வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
உதயசங்கர்
புலிக்குட்டி இப்போது துள்ளிக்குதித்து
அங்கும் இங்கும் ஓடியது. உயரே குதித்தது. தாவிக்குதித்தது. தன்னுடைய வாலைப் பிடிக்கச்
சுற்றிச் சுற்றி வந்தது. அப்படியே உட்கார்ந்து அப்படி இப்படி தலையைத் திருப்பிப் பார்த்தது.
ஏதாவது செய்யவேண்டுமே.
துறுதுறுவென்று வந்த புலிக்குட்டி
அருகில் இருந்த ஒரு செடியின் இலைகளைக் கடித்தது.
ச்சீ தூ.. என்ன கசப்பு!
அப்போது அந்தச் செடியில்
ஒரு கவச வண்டைப் பார்த்தது. அதனை முகர்ந்து பார்த்தது. ச்சேய்! கெட்ட நாற்றம்! தலையை
உதறியது. திடீரென அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது.
அம்மா எங்கே?
உடனே காதுகளை விடைத்துக்
கொண்டு காற்றை முகர்ந்து பார்த்தது. ஞாபகத்துக்கு வந்து விட்டது. அம்மா இரை தேடப் போயிருக்கிறது.
லேசாய் பசிக்கிறது. இந்த
பச்சை வெட்டுக்கிளியைச் சாப்பிடலாமா?
யோசித்தது புலிக்குட்டி.
அப்போது தான் அதன் கண்களுக்கு முன்னால் குறுக்கே ஏதோ பறந்து வந்து மூக்கில் உட்கார்ந்தது..
அது ஒரு சிறிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.
அதைப்பார்த்த புலிக்குட்டிக்கு ஆச்சரியம். என்ன தைரியம்!
முன்காலால் மூக்கைச் சொறிந்தது.
மஞ்சள் வண்னத்துப்பூச்சி பறந்து விட்டது. பறப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றது புலிக்குட்டி.
திடீரென்று மஞ்சள் வண்னத்துப்பூச்சியைக் காணவில்லை. அப்படியே தலையைத் தொங்கவிட்டவாறே
புலிக்குட்டி மஞ்சள் வண்ணத்துப்பூச்சியைத் தேடியது. சற்று தொலைவில் தும்பைச்செடியில்
உட்கார்ந்திருந்தது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.
ஓடிச் சென்று பயமுறுத்தியது.
மஞ்சள் வண்ணத்துப்பூச்சி டக்கென்று காற்றில் பறந்தது. முன்காலைத் தூக்கி அதைப் பிடிக்கப்போவதைப்
போல புலிக்குட்டி குதித்தது. இன்னும் மேலே பறந்தது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.
புலிக்குட்டி சுற்றுமுற்றும்
பார்த்தது. வண்ணத்துப்பூச்சியைக் காணவில்லை. அங்கே குட்டிச்செடிகளில் சிறிய பூக்கள்
வண்ண வண்ணமாய் பூத்திருந்தன. வெள்ளை, நீலம், பிங்க், மஞ்சள், ஆரஞ்சு, நிறங்களில் கூட்டமாய்
பூத்திருந்தன. புலிக்குட்டி அந்தச் செடிகளுக்குள் போய் படுத்துக் கொண்டது. ஆனால் கண்கள்
மஞ்சள் வண்ணத்துப்பூச்சியைத் தேடிக் கொண்டு தான் இருந்தன.
ஓ.. அது என்ன சத்தம்! புலிக்குட்டி
எழுந்து ஒரு குதிகுதித்தது. மூக்கில் என்ன இருக்கிறது? கண்களை மூக்கிற்குக் கொண்டு
வந்து பார்த்தது.
அட! அந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி!
ஆமாம். புலிக்குட்டியின்
மூக்கில் மஞ்சள் வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருந்தது. புலிக்குட்டிக்கு விளையாட்டாய்
தெரிந்தது. அது தலையை உலுப்பியது. மஞ்சள் வண்னத்துப்பூச்சி மேலே பறந்து திரும்ப வந்து
உட்கார்ந்து கொண்டது.
முன்கால்களைத் தூக்கி ஏதோ
சொல்லியது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி.
“ புலிக்குட்டி. நீ ரொம்ப
அழகாக இருக்கிறாய்.. உன்னையும் ஒரு பூ என்று நினைத்துத்தான் உன் மீது உட்கார்ந்தேன்..
நாம் நண்பர்களாகி விடலாம்..”
புலிக்குட்டி யோசித்தது.
“ சரி மஞ்சளழகி.. நீயும்
அழகாக இருக்கிறாய்.. எனக்கு இப்போது பசிக்கிறது.. “ நான் இதுவரைத் தேனைச் சாப்பிட்டதே
இல்லை..”
“ வா.. நண்பா.. நான் உனக்குத்
தேன் இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன்.. தும்பைப்பூவின் தேன் அவ்வளவு ருசியாக இருக்கும்....”
உடனே மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
புலிக்குட்டியின் முன்னால் பறந்து திரும்பி வந்து மூக்கில் உட்கார்ந்து. புலிக்குட்டியை
அழைத்தது.
புலிக்குட்டியும் மஞ்சள்
வண்ணத்துப்பூச்சியின் பின்னால் சென்றது. கொஞ்சதூரத்தில் தும்பைச்செடிகள் காடு மாதிரி
வளர்ந்திருந்தன. அப்படியே வெள்ளை வெளேரென்று பூக்கள் பூத்து அந்த இடமே வெள்ளைப்போர்வை
விரித்த மாதிரி இருந்தது.
மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
ஒவ்வொரு பூவாய் போய் உட்கார்ந்தது.
ஆகா! என்ன ருசி! ஆகா!
என்று சொல்லிக்கொண்டே பறந்து
கொண்டே இருந்தது.
புலிக்குட்டியும் ஒவ்வொரு
பூவாய் போய் முகர்ந்து பார்த்தது.
ஒன்றும் தெரியவில்லை.
பூக்களை கடித்துப் பார்த்தது.
ஒன்றும் தெரியவில்லை. நாக்கினால் நக்கிப் பார்த்தது. ஒன்றும் தெரியவில்லை. மீண்டும்
மீண்டும் முயற்சித்தது.
புலிக்குட்டிக்குக் கோபம்
வந்து விட்டது.
அவ்வளவு தான். தும்பைச்செடிகளை
வாயினால் பிய்த்துப் போடத் தொடங்கியது.
அப்போது மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
பறந்து வந்து,
“ புலிக்குட்டி.. எனக்குப்
புரிந்து விட்டது.. உன்னால் தேனை உறிஞ்சிக்குடிக்க முடியாது..குட்டிப்பூவில் ஊறும்
சொட்டுத்தேனை உறிஞ்ச மெலிதான உறிஞ்சுகுழல் தேவை.. உன்னிடம் அது கிடையாது.. இயற்கையன்னை
ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார்.. உன்னைப் போல நான் இருக்க முடியாது..
என்னைப் போல நீ இருக்க முடியாது.. கோபப்படாதே.. “
என்று சொன்னதைக் கேட்டதும்
புலிக்குட்டி அமைதியாக யோசித்தது. மஞ்சள் வண்ணத்துப்பூச்சி மீண்டும் புலிக்குட்டியின்
மூக்கில் வந்து உட்கார்ந்தது. புலிக்குட்டி தலையை ஆட்டிக் கொண்டு,
“ உன்னைப் போல நான் இருக்க
முடியாது.. என்னைப் போல நீ இருக்க முடியாது..”
என்று பாடிக்கொண்டே தன்னுடைய
வீட்டுக்கு ஓடியது.
நன்றி - வண்னத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment