Tuesday, 7 January 2025

மழை வருமா?

 

மழை வருமா?

உதயசங்கர்



போவர் பறவை வானத்தைப் பார்த்தது. வெள்ளைவெளேரென்று இருந்தது மேகம். மழைக்கான அறிகுறியே இல்லை. இந்த ஆண்டாவது மழை பெய்யுமா? போவர்   தன்னுடைய அழகான கருநீல நிறச் சிறகுகளை உலுப்பியது. எங்கிருந்தோ ஒரு குயிலின் குரல் கேட்டது.

கூக்க்கூக்க்க் கூ 

அதை அப்படியே மிமிக்ரி செய்தது போவர்.

கூக்க்கூக்கூ கூ 

போவருக்கு எரிச்சல். அப்புறம் என்ன? மழை பெய்தால் தான் இந்த ஆண்டு போவருடன் இணை சேருவேன் என்று ஆவே சொல்லியிருக்கிறது. போன  ஆண்டும் மழையில்லை. இந்த ஆண்டும் மழை இல்லை என்றால் அவர்களுடைய வாரிசுகள் உருவாகாது. இப்படியே போனால் இனமே அழிந்து விடும்.

 அங்கும் இங்கும் குதித்தது போவர். அது தன்னுடைய இணை ஆவேக்காக அழகான அறையைக் கட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வாரமாகக் கட்டிக்கொண்டிருக்கிறது.

காய்ந்த குச்சிகளை இருபக்கமும் வளைவு மாதிரி ஊன்றியது. இலைகள், பூக்கள், பெரணிச்செடிகள், கொடிகளின் தளிர்களைக் கொண்டு தரையை அலங்காரம் செய்தது. வீட்டைச் சுற்றி நீலநிறத்தில் என்ன கிடைத்தாலும் சரி கொண்டு வந்து ஓவியம் போல அலங்கரித்தது. பிளாஸ்டிக் பாட்டில் மூடி, ஸ்டிரா, கண்ணாடித்துண்டுகள், பாசிகள், என்று என்ன கிடைத்தாலும் சரி கொண்டு வந்து போட்டது. கண்ணாடித்துண்டுகளைச் சூரிய வெளிச்சம் படும் திசையில் வைத்தது. முதலில் Y மாதிரி ஆவே வரும் வழியை அமைத்தது. தூரத்தில் நின்று பார்த்தது. அதற்குத் திருப்தியில்லை. பிறகு அதைக் கலைத்து S மாதிரி மாற்றியது. அதையும் பிற்கு W ஆக மாற்றியது.

இப்போது பரவாயில்லை என்று தோன்றியது. ஆவேக்காக ரிகர்சல் பார்த்து வைத்திருந்த நடனத்தை ஆடிப் பார்த்தது.

இடது பக்கம் இரண்டு அடி.. வலது பக்கம் இரண்டடி முன்னால் இரண்டடி பின்னால் இரண்டடி அப்போதெல்லாம் சிறகுகளை அசைக்க வேண்டும் தலையை கம்பீரமாகத் திருப்பி ஆவேயைப் பார்க்க வேண்டும்.

நடனமும் வீடும் பிடித்திருந்தால் தான் ஆவே இணை சேர சம்மதிக்கும். அப்போது ஆவேயின் குரல் கேட்டது. மறுபடியும் ஒரு தன்னுடைய வீட்டைப் பார்த்தது. அழகாக இருந்தது. ஆனால் இன்னும் ஒரு பாசிமணி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தது. உடனே வேகமாகப் பறந்து சென்றது.

அப்போது போவருக்கு சற்று தூரத்தில் இதே மாதிரி வீடு கட்டிக் கொண்டிருந்த பாசரி போவரின் கூட்டிலிருந்து சில குச்சிகளையும் சில கண்ணாடித்துண்டுகளையும் திருடிக் கொண்டு போய் விட்டது.

அதுவும் ஆவேக்காகத் தான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறது. போவர் பறவைகள் ஆண்டுக்கு ஒருமுட்டை தான் இடும். அதனால் யாருடன் இணை சேருவது என்பதில் ஆண்பறவைகள் போட்டி போடும் அதற்காகத் தான் இந்த் அலங்காரங்கள்.

ஆவே பறந்து வந்தது. முதலில் பாசரி கட்டிய கூட்டைப் போய்ப் பார்த்தது. ஊன்றி வைத்திருந்த குச்சிகளை அசைத்துப் பார்த்தது. வெளியே அலங்கரிப்பட்ட ஆபரணங்களை ( கண்ணாடித்துண்டுகள், பாசிமணிகள், பாட்டில் மூடிகள் ) பார்த்தது.

ஆவே வந்ததும் பாசரி நடனம் ஆடியது. மோசமில்லை. நன்றாகவே ஆடியது.

ம்ம் பரவாயில்லை..

ஆவே அங்கிருந்து போவரின் வீட்டுக்கு வந்தது. போவரின் வீட்டில் சில குச்சிகள் ஆடிக் கொண்டிருந்தன. அலங்காரங்கள் ஓகே. சில இடங்களில் ஒன்றுமே இல்லை. போவரை விட பாசரி பரவாயில்லை என்று நினைக்கும்போது போவர் நடனம் ஆடத் தொடங்கியது.

அப்படியொரு நடனத்தை இதுவரை ஆவே பார்த்ததில்லை. இடது பக்கமும் வலதுபக்கமும் முன்னும் பின்னும் போய் வந்து சிறகுகளை அடித்து கூவிக் கொண்டே ஆடியது போவர்.

கழுத்தைத் தூக்கி ஆவேயைப் பார்த்தபோது என்ன கம்பீரம்! அந்தக் கருநீல நிறக்கழுத்தின் ஒயிலான அசைவில் அசந்து போனது ஆவே.

போவருக்கு சம்மதம் சொல்லி விடலாம் என்று நினைத்தது. அப்போது தான் மழை ஞாபகத்துக்கு வந்தது.

உடனே வெளியே பறந்து சென்று வானத்தைப் பார்த்தது. வானத்தில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லை.

க்ராவ் க்ராவ் மன்னித்து விடு போவர்.. மழை இல்லை என்றால் பூக்களோ, காய்களோ, கனிகளோ கிடைக்காது.. நம்முடைய குழந்தைகள் பசியினால் சாகநேரிடும்.. அதைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை.. அடுத்த ஆண்டு பார்க்கலாம்

என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது. போவரும் பாசரியும் ஆவே பறந்து போவதையே பார்த்துக் கொண்டு நின்றன.

இன்னும் ஒரு ஆண்டு காத்திருக்கவேண்டும். அதுவரை அவை உயிருடன் இருக்க வேண்டும்.

க்ளவ்.. குக்கூ..கா காக்கா.. கிளாவ்.. ட்வீக் ட்வீக்..

மனிதர்கள் உருவாக்கிய காலநிலை மாற்றத்தினால் தான் மழை பொய்க்கிறது என்பதை யாராவது போவருக்கும் பாசரிக்கும் ஆவேக்கும் சொல்லுங்களேன்.

 

 நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

No comments:

Post a Comment