Tuesday 28 August 2012

இந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்

 

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

இந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம் என்பதை முன் கூட்டியே சொல்லி எச்சரித்துவிட ஆசைப்படுகிறேன். பின்னால் நீங்கள் என் மீது கோவிக்கவோ சடைத்துக் கொள்ளவோ, விரக்தியடையவோ, இல்லை ஒரு அதீத வெறுப்புணர்வில் மானநஷ்ட வழக்கு தொடுக்கவோ ஏதுவான சந்தர்ப்பம் வரலாம். எனவே பின் வரும் குறிப்பினைக் கவனமாகப் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுடைய பெயர் சேதுசிவராமனாகவோ, நீங்கள் ஒரு கலைக்கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிபவராகவோ, நீங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டவராகவோ, ஈடுபட்டுக்கொண்டிருப்பவராகவோ, ஈடுபடப்போகிறவராகவோ, இருந்தீர்களென்றால் இந்தக் கதையை இதற்கு மேல் வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கூடுதலாக நீங்கள் பயந்த சுபாவமும், உங்கள் துணைவியாரின் கைப்பிடித்தே வாழ்க்கைப் பாதையில் நடப்பவராகவும் இருந்தால் கண்டிப்பாக இந்தக் கதையை இதற்கு மேல் வாசிக்க வேண்டாம். என்னடா இப்படிச் சொல்கிறானே என்று நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. மீண்டும் இந்தக் கதையின் முதல் வரியைப் படித்துப் பார்க்கவும்.

துன்பத்தை யாரும் மீண்டும் மீண்டும் அநுபவிக்க விரும்புவதில்லை. அதுவும் என்னை மாதிரி எழுத்தாளர்கள் அவர்களுக்கு நடந்ததை உங்களுக்கு நடந்த மாதிரியே எழுதுவதை வாசித்து மனம் வெம்பவும் தேவையில்லை. இதை விட ஒரு எழுத்தாளன் வேறு என்ன சலுகை கொடுத்து விட முடியும்? நீங்கள் ஏதோ கேட்க முயற்சிக்கிறீர்கள்? மேலே சொன்ன குறிப்புகளில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும், மனதிடம் அதிகமிருந்தாலும், நகைச்சுவையுணர்வு இருந்தாலும் வாசிக்கலாமா என்று தானே? வாசியுங்கள் ஐயா. தாராளமாக வாசியுங்கள். உங்களுக்கு அப்படி ஒரு ஆசை வந்து விட்டால் அதை யார் என்ன செய்து தடுத்து விட முடியும்?

சேதுசிவராமனுக்கும் அவனுடைய துணைவியார் அலமேலுமங்கைக்கும் திடீரென ஒரு ஆசை வந்து விட்டது. யாருக்கு ம் தோன்றாத அபூர்வமான ஆசை என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லோரும் ஆசைப்படுகிற காரியம் தான். ஒரு வகையில் இன்றைய மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை லட்சியம், குறிக்கோள். வேறொன்றுமில்லை. ஒரு வீடு. ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையென்றால் உற்றார், உறவினர், உடன்வேலை பார்ப்போர், ஊரி உள்ள முகம் தெரிந்தவர்கள், முகம் தெரியாதவர்கள், போவோர், வருவோர், எல்லோரும் இளக்காரமாக ஒரு பார்வை வீசி ரெண்டு வார்த்தை இலவசமாய் அட்வைசும் செய்து விட்டுப் போவார்கள் தானே. எனக்குப் பின்னாலிருந்து சேதுசிவராமனின் துணைவியார் அலமேலுமங்கையின் குரல் கேட்கிறது.

“ ஏன் போக்கத்த நாய் கூட ரெண்டு குலைப்பு குலைத்து விட்டு காலைத் தூக்கி ரெண்டு சொட்டு மூத்திரம் அடித்து விட்டுப் போகும் “

நான் திரும்பி சேதுசிவராமனின் துணைவியார் அலமேலுமங்கையிடம் எச்சரித்தேன். எழுத்தாளரை மீறி கதாபாத்திரம் பேசக்கூடாது. அவள் முகத்தை ஒரு நொடி நொடித்து விட்டு மறுபடியும் கதைக்குள் வாசலில் ஹிண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிற சேதுசிவராமனுக்கு காப்பி போடப் போய்விட்டாள்.

அலமேலுமங்கையும் சேதுசிவராமனும் ஆறுமாதம் இரவுபகலாக அவர்களுடைய ஆலோசனை தர்பாரான படுக்கையறையில் யோசித்தார்கள். யோசித்தார்கள். அப்படி யோசித்தார்கள். யோசித்தார்கள் என்ன யோசித்தார்கள் அலமேலுமங்கை யோசித்தாள் அதை சேதுசிவராமன் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு நாள் இடம் வாங்கி வீடு கட்டுவதில் உள்ள சாதகபாதகங்களைப் பற்றிப் பேசினாள். சேதுசிவராமன் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். மறுநாள் கட்டிய வீட்டை வாங்குவதில் உள்ள லாபநஷ்டங்களைப் பற்றிப் பேசினாள். அதுக்கும் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். இன்னொருநாள் பாதிகட்டி கைவிடப் பட்ட வீட்டை வாங்கி கட்டினால் என்ன என்று யோசனை சொன்னாள். அதைக் கேட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டித் தலையாட்டி அவனுடைய தலை எப்பவுமே ஆடிக்கொண்டேயிருந்தது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போதும், வகுப்பு எடுக்கும்போதும், தலையாட்டல் நிற்கவில்லை. அவனுடைய இந்தத் தலையாட்டலை மாணவர்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப ஏற்ப சைகை மொழிமாற்றம் செய்து கொண்டனர்.

“ சார் இன்னிக்கு டெஸ்ட் வேண்டாம் சார்.. நாங்க படிக்கல..”

பேராசிரியர் சேதுசிவராமன் வாயைத் திறப்பதற்கு முன்னாலேயே தலை ஆடி விடுகிறது. உடனே மாணவர்கள்,

” ஹேய்.. இன்னிக்கு டெஸ்ட் இல்ல.. சார் தலையாட்டிட்டாரு..”

என்று மாணவர்கள் கோரஸாகக் கூப்பாடு போட்டார்கள். மாணவர்களின் திறமையான மொழிபெயர்ப்பை சேதுசிவராமனே வியந்து இன்னொரு முறை தலையாட்டி அதை அங்கீகரித்தான்.

சில நேரங்களில் தர்மசங்கடமான நிலைமைகளுக்கும் ஆளானான் என்பதை சொல்லவும் வேண்டுமா? வேண்டாம் என்று சொல்ல நினைத்து வேண்டும் என்று தலையாட்டவும், வேண்டும் என்று சொல்ல நினைத்து வேண்டாம் என்று தலையாட்டவும் ஆகி தலையாட்டல் அவனுடைய சுயகட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று விடும் போல இருந்தது. அலமேலுமங்கையின் ஒவ்வொரு சொல்லுக்கும், சொல்லின் எழுத்துக்கும், தலையாட்டியதின் முன் பின் பக்கவிளைவுகள் என்பதை ரெம்பத் தாமதமாகத் தெரிந்து கொண்டான். இது எல்லாத்திசைகளிலும் ஏற்படுத்தவிருக்கும் விபத்துகளை முன்னுணர்ந்து சீக்கிரத்தில் ஒரு முடிவு எடுக்கும்படி அல்மேலுமங்கையிடம் வேண்டிக் கொண்டான். அலமேலுமங்கையும் சரி ஆலோசிக்கிறேன் என்றாள். ஏனெனில் அவளுக்கும் சேதுசிவராமனின் தலையாட்டல்தான் சிந்தனையூக்கியாக இருந்தது. அவனுடைய ஒவ்வொரு தலையாட்டலுக்குப் பின்னும் அவளுக்கு புதுப்புது யோசனைகள் தன்னால ஊற்றெடுத்துக் கிளம்பியது.

இப்படியெல்லாம் சொல்வதனால் சேதுசிவராமனுக்கு வீட்டைப் பற்றிக் கருத்துகளே இல்லை என்று நீங்கள் நினைத்து விட வேண்டாம். வண்டி வண்டியாய் குமிந்து கிடக்கிறது. ஆனால் அவன் ஒரு சொல் சொல்ல ஆரம்பித்தால் போதும் அலமேலுமங்கை மூன்றே மூன்று வார்த்தைகளை அசரீரி போல முழங்குவாள்.

“ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது..”

இந்த வார்த்தைகளின் சப்தஒலி அடங்குமுன்பே அவனுக்குச் சொல்ல வந்தது மறந்து விடும். அதோடு இது எதுக்கு வம்பு அவள் முடிவுப்படியே நடந்து கொண்டால் எதிர்கால குற்ற்ச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசை தான். குறித்துக் கொள்ளுங்கள். நப்பாசைதான். இதையெல்லாம் படித்துவிட்டு அலமேலுமங்கையைப் பற்றி கொடூரமான சித்திரத்தை வரைந்து விடாதீர்கள். அலமேலுமங்கை நாட்டிலுள்ள எல்லாப் பெண்களையும் போல பரமசாது. வெளியே யாரிடமும் அதிர்ந்து பேசாத குணவதி. வீடென்னும் ராஜ்யத்துக்குள் மட்டுமே தன் ஜெயக்கொடியைப் பறக்க விட ஆசைப்படுபவள். என்ன அவளுக்கும் நாட்டிலுள்ள எல்லாப்பெண்களைப் போல தன் கணவன் ஒரு அப்பாவி, ஏமாளீ, சோணகிரி, பயந்தாங்குளி, உலகஞானம் இல்லாதவன், சூதுவாது தெரியாதவன், நெளிவு சுளிவு இல்லாதவன், இளிச்சவாயன், என்று அப்பாவியாய் நம்பி இந்தப் பட்டங்களையெல்லாம் நூலில் கட்டி பறக்க விட்டுக் கொண்டிருந்தாள். அதனால், ‘ தான் ஒருத்தி மட்டும் சமத்தா இல்லைன்னா’ என்ற எண்ணம் வேர் விட்டு கிளைவிட்டு, பூப்பூத்து, காய்காய்த்து, கனிந்தும் விட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

சேதுசிவராமன் அந்த மரத்தின் நிழலில் எந்தவிதக் கவலையுமின்றி சோம்பேறியாய் படுத்துறங்கினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆனால் இப்போது அவனது தலையாட்டல் கொடுத்த நெருக்கடியால் தினசரி அலமேலுமங்கையிடம் சின்னப்பிள்ளை மாதிரி நச்சரிக்கத் தொடங்கினான். ஆறுமாதமாய் ஆலோசித்தும் எந்த முடிவுக்கும் வராத அலமேலுமங்கை சவலைப்பிள்ளையின் அழுகை போல தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் சேதுசிவராமனுக்காக ஒரே வாரத்தில் முடிவு எடுத்தாள். அந்த முடிவின் அந்தப் பக்கத்தில் காத்திருப்பது எது என்று அவர்களுக்குத் தெரியாது. வீட்டுமனை, வீடு, வாங்கிய பெருமக்களுக்கே அது தெரியும். ஆக தம்பதிகள் கட்டிய வீட்டையே வாங்கி விடலாம் என்று ஏகமனதாக முடிவு செய்தார்கள்.

அவர்கள் இரவு பனிரெண்டு மணிக்கு எடுத்த முடிவு எப்படித்தான் காற்றில் பரவியதோ இல்லை எந்தக் காத்து கருப்பு, முனி, போய் சொன்னதோ காலையில் பால்காரன் வருவதற்கு முன்பே வீட்டுக் கதவைத் தட்டினார்கள் புரோக்கர்கள். இல்லையில்லை ஹவுஸ் புரொமோட்டர்கள். சேதுசிவராமனும், அலமேலுமங்கையும் ஆச்சரியத்தில் ஏறி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்கள். அதற்கடுத்த வாரத்தில் அந்தச் சிறிய நகரத்தின் மிக முக்கியமான வி.வி.ஐ.பி.க்களானார்கள். எப்போதும் வீட்டுவாசலில் புதிது புதிதாய் ஆட்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள். சேதுசிவராமன் எங்கே போனாலும் பின்னாலேயே போனார்கள். அவன் திரும்பிய பக்கத்தில் திரும்பினார்கள். மழை விழுந்த மறுநாள் முளைக்கும் அருகம்புல்லைப் போல எப்படி இத்தனை புரொமோட்டர்கள் வந்தார்கள் என்ற தம்பதிகளின் ஆச்சரியக்குறி மறையும் முன்பே பக்கத்துவீட்டுக்காரர், எதிர்த்த வீட்டுக்காரர், இதுவரை அவன் ஏறிட்டும் பார்த்திராத பலபேர் வந்து வீடுகளைப் பற்றித் துப்பு சொன்னார்கள். சிலர் சேதுசிவராமனைத் தனியாகக் கல்லூரியில் சென்று சந்தித்தார்கள். அந்த விவரம் தெரியாத கூமுட்டைகளை தங்களுடைய கேலிச்சிரிப்பால் உடைத்து விட்டு அலமேலுமங்கையைத் தனியாகச் சந்தித்து வீடுகளை அறிமுகப்படுத்தினார்கள் வேறு சிலர். இதையெல்லாம் பார்த்த சேதுசிவராமன் அவர்கள் வீடு வாங்குவதற்கு ஊரே உதவி செய்கிறது என்று அப்பாவியாய் நினைத்தான்.

ஆனால் அலமேலுமங்கையோ வேறு மாதிரி நினைத்தாள். ஊரே புரோக்கர் தொழில் பார்த்து நாலு காசு சம்பாதிக்கும்போது தன் கணவன் மட்டும் இப்படி விவரமில்லாமல் வெறும் பேராசிரியர் வேலை மட்டும் பார்த்துக் கொண்டு குப்பை கொட்டுகிறானே என்று நினைத்தாள். நினைப்பு சிறு கங்காகி, கங்கு தீயாகி, தீ பெருநெருப்பாகி, அன்றே சேதுசிவராமனைச் சுட்டது. சேதுசிவராமனும் அக்கணமே சூளுரைத்தான். புதிய வீட்டில் சேதுசிவராமன் பேராசிரியர் அண்ட் ஹவுஸ் புரொமோட்டர் என்று பெயர்ப்பலகையை மாட்டியே தீருவேன் என்று சபதமிட்டான். அரைகுறை நம்பிக்கையுடன் அலமேலுமங்கையும் பெருநெருப்பை எப்போது வேண்டுமானாலும் ஊதிப் பெருக்கிக் கொள்ள வசதியாகச் சிறுகங்காக்கிக் கடைவாயின் ஓரத்தில் ஒதுக்கிக் கொண்டாள்.

நகரத்துக்கு வெளியே கட்டிமுடிக்கப்பட்ட, கட்டிக் கொண்டிருக்கிற, கட்டப்போகிற வீடுகள் எல்லாம் சேதுசிவராமனையும் அலமேலுமங்கையையும் இரு கைகளையும் அசைத்துக் கூப்பிட்டன. எல்லாஇடங்களுக்கும் அசராமல் சென்று பார்த்தார்கள். அவர்களை அழைத்துப் போய் காண்பிப்பதற்குப் புரொமோட்டர்கள் கியூவரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். வரிசை ஒழுங்கை நிர்வாகிக்க டோக்கன் வாங்கி பதிந்தும் கொண்டனர். இதில் சில சில்லரைச் சண்டைகளும் வந்தன. பெருமிதக் கடலில் மூழ்கி ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருந்தனர் சேதுசிவராமனும், அலமேலுமங்கையும்.

எல்லாவீடுகளும் நன்றாகவே இருப்பதாக சேதுசிவராமனும், எந்த வீடும் சரியில்லை என்று அலமேலுமங்கையும் நினைத்தால் என்ன ஆகும்? இந்த இரண்டு நினைப்புகளுக்கும் இடையில் கிடந்து வீடும் புரோக்கர்களும் நெரிபட்டனர். இப்படியே பொழுது போய்விடுமா என்ன? அநேகமாக ஊரில் உள்ள அத்தனை புரோக்கர்களும் சேதுசிவராமனையும் அலமேலுமங்கையையும் பார்த்து விட்டார்கள். சேதுசிவராமனும் அலமேலுமங்கையும் ஊரில் உள்ள அத்தனை வீடுகளையும் பார்த்து விட்டார்கள். ஆனால் இது வரை தம்பதிகளிடமிருந்து ஒரு சிறு முகக்குறிப்பைக் கூட பார்க்க முடியவில்லை. இயல்பாகவே புரோக்கர்களுக்கு ஒரு சந்தேகம் மெல்லத் தன் கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியிருந்தது. இதுவரை எந்தப் பிடியும் கொடுக்காத சேதுசிவராமனும், அலமேலுமங்கையும், உண்மையிலேயே வீடு வாங்கப் போகிறார்களா? அல்லது வீடுகளில் சுற்றுலா போகிறார்களா? இந்தச் சந்தேகம் வலுவடைந்தபோது புரோக்கர்களிடம் ஒரு புயல் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை சேதுசிவராமனும், அலமேலுமங்கையும் அறிந்திருக்கவில்லை. ஒரே வாரத்தில் மரியாதை குறைந்தது.

“ யோவ் வாத்தியாரே! நீரு வீடு வாங்கப் போறீரா.. இல்லையா..அத முதல்ல சொல்லும்.. என்னமோ வொயிட் ஹவுஸை வாங்கப் போற மாதிரி பிலிம் காட்டிகிட்டு..”

என்று குரல் ஏகாரமாய், ஏகக்காரமாய் ஒலிக்க சேதுசிவராமன் உண்மையில் பயந்து தான் போனான். ஆனால் அலமேலுமங்கை தான் தைரியலட்சுமியாய் குரல் கொடுத்தாள்.

” நாங்க வீடு வாங்குவோம்.. வாங்க மாட்டோம்.. அது எங்க இஷ்டம்..”

அந்தக் குரல் சூல் கொண்டு இடி மின்னலை ஏற்படுத்தி விட்டது. அதுவரை எலியும் பூனையும் மாதிரி தோற்றமளித்த அத்தனை புரோக்கர்களும் ஒன்று கூடி மாநாடு நடத்தினர். ஆரம்பத்திலிருந்தே சேதுசிவராமனின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்ததெனத் தீர்மானம் போட்டனர். கமிஷன் கொடுக்காமல் வீடு முடிப்பதற்கான திட்டம் இருக்கலாம் என முடிவு செய்தனர். அதன் பிறகு அவனுடைய அத்தனை நடவடிக்கைகளும் ஒற்றறியப் பட்டன. அவன் வீட்டுக்கு முன்னால் சிலர் காவலிருந்தனர். அவர்களை மீறி யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. தீர விசாரித்தபிறகே அநுமதி கிடைத்தது. சிலர் பூனைப்படையைப் போல பின் தொடர்ந்தனர். அவன் யாரிடம் நின்று பேசினாலும் அருகில் வந்து அவன் பேசுவதை உரிமையுடன் கேட்டார்கள் சிலர். அவன் ரகசியமாக வீடு கிரையம் முடிக்கத் திட்டமிடுகிறானோ என்ற நினைப்பின் வழியே சென்ற புரோக்கர்கள் அவர்கள் அவனுக்குக் காட்டியவீடுகளின் சொந்தக் காரர்களிடம் நேரடியாகவே பேசி முடித்துவிடும் அபாயத்தை உணர்ந்தார்கள். எனவே இன்னும் கண்காணிப்பை நெருக்கினார்கள். கண்காணிப்பின் கனலில் வெந்து கருகிப் போன சேதுசிவராமன் ஊரில் அது வரை சென்றிராத தெருக்கள், சந்துபொந்துகள் வழியே போகத் தொடங்கினான். ஆனால் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தார்கள் புரோக்கர்கள்.

எப்போதும் கண்காணிக்கப்படுவதின் கொடுக்குகளால் கொட்டப்பட்டுக் கொண்டேயிருந்த சேதுசிவராமன் அலமேலுமங்கையிடம் புலம்பினான். இனி அவர்கள் வீடு வாங்குவதாகச் சொன்னாலும் நம்பமாட்டார்களே என்று நடுகடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது ஆபத்பாந்தவன் நானிருக்கிறேன் என்று வந்து நின்றார் ஒரு குட்டி அரசியல் தலைவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மாறி மாறிக் குதிக்கும் அவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். தீர ஆலோசிக்காமல் ஒரு குத்துமதிப்பாய் கட்டைப்பஞ்சாயத்துத் தீர்ப்பைச் சொன்னார். ஒரு ஒருமணி நேரம் உட்கார்ந்து காப்பி, வடை, சாப்பிட்டு பஞ்சாயத்து பண்ணியதற்கு சேதுசிவராமனிடம் ஒரு இரண்டாயிரம் ரூபாயும், புரோக்கர்களிடம் ஒரு ஆயிரம் ரூபாயும் வாங்கி ஜேபியில் செருகிக் கொண்டு நடந்தார். அலமேலுமங்கை இப்போதும் சேதுசிவராமனைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லையா? இந்தக் கதையின் பதினெட்டாவது பாராவை மறுபடியும் வாசித்துப் பாருங்கள். சரி அது கிடக்கட்டும் எதிர்கால மந்திரியோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை நகர்மன்றத் தலைவரோ ஆகப் போகிற அந்த மகானுபாவனின் தீர்ப்பின் விவரம் அறிய ஆவலுடன் இருப்பீர்கள் தானே.

ஒரு மாத காலமாக சேதுசிவராமனுக்கு வீடு வாங்க உதவி செய்வதற்காக அவன் வீட்டு காவல்கிடந்த காவல் கூலி. அவன் பார்த்த வீடுகளை எப்படியும் வாங்கி விடுவான் என்ற நம்பிக்கையில் வேறு யாரிடமும் காட்டாமல் இருந்ததனால் தேங்கிப் போன வீடுகளுக்கான தேங்குகூலி. வீடுகளைக் காண்பித்ததற்கான பார்வைக்கூலி, அவன் வீடு வாங்கினாலும் வாங்காவிட்டாலும் தரவேண்டிய தரகுக்கூலி, இப்படி கூலிவகைகளைக் கூட்டினால் சேதுசிவராமன் அவன் முழுச்சம்பாத்தியத்தையே தர வேண்டியதிருக்கும். அவன் அறியாமல் செய்த பிழை பொறுக்க புரோக்கர்கள் பெரியமனதுடன் முன் வந்து விட்டதால் அவர்களுக்கு குறைந்தபட்ச நஷ்ட ஈடாக ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பைக் கேட்டு அலமேலுமங்கை கொதித்துப் போனாள். ஆனால் கோவிலில் மஞ்சள் நீர் தெளித்து வெட்டப்படுவதற்குத் தயாராக நிற்கும் ஆட்டுக்குட்டியின் முகமாக சேதுசிவராமனின் முகம் இருக்கவே பரிதாபப்பட்டாள். இரண்டு நாட்களில் இருபத்தியெட்டு பேருக்கு நோட்டு நோட்டாய் எண்ணிக் கொடுத்தாள். இதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிலிருந்தும் புரோக்கர்கள் கிளம்பி வருகிற தகவல் எப்படியோ சேதுசிவராமனுக்கும், அலமேலுமங்கைக்கும், கிடைத்து விட இரவோடிரவாகத் தலைமறைவாகி விட்டனர்.

சேதுசிவராமனும், அலமேலுமங்கையும் இப்போது வீடு என்றவார்த்தையை உச்சரிப்பதில்லை என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆனால் இரவுகளில் சேதுசிவராமன் பற்களைக் கடித்து யாரையோ அரைத்துத் துப்புகிறான். ஏன் தெரியுமா? இருபத்தியெட்டாவது புரோக்கராக வந்து அவருடைய சொந்த வீட்டையேச் சுற்றிக் காண்பித்துவிட்டு அதற்கு ஆயிரம்ரூபாய் கமிஷன் வாங்கிக் கொண்டு போன அவனுடைய கல்லூரி முதல்வரை நினைத்துத் தான். இதற்கு நீங்களோ நானோ என்ன செய்ய முடியும்?

5 comments:

  1. நீங்கள் ஆரம்பத்தில் சொன்னது சரிதான்
    எங்கள் எல்லோருடைய கதையையும் எழுதிவிட்டு
    உங்கள் கதை என்றாலோ அலமேலு குடும்பக் கதை என்றாலோ
    எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
    ஆனாலும் எங்கள் கதையை நாங்கள் இத்தனை
    சுவாரஸ்யமாகச் சொல்லமுடியாது என்பதால்
    கேஸ் போடாது விடுகிறோம்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. புதுமைப்பித்தன் ஸ்டைலில் அங்கதச் சுவையோடு படலம் படலமாக வீட்டு வேட்டை,! சிரிக்க, சிந்திக்க, பயப்பட என அத்தனை ரசங்களோடும் உதயசங்கர்!

    ReplyDelete
  3. \\புதுமைப்பித்தன் ஸ்டைலில் அங்கதச் சுவையோடு...\\ :-) வாசிக்க தொடங்கியதுமே மனதில் தோன்றியது அதுதான்! அருமை!

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    வீடு வாங்குவதில் உள்ள சிரமங்கள், அதில் உள்ள தில்லு முல்லுகள் - உரித்திருக்கிறார் திரு உதயசங்கர்.
    படித்துப் பாருங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி தோழர்.

    ReplyDelete