மரமும்
மலரும்
உதயசங்கர்
இமயமலையின் அடிவாரத்தில் மிகப்பெரிய தேவதாரு மரக்காடு இருந்தது. அங்கே விதம் விதமான தேவதாரு மரங்கள் இருந்தன.
இதோ வசந்தகாலம் வந்து விட்டது. வசந்த காலம் வந்து விட்டால் மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, நிறப்பூக்கள் பூத்துக் குலுங்கும்.
தேவதாரு மரங்கள் பல நூற்றாண்டுகள் வாழும்.
அப்படி இருநூறு ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மரத்தில் மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன. அதுவரை எந்தப் பூச்சிகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ, பறவைகளோ தேவதாரு மரத்திற்கு வரவில்லை.
பூக்கள் பூத்தது தான்.
அவ்வளவு பூச்சிகளும் எறும்புகளும்
பறவைகளும் மரத்தை நோக்கி வந்தன. பூக்களின் வாசனையால் காடே மணந்தது.
மரத்துக்குப் பொறாமை வந்தது.
பூக்களைப் பார்த்து,
“ கொஞ்ச நாட்கள் இருக்கப்போகிறாய்..
அதற்குள் என்ன அலட்டல்.. நான் இருநூறு ஆண்டுகளாய் இங்கேயே அமைதியாக நின்று கொண்டிருக்கிறேன்..
தெரியுமா? ”
என்று சொன்னது. பூக்கள்
எதுவும் பேசவில்லை. தன்னைத் தேடி வந்த விருந்தினர்களான தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சி
ஆகியவற்றுக்குத் தேன் கொடுப்பதில் கவனமாக இருந்தது.
மரம் மீண்டும் பூக்களிடம்,
“ நீண்ட வருடங்களாக நின்று
கொண்டிருக்கிற நான் பெரியவனா? அற்பமான நாட்களில் உதிர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போகிற
நீ பெரியவனா? “
என்று கிளைகளை ஆட்டிக் கேட்டது.
பூக்கள் அமைதியாக,
..“ நான் பெரியவனில்லை
மரமே.. ஆனால் நீயும் பெரியவனில்லை..”
“ என்ன சொல்றே.. நான் பெரியவனில்லையா?
கோமாளி மாதிரி ஆடை உடுத்திகிட்டு போறவாற பூச்சியை எல்லாம் கூப்பிட்டுக்கிட்டிருக்கிற
பூ நீ.. என்னைப் பெரியவனில்லைன்னு சொல்றியா..” என்று கோபத்துடன் தலையை விரித்து காற்றில்
ஆடியது மரம்.
அன்று பூவின் இதழ்கள் உதிரவேண்டிய நாள்.
மரம் ஆடிய ஆட்டத்தில் அந்தப் பூக்கள் உதிரத்தொடங்கின. கடைசி இதழ் உதிரும்போது,
“ நீ எவ்வளவு ஆண்டுகள்
நின்றாலும் நான் சில நாட்களே இருந்தாலும் நான் உன்னுடைய ஒரு பகுதி என்பதை மறந்து விட்டாயே..
நீ இயற்கையின் ஒரு பகுதி.. ”
அதைக் கேட்ட மரம் வருந்தியது.
“ அடடா.. நான் புத்தியில்லாமல்
பேசி விட்டேன்.. நீ கீழே உதிராதே.. நான் உன்னைத் தாங்குகிறேன்.. “ என்று கிளையைக் கீழே
தாழ்த்தியது.
அதற்கு காற்றில் ஆடி ஆடி
கீழே வந்து கொண்டிருந்த பூவிதழ் சொன்னது,
“ மரமே.. என்னுடைய வேலை
முடிந்து விட்டது.. இனி ஒட்ட வைத்தாலும் ஒட்டமுடியாது.. காலம் முடிவில்லாதது.. அந்தக்
காலத்தின் ஓட்டத்தில் இருநூறு ஆண்டும் ஒன்று தான்.. இரண்டு நாட்களும் ஒன்று தான்..
நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்..சரி விடை கொடு.. நீ
எனக்களித்த அனைத்துக்கும் மிக்க நன்றி..”
தரையில் கிடந்த பழுத்த
இலைகளையும் உதிர்ந்த பூக்களையும் பார்த்து, மரம் தலை வணங்கியது.
நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
தேவதாரு மரம் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என்பது எனக்கு புதிய தகவல்.
ReplyDeleteகுழந்தைகள் புனைவை விரும்புவார்கள், ஒன்றாக பிணைந்து இயங்கும் உடலும் மனமும் சில சமயங்களில் முரண்பட்டு நிற்கும். இயங்க மறுக்கும்.
இங்கு மரத்தையும் மலரையும் உரையாடலை நிகழ்த்துவதாக காட்டி குழந்தைகள் கருதி கடைபிடிக்க வேண்டிய விழுமியங்களை நேர்த்தியாக இக்கதையில் வெளிப்படுத்தியுள்ளார்.
தோழரின் பாஷயில் சொன்னால் குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை போல பூக்கள் குட்டி மரங்கள்.