ற மதமாக இருந்த காரணத்தினால் சாம, தான, தண்ட, பேத முறைகளில் பிராமண மதம் தன்னுடைய சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் அத்தனையையும் மொத்த சமூகத்துக்குள்ளும் மிகச் சுலபமாகத் திணித்து விட்டது.

இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து பிராமணீயத்தின் சூழ்ச்சியான சாதியப்படிநிலைகளை ஏற்றுக் கொண்டனர். உட்பிரிவுகளும் உருவாயின. இப்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் சாதியப்படிநிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், , ஒவ்வொரு சாதியும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதியின் மீதான தங்களது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவுமான நினைவூட்டலாக மாறி விட்டது. அந்தந்தச் சாதியினர் தங்களது எல்லைகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்கிற ஏற்பாடாகவும் ஆகி விட்டது. அப்படியே ஏதேனும் மீறல்கள் நடந்தால் அதை அரசின் ஆதரவோடு அடக்கி ஒடுக்கவும் தயாராக மேல்நிலையிலுள்ள உள்ள சாதியினர் தயாராகின்றனர். சாதியப்படி நிலையில் உள்ள தங்களது நிலையை மனதார ஏற்றுக் கொள்ளவே சமய இலக்கியங்கள் புனையப்பட்டு திரும்பத் திரும்ப பாராயாணம் செய்யப்பட்டு, மக்கள் மனதின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். எனவே சாதியைப் பற்றி யார் பேசினாலும், யாரிடமும் என்ன சாதி என்று கேட்டாலும் அதைக் கேவலமானதாக கேட்பவரும் நினைப்பதில்லை.பதில் சொல்பவரும் நினைப்பதில்லை. விஷவிருட்சமாய் வேரோடிப் போயிருக்கும் இந்தச் சாதிய மனநிலைகளையும், அதைக் காப்பாற்றும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களையும் வேரோடு வெட்டியெறிய ஜோதிபா பூலேவையும், அம்பேத்காரையும், பெரியாரையும் தவிர வேறு யாரும் தீவிரமாக முயற்சித்ததாகத் தெரியவில்லை. சமூகசீர்திருத்தவாதிகள் இந்து சமயத்தோடு சமரசமுயற்சியே செய்தனர். அவர்கள் சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்த போதும் அவற்றின் உயிரான மனுதர்மசாஸ்திரத்தை எதிர்ப்பதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இல்லை. அது மட்டுமல்ல சூழ்ச்சித் திறன் மிக்க பிராமண மதம் எல்லா சமயச்சீர்திருத்தவாதிகளையும் உட்கிரகித்துக் கொண்டு தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கதாக மாறிக் கொண்டேயிருக்கிறது.k.n.panikkar

முன்னெப்போதையும் விட இப்போது அடையாள அரசியலின் எழுச்சி காரணமாக எல்லாச்சாதிகளும் தங்கள் சாதிய அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கவும், சாதியப்பெருமைகளைப் பேசவும், தங்கள் குடும்ப விழாக்களிலும், கோவில் விழாக்களிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்கிற நிலைமையைக் காணலாம். பிராமணமதம் மீண்டும் ஒரு முறை தன்னை மறுமலர்ச்சி அடையச் செய்து கொண்டுள்ளது. சாஸ்திர, சம்பிரதாய , சடங்குகளின் உயிராக பிராமண மதம் இருக்கிறதென்றால் அதன் உடலாக சாதிகள் இருக்கின்றன, அவைகளே பண்பாட்டுச்சூழலைத் தீர்மானிக்கின்றன. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிரதோஷம், அஷ்டமி, நவமி, என மைல் கணக்கில் கூட்டம் கோவில்களில் கியூவரிசையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாக்கோவில்கள் மீதும் படையெடுக்கிறார்கள். முன்னெப்போதையும் விட சாமியார்கள், ஜோசியர்கள், கடல்மணலைப் போலப் பெருகியிருக்கிறார்கள். எந்த எதிர்ப்பும் இல்லாமல் ராஜபாட்டையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன சாதிய, மத வாத சக்திகள். இதையெல்லாம் எதிர்த்து மிகப்பெரும் போரை நடத்த வேண்டிய இடது சாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்காரியவாதிகளிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. அதனால் அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே சாதிய, மத, சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களோடு சமரசம் செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் பண்பாட்டுச் சூழல் குறித்து போதிய கவனமின்மை தான். இதனால் குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றுவதற்கு அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்கான திட்டத்தை மதவாத சக்திகள் உருவாக்கியிருக்கிற போதும் அடுத்த ஆண்டுக்கான திட்டமே இல்லாமல் இடதுசாரிகள் இருப்பது கவலைக்குரியது.

முன்னெப்போதையும் விட நமது பண்பாட்டுச் சூழல் உலகமயம், சநாதனமயம் என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலாளித்துவம் தன்னுடைய உச்சக்கட்ட சுரண்டலான உலகமயமாக்கலின் மூலம் எல்லாநாடுகளிலிருந்தும் பொருள்வளத்தைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிற வேலையைச் செய்கிறது. அந்தந்த நாட்டு மக்களின் தனித்துவமிக்க, பன்முகக்கலாச்சாரத்தை தன் பகாசுர சக்தியினால் ஒடுக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்த மேற்கத்திய உலகமயமாக்கலின் கலாச்சாரச்சீரழிவுகளை எதிர்ப்பதான பாவனையில் சநாதனமும், பழமைவாதமும் தங்களைப் புணருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளினால் வாழ்வின் ஆதாரங்களை இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, அதே உலகமயமாக்கலின் விளவுகளினால் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களும், மதவாதசக்திகளும் சநாதனத்தின் பக்கம் திசை திருப்புகிறார்கள், இதனால் தங்கள் வாழ்வைப் பறித்தவர்களைப் பற்றியோ, காரணங்கள் பற்றியோ அவர்கள் அறியாமல் பழமையை மீட்டெடுக்கும் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

இத்தகையச் சூழலில் இடதுசாரிகளின் வேலை இன்னும் கடினமாகிறது. அரசியல் ரீதியில் முற்போக்காகவும், பண்பாட்டு ரீதியில் பிற்போக்காகவும் இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்களே ஆகி விடுகிற நிலைமை உருவாகிவிடுகிறது. இதற்கு புதிய முற்போக்குப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடமே காரணம்.வரலாற்றறிஞர் கே. என். பணிக்கர் சொல்வதைப் போல,

“ முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசியல்-பண்பாடு இரண்டுமே சமநிலையில் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். பண்பாட்டுச் செயல்பாடுகள் மீது அரசியல் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துமானால் பண்பாட்டின் மீது அரசியல் ஒரு சர்வாதிகாரத்தைச் செலுத்துமானால் சில முன்னாள் சோசலிச நாடுகளில் அப்படித்தான் நடந்தது என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்- பண்பாட்டு இயக்கத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், தனது வரலாற்றுப் பங்களிப்பைச் செய்ய இயலாமல் போய் விடும் “

உடனடியாக பண்பாட்டுத்தளத்தில் ஏகாதிபத்தியத்தின், சாதி மத வாதத்தின் பண்பாட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே விமர்சனக்கண்ணோட்டத்தை வளர்க்கவும், புதிய முற்போக்கு பண்பாட்டுத் தளங்களையும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

நன்றி - தீக்கதிர்

3 comments:

  1. உதயஷங்கர் அவர்களே! கட்சியின் காங்கிரசில் அடையாள அரசியல் பற்றி தீர்மானம் உள்ளதுதோழர் பிரகாஷ் இது பற்றி எழுதியுள்ளார்! சமீபத்திய செம்மலரில் தோழர் அருணன்அடையாளஅரசியல் பற்றி எழுதியுள்ள கட்டுரையும் அருமையாக உள்ளது. இடது சாரிகள்,அம்பெத்கரிஸ்ட்,பெரியாரிஸ்ட் என்று குழப்ப வேண்டாம். மார்க்சிஸ்ட் வேறு..இடது சார்கள்வேறு இடதுசாரிகட்சிகள் அவரவர்களுக்கென்று திட்டங்களைக் கோண்டுள்ளன! அம்பெத்கரட்,பெரியாரிஸ்ட், ஆகியோரின் திட்டங்கள் (உண்டா) குறை பாடுள்ளவை! இந்தக் கொள்ளையில் மார்சீய எதிர்ப்பாளர்கள், அம்பேத்கரிஸ்ட்,பெரியாரிஸ்ட் என்ற போர்வையில்சீர்குலைவு வேலகளைச்செய்துவருகிறார்கள்! இது கலை இலக்கிய ,பண்பாடுதளத்தில் மிகவும் கண்டிப்புடனும், எச்சரிக்கையுடனும் நாம் செயல்பட வெண்டிய்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்..

    ReplyDelete
  2. மதம் இன்றி மனிதன் வாழமுடியும் என்பதை சிறுபான்மையான மக்களே பின்பற்ற முடியும். மதம் என்றால் சடங்குகள் உண்டு.ஏதோ இது நாள் வரை இல்லாமல் இப்போது புதிதாக வந்த மாதிரி சொல்கிறீர்கள்.இதுநாள் வரை பொருளாதார வசதி குறைவால் அடக்கி வாசித்தார்கள். இப்போது வசதி வந்ததும் எல்லாம் அமர்க்களமாக நடக்கிறது.

    மதத்தை ஒழிக்கவே முடியாது. ஆதவன் தீட்சண்யா அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டத்தையோ இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    சடங்குகளை அகற்றினால் வருகிற வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவீர்கள். கலைகள் மூலமே அது நடக்கணும்.அதற்கு திட்டங்கள் வகுத்தபின்பே மதச்சடங்குகளை அகற்றுவது பற்றி பேசவே முடியும். வெற்றிடம் ஏற்பட்டு ஒன்றும் நிரப்பாமல் போனால் மறுபடி மதமே இதை பிடித்துக் கொள்ளும்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete