Thursday, 16 January 2025

தவளை மாமாவின் சந்தேகம்

 

1.        தவளை மாமாவின் சந்தேகம்

    உதயசங்கர்



லேசா இருட்டினால் போதுமே. உடனே  சுவர்க்கோழிகள்

கீச் சகீச் கீச் கீச்ச்ச் கீச்ச்ச் “ என்று சத்தம் போட ஆரம்பித்து விடும்.

“ ச்சே நிம்மதியாகத் தூங்க முடியலை.

டினு தவளை மாமா முன்காலகளால் தன் கண்ணுக்குக் கீழேயுள்ள காதுகளைப் பொத்தினார்.

கீச்ச்  கீச்ச்ச கீச் கீச்ச்ச் கீச்

டினு தவளை மாமா அப்படியும் இப்படியும் திரும்பினார். புரண்டு புரண்டு படுத்தார் மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க.

“ அய்யய்யோ இத்தூணூண்டு இருந்துகிட்டு என்ன சத்தம் போடறாங்க..என்னவோ இப்பதான் பீத்தோவன் இசைக்கச்சேரி மாதிரி.. ஒருத்தன் முடித்ததும் இன்னொருத்தன்.. இருங்க மழைக்காலம் வரட்டும் இந்த ஏரியாவையே அதிர வைக்கிறோம் “

டினு தவளை மாமாக்குத் தூக்கம் கலைந்து விட்டதே என்று கோபம். மெல்ல பொந்துக்கு வெளியே வந்தார். சுவர்க்கோழிகள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கித் தாவினார்.

அவர் தாவியதும் அப்படியே கீச் கீச் கீச் சத்தம் நின்று விட்டது. எங்கே இருந்து சத்தம் வந்தது என்று டினு தவளை மாமாவுக்குத் தெரியவில்லை.

என்னடா இது அதிசயமா இருக்கு.. இப்போது தானே சத்தம் கேட்டது என்று டினு தவளை மாமா நினைத்தார். மீண்டும் சத்தம் கேட்டது.

கீச்ச்ச் கீச்ச்ச் கீச்ச்ச்

மிக அருகில் கேட்டது. இன்னொரு தாவு தாவினார் டினு தவளை மாமா. மறுபடியும் சத்தம் நின்று விட்டது. அப்போது தான் டினு தவளை மாமாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

நாம் குதிக்கிற சத்தம் கேட்டுத்தான்.. சுவர்க்கோழி உஷாராகி சத்தம் போடறதில்லையோ.

மெல்ல ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடந்தது. டினு தவளை மாமாவின் அருகிலேயே ஒரு செடியின் இலையில் உட்கார்ந்திருந்தது ஒரு சுவர்க்கோழி. அது மீண்டும் கீச்ச கீச்ச என்று சத்தம் போடும்போது அப்படியே முன்காலால் பிடித்து விட்டது டினு தவளை மாமா.

சுவர்க்கோழி,

“ ஐயோ என்னை விட்டிரு.. டினு மாமா.கீச்ச்ச் கீச்ச்ச் .என்று காதுகிழியக் கத்தியது.

“ ஏன் இப்படிக் கத்தறே? நாங்க தூங்க வேண்டாமா? “

என்று டினு தவளை மாமா கேட்டது.

“ மாமா அப்படிக் கத்தித்தான் எங்க நண்பர்களைக் கூப்பிட முடியும்..

டினு தவளை மாமாவுக்கு தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டு விடலாம் என்று தோன்றியது.

“ நான் குதிக்கும் போது சத்தமில்லாமல் இருக்கிறீங்க.. அசையாம இருந்தா சத்தம் போடறீங்க..

ஐய்யே மாமாவுக்கு இது கூடத் தெரியல.. எந்தச் சின்னச்சத்தமாயிருந்தாலும் எங்களுக்குக் கேட்கும்.. மாமா..

உங்களுக்குக் காது கேட்குமா..  எங்கே இருக்கு உங்க காது? கண்ணுக்குப் பின்னாடியா? “

“ இல்லை.. மாமா.. எங்களுக்கு.. கரப்பான் தாத்தாவுக்கு..சிலந்தி அண்ணனுக்கு கால்களில் தான் காதுகள் இருக்கு.. எந்தச் சத்தம் கேட்டாலும் கால்ல இருக்கிற மெல்லிய முடிகள் கேட்டு எங்களுக்குச் சொல்லிரும்.. தெரிஞ்சிதா.. மாமா..

ஓ அப்படியா! கால்ல காதுகளா? “ என்று டினு தவளை மாமா ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும் போதே சுவர்க்கோழி ஒரு தாவு தாவியது. அருகில் இருந்த ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது.

டினு தவளை மாமாவுக்கு நம்பவே முடியவில்லை.

 கால்களில் காது கால்களில் காது என்று சொல்லிக் கொண்டே தாவியது.


நன்றி - புலிக்குட்டியும் வண்ணத்துப்பூச்சியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

No comments:

Post a Comment