Monday, 4 August 2025

இந்திய நாடோடிக்கதை 5

 இந்திய நாடோடிக்கதை 5

கொண்டைக்குருவியும் இலவம்பஞ்சு மரமும்

ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்



முன்பு ஒரு காலத்தில், ஒரு நாள் ஒரு கொண்டைக்குருவி பறந்து செல்லும்போது

ஒரு மரத்தைப் பார்த்தது. அதில் சிறிய ஒரு காய் இருந்தது. கொண்டைக்குருவிக்கு

மிகுந்த மகிழ்ச்சி.

“ நான் இந்தக் காய் பழுக்கும்வரை இங்கேயே இருப்பேன்.. பழுத்ததும் நானே

சாப்பிடுவேன்..”

என்று சொன்னது கொண்டைக்குருவி. அது தன்னுடைய கூட்டை மறந்தது.

இணையை மறந்தது. அந்த மரத்திலேயே பனிரெண்டு ஆண்டுகள் உட்கார்ந்திருந்தது.

அதுவரை எதுவுமே சாப்பிடவில்லை. ஒவ்வொரு நாளும்,

“ நாளை இந்தப் பழம் பழுத்துவிடும்.. இதை நான் ருசித்துச் சாப்பிடுவேன்..” என்று

சொன்னது.

இந்தப் பனிரெண்டு ஆண்டுகளில் அந்த மரத்தில் வந்து உட்கார்ந்த பறவைகளை

எல்லாம் விரட்டி விட்டது. எந்தப் பறவையையும் கூடு கட்ட விடவில்லை. அப்படியே

யாராவது வந்தால்,

“ இந்த மரத்தின் பழம் நன்றாக இருக்காது..இங்கே வராதீங்க..” என்று சொல்லித்

திருப்பி அனுப்பிவிடும்.

ஒரு நாள் ஒரு குயில் வந்தது.

“ ஏன் எங்களை எல்லாம் விரட்டி விடுகிறாய்? இந்த மரத்திற்கு வரவோ உட்காரவோ

விட மாட்டேன் என்கிறாய்.. எந்த மரமும் உனக்குச் சொந்த மரம் கிடையாது..

எல்லோருக்கும் பொதுவானது..”

என்று கேட்ட்து. அதைக் கேட்ட கொண்டைக்குருவி,

“ நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.. நான் இங்கேயே இருப்பேன்.. அந்தப்

பழம் பழுத்தவுடன் நான் சாப்பிடுவேன்..” என்று சொல்லியது.


அந்த மரம் இலவம்பஞ்சு மரம் என்று குயிலுக்குத் தெரியும். ஆனால்

கொண்டைக்குருவிக்குத் தெரியாது.

முதலில் கொண்டைக்குருவி பழம் என்று நினைத்துப் பார்த்தது மொட்டு.. பிறகு

மலரானது.. மலர் நீண்ட காயானது.. ஒரு நாள் அந்தக் காய் வெடித்துச் சிதறியது.

அதிலிருந்து பஞ்சு துகள்களாக்க் காற்றில் பறந்தது. ஆனால் கொண்டைக்குருவி

இன்னமும் அந்தக்காய் பழுக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தது.

“ அது பழுத்தால் மிக மிகச் சுவையாக இருக்கும்..”

ஆனால் பஞ்சு பஞ்சாகப் பறப்பதைப் பார்த்துக் குழம்பிப் போய் விட்டது.

“ இது என்ன? இந்த நேரம் பழுத்து இருக்கணுமே..” என்று நினைத்துக் கொண்டே

அந்தக் காயைப் பார்த்தது. அதில் ஒன்றுமே இல்லை. காலியாக இருந்தது. அதில்

இருந்த எல்லாப்பஞ்சும் பறந்து போய் விட்டது.

அப்போது குயில் வந்தது,

“ நீ எல்லாரையும் இந்த மரத்தில் வந்து உட்கார, அனுமதித்திருந்தால் உனக்கும்

நல்ல உணவு கிடைத்திருக்கும்.. நீ சுயநலம் கொண்ட பறவையாக இருந்த தால்

இயற்கையே உனக்கு தண்டனையாக ஒன்றுமில்லாத பழத்தைக் கொடுத்து விட்டது..”

என்று சொல்லி எல்லாப்பறவைகளையும் அழைத்தது. எல்லாப்பறவைகளும் வந்து

கொண்டைக்குருவியைக் கேலி செய்தன.

கொண்டைக்குருவிக்குப் பயங்கரக்கோபம். கொண்டைக்குருவி அந்த மரத்திடம்

சொன்னது,

“ நீ ஒரு மோசமான மரம்..உன்னால் யாருக்கும் எந்த பலனும் இல்லை..நீ யாருக்கும்

உணவு தரமாட்டாய்..”

அதற்கு அந்த மரம் ,

“ நீ சொல்வது தவறு.. இயற்கை என்னை இப்படித்தான் படைத்திருக்கிறது..

என்னுடைய பூக்கள் ஆடுகளுக்கு உணவாகும்.. என்னுடைய பஞ்சு தலையணைகள்,

மெத்தைகள் செய்யப் பயன்படும்..தெரியுமா? “

என்று சொன்னது. அதைக் கேட்ட கொண்டைக்குருவி வெட்கித் தலைகுனிந்து பறந்து

போய் விட்டது.


அன்றிலிருந்து கொண்டைக்குருவி ஒருபோதும் இலவம்பஞ்சு மரத்துக்கு அருகில் கூடப் போவதில்லை.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment