தங்கக்குயில்
உதயசங்கர்
தினமும் காலையில் அந்தப் பாட்டு தான் சிங்கத்தை
எழுப்பி விடும். இனிமையான பாட்டு. அப்படியே காற்றையே இசையாக மீட்டியது போன்ற குரல்.
காதுகளுக்குள் தேன் மாதிரி பாய்ந்து செல்லும் குரல். அந்தக் குரலைக் கேட்டுத் தான்
அந்தக் தங்கக்காடே விழித்துக் கொள்ளும். எல்லா மிருகங்களும் பறவைகளும் அந்தக் குரலுக்காகக்
காத்திருந்ததைப் போல அதைக் கேட்டபிறகு அவர்கள் குரல் கொடுப்பார்கள். ஆனால் யார் அந்தப்
பாட்டைப் பாடுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதுவரை யாரும் பார்த்ததில்லை. குரலைக்
கேட்பதோடு சரி.
சிங்கம் தன்னுடைய நண்பர்களிடம்,
“ யார் இவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் என்று எனக்குத்
தெரியவேண்டும்.. யாராவது சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்..”
என்று கேட்டுக் கொண்டது. உடனே காட்டில் எட்டு திசைகளிலும் செய்தி
அறிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்களாயிற்று. மூன்று நாட்களாயிற்று. எந்தத்
தகவலும் வரவில்லை. நான்காவது நாள் ஒரு காட்டு அணில் செய்தி கொண்டு வந்தது.
“ தலைவரே! அந்தப் பாடலை ஒரு அழகான பறவை பாடுகிறது..
அதைக் குயில் என்று சொல்கிறார்கள்.. “
உடனே சிங்கம்,
“ தங்க நிறத்தில் தானே இருக்கும் இப்படியான குரல்
அப்படிப்பட்ட பறவைகளுக்குத் தான் இருக்கும்..” என்று
சொல்லி முடித்தது. அணிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே தலையாட்டியது.
“ உடனே அந்தத் தங்கக்குயிலை இங்கே வரச்சொல்.. இங்கே
தினமும் என் குகையில் இருந்து பாடட்டும்..”
என்று முழங்கியது. காட்டு அணில்,
“ அப்படியே தலைவரே..” என்று
சொல்லி விட்டு ஓடி விட்டது. அதன் பிறகு அந்தப் பாடல் கேட்கவில்லை. சிங்கத்துக்குப்
பாடலைக் கேட்காமல் உடல்நிலை சரியில்லை. காட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை.
ஒரு வாரமாயிற்று.
பத்து நாட்களானது. தங்கக்குயில் வரவில்லை. உடனே சிங்கம்,
“ காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் என் முன்னால் பாட
வேண்டும்.. அந்தத் தங்கக்குயிலை நான் கண்டுபிடிக்க வேண்டும்.. “ என்று கர்ச்சனை செய்தது.
உடனே எல்லாப்பறவைகளுக்கும் செய்தி போய் விட்டது.
மறுநாள் காலை எல்லாப்பறவைகளும் கூடின. ஆனால் முதலில்
வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், சாம்பல், ஆரஞ்சு, பிங்க், அரக்கு, என்று பளிச்சென்ற
நிறமுடைய பறவைகளை மட்டும் வரிசையாக அனுப்பியது நரி.
குயிலைக் கடைசியாக நிற்க வைத்திருந்த்து நரி. பறவைகள்
ஒவ்வொன்றாய் குகைக்குள்ளே போனது. போன பறவைகள் எல்லாம் தலையைக் குனிந்தபடியே வெளியே
வந்தன. நரி,
“ எல்லாரும் போங்க..தலைவர் ரொம்ப டயர்டாயிட்டார்..
“ என்று விரட்டி விட்டது. குயிலும் திரும்பிப் பறப்பதற்குத் தயாரானது. அப்போது குகை
வாசலுக்கு வந்த சிங்கம்,
“ ஏய் நில்லு.. “ என்று அழைத்தது. குயில் பயத்துடன்
நின்றது. நரி குயிலின் கருப்பு நிறத்தைப் பார்த்து, தலைவரோ தங்கக்குயிலைத் தேடுகிறார்..
இதுவோ கன்னங்கரேரென்று இருக்கிறது என்று ஏளனமாகப் பார்த்தது.
“ எங்கே நீ பாடு..” என்று
சிங்கம் சொன்னது. குயில் தயங்கியது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீண்ட குரலெடுத்தது.
அவ்வளவு தான்.
சிங்கம் வாய் பிளந்தவாறு நின்று விட்டது. நரி வாலை
ஆட்டக்கூட மறந்து விட்டது. பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகள் அப்படியே வானில் வட்டமிட்டுக்
கொண்டே இருந்தன.
. சிங்கம் கேட்டதற்காகப் பாடவில்லை
குயில் பாடியது. அதே குரல். மனதை மயக்கும் இனிய
குரல். தன்னுடைய கருப்பு நிறத்தை உருக்கிப் பாடியது. தனக்காகப் பாடியது. தன்னுடைய இணைக்காகப்
பாடியது. தன்னை ஒதுக்கிய நரிக்காகப் பாடியது. தன்னுடைய சகோதரப்பறவைகளுக்காகப் பாடியது.
இயற்கைக்காகப் பாடியது. எல்லாருக்காகவும் பாடியது. வாழ்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காகப்
பாடியது.
சிங்கத்துக்கு இப்போது எல்லாம் புரிந்தது.
நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்
அருமை ஐயா
ReplyDelete