இந்திய நாடோடிக்கதை 7
முட்டாள் சாச்சுலியின் கதை
3. நெய் ஜாடியைப் போட்டுடைத்தது ஏன்?
சாச்சுலி வீட்டை விட்டுக் கிளம்பினான். அகையில் கோடாரியும் சாப்பிட ரொட்டியும் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான். போகும்போது,
“ எப்படி தற்கொலை செய்வது? “ என்று யோசித்துக் கொண்டே சென்றான். அங்கே உயரமான ஒரு மரத்தைப் பார்த்த தும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த மரத்தின் மீது ஏறி உச்சாணிக் கிளையின் நுனியில் உட்கார்ந்து கொண்டான். கிளையின் அடிப்பகுதியை வெட்த் தொடங்கினான்.
அப்போது அந்த வழியே வந்த வழிப்போக்கன் சாச்சுலி செய்யும் காரியத்தைப் பார்த்தான்.
“ மேலே என்ன வேலை பார்த்துக்கிட்டிருக்கே..நீ அப்படி வெட்டினால் கீழே விழுந்து செத்து விடுவாய் முட்டாளே..” என்று கத்தினான். அதைக் கேட்ட தும் சாச்சுலியின் முகத்தில் மகிழ்ச்சி.
“ என்ன சொன்னீங்க? “ என்று கத்திக் கொண்டே கைப்பிடி நழுவி அந்த வழிப்போக்கன் மீதே விழுந்தான். வழிப்போக்கனின் கைகளைப் பிடித்துக் கொண்டு,
“ சொல்லுங்க.. எப்போது நான் சாவேன்? “ என்று கேட்டான். வழிப்போக்கன்,
“ எனக்கு எப்படி தெரியும்? நான் போகிறேன்..” என்று கைகளை உதறினான் வழிப்போக்கன்.
“ நீ அதை சொல்லவில்லையென்றால் நான் உன்னை விட மாட்டேன்.. “ என்று சொல்லி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
“ இது என்னடா வம்பாப்போச்சு! “ என்று நினைத்த வழிப்போக்கன்,
“ எப்போது உன்னுடைய சட்டையில் ஒரு சிவப்பு நூலைப் பார்க்கிறாயோ அப்போது நீ செத்து விடுவாய்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.
சாச்சுலி கடைத்தெருவுக்குப் போனான். தையல் கடைத்தெருவில் இருந்த தையல்கார்களின் கடைகளுக்கு முன்னால் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான். தையல்காரர்கள் தைத்து முடித்து துண்டுத்துணிகளையும் கழிவு நூல்களையும் தூரப்போட்டனர். ஒரு தையல்காரர் போட்ட சிவப்பு நூல் சாச்சுலியின் சட்டையில் வந்து ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்த சாச்சுலி,
“ சரி இனி நான் செத்துப்போகலாம்..” என்று சொன்னான். உடனே அங்கேயிருந்த தையல்கார்கள்,
“ எப்படிச் சொல்றே? “ என்று கேட்டார்கள்.
“ என்னுடைய சட்டையில் சிவப்பு நிற நூல் விழுந்தால் நான் செத்து விடவேண்டும்..என்று வழிப்போக்கன் சொன்னார்..” என்றான் சாச்சுலி.
அதைக் கேட்ட தையல்கார்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் சாச்சுலி கவலைப்படவில்லை. காட்டுக்குள் சென்று ஒரு குழியை வெட்டினான். அந்தக் குழிக்குள் படுத்துக் கொண்டான். பசிக்கும்போது அம்மா கொடுத்துவிட்ட ரொட்டியைச் சாப்பிட்டான்.
அன்று இரவில் அந்த வழியாக தலையில் நெய் ஜாடியைச் சுமந்து கொண்டு அந்த வழியாக ஒரு சிப்பாய் போனான்.
“ எவ்வளவு கனமாக இருக்கு இந்த நெய்ஜாடி…? வீடு வரைத் தூக்கிக் கொண்டு போக யாராவது கூலிக்காரன் கிடைத்தால் நல்லாருக்கும்.. அந்த வேலைக்கு நான்கு பைசா கொடுப்பேன்.. “
என்று வாய்விட்டுச் சொன்னான். குழியில் படுத்திருந்த சாச்சுலி அதைக் கேட்டான். உடனே குழியிலிருந்து துள்ளியெழுந்தான். சிப்பாய் முன்னால் போய் நின்றான்.
“ நான் தூக்கிக் கொண்டு வருகிறேன்..” என்றான். திடீரென குழிக்குள்ளிருந்து குதித்து வந்த சாச்சுலியைப் பார்த்த சிப்பாய் பயந்து போனான்.
“ யார் நீ? “ என்று வாய் குழறிக் கேட்டான். அதற்கு சாச்சுலி,
“ நான் இறந்து போன மனிதன்.. குழிக்குள்ளேயே படுத்துக் கிடந்து போரடிக்குது.. இனிமேல் அங்கே படுத்திருக்க முடியாது..”
என்று சொன்னான். சிப்பாய்க்குப் பயம் தான். ஆனாலும் ,
“ சரி.. நீ நெய் ஜாடியைத் தூக்கிட்டு வா..” என்று சொல்லிவிட்டு சாச்சுலியின் தலையில் நெய் ஜாடியை வைத்தான். சாச்சுலியை முன்னால் போகச்சொல்லி விட்டு அவனுக்குப் பின்னாலேயே போனான் சிப்பாய்.
தலையில் நெய் ஜாடியுடன் சாச்சுலி நடந்து போகும்போது அவனுக்குப் பல புதிய திட்டங்கள் தோன்றின.
‘ இப்போ கொஞ்ச நேரத்தில் நான்கு பைசா கிடைக்கும். நான் அந்தப் பணத்தில் ஒரு கோழி வாங்குவேன்..கோழி நிறைய முட்டைகள் இடும்.. அந்த முட்டைகளைச் சந்தையில் விற்பேன்.. அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு ஆடு வாங்குவேன்..அந்த ஆட்டை நன்றாக வளர்ப்பேன். ஆட்டின் பாலை விற்பேன். பிறகு ஆட்டையும் அதன் தோலையும் விற்பேன். அதில் வரும் பணத்தைக் கொண்டு ஒரு பசு மாட்டை வாங்குவேன். பசுவின் பாலை விற்பனை செய்வேன். பிறகு ஒரு பெண்ணை மணம் முடிப்பேன். எனக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் நன்றாகச் சாப்பிட்ட பிறகும் கூட நான் சாப்பிடும்போது என்னிடம் வந்து,
“ அப்பா அப்பா எனக்குச் சோறு கொடுங்கள் “ என்று கேட்பார்கள்.
“ சோறு இல்லை..” என்று சொல்வேன் ‘
இப்படி அவன் சோறு இல்லை என்று தலையை ஆட்டிச் சொல்லும்போது சாச்சுலியின் தலையில் இருந்த நெய் ஜாடி தலையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து நொறுங்கியது. நெய் தரையில் கொட்டிவிட்டது. அதைப் பார்த்துப் பதறிய சிப்பாய்,
“ அடப்பாவி ஏண்டா நெய் ஜாடியைக் கீழே போட்டே? ஏன் தலையை ஆட்டினே? “ என்று கத்தினான்.
“ ஏன்னா என் பிள்ளைகள் என்னிடம் சோறு கேட்டார்கள்.. நான் இல்லைன்னு தலையாட்டினேன்..” என்றான் சாச்சுலி.
அந்தக் கோபத்திலும் சிப்பாய் கேட்டான்,
“ உனக்கு எத்தனை குழந்தைகள்? “
“ நீங்க கொடுக்கிற காசை வைச்சி கோழி வாங்கி, ஆடு வாங்கி, மாடு வாங்கி, கலியாணம் பண்ணி, குழந்தைகள் பெத்துக்கலாம்னு இருக்கேன்..” என்று பல்லைக் காட்டிக் கொண்டே சொன்னான்.
அதைக் கேட்ட சிப்பாய் தலையிலடித்துக் கொண்டே,
“ முட்டாள்.. முட்டாள்.. அடி முட்டாள்..” என்று திட்டி விரட்டினான்.
சாச்சுலி மீண்டும் வீட்டுக்கு வந்தான். அம்மா அவனைப் பார்த்ததும்,
“ ஏண்டா இங்கே வந்தே? “ என்று கோபமாகச் சொன்னாள். பல்லைக் காட்டிக் கொண்டே சாச்சுலி,
“ நான் தான் செத்துப்போய் பனிரெண்டு வருசமாயிச்சே.. “ என்று சொன்னான். அதைக்கேட்ட அம்மா,
“ ஏண்டா பொய்யா சொல்றே? வீட்டை விட்டுப் போய் பனிரெண்டு நாள் தானே ஆயிருக்கு..ஓடிப்போயிரு.. பொய் சொல்றவனுக்கு இங்க இடமில்லை..” என்று திட்டினாள்.
சாச்சுலி சிரித்துக் கொண்டே,
“ சரி சரி.. எனக்கு ஒரு நாலு கேக் செய்ஞ்சு கொடு.. நான் போறேன்..” என்றானே பார்க்கலாம்.
( சாச்சுலி தொடர்ந்து வருவான் )
நன்றி - புக் டே
No comments:
Post a Comment