1.கோழியைக்
காணோம்
உதயசங்கர்
கோழியூர்
வறண்ட நாடு. கோழி வளர்ப்பு தான் அந்த நாட்டின் தொழில். அந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும்
வீடுகளில் கோழிகளை வளர்த்தனர். ஆமைக்கோழி, கடக்கோழி, கம்பான் கோழி, கருங்கோழி, சம்பங்கோழி,
சைனாக்கோழி, சிலுப்பாக்கோழி, கழுகுக்கோழி, போந்தாக்கோழி, என்று எல்லாவகையான கோழிகளையும்
வளர்த்தனர். அந்தக் கோழிகளின் முட்டைகளை விற்று வரும் பணத்தில் வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள்
கோழியூர் நாட்டு ராஜா சேவலான் நகர்வலம் வந்தான். நாட்டைச் சுற்றிப்பார்த்து மக்கள்
எப்படி வாழ்கிறார்கள் என்று விசாரிப்பது தான் நகர்வலம். ராஜா சேவலானுடன் அமுக்கரான்
என்ற மந்திரியும், பிடுங்கரான் என்ற மந்திரியும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த
நாட்டின் கடைசியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குப் போனார்கள். ராஜா சேவலானுக்குப்
பசி. பசி வந்து விட்டால் தாங்க முடியாது. அவ்வளவு தான். உடனே திரும்பி அமுக்கரானையும்
பிடுங்கரானையும் பார்த்து
“ உடனே
அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..” என்று
கத்தினான். அமுக்கரானும் பிடுங்கரானும் குடிசைக்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு வயதான
பாட்டி இருந்தாள். அவளிடம்,
“ ஏய்,
கிழவி.. ராஜா வந்திருக்கிறார்.. இரண்டு நிமிடத்தில் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்..”
என்று
கத்தினார்கள். ஒரு நிமிடம் யோசித்தாள் பாட்டி. பிறகு குடிசைக்குப் பின்னால் இருந்த
தேக்கு மரத்திலிருந்து கீழே விழுந்த தேக்கிலையை எடுத்துக் கழுவினாள். மண்பனையில் இருந்த
நீராகாரத்தில் மிதந்து கொண்டிருந்த கேப்பைக் களி உருண்டைகளில் ஒன்றை எடுத்து இலையில்
வைத்தாள். பிறகு இலையின் மூலையில் உப்புக்கல் வைத்தாள். ஒரு பச்சை மிளகாயை வைத்தாள்.
ஒரு துண்டு கருப்பட்டியை வைத்தாள். ஒரு துண்டு நாரத்தங்காய் ஊறுகாயை வைத்தாள். அவ்வளவு
தான்.
“ ராஜாவை
வரச் சொல்லுங்கள்… அறுசுவை உணவு தயார்..” என்று
சொன்னாள் பாட்டி.
நெய்யில்
செய்த இனிப்புகள், கோழி சாப்ஸ், ஆட்டு ஈரல் வறுவல், மாட்டுக்கறி பிரியாணி, திராட்சை
ரசம் என்று எதிர்பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் சேவலான் ராஜா.
இலையைப்
பார்த்ததும் அவனுக்கு ஏமாற்றம். அவன் உடனே,
“ ஏ மந்திரிகளே..
என்ன இது? “ என்று கோபத்துடன் கேட்டான். உடனே அமுக்கரான் தலையை நெஞ்சு வரை குனிந்து,
“ ராஜா..
இந்தக் கிழவியிடம் இரண்டு கருங்கோழிகள் மட்டுமே இருக்கின்றன.. அந்த முட்டைகளை விற்றுத்தான்
அவள் வாழ்க்கை நடத்துகிறாள்.. அந்தக் கோழிகள் மாதம் பதினைந்து முட்டைகள் மட்டுமே இடும்..
அதை விற்றால் கேப்பை தான் வாங்க முடியும்.. கேப்பைக்களி உணவு தான் சாப்பிட முடியும்..”
என்று
சொன்னான். அதைக் கேட்ட சேவலான் ராஜா,
“ அப்படி
என்றால் என்னுடைய நாட்டு மக்கள் இப்படித்தான் சாப்பிடுகிறார்களா? “ என்று கேட்டான்.
அதற்கு பிடுங்கரான் மந்திரி முழங்கால் வரை தலைகுனிந்து,
“ எல்லாவற்றுக்கும்
நாட்டுக் கோழிகள் தான் காரணம்.. ராஜாவே.. நாம் வெளிநாட்டிலிருந்து புதிய செயற்கைக்கோழிகளை
வாங்கிக் கொடுக்கலாம்.. அந்தக் கோழிகள் தினசரி ஐந்து முட்டைகள் போடும்.. மாதம் நூற்றைம்பது
முட்டைகள் கிடைக்கும்.. மக்களும் அறுசுவை உணவு சாப்பிடுவார்கள்.. “
என்று
சொன்னான். சேவலான் ராஜா யோசிக்கவே இல்லை.
“ இது
நல்ல யோசனையாக இருக்கிறதே..” என்றான்.
அப்போது அமுக்கரான் மந்திரி,
“ ஆனால்
அதில் ஒரு சிக்கல்..” என்றான்.
“ என்ன
சிக்கல்..”
“ வெளிநாட்டுக்
கோழிகளை வளர்க்கும் போது நாட்டுக்கோழிகளை வளர்க்கக்கூடாது.. அப்படி வளர்த்தால் மக்கள்
வெளிநாட்டுக் கோழிகளைச் சரியாகக் கவனிக்க மாட்டார்கள்… “
“ அவ்வளவு
தானே… ஒரு நாட்டுக்கோழிக்கு இரண்டு வெளிநாட்டுக்கோழி என்று முரசறைந்து அறிவிக்கச் சொல்லுங்கள்..
நாட்டுக்கோழிகளை நாம் சாப்பிடுவோம்..ஹ்ஹ்ஹா ஹ்ஹா..”
என்று
சொல்லிச் சிரித்தான் சேவலான் ராஜா.
மறுநாள்
அரண்மனை அறிவிப்பு வந்தது. அறிவியலறிஞர்கள் எச்சரித்தார்கள். இயற்கை ஒவ்வொரு இடத்துக்கும்
ஏற்ற வகையில் உயிர்களைப் படைத்திருக்கிறது. எனவே இயற்கைக்கு மாறாக எதையும் செய்யக்கூடாது
என்று சொன்னார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை.. கூட்டம் கூட்டமாக நாட்டுக்கோழிகளைக்
கொண்டு போய் அரண்மனையில் கொடுத்தார்கள். அரண்மனையில் தினம் கோழிக்கறி விருந்து தான்.
பதிலுக்கு
பெரிய பெரிய வெளிநாட்டுக் கோழிகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவை எல்லாம் குளிர்
நாடுகளில் வளர்க்கப்பட்டவை. கோழியூரோ வெப்பநாடு.
வெளிநாட்டுக்கோழிகள்
பொதுக் பொதுக் என்று குண்டு குண்டாய் இருந்தன. அதே போல எல்லாம் ஒரே நிறத்தில் இருந்தன.
ஒரே சாயலில் இருந்தன.
மக்களுக்குக்
குழப்பம்.
அடுத்த
சில நாட்களில் கோழியூர் நாட்டில் ஏகப்பட்ட சண்டைகள் நடந்தன. எது யாருடைய கோழி என்று தெரியவில்லை. என்னுடைய கோழி
உன்னுடைய கோழி என்று சண்டை போட்டார்கள்.
வெளிநாட்டுக்கோழிகள் வெளியில் போய் மேய்வது கிடையாது.
உட்கார்ந்த இடத்திலேயே “ க்க்கோக்க்க்கோ..” என்று
கூவி உணவு கேட்டது. இருபத்திநான்கு மணி நேரமும் தின்று கொண்டேயிருந்தன அந்தக் கோழிகள்.
மக்களால் தீனி போட்டு முடியவில்லை.
பத்து
நாட்களில் கோழியூரின் வெப்பம் தாங்க முடியாமல் ஒவ்வொரு கோழியாகச் செத்துப் போய் விட்டன.
மொத்தத்தில்
இந்தப் பத்து நாளில் வெளிநாட்டுக்கோழிகள் ஐந்து முட்டைகளே இட்டன.
ஒரு மாதத்துக்குள்
எல்லா வெளிநாட்டுக்கோழிகளும் இறந்து விட்டன. இப்போது கோழியூர் நாட்டில் கோழிகளே இல்லை.
மக்களுக்குப் பிழைக்க வழியில்லை. கூட்டம் கூட்டமாக அவர்கள் கோழியூரை விட்டு வெளியேறினார்கள்.
கோழியூர் நாட்டில் யாருமில்லை.
கோழியூர்
நாட்டு ராஜாவான சேவலானும், மந்திரிகள் அமுக்கரானும், பிடுங்கரானும் கூட வெளிநாட்டுக்குப்
போய் விட்டார்கள். இந்தத் திட்டமே தவறு என்று எச்சரித்த அறிவியல் அறிஞர்களும் வேறு
நாடுகளுக்குப் போய் விட்டார்கள்.
ஆனால்
ஊரின் கடைசியில் குடிசை விட்டில் இருந்த பாட்டி எங்கும் போகவில்லை. அவள் ரகசியமாக பாதுகாத்து
வந்த கருங்கோழிகளுடனும், பத்துக் குஞ்சுகளுடனும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
“ அட
கோட்டிக்காரப் பயல்களா? “ என்று அவ்வப்போது சொல்லிச் சிரிப்பாள்.
அவள்
யாரைச் சொன்னாள் என்று உங்களுக்கு தெரிகிறது அல்லவா?
2.
No comments:
Post a Comment