இந்திய நாடோடிக்கதை 7
முட்டாள் சாச்சுலியின் கதை
1. கொழுக்கட்டை மழை பெய்த நாள்
சாச்சுலிக்குக் கொழுக்கட்டை என்றால் கொள்ளைப்பிரியம். அவர்கள் வீட்டில் சாதாரணக் கஞ்சிக்கே திண்டாட்டம். இதில் கொழுக்கட்டைக்கு எங்கே போவது? தினம் தினம் காலையில் எழுந்தவுடன் சாச்சுலி,
“ அம்மா அம்மா எனக்கு ஒரு கொழுக்கட்டை.. செய்ஞ்சு கொடும்மா..” என்று கெஞ்சுவான். அப்படி அவன் கேட்கும்போதெல்லாம் கங்குனி,
“ ஒரு கொழுக்கட்டை என்ன ?.. கூரையைப் பொத்துக்கிட்டு கொழுக்கட்டை மழையே பெய்யும்டா என் தங்கமகனே! “ என்று கேலியாகவும் கோபமாகவும் சொல்வாள். அதைக் கேட்டதும் சமாதானமாகிச் சென்று விடுவான் சாச்சுலி.
ஒரு நாள் சாச்சுலி காட்டுக்குள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். அப்போது காட்டுக்கு அந்தப் பக்கத்திலிருந்த பாலைவனத்திலிருந்து ஒரு ஒட்டகம் வழி தவறி காட்டுக்குள் வந்து விட்டது. அதன் முதுகில் நாட்டு மக்களிடம் வரி வசூல் செய்த பணம் இரண்டு மூட்டைகளில் கட்டிக் கிடந்தது. போகும்வழியில் வீர்ர்கள் ஓய்வெடுத்த போது ஒட்டகம் அப்படியே வழி தவறி வந்து விட்டது. அந்த நாட்டு ராஜாவுக்குச் சொந்தமான பணம். சாச்சுலி அப்போது தான் முதல்முறையாக ஒட்டகத்தைப் பார்த்தான். அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.
அவன் அம்மாவிடம் காண்பிப்பதற்காக ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். நல்லவேளை. இருட்டி விட்டது. அவன் ஒட்டகத்துடன் வந்ததை யாரும் பார்க்கவில்லை. சாச்சுலியின் அம்மா கங்குனி ஒட்டகத்தின் முதுகில் கிடந்த பைகளை அவிழ்த்துப் பார்த்தாள்.
அவ்வளவும் பணம்!
உடனே அந்தப் பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். அவள் செய்வதை எல்லாம் சாச்சுலி பார்த்துக் கொண்டிருந்தான். ஊர் உறங்கிக் கொண்டிருந்தது.
திடீரென உறங்கிக் கொண்டிருந்த சாச்சுலியின் மீது ஏதோ தட தட வென மழை மாதிரி விழுந்த து. சாச்சுலி கண்விழித்துப் பார்த்தான். அவனைச் சுற்றிக் நிறையக் கொழுக்கட்டைகள் கிடந்தன. அவனுக்கு மகிழ்ச்சி.
“ ஐய் கொழுக்கட்டை மழை! அம்மா கொழுக்கட்டை மழை..! “ என்று கத்திக் கொண்டு வயிறு நிறையக் கொழுக்கட்டைகளைச் சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டான். கங்குனி இரவோடு இரவாக பின்வாசலில் குழி தோண்டி பணப்பைகளைப் புதைத்து வைத்தாள். பிறகு ஒட்டகத்தை விரட்டி விட்டாள்.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு முட்டாள் சாச்சுலி காட்டுக்குப் போனான். ஒட்டகமும் பணமும் தொலைந்து போனதால் மிகுந்த கோபத்தில் இருந்தார் ராஜா. பறையடிப்பவர்களை நான்கு திசைகளிலும் அனுப்பி வைத்தார். எப்படியாவது தொலைந்த ஒட்டகத்தையும் பணத்தையும் கண்டுபிடித்து வரவேண்டும் என்று கட்டளையிட்டார். பறையடிப்பவர்களில் ஒருவர் கட்டுப்பகுதிக்குள் சென்றார்.
அங்கே ஒட்டகம் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அதன் முதுகில் பணப்பைகள் இல்லை. சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று தேடினான். அருகிலேயே சாச்சுலி ஒரு மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் தேடுவதைப் பார்த்த சாச்சுலி,
“ யாரைத் தேடுகிறீர்கள்? என்னையா தேடுகிறீர்கள்? “ என்று கேட்டான். அவர்கள் கீழே இறங்கிவரச் சொன்னார். அவன் கீழே இறங்கி வந்ததும்
“ இந்த ஒட்டகம் எப்படி இங்கே வந்தது? “ என்று கேட்டார். சாச்சுலி,
“ நான் தான் இந்த ஒட்டகத்தை அம்மாவிடம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றேன்..” என்றான்.
“ இதன் முதுகில் இருந்த பைகள் எங்கே? “
“ அதை அம்மா எடுத்து வைத்துக் கொண்டாள்..” என்று சொல்லிச் சிரித்தான். உடனே பறையடிப்பவர் ராஜாவுக்குத் தகவல் சொல்லியனுப்பினார். ராஜாவே கிளம்பி வந்து விட்டார். அரசரின் படை சாச்சுலியின் குடிசை வீட்டைச் சூழ்ந்து நின்றது.
“ ஏம்மா நீ தான் ஒட்டகத்தின் முதுகிலிருந்த பைகளை எடுத்தாயா? “
என்று கங்குனியிடம் ராஜா கேட்டார். உடனே கங்குனிக்குப் புரிந்து விட்டது. சாச்சுலி தான் சொல்லிக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். அவள் பணிவுடன்,
“ இல்லை மகராஜா.. இந்த ஒட்டகத்தை நான் இப்போது தான் பார்க்கிறேன்.. எனக்கு எதுவும் தெரியாது.. “
என்று சொன்னாள். ராஜாவுக்குக் கோபம் வந்தது.
“ இந்தாம்மா.. உண்மையைச் சொல்லிரு.. பொய் சொன்னே நூறு கசையடி கிடைக்கும்..”
என்று மிரட்டினார். அப்போது சாச்சுலி ராஜாவின் முன்னால் வந்து,
“ ராஜா.. நான் தான் ஒட்டகத்தைக் கூட்டிக் கொண்டு வந்தேன்.. அம்மா தான் இரண்டு பையையும் ஒட்டகத்தின் முதுகிலிருந்து எடுத்தாள்…”
என்றான். அதைக் கேட்ட அரசருக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
“ இந்தப் பெண்ணுக்கு நூறு கசையடி கொடுங்கள்.. “ என்று கர்ச்சித்தார். கங்குனிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்ட து. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,
“ அரசே அவன் பேச்சைக் கேட்காதீர்கள்.. கொஞ்சம் ஒரு மாதிரி.. வேண்டுமானால் என்றைக்கு அவன் ஒட்டகத்தைக் கூட்டிக் கொண்டு வந்தான் என்று கேளுங்கள்..” என்று சொன்னாள்.
ராஜாவுக்கும் அநியாயமாக ஒருத்தருக்குத் தண்டனை கொடுத்துவிடக் கூடாது என்று நினைத்தார். அவர் சாச்சுலியிடம்,
“ என்று நீ ஒட்டகத்தை அழைத்துக் கொண்டு வந்தாய்?.. எப்போது உன்னுடைய அம்மா பைகளை எடுத்தார்? “ என்று கேட்டார். அதைக் கேட்ட சாச்சுலி தலையைச் சொறிந்தான். திடீரென கண்டுபிடித்தவன் போல,
“ ஆங்.. ஞாபகம் வந்துருச்சி.. கொழுக்கட்டை மழை பெய்ஞ்சதில்ல அன்னிக்குத்தான்.. நான் ஒட்டகத்தைக் கூட்டிக்கிட்டு வந்தேன்..அம்மா பைகளை எடுத்துக் கொண்டு போனாள்..”
என்றான். அதைக் கேட்ட அனைவருக்கும் குழப்பம். என்னது கொழுக்கட்டை மழையா? ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அக்கம்பக்கம் வீட்டிலுள்ளோரிடம் கேட்டனர்,
“ இங்கே என்னிக்காவது கொழுக்கட்டை மழை பெய்ததா? “
அவர்கள் ” என்னது கொழுக்கட்டை மழையா? “ என்று சொல்லிச் சிரித்தனர். இருந்தாலும் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை.
ராஜா சாச்சுலியைப் பார்த்து,
“ என்னது கொழுக்கட்டை மழைன்னு பொய்யா சொல்றே? “ என்று கேட்டார். ஆனால் சாச்சுலி,
“ ஆமா.. உண்மையிலேயே கொழுக்கட்டை மழை தான்.. மோதகக்கொழுக்கட்டை, உருண்டை கொழுக்கட்டை நீளக்கொழுக்கட்டை, பால்கொழுக்கட்டை, பூரணக்கொழுக்கட்டை, எல்லாக்கொழுக்கட்டையும் கூரையைப் பொத்துக்கிட்டு விழுந்துச்சி.. ராஜா.. அன்னிக்குத்தான் அம்மா பைகளை எடுத்தாள்..”
என்று சொன்னதைக் கேட்ட தும் சுற்றியிருந்த பொதுமக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“ போயும் போயும் இந்தக் கோட்டிக்காரன் பேச்சைக் கேட்டுட்டு வந்திருக்கீங்களே ராஜா “ என்று கேலி செய்தனர். ராஜாவுக்கு அவமானமாக இருந்தது.
“ இந்தப் பயலுக்குப் பத்து கசையடி கொடுங்கள்..” என்று ஆணையிட்டார். சாச்சுலிக்கு பத்து கசையடிகள் விழுந்தன. அப்போதும் சாச்சுலி,
“ கொழுக்கட்டை மழை கொழுக்கட்டை மழை..” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.
எல்லோரும் போனபிறகு கங்குனியும் அவள் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்தி.
“ எனக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பார்த்தாயே.. இனி நீ இங்கே இருக்கக்கூடாது.. எங்காவது போய்ச் செத்துத்தொலை..”
என்று விரட்டினாள். அப்போதும் சாச்சுலி சிரித்துக் கொண்டே,
“ சரி அப்படின்னா எனக்குச் சாப்பிடக் கொஞ்சம் ரொட்டி சுட்டுக் கொடு.. நான் செத்துப் போறேன்..” என்றானே பார்க்கலாம்.
எப்படி!
( சாச்சுலி தொடர்ந்து வருவான் )
நன்றி - புக் டே
No comments:
Post a Comment