Monday, 13 January 2025

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் சண்டை

 

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் சண்டை

உதயசங்கர்



வெளியில் இடிச்சத்தம் கேட்டது. டம் டமார் டம டம டம் டம். தம்பி குணா பயந்து விட்டான். காதுகளைப் பொத்தினான். ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இத்தனை சத்தம் வானத்திலிருந்து வருகிறது? அவள் எதற்கும் பயப்படமாட்டாள். தம்பி சின்னப்பையன் தானே.

 வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தாள் ஆதிரை.. வானில் கருத்த மேகங்கள் குவிந்திருந்தன. ஒரு கருத்த மேகம் அவளுடைய பாட்டியைப் போல மாறியது.  அந்த மழைப்பாட்டி தன்னிடமிருந்த மழைக்கனிகளை மேகத்தட்டுகளில் அடுக்கிக் கொண்டிருந்தாள். எதற்காகத் தெரியுமா? பூமியில் பசியுடன் வாழும் இயற்கைக்காக என்று நினைத்தாள் ஆதிரை. ஆமாம் இந்த ஆண்டு முழுவதும் அவளுடைய ஊரில் மழை பெய்யவில்லை. நல்ல மழை பெய்யும் போல இருண்டிருந்தது. அப்போது தான் அது நடந்தது.

லேசான காற்று வீசியது.

பாட்டியிடம் குறும்பு செய்யவேண்டும் என்று காற்றுத்தாத்தா நினைத்தார். தூரத்து மலைகளிடம் சொன்னார். மலைகள் மரங்களிடம் சொல்லின. மரங்கள் கிளைகளிடம் சொல்லின. கிளைகள் இலைகளிடம் சொல்லின.

இலைகள் அசைந்தன. கிளைகள் அசைந்தன. மரங்கள் அசைந்தன. உடனே  காற்று வீசியது.

காற்றுத்தாத்தா அந்தக் காற்றை மேகங்களைப் பார்த்து ஊதினார்.

காற்றுத்தாத்தா ஊதிய காற்று மேகத்தட்டுகளில் மோதியது. மேகத்தட்டுகள் தடுமாறி அங்குமிங்கும் அலைமோதின. மழைப்பாட்டி அந்தத் தட்டுகள் ஓடி விடாமல் பிடித்தாள். ஆனாலும் ஒன்றிரண்டாய் மழைக்கனிகள் சிதறின. ஆதிரையின் நெற்றியிலும் கையிலும் இரண்டு மழைத்துளிகள் விழுந்தன. அந்தத்துளிகள் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தன. ஆதிரைக்கு புல்லரித்தது.

அவள் மீதும் காற்று வீசியது. காற்றுத்தாத்தா சிரித்தார். அவருடைய சிரிப்பு உஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ் என்று சுற்றியது. காற்றுத்தாத்தாவின் குறும்பைப் பார்த்து மழைப்பாட்டிக்குக் கோபம்.

அவர் காற்றுத்தாத்தாவிடம்,

“ விளையாடாதீங்க..என் மக்கள் பாவம் காத்துக் காத்துக்கிட்டிருக்காங்க..என்றார்.

காற்றுத்தாத்தா குறும்புடன்,

“ உன் மக்களிடம் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்று சொல்.. நான் விளையாட மாட்டேன்..என்றார்.

“ அறியாமையில் இருக்கிறார்கள் என் மக்கள்.. விரைவில் தெரிந்து கொள்வார்கள்.. ஒதுங்கிப் போங்கள்.. மேகத்தட்டுகளைச் சேகரிக்கிறேன்…

என்று மழைப்பாட்டி சொன்னார். ஆனால் காற்றுத்தாத்தா விடவில்லை. மீண்டும் மீண்டும் காற்றை ஊதிக் கொண்டேயிருந்தார். மேகத்தட்டுகள் அங்கும் இங்கும் ஓடின. கலைந்தன. அதன் கருப்பு நிறம் வெளுக்கத் தொடங்கியது.

மழை வராதோ?

நேற்று ஊரிலிருந்து வரும்போது ஆதிரையின் தாத்தா நம்மாழ்வார் விதைப்பந்துகளைக் கொடுத்திருந்தார்.  ஆதிரை இன்று அந்த விதைப்பந்துகளை குழி தோண்டி விதைக்கலாம் என்று நினைத்தாள். மழைப்பாட்டி இன்றும் ஏமாற்றி விடுவாளோ?

ஆதிரை அண்ணாந்து பார்த்தாள்.

“ அதோ பாருங்கள்..  என்றார் மழைப்பாட்டி.

ஆதிரை ஒரு மரக்கன்றை ஊன்றிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த காற்றுத்தாத்தா மகிழ்ச்சியில் ஒரு நொடி அமைதியானார். அந்த நேரத்தில் மழைப்பாட்டி மேகத்தட்டுகளைக் கவிழ்த்தார். மழைக்கனிகள் பூமியை நோக்கி பாய்ந்து வந்தன. சடசடவென்று ஆதிரையைப் பாராட்டிக் கை தட்டுகளைப் போல வந்து விழுந்தன மழைத்துளிகள்.

ஆதிரையின் நாவில் விழுந்த மழைக்கனி இனித்தது.

“ நான் தானே வெற்றி பெற்றேன்..என்று மழைப்பாட்டி விளையாட்டாகச் சொன்னார்.

“ நானும் தான்..என்று சிரித்தார் காற்றுத்தாத்தா. மேகங்களும் சிரித்தன.


நன்றி - சூரியனைத் தொட ஆசை

வெளியீடு - சுவடு பதிப்பகம்

 

 

No comments:

Post a Comment