Wednesday, 27 August 2025

யார் இந்தப் பிள்ளையார்?

 

யார் இந்தப் பிள்ளையார்?



இந்து மதம் என்ற அழைக்கப்படும் வைதீக மதம் கடவுளரை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். உயர்நிலைத் தெய்வங்களான பிரம்மன், சிவன், விஷ்ணு, இந்திரன், போன்றவர்கள் ஒருவகை என்றால் இவர்களுக்குச் சேவை செய்யும் தெய்வங்களாக அனுமான், சண்டீகேஸ்வரன், சனி, சூரியன், சந்திரன்,ராகு, கேடு வகையறாக்கள் வெளியில் பரிவாரத் தெயவங்களாக இருக்கிறார்கள். பழைய காலத்தில் இவ்விரண்டு வகைத் தெய்வங்களையும் உயர்சாதியினரைத் தவிர சாமானியர்கள் நெருங்கமுடியாது. கோவில்களுக்குள் நுழைய முடியாது. எனவே உழைப்பாளிகள் தங்கள் வாழ்விலிருந்து நாட்டார் தெய்வங்களை உருவாக்கி வழிபட்டார்கள். ஆதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இயற்கையை வழிபட்டார்கள். மரம், செடிம் கொடி, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், என்று அனைத்து இயற்கைப் படைப்புகளையும் வழிபட்டார்கள்.

 ஆதிப்பூர்வக்குடிகள் இயற்கையை வழிபடுவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்போது ஆதிமனிதனின் பகுத்தறிவு குழந்தைப்பருவத்தில் இருந்தது. அப்போது தான் தொன்மங்களை இயற்கையிலிருந்து உருவாக்கினார்கள். தொன்மங்கள் என்பவை ஆதி மனிதனின் குழந்தைப் பருவக்கனவுகள் எனலாம். அந்தக் கனவுகளில் தான் எலி, புலி, யானை, கழுகு, குரங்கு, அணில், என்று விலங்குகளும், பறவைகளும், குலதெய்வங்களாகவும் குலக்குறியீடாகவும் மாறின.

எல்லாவற்றையும் பகிர்ந்து வாழும் இனக்குழு வாழ்க்கைக்காலம் முடிந்து நிலவுடமைக்காலம் தொடங்கும் போது தனியுடைமை உருவானது. குலங்களுக்களிடையே யுத்தங்கள் நடந்தன. வென்றவர்கள் தோற்றவர்களை மட்டுமல்ல, அவர்களுடைய குலதெய்வங்களையும் அடிமை கொண்டார்கள். இப்போது இயற்கை மையமாக இருந்த வழிபாட்டுமுறை மனிதமையமாக மாறியது. முன்னோர்கள், குலம் காத்த வீரர்கள், இனம் காத்த வீரர்கள், பழி வாங்கப்பட்டப்பட்டவர்கள், அகாலமரணம் அடைந்த பெண்கள், குழந்தைகள், என்று அவர்களுடைய வாழ்வில் எதிர்கொண்ட மரணங்களைத் தெய்வ உருவாக்கி வழிபட்டார்கள். அது மட்டுமில்லை. அரசுகள் உருவாகி பேரரசுகளாக வளர்ந்தபோது தங்கள் அரசை நிலை நிறுத்திக்கொள்ள வெகுமக்கள் வணங்கி வழிபட்ட நாட்டார் தெய்வங்களையும் பெருந்தெய்வ மதத்துக்குள் இணைக்கும் வழக்கமும் இருந்தது. இதன் வழியாக ஆளும் வர்க்கம் இத்தாலிய கம்யூனிச அறிஞர் கிராம்ஷி குறிப்பிடுகிற கலாச்சாரமேலாண்மையைப் ( மக்களின் ஒத்திசைவை ) பெறுகிறார்கள். அப்படி உருவான ஒரு நாட்டார் தெய்வமான யானையின் தலையும் மனித உடலும் கொண்ட பிள்ளையார் எப்படி பெருந்தெய்வ வழிப்பாட்டுக்குள் வந்தார்?

ஆரம்பத்தில் வைதீகமதம் பிள்ளையாரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிள்ளையாருக்கு வெகுமக்களிடம் மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டபிறகு சாமானிய மக்களின் வீடுகளிலும், தெருக்களிலும், முச்சந்திகளிலும் பிள்ளையார் தெய்வவழிபாடு பெருகியது. எந்தவொரு நாட்டார் தெய்வம் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகிறதோ அந்தத் தெய்வத்தை வைதீக மதக்கடலில் கரைத்து விடும் வைதீக மதத்தந்திரமே பிள்ளையாரையும் ஏன் முருகனையும் கூட வைதீக மதத்துடன் இணைத்தது. சிவன், பார்வதி தம்பதியினரின் புதல்வர்களாக மாற்றியது. ஏன் அவர்களை பிரம்மனின் புதல்வர்களாகவோ, விஷ்ணுவின் புதல்வர்களாகவோ மாற்றவில்லை என்ற கேள்வி வேறு ஒரு ஆய்வுக்குக் கூட்டிச் செல்லும்.

வைதீக மதத்துடன் இணைப்பதற்காக அதீத புனைவுகளை உருவாக்கி பிள்ளையாரை மேல்நிலையாக்கம் செய்தார்கள்.

கதை 1. – பார்வதி குளிக்கும் போது தன் உடலிலிருந்த அழுக்கை உருட்டி ஒரு மனித உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த அழுக்கோடு பார்வதியின் நறுமணத்தைலம் கலந்து அந்த உருவம் கரைந்து தண்ணீரோடு போய் கங்கையில் கலந்து விட்டது. கங்கை  கடலில் கலக்குமிடத்தில் அந்த தண்ணீரை மாலினி என்ற யானைத்தலையரக்கியைக் குடிக்கச் செய்தாள். அதனால் கருவுற்ற மாலினி பிள்ளையாரைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையை பார்வதி எடுத்துச் சென்று தன் மகனாக வளர்த்தாள்.

கதை 2. – பார்வதிக்குப் பிறந்த ஆண்குழந்தை சனியின் பார்வை பட்டு பிறந்தவுடனே தன்னுடைய தலையை இழந்து விட்டது. இதனால் வருந்திய பார்வதியைக் கண்டு இரக்கம் கொண்ட விஷ்ணு ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்து ஒட்டி உயிர் கொடுத்தார். இப்படியும் பிள்ளையார் பிறந்திருக்கிறார்.

கதை 3. – இமயமலை அடிவாரத்தில் சிவனும் பார்வதியும் யானை உருவம் கொண்டு கலவி செய்தார்கள். அதனால் யானைத்தலையுடன் பிள்ளையார் பிறந்தார். இப்படியும் பிறந்திருக்கிறார்.

கதை 4. – பார்வதியின் வயிற்றில் கருவாக இருக்கும் போது சிந்துரோன் என்ற அரக்கன் கருப்பையில் புகுந்து அந்தக் குழந்தையின் தலையைத் தின்று விட்டான். தலையில்லாமல் பிறந்த அந்தக் குழந்தை கஜசூரன் என்ற யானைத்தலை அரக்கனின் தலையைக் கொய்து தன் உடலில் பொருத்திக் கொண்டது. இப்படியும் பிள்ளையார் பிறந்திருக்கிறார்.

கதை 5 – மரகதமுனிவர் தன்னுடைய தவம் கலைந்து கண்களைத் திறந்தவுடன் அவர் கண்ட யானைகளின் கலவி அவருடைய உணர்ச்சிகளைத் தூண்டி அப்போது அங்கே வந்த விபுதை என்ற அசுரக்குலப்பெண்ணை யானையாக உருமாற்றி கலந்தார். இதனால் கஜமுகாசுரன் பிறந்தான். இவனைப் பிள்ளையார் கொன்று அவனுடைய தலையைக் கொய்து தன்னுடைய உடலில் பொருத்திக் கொண்டார். அவனைப் பெருச்சாளியாக்கித் தன்வாகனமாக்கினார். இப்படியும் பிள்ளையார் பிறந்தார்.

கதை 6---  சிவன் ஆசையுடன் பார்வதியைப் பார்க்கவரும்போது பார்வதி தன் உடல் அழுக்கில் உருவாக்கிய இளைஞனைக் காவலுக்கு நிறுத்தியிருந்தாள். அந்த இளைஞன் சிவனுக்கு அனுமதி மறுக்க அவனுடைய தலையை வெட்டி வீழ்த்தினார். செய்தி அறிந்த பார்வதி அழுது புலம்ப, சிவன் தன் சிவ கணங்களிடம் பார்க்கும் முதல் உயிர்னத்தின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொன்னார். சிவகணங்கள் முதலில் யானையைப் பார்த்ததால், அதன் தலையை வெட்டிக் கொண்டு வந்து அந்த இளைஞனின் தலையில் பொருத்தினார்கள். அதனால் அந்த இளைஞன் கண ஈசன் கணேசன் அதாவது கணங்களின் தலைவன் ஆனான். இப்படியும் பிள்ளையார் பிறந்தார்.

இந்த எல்லாக்கதைகளினூடாக இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிள்ளையார் யானைத்தலையையுடையவராக இருப்பதற்கான காரணம். இரண்டு எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணம்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்புவரை பிள்ளையார் வழிபாடு இருந்ததற்கான குறிப்புகள் வேதங்களிலோ, புத்தமத இலக்கியத்திலோ இல்லை. முதன்முதலாக குப்தர்கள் காலத்தில் ( கி.பி.320 – கி.பி. 551 ) தான் பிள்ளையார் உருவங்கள் தெரிவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கணபதி என்றால் கணங்களைக் காப்பவன், கணங்களின் தலைவன் எனலாம். ரிக் வேதத்தில் கணபதி என்ற வார்த்தை இருப்பதாக மேற்கத்திய ஆய்வாளர் குறிப்பிடுகிறார். கணம் என்றால் குலம் என்று கொள்ளலாம்.

மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாக இருந்திருக்கிறது. யானைக்கு மாதங்கி என்ற பெயரும் உணடு. தமிழ்நாட்டிலும் மாதங்கம் என்ற கூட்டம் உள்ளது. நீலகிரி மலையிலுள்ள குருபர்களின் உட்பிரிவில் ஒரு கூட்டத்துக்குப் பெயர் யானை.

அதேபோல எலிக்குலம் இருந்திருக்கிறது. மூசிகக்குலம் என்றால் எலிக்குலம் என்று அர்த்தம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்ட பழங்குடிக்குலம் எலியைக் குலக்குறியாகக் கொண்ட பழங்குடிக்குலத்தை வெற்றி கொண்டபோது தோற்ற குலத்தின் குலக்குறியை தங்கள் கடவுளின் வாகனமாக மாற்றியிருக்கிறது. வெற்றி பெற்ற பழங்குடிக்குலம் அரசாக விரிவடைந்தபோது யானை மனிதக்கடவுளாக மாறி விட்டது.

ஆனாலும் பிள்ளையாரை அவ்வளவு எளிதாக பார்ப்பனியம் ஏற்றுக் கொள்ளவில்லை. பிள்ளையாரை சூத்திரர்கள் கடவுள் என்று தான் விலக்கி வைத்திருந்தார்கள்.

மனுதர்மம் 3:164 –ல் நாய் வளர்ப்பவன், பறவைகளை விற்பவன், கன்னிப்பெண்ணைக் கெடுப்பவன், பிறரைத் துன்புறுத்துவோன், சூத்திரத்தொழில் செய்பவன், கணபதி போன்ற சிறு தெய்வங்களுக்கு யாகம் செய்பவன் இவர்கள் பித்ருக்களுக்குச் செய்யும் இழவு விருந்திலிருந்து விலக்கப்பட வேண்டும்.

கிரக சூத்திரத்தில் கண்பதியை தீமை செய்யும் கடவுளாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் வெகுமக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சாதி வேறுபாடின்றி அனைவரும் மிக எளிதாக அணுகக்கூடிய கடவுளாக, அவர்களே உருவாக்கிக்கொள்கிற கடவுளாக, அவர்களே அழித்து விடுகிற கடவுளாக, அவர்களின் வேண்டுதல்களைக் கேட்கிற கடவுளாக, அவர்கள் எடுக்கிற எல்லாமுயற்சிகளையும் தொடங்கி வைக்கிற கடவுளாக, மழை பெய்யாவிட்டால் தண்டிக்கிற கடவுளாக, குழந்தைகளின் அன்புக்குரிய கடவுளாக, பிள்ளையார் இருக்கிறார். வைதீக மதத்தில் வெளிவட்டத்திலிருந்த பிள்ளையாரை அரசியலுக்குள் இழுத்து வந்தது வைதீகப்பார்ப்பனீயம். அதன் மூலம் வெகுமக்களை தங்களுடைய இந்துத்துவ வலைக்குள் சிக்கவைத்து பிளவு படுத்துகிற தந்திரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 நம்முடைய பிள்ளையார் நன்மை தரும்பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் சாப்பிடுகிற பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் ஆசை ஆசையாகக் கொழுக்கட்டைச் சாப்பிடும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் சாணியிலும் வெல்லத்துண்டிலும், பச்சரிசி மாவிலும் இருக்கிற பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் குழந்தைகளுக்கு அட்சரம் சொல்லிக் கொடுக்கும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் குழந்தைகளுக்குப் பரீட்சையில் மார்க்கு வாங்கித் தருகிற பிள்ளையார்

நம்முடைய பிள்ளையார் காவியங்களை எழுதும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் அரசமரத்தையும் வேப்பமரத்தையும் காப்பாற்றும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் அனைத்து மக்கள் மீதும் நேசமும் ,பாசமும், அன்பும் நிறைந்த பிள்ளையார்.

பிள்ளையார் அரசியலிலிருந்து பிள்ளையாரைக் காப்போம்.

அரசியலிலிருந்து கடவுளரைக் காப்போம்.

நம் மக்களைக் காப்போம்.  

ஆதார நூல்கள் – 1. பிள்ளையார் அர்சியல்- .சிவசுப்பிரமணியன்

2. மனிதசமூக சாரம்ஜார்ஜ் தாம்சன்

3. மனுதர்ம சாஸ்திரம்

No comments:

Post a Comment