Sunday 26 August 2012

கடல் சிங்கத் திருவிழா

 

ஹாருகி முரகாமி

ஆங்கிலத்தில் – கிகி

தமிழில்- உதயசங்கர்

113553-haruki-murakami

ஒரு எளிய மதிய உணவுக்குப் பிறகு நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கடல்சிங்கம் என்னுடைய அபார்ட்மெண்டுக்கு வந்தது. கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டேன். என்னுடைய முன் வாசல் கதவருகே ஒரு கடல்சிங்கம் நின்று கொண்டிருந்தது. உண்மையில் அதைப் பற்றி விசேசமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு வெறும் சாதாரண கடல்சிங்கம். அவ்வளவு தான். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் அது சன்கிளாஸோ, ப்ரூக்ஸ் பிரதர்ஸ் சூட்டோ அணிந்திருக்கவில்லை. உண்மையில் அதைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட பழைய மோஸ்தர் சீனாக்காரனைப் போலவே இருந்தது.

“ மதிய வணக்கம்! உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.. நான் உங்களைத் தொந்திரவு செய்யவில்லையென்று நினைக்கிறேன். இது நல்ல நேரம் தானே..”

என்று கடல்சிங்கம் கேட்டது.

” பரவாயில்லை.. நான் அந்தளவுக்கு பிஸியில்லை..”

என்று நான் கொஞ்சம் குழப்பத்துடனே சொன்னேன். கடல்சிங்கங்கள் ஒப்பீட்டளவில் ஆபத்தில்லாத மிருகங்கள். அவற்றைப் பற்றி பயப்படும் விதமாகவோ, கொடூரமாகவோ எதுவும் இல்லை. உங்களுடைய முன்வாசல் கதவருகே எந்த விதமான கடல்சிங்கம் நிற்கிறது என்பது பெரிய விஷயமில்லை. உண்மையில் கவலைப்படுவதற்குக் காரணமும் இல்லை. அதோடு இதைப் பார்த்தால் ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

இதையெல்லாம் தெரிந்து கொண்டது தான் உண்மையில் தொந்திரவாக இருந்தது.

“ உங்களால் ஒரு பத்து நிமிடம் எனக்கு ஒதுக்க முடியுமானால் நான் உண்மையில் நன்றியுள்ளவனாக இருப்பேன்..”

என்றது கடல்சிங்கம். நான் பழக்கத்தினால் என்னுடைய வாட்சைப் பார்த்தேன். அது தேவையில்லை. எனக்கு நேரம் இருந்தது.

” அந்த அளவுக்குக் கூட நேரம் ஆகாது..”

என்று கடல்சிங்கம் என்னுடைய எண்ணங்களைப் படித்தறிந்தது போல அவசரமாகச் சொன்னது. மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்காமல் நான் அதை என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் அழைத்தேன். அதுமட்டுமல்ல ஒரு டம்ளர் பார்லி தேநீரையும் அதற்கு நான் கொடுத்தேன்.

” உண்மையில் நீங்கள் உங்களைச் சிரமப்படுத்தியிருக்க வேண்டாம்….”

என்று சொல்லிக் கொண்டே பாதித் தேநீரை ஒரே மடக்கில் வாய்க்குள் கவிழ்த்தது. பிறகு தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதனுடைய லைட்டரில் பற்ற வைத்துக் கொண்டது.

” இன்னமும் சூடா இருக்குல்ல…”

என்று கேட்டது.

” நிச்சயமாக..”

” ஆனால் காலையும் மாலையும் அவ்வளவு மோசமில்லை…”

” ஆமாம்.. ஆனால் செப்டம்பர் வந்தாச்சே..’

” ம்ம்ம்.. உயர்நிலைப்பள்ளி பேஸ்பால் போட்டிகள் ஏற்கனவே முடிஞ்சிருச்சி.. வெற்றிக்கொடியை ஜெயண்ட்ஸ் பறித்து விட்டார்கள். அதைப்பத்தி பேசறதுக்கோ.. செய்றதுக்கோ..எதுவும் இல்லை..உண்மையில் கோடை முடிந்து விட்டது..”

” நீங்க சொல்றது சரிதான்..”

கடல்சிங்கம் ஒத்துக்கொண்டு தலையாட்டியது. பின்பு என்னுடைய அபார்ட்மெண்டைச் சுற்றிப் பார்த்தது.

” என்னோட அதிகப்பிரசங்கித்தனத்துக்கு மன்னிக்கணும். இங்க நீங்க தனியா இருக்கீங்களா? “

” இல்லையில்லை… நான் என் மனைவியோடு இருக்கிறேன்.. தற்சமயம் அவ ஒரு பிரயாணத்துக்காக வெளியே போயிருக்கா..”

” உண்மையாகவா? தனித் தனித்தனியே பிரயாணம் செய்றது வேடிக்கையா இருக்கு..”

என்று சொல்லிய கடல்சிங்கம் வேண்டுமென்றே லேசான கேலிச் சிரிப்பை உதிர்த்தது.

இதெல்லாமே என்னுடைய தவறு தான். இதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். சிஞ்சிகு நகரிலுள்ள மதுபானவிடுதியில் மிதமிஞ்சிய போதையில் கொஞ்சமும் கவலையில்லாமல் அருகில் உட்கார்ந்திருந்த கடல்சிங்கத்திடம் யாராவது பிஸினஸ் கார்டைக் கொடுப்பார்களா? எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது என்று நினைக்கிறேன். வேறென்ன நான் சொல்ல? மிகுந்த முன்யோசனைக்காரனான நான் அதனிடம் அதைக் கொடுத்தேன். எனக்கு வேறு வழியில்லை. நான் அதைத் தான் செய்ய வேண்டியிருந்தது. கடல்சிங்கம் அதை எடுத்துக் கொண்டது.

பிரச்னைகளுக்குக் காரணமே தவறான புரிந்து கொள்ளுதலே. நான் கடல்சிங்கங்களை விரும்பவில்லை என்பதல்ல. ஏனெனில் நான் அவற்றை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. திடீரென ஒரு நாள் என் சகோதரி ஒரு கடல்சிங்கத்தைக் கலியாணம் செய்ய விரும்புவதாகச் சொன்னால் நான் உடைந்து நொறுங்கி விடுவேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாக யூகித்துக் கொண்டு அந்தத் திருமணத்துக்குத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டமாட்டேன். கடல்சிங்கத்தின் மீது காதலில் விழுவது நடந்தே தீரலாம்.

ஆனால் ஒரு கடல்சிங்கத்திடம் பிஸினஸ் கார்டைக் கொடுப்பதென்பது முற்றிலும் வேறு விஷயம். கடல்சிங்கங்கள் பரந்து விரிந்த பெருங்கடலின் அடையாளங்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஏ வந்து பி க்கு அடையாளம், பி வந்து சி க்கு அடையாளம். அப்படியென்றால் சி வந்து ஏ க்கும் பி க்கும் அடையாளமாகி விடுகிறது. கடல்சிங்கங்கள் தங்களுடைய சமூகத்தைப் பிரமீடு வடிவத்தில் கட்டியமைக்கின்றன. அதில் பெருங்குழப்பத்துக்கான வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அந்த பிரமீடின் உயிர்நாடியாக பிஸினஸ் கார்டு இருக்கிறது. எனவே தான் கடல்சிங்கம் எப்போதும் பிஸினஸ் கார்டுகளின் கத்தையை தன்னுடைய பிரீஃப்கேஸில் வைத்திருக்கிறது. கடல்சிங்கங்களுக்கு அந்தக் கார்டுகள் சமூகத்தில் அதனுடைய அந்தஸ்தைக் குறிப்பிடுபவையாக இருக்கின்றன. பறவைகள் மணிகளைச் சேகரிப்பதைப் போலத் தான்.

” கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என்னுடைய நண்பருக்கு உங்களுடைய பிஸினஸ் கார்டு கிடைத்திருக்கிறது..”

” உண்மையாகவா? நான் நன்றாகக் குடித்திருந்ததால் எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை..”

அது என்ன பேசிக் கொண்டிருக்கிறது என்று புரியாத மாதிரி நடித்தேன்.

” என்னுடைய நண்பன் சந்தோஷப்பட்டான்..”

என்று கடல்சிங்கம் சொன்னது. நான் பாசாங்கான சுவாரசியத்தை வரவழைத்துக் கொண்டு என்னுடைய தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தேன்.

” முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன்…ஆனால் உங்களைச் சந்திப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன்.. இந்தக் கார்டு என்னிடம் இருப்பதால்…”

” என்னிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கிறீர்களா? “

” அது ரெம்பச் சின்ன விஷயம்.. நாங்கள் விரும்புவதெல்லாம் சில அடையாள உதவிகள் தான் டீச்சர்…”

கடல்சிங்கங்கள் என்று சொல்லப்படுகிற இந்த மிருகங்கள் மனிதர்களை வெளிப்படையாகவே டீச்சர் என்று அழைத்தன.

” அடையாள உதவின்னா? “

” மன்னிக்க வேண்டும் “

அது தன்னுடைய பிரீஃப்கேஸைத் திறந்து ஒரு பிஸினஸ் கார்டை என்னிடம் கொடுத்துக் கொண்டே,

” இது உங்களுக்கு விஷயத்தை விளக்கி விடும்..”

’ கடல்சிங்கத் திருவிஆழா செயற்குழுத் தலைவர் ’ நான் அந்தக் கார்டை வாசித்தேன்.

” நீங்கள் எங்களுடைய அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்..”

” உண்மையில் எனக்குத் தெரியவில்லை.. ஒரு வேளை ஏதாச்சும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்..”

என்று நான் சொன்னேன்.

” கடல்சிங்கங்களான எங்களுக்கு எங்களுடைய திருவிழா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.. முழுக்க முழுக்க அடையாள இறக்குமதி தான். ஆனால் அந்த நிகழ்வு உலகிலுள்ள எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..”

” ம்ம்ம்ம் “

” இந்தக் கணத்தில் எங்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு.. ஆனால் இந்த நேரத்தில்………”

திடீரெனப் பேச்சை நிறுத்தி விட்டு அதனுடைய சிகரெட்டை ஆஷ்டிரேக்குள் திணித்தது.

” இந்த உலகம் பன்முகக்கூறுகளால் நிறைந்தது.. கடல்சிங்கங்களான நாங்கள் தான் ஆன்மீகத்துக்கான பொறுப்பைத் தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறோம்..”

” மன்னிக்கணும்.. உண்மையில் இந்த வகையான பேச்சில் எனக்கு ஆர்வமில்லை..”

” நாங்கள் கடல்சிங்கங்களின் மறுமலர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.. இது நடக்க வேண்டுமானால் இதற்கு இணையான மறுமலர்ச்சி உலகம் முழுவதும் நிகழவேண்டும்.. கடந்த காலத்தில் எங்களுடைய குறுகிய மனப்பான்மையினால் எங்களுடைய திருவிழாவில் உங்களை அநுமதித்ததில்லை. ஆனால் உலகத்துக்கு எங்களுடைய செய்தி இன்று இது தான்.. நாங்கள் எங்களுடைய திருவிழாவை அடிப்படையில் மாற்றியிருக்கிறோம்.. எங்களுடைய திருவிழா மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு விசைப்பலகையைப் போல உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்…இதுவே எங்களுடைய செய்தி..”

” நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிய ஆரம்பிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்..”

” இப்ப வரைக்கும் நம்முடைய திருவிழாக்களை வெறும் திருவிழாக்களாக மட்டுமே நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம்.. உண்மையில் திருவிழாக்கள் அழகானவை. அவை கண்கவர் அதிசயங்கள்.. ஆனால் கடல்சிங்கங்களான நாங்கள் வாழ்க்கையே திருவிழாவுக்கான தயாரிப்பு என்றே நம்புகிறோம்.. ஏனெனில் திருவிழாக்கள் எங்களுடைய கடல்சிங்க அடையாளத்தை உணரச் செய்கிறது.. நீங்கள் விரும்பினால் அதை கடல்சிங்கத்தன்மை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.. தொடர்ந்த இந்த நடவடிக்கையில் தான் சுயம் அறிதல் இருக்கிறது. சுயம் அறிதல் தான் இறுதி நடவ்டிக்கையின் உச்சகட்டம்..”

” எதை உறுதி செய்யப் போறீங்க..”

” மாட்சிமைமிக்க அந்தக் காட்சியை..”

அது உளறிக்கொண்டிருந்தது எதைப்பற்றி என்று தெரியாமலேயே நான் தொடர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அவர்கள் பேசுவார்கள். அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசி விடுவார்கள். நான் எப்போதும் கொஞ்சம் பின்வாங்கி அவர்களை முழுவதுமாக பேச விட்டு விடுவேன். கடல்சிங்கம் பேசி முடிக்கும்போது மணி இரண்டரையைத் தாண்டியிருந்தது. எனக்கு மிகுந்த அசதியாக இருந்தது.

” அவ்வளவு தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்..நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..”

என்று கடல்சிங்கம் அமைதியாகச் சொல்லி விட்டு சூடான தேநீரைக் குடித்து முடித்தது.

” நீங்கள் உதவியை எதிர்பார்க்கிறீர்கள்..”

” இல்லையில்லை.. நாங்கள் ஆன்மீக உதவியை எதிர்பார்க்கிறோம்..”

என்று திருத்தியது. நான் என்னுடைய மணிபர்ஸை எடுத்து அதிலிருந்து இரண்டாயிரம் யென் நோட்டுகளை எடுத்து அதற்கு முன்னால் வைத்தேன்.

” மன்னிக்கணும்.. இது அதிகமில்லை தான்.. நான் நாளைக்கு என்னோட இன்ஸ்சூரன்ஸைக் கட்ட வேண்டும்..அதோடு நியூஸ் பேப்பர் சந்தாவையும் கட்ட வேண்டும்..”

என்று சொன்னேன்.

” மிக்க நன்றி.. ஒவ்வொரு துளியும் உதவும்.. இந்த எண்ணம் தான் முக்கியம்..”

என்று கடல்சிங்கம் என்னுடைய வார்த்தைகளை கையை வீசித் தடுத்துக் கொண்டே சொன்னது.

போகும்போது ‘ கடல்சிங்கம் பற்றிய அறிக்கை ‘ என்ற சிறுபிரசுரத்தையும், ‘கடல்சிங்கங்கள் உருவகங்களா ?‘ என்று எழுதப்பட்ட ஸ்டிக்கரையும் கொடுத்து விட்டுப் போனது. ஸ்டிக்கரை ஒட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற செலிகா. நான் அதன் விண்ட்ஷீல்டின் மத்தியில் அழுத்தமாக ஒட்டி விட்டேன். அதைப் பார்க்கும்போது உண்மையில் பசையுள்ள ஸ்டிக்கரைப் போலத் தோற்றமளித்தது. அதனால் அவன் அதைக் கிழிப்பதற்குக் கஷ்டப்படுவான்.

நன்றி- மணல்வீடு

1 comment: