Monday, 18 August 2025

முன்னுரைகளும் மதிப்புரைகளும் - ஒரு தத்துவப்பார்வை

 

முன்னுரைகளும் மதிப்புரைகளும் - ஒரு தத்துவப்பார்வை

உதயசங்கர்




1. நிலவுடமை காலத்தில் தனிப்பட்ட அறிவுச்சொத்துரிமையாக இருந்த  கலைஇலக்கியம் உள்ளிட்ட அனைத்து அறிவுத்துறைகளையும் முதலாளித்துவம் தன்னுடைய தேவைக்காக, இந்தியாவில் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு ஜனநாயகப் படுத்தியிருக்கிறது.

2.
பார்ப்பனியத்தின் ஆன்மீக அதிகாரத்துடன் கை கோர்த்து நிலவுடமைச் சமூகத்தின் மிச்சசொச்சங்களுக்கு பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கிறது. சாதி, மதம், சனாதனம், போன்ற காலாவதியான சுரண்டல் யந்திரத்துக்குப் புதிய முலாம்களைப் பூசிக் கொண்டிருக்கிறது.

3.  
புனிதமென்று கருதப்பட்டவை, வேறு யாராலும் செய்ய முடியாதவை, தனித்துவமான மேதமை இருந்தால் மட்டுமே சாத்தியமென்று சொல்லி மறுக்கப்பட்ட அறிவுச்சொத்து இன்று ஆர்வமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மேதையாகலாம் என்ற தாராளமயத்தை முதலாளித்துவம் உருவாக்கியிருக்கிறது.

4.
ஆனால் இவற்றிலும் பார்ப்பனியம் தன்னுடைய தனிச்சொத்தாக வேதம், உபநிடதம், மனுதர்மம் ஆகியவற்றை இன்னமும் போற்றுகிறது.   அதன்மீது போர்த்தப்பட்டிருக்கிற போலியான புனிதப்போர்வையை விலக்காமலும் யாரும் எந்த விமரிசனம் செய்து விடாமலும் ராணுவத்தைப் போலப் பாதுகாக்கிறது.

5.
அதனால் தான் நவீன முதலாளித்துவமும் சனாதனமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல சுழன்று இந்தியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிரான மனநிலைகளில் இந்தியர்கள் வாழும்படி கட்டாயப்படுத்துகிறது.

6.
ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றிய போதே தன்னுடைய தேவைக்காக அனைத்து மதங்களின் ஆதிக்கத்தைத் தகர்த்து விட்டது. அறிவொளிக்காலத்திலும், அறிவியல் காலத்திலும் உருவாக்கிய கண்டுபிடிப்புகளின் மூலம் மதங்களின் அடிப்படையை ஆட்டம் காண வைத்தது.

7.
அதனால் தான் அறிவியலாளர்களைத் தண்டித்ததற்காக மட்டுமல்ல இதுவரை செய்த தவறுகளுக்காக மதத்தலைமை மன்னிப்பு கோரும் நிலைமைக்குக் கொண்டு தள்ளியிருக்கிறது முதலாளித்துவம்.

8. 
முதலாளித்துவத்தின் முதலும் முடிவுமான நோக்கம் உற்பத்தி, சந்தை, விற்பனை, லாபம் மட்டும் தான். ஆனால் இந்தத் தொடர் செயல்களின் வழியே அதன் நோக்கத்திலில்லாத ஜனநாயகம், அறிவுப்பரவலாக்கல், வர்க்கத்திரட்சி, போராட்டங்களும் உருவாகின்றன.

9.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு எழுத்தாளன் தவிர்க்க முடியாமல் அல்லது தானறியாமல் சந்தையில் பொருளை விற்கும் ஒரு வியாபாரியாகி விடுகிறான். முதலாளித்துவ சிந்தனைகளுக்கு எதிராக பிறந்த படைப்பை  முதலாளித்துவத்தின் சந்தையிலேயே விற்க வேண்டிய முரண் அவனுக்கு ஏற்படுகிறது.

10.
எனவே அவனுடைய படைப்பை விற்பதற்கு எப்படியெல்லாமோ விளம்பரம் செய்கிறான்.  அந்த விளம்பர யுத்திகளில் ஒன்று தான் முன்னுரைகளும் மதிப்புரைகளும். ஏற்கனவே புகழ்பெற்ற எழுத்தாளர்களிடம் முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரைகளை வாங்கி அதன் மூலம் தன்னுடைய படைப்பைப் பரவலாகக் கொண்டு போக முயற்சிக்கிறான்.

11.
ஆனால் விளம்பரங்களினால் மட்டுமே ஒரு படைப்பு வாசகர்கள் மனதில் நிலைத்திருக்காது. அப்படிக் கிடைக்கிற வெளிச்சமும் தற்காலிகமானது தான்.

12.
ஒரு படைப்பு தன்னுடைய படைப்பூக்கத்தின் சக்தியினாலும், படைப்பின் மானுட அறத்தினாலும் இந்தப் பிரபஞ்சத்தின் மீதான பேரன்பினாலும் அதன் கலைத்துவத்தாலும் சிறந்து விளங்கும்போது மட்டுமே காலம் அந்தப் படைப்பைத் தன் இரு கைகளால் வாரி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும்.

13.
மற்றபடி கோவில்கொடைகள் நடக்கும்போது கயமுய கயமுய என்று கேட்கும் எதுவும் புரிய முடியாமலும் கவனிக்க முடியாமலும் போகும் விளம்பரக்குரல்கள் தான் முன்னுரைகளும் மதிப்புரைகளும்.

14.
முதலாளித்துவத்தின் தந்திரமான இந்தச் சந்தையில் வாசகர்கள் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்க வேண்டியது அவர்களுடைய சொந்தப் பொறுப்பு.

15.
ஏனெனில் தமிழில் ஏலவே சொன்னது போல விமரிசகர்கள் இல்லை. விளம்பரதாரர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

எச்சரிக்கை !!! 

 

No comments:

Post a Comment