ஜப்பானியக் கதை 2
சொர்க்கத்தின் மகள்
பேரா. ஸ்ரீவர்மாஜி
மலையாளத்திலிருந்து தமிழில் - உதயசங்கர்
முன்பு ஒரு நாட்டில் வயதான ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மூங்கிலை வெட்டி எடுத்து கூடை, முறம், தட்டு, போன்றவற்றைச் செய்வார். அவற்றைக் கிராம கிராமமாகத் தூக்கிக் கொண்டு போய் விற்பனை செய்வார். வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு உதவியாக இருப்பார்கள். கிராமத்தின் அருகில் ஒரு காடு இருந்தது. தனியாக அங்கே போய் மூங்கிலை வெட்டிக் கொண்டு வருவார். இவ்வாறாக வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் அந்த வயதானவர்.
ஒரு நாள் வழக்கம்போல அவர் காட்டிற்கு மூங்கில் வெட்டப் போனார். ஒரு மூங்கில் மரத்தை வெட்டப்போகும் போது அதிலிருந்து தங்க நிறத்தில் ஒளி
வருவதை அவர் பார்த்தார். மிகுந்த கவனத்துடன் அந்த மூங்கிலை வெட்டினார். அதற்குள்ளே மூன்றங்குல உயரத்தில், சிறிய உயிருள்ள ஒரு பெண்குழந்தை தங்க நிறத்தில் இருந்தது. அதைப் பார்த்து பரவசமடைந்தார் பெரியவர். கடவுள் கொடுத்த செல்வம் என்று நினைத்தார். தன்னுடைய வலது கையில் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டார். மூங்கிலையும், சாமான்களையும் தலையில் சுமந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். தன்னுடைய சொந்த மகளைப் போல தங்கமகளை அவர் வளர்த்தார்.
மூன்று நாட்களில் அந்தக் குழந்தைக்கு மற்ற சாதாரண குழந்தைகளைப் போல உடல் வளர்ச்சியும், உடல் பருமனும், வந்து விட்டது. அதன்பிறகு, குழந்தையின் அழகு கூடிக் கொண்டே போனது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பொறாமை கொள்ளும்படி அவள் வளர்ந்து வந்தாள். கல்வியிலும், விளையாட்டிலும், பண்பிலும் அவள் சிறந்து விளங்கினாள்.
அவள் பெரியவளானதும் நிறையப் பேர் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் தங்கமகள் யாரையும் ஏற்கவில்லை. தூரத்திலிருந்த நாடுகளில் அவளுடைய அழகின் புகழ் பரவியது. பல பணக்காரர்களும் திருமணம் செய்து கொள்ள ஆசையுடன் அங்கே வந்தார்கள். அவளுடைய பெற்றோர்கள் அவளுடைய விருப்பம் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டார்கள். தங்கமகள் யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேலை சொன்னாள்.
ஒருவரிடம் வானத்தில் தெரியும் இடி மின்னலைக் கொண்டு வரச் சொன்னாள். இன்னொருவரிடம் தானாகவே முழங்குகின்ற மேளத்தைக் கொண்டுவரச் சொன்னாள். எல்லாம் செய்யமுடியாத வேலைகள். ஆனால் யாரும் அப்படி யோசிக்கவில்லை. எல்லாரும் அவள் சொன்ன வேலையைச் செய்ய அலைந்து திரிந்தார்கள். பைத்தியக்காரர்களைப் போல மலைகளையும் காடுகளையும் கடந்து சென்றார்கள்.
அந்த நாட்டின் ராஜா அவளைப் பெண் கேட்டு வந்தார். தங்கமகளைப் பார்த்தவுடன் அவளைத்தான் ராணியாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த விவரத்தை அவளிடம் சொன்னார். அப்போது தங்கமகள், கைகளைக் கூப்பி வணங்கிப் பணிவுடன்,
“
மகாராஜாவே! உங்களுடைய ஆசையை நிறைவேற்ற யாருக்குத் தான் விருப்பமிருக்காது? ஆனால் நான் சாதாரண மனிதப்பெண் அல்ல. சொர்க்கத்தின் மகள். இந்த உலகவாழ்க்கை எனக்கு முடிந்து விட்டது. மன்னிக்க வேண்டும். “
என்று சொன்னாள். அவள் சொன்னதை யாரும் நம்பவில்லை. ராஜாவும் நம்பவில்லை. அப்போது வானத்தில் ஒளி குறைந்து இடி முழங்கியது. இரண்டு வானத்துத்தேவதைகள் பூமிக்கு வந்தனர். அவர்கள் சொர்க்கத்தின் மகளைத் தூக்கிக் கொண்டு சட்டென்று மறைந்து விட்டனர். ராஜாவுக்கோ, குடும்பத்தாருக்கோ, எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாம் ஒரு நிமிடத்தில் முடிந்து விட்டது.
No comments:
Post a Comment