என் திறமை என் அழகு
உதயசங்கர்
அது பெரிய பெரிய மரங்கள் அடர்ந்திருக்கும் பறவைகளின்
காடு. அங்கே எல்லாவிதமான பறவைகளும் இருந்தன. என்னென்ன பறவைகள் இருந்தன தெரியுமா?
காகம், குயில், மயில், மைனா, சிட்டுக்குருவி, பூஞ்சிட்டு,
தேன் சிட்டு, தையல் சிட்டு, தவிட்டுக்குருவி, கானாங்கோழி, கின்னிக்கோழி, வான் கோழி,
நாரை, பனங்காடை, காடை, கௌதாரி, மரங்கொத்தி, கொக்கு, நீர்க்கோழி, பருந்து, கழுகு, வல்லூறு,
கருங்குருவி, ஆக்காட்டிக்குருவி, காட்டுப்புறா, மணிப்புறா, மரகதப்புறா,… இப்படி நிறையப்
பறவைகள் அங்கே வசித்தன.
காலையிலும் மாலையிலும் ஒரே சத்தமாக இருக்கும். காலையில்
இரை தேடிப் புறப்படும்போது ஒன்றுக்கொன்று பேசிக் கொள்ளும்.
ஏய்.. அருவிப்பக்கம் போகாதே.. அங்கே மனிதர்கள் நடமாட்டம்
இருக்கு..
சொல்றதக் கேளு கண்ணு.. காட்டைத் தாண்டிப் போகதடா..
சூரியன் உதிக்கும் திசைப்பக்கம் போ.. நிறைய உணவு
கிடைக்கும்
தெற்கே ஒரு நரி செத்துக்கிடக்கு.. போவோம் வாங்க
சுத்தப்படுத்துவோம்..
கூட்டை விட்டு கீழே இறங்கக்கூடாது.. பாம்பு பிடிச்சிட்டுப்
போயிரும்..
இன்னும் உனக்கு இறக்கை பெரிசாகட்டும்.. அதுக்குப்
பிறகு கூட்டிட்டுப் போறேன்..
அந்தப் பெரிய மருதமரத்துக்கு உடம்பு சரியில்லையாம்..
என்ன மறுபடியும் அதோட தோல்ல பூச்சிகள் பெருகியிருக்கும்.. நீ போய் பார்த்து சுத்தப்படுத்திரு..
இப்படி பலவிதமான உரையாடல்கள் நடக்கும். அதே போல
மாலையில் எல்லாரும் பல திசைகளிலிருந்தும் கூட்டுக்கும் கிளைகளுக்கும் வருவார்கள். அப்போதும்
மற்ற காடுகளில் நடந்ததையும், ஊர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நடப்பதையும் பேசிக்
கொள்வார்கள். புதிதாகப் பறக்கத் தொடங்கிய குஞ்சுகளுக்குப் பாடம் நடத்துவார்கள். அவர்களுடைய
மொழியைச் சொல்லிக் கொடுப்பார்கள்.
இப்படி அந்தக் காடே கோலாகலமாக, கொண்டாட்டமாக இருக்கும்.
வருடத்துக்கு ஒரு முறை அவர்கள் ஆண்டுவிழா நடத்துவார்கள். அப்போது பறக்கும் போட்டி,
ஓடும் போட்டி, தாவும் போட்டி, ஆடும் போட்டி, தின்னும் போட்டி, சுத்தம் செய்யும் போட்டி,
பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, உதவும் போட்டி, அழகுப்போட்டி என்று நடத்துவார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறுவார்கள்.
காகம் எல்லாப்போட்டிகளிலும் கலந்து கொள்ளும். ஆனால்
ஒரு போட்டியிலும் வெற்றி பெறாது. ஆனாலும் விடாமல் முயற்சி செய்யும். மற்ற பறவைகள் எல்லாம்
காகத்தை இளக்காரமாகப் பார்க்கும். கேலி செய்யும்.
அந்த ஆண்டு வேறு ஒரு காட்டிலிருந்து அன்றில் பறவையை
நடுவராக அழைத்திருந்தார்கள். அன்றில் காகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தது. சோர்ந்து
போய் தாழ்வு மனப்பான்மையுடன் காகம் ஓரமாய் ஒதுங்கி நின்றது. வெற்றி பெற்ற பறவைகள் எல்லாம்
ஆரவாரமாய் கூச்சல் போட்டன. ஒவ்வொரு பறவை வெற்றிக்கூச்சல் போடும் போதும் தலையைத் தூக்கிப்
பார்க்கும் காகம். பின் மீண்டும் தலையைக் குனிந்து கொள்ளும்.
எல்லாப்போட்டிகளும் முடிந்தன. அப்போது அன்றில் கூவியது,
“ இதுவரை நடந்த போட்டிகள் சாதாரணமானவை.. இப்போது
உங்களுக்கு ஒரு புதிய போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன்.. யார் அறிவாளி என்ற
போட்டி தான். நீங்கள் என்ன தான் ஆடினாலும் பாடினாலும் ஓடினாலும் புத்திசாலியாக இல்லையென்றால்
எந்த உபயோகமுமில்லை.. எனவே அறிவாளிப்போட்டியில் வெற்றி பெற்றவர் தான் இந்த ஆண்டு சேம்பியன்..
“
பறவைகள் முணுமுணுத்தன. ஆனாலும் ஏற்றுக் கொண்டன.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பறவையிடமும்
ஒரு பழம் கொடுக்கப்பட்டது. பறவைகள் அந்தப் பழத்தை ஒளித்து வைக்க வேண்டும். பிறகு நாளை
அந்தப் பழத்தை ஒளித்து வைத்த இடத்திலிருந்து எடுத்து வரவேண்டும். யார் முதலில் எடுத்து
வருகிறார்களோ அவர்களே சேம்பியன்.
என்று முரசறைந்து சொல்லச்சொன்னது அன்றில். மறுநாள்
எல்லாருக்கும் ஒரு அத்திப்பழம் கொடுக்கப்பட்டது. எல்லாரும் அத்திப்பழத்தை வாயில் கௌவிக்கொண்டு
பறந்து சென்றன.
ஆனால் ஒரு பறவையாலும் ஒளித்து வைக்க முடியவில்லை.
இல்லை தெரியவில்லை. அங்கங்கே போட்டு விட்டுப் போய் விட்டன. மறுநாள் பறவைகள் எல்லாம்
தேடிப் பார்த்தன. ஒருவருக்கும் ஞாபகம் இல்லை. ஒவ்வொரு இடமாகத் தேடின. ம்ஹூம்..
மாலைவரை தேடிப்பார்த்து விட்டு போட்டி நடுவரிடம்
சொல்வதற்காகத் திரும்பிச் சென்றன. அங்கே பார்த்தால் ஆச்சரியம். யாரை தாழ்வாக நினைத்தார்களோ
அந்தக் காகம் தன் வாயில் அத்திப்பழத்துடன் நின்றது.
அப்போது அன்றில் சொன்னது.
“ பறவைகளே யாரையும் தாழ்வாகவோ, குறைவாகவோ நினைக்கக்கூடாது….எல்லாரிடமும்
ஒரு திறமை இருக்கும். காகம் நம் அனைவரைக் காட்டிலும் அறிவாளி. அதனால் தான் காகத்தைப்
பற்றி ஏராளமான கதைகளை மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்…இந்த ஆண்டு சேம்பியன் காகம்
தான் என்று நான் அறிவிக்கிறேன்…”
எல்லாப்பறவைகளும், “ சேம்பியன் காகம் வாழ்க! “ என்று
பறவைக்காடே அதிரும்படி கத்தின.
Sup
ReplyDelete