Friday, 17 January 2025

தேன் வழிகாட்டிக் குருவியும் திருடனும்

 

தேன் வழிகாட்டிக் குருவியும் திருடனும்

உதயசங்கர்



நகரத்திலிருந்து ஒரு திருடன் மலைக்கிராமம் ஒன்றில் திருடினான். அங்கே பொன்னோ பொருளோ இல்லை. எனவே தானியங்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்தான். எல்லாத்தானியங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்தான். அதுவே சுமக்க முடியாத சுமையாக மாறி விட்டது. பாதி தூரம் நடப்பதற்குள் பொழுது விடியத் தொடங்கி விட்டது.

கிராமத்தில் மக்கள் கண் விழித்ததும் திருட்டு நடந்திருப்பதைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

எப்படி தெரியுமா?

திடீரென்று லட்சக்கணக்கான எறும்புகள் வரிசையாகத் தரையில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தன. எல்லா எறும்புகளின் வாயிலும் தானியங்கள்.

திருடன் கட்டிய மூட்டையில் இருந்த ஊசி முனை அளவு இருந்த சிறிய ஓட்டை வழியே தானியங்கள் கீழே விழுந்திருக்கின்றன. அந்தத் தானியத்தைப் பின்பற்றி கிராமத்து மக்கள் திருடனைத் தேடிச் சென்றார்கள். கூடவே செம்மலையும் போனான். அவனுக்குத் திருடனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அம்மா

“ நீ போகாதே..என்று சொன்னபோது அழத் தொடங்கினான். செம்மலையின் மாமா தான்,

“ நாம் பாத்துக்கிறேன்..என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு வந்தார். செம்மலைக்கு நிறைய சந்தேகங்கள். திருடனுக்கு இரண்டு கை கால் தான் இருக்குமா? ராத்திரியில் மட்டும் திருடுகிறானே அவனுக்கு என்ன ஆந்தைக் கண்ணா? கால்கள் நீளமாக இருக்குமோ? பூனை மாதிரி பாதம் இருக்குமோ? இப்படி நிறையச் சந்தேகங்கள்.

எப்படியும் அந்தத் திருடனைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அப்போது,

அடப்பாவி.. நல்ல சாக்காக எடுத்திருக்க கூடாதா? அவ்வளவும் வீணாகப் போகுதே அவன் வீடு போய்ச் சேருமுன்னர் சாக்கில் தானியங்களே இருக்காதே..என்று மூப்பர் ( வயதான தாத்தா ) என்று வருத்தப்பட்டார்.

திருடன் விடிந்ததும் ஒரு பாறைக்கூட்டத்தின் நடுவில் இருந்த பொடவில் மூட்டையை வைத்து விட்டுப் படுத்து விட்டான். மாலையில் மறுபடியும் தூக்கிக் கொண்டு போகலாம் என்று திட்டமிட்டான்.

திடீரென்று தேன்வழிகாட்டி குருவியின் சத்தம் கேட்டது. மூப்பர் நிமிர்ந்து பார்த்தார். அயினி மரத்தில் ஒரு தேன்வழிகாட்டி குருவி உட்கார்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தது.

தேன் வழிகாட்டி குருவியுடன் எப்படிப் பேசுவது என்று மூப்பருக்குத் தெரியும்.

அவர்,

“ ப்ப்ர்ர்ர் ப்ப்ப்ப்ர்ர்ர் “ என்ரு குரல் கொடுத்தார். ஆனால் தேன்வழிகாட்டிக்குருவியோ விடமல்,

“ கீக்கிச்ச்ச்ச கிச்ச்ச்ச கிச்ச்ச “ என்று குரல் கொடுத்தது. அவர்கள் போகும்பாதையில் இருக்கும் மரங்களில் உட்கார்ந்து வழியை மறித்துக் கூப்பிட்டது. செம்மலையும் அந்தப் பறவையைப் பார்த்தான். சிறிய குருவியைப் போல இருந்தது.

“ தாத்தா என்ன சொல்லுது? “

“ அதுவா? தேன் இருக்குது வாங்க.. அப்படின்னு சொல்லுது..

நம்மைக் கூப்பிடறதால் அதுக்கு என்ன பயன்? “

மூப்பர் சிரித்தார். செம்மலையின் தலையைத் தடவி விட்டார்.

“ இயற்கையே ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சி வாழச் சொல்லிக் கொடுக்கு.. மனுசன் தோன்றுன காலத்திலிருந்து இந்தப் பறவை நம்முடைய நண்பனா இருக்கு..

செம்மலையால் நம்பவே முடியவில்லை. அவன் மூப்பரையே பார்த்தான்.

“ ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர் ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர் ..அது காட்டுகிற இடத்தில் இருந்து தேனை  எடுத்துக்கிட்டு அந்தத் தேனடையில் கொஞ்சம் போட்டால் போதும் அந்த தேன்கூட்டில் இருக்கிற மெழுகையும், குட்டிப்புழுக்களையும் அது சாப்பிடும்.. அதுக்காகத் தான் மனிதனோடு நட்பாக இருக்கு.. “

செம்மலை தேன்வழிகாட்டிக் குருவியைப் பார்த்தான். அது மீண்டும் மீண்டும் அவர்கள் வழியை மறித்தது. மூப்பர்,

“ யெப்பா.. நல்லானே இந்தத் தேங்குருவி இங்கே பக்கத்தில தான் தேன் கூடுன்னு சொல்லுதே.. அதைப் பாத்துட்டுப் போவோமப்பா..

என்று சொன்னார். மற்றவர்களும் தேன் வழிகாட்டிக் குருவியின் பாதையைப் பின் தொடர்ந்தனர்.

தேன் வழிகாட்டிக் குருவி நேரே ஒரு பாறைக்கூட்டத்தை நோக்கிக் கூட்டிக் கொண்டு வந்தது. அங்கே பார்த்தால், அந்தத் திருடன் தானிய மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு ஆளுயரத்தில்   பெரிய தேனடை தொங்கிக் கொண்டிருந்தது. காட்டுத்தேனீக்கள் ரீங்கரித்துக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருந்தன.

தேனீக்கள் கலைந்தால் அவ்வளவுதான். மூப்பர் எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். அப்படியே பொடவுக்குள் தவழ்ந்து பொய் அந்தத் திருடனை உசுப்பினார். அவன் பதறிச் சத்தம் போடப் போனான். அவன் வாயைப் பொத்தி அப்படியே பொடவிலிருந்து வெளியே இழுத்து வந்தார்.

வெளியில் வந்து பார்த்தபிறகு தான் திருடனுக்குத் தெரிந்தது. எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறோம் என்று. திருடன் மூப்பரின் காலில் விழுந்தான்.

கொரோனா காலம். எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று அழுதான்.

பிறகென்ன?

அந்த தானிய மூட்டையை அந்தத் திருடனிடமே கொடுத்து அனுப்பினார்கள். இனிமே திருட மாட்டேன் என்று சொன்னான் திருடன். தேன் வழிகாட்டி குருவி

கிச்ச்ச்ச் கிச்ச்ச்ச் என்று ஞாபகப்படுத்தியது. பாவம் அதற்குப் பசி. மூப்பரும் நல்லானும் செம்மலையும் சேர்ந்து புகை மூட்டம் போட்டு தேனீக்களை விரட்டினார்கள். அதுவரை கிடைக்காத அளவுக்கு தேன் கிடைத்தது.

மறக்காமல் தேன் வழிகாட்டிக் குருவிக்கு தேனடையைப் பிய்த்துப் போட்டார்கள்.

தேன்வழிகாட்டிக்குருவியும் நன்றியுடன்,

“ கிச்ச்ச்ச் கிச்ச்ச்ச் “ என்று கத்தியது. 

மூப்பரும் 

“ ப்ப்ப்ர்ர்ர்ர் ப்ப்ப்ர்ர்ர்ர் “ என்று நன்றி சொன்னார்.


நன்றி - புலிக்குட்டியும் வண்ணத்துப்பூச்சியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

No comments:

Post a Comment