Saturday, 11 January 2025

மாயக்காட்சி

 

மாயக்காட்சி

உதயசங்கர்





ஓடு ஓடு ஓடு.. ‘ என்று கத்தியது அம்மா

அவ்வளவு தான்

தலை தெறிக்க குட்டி மான் ஓடியது

எவ்வளவு தூரம் ஓடியது என்று தெரியவில்லை. ஒரு புதருக்கடியில் நின்று அங்குமிங்கும் பார்த்தது. பயத்தில் நெஞ்சு பட பட என துடித்தது. அம்மாவைக் காணவில்லை

லேசாய் கனைத்தது. பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. மறுபடியும் ஓட வேண்டுமோ? மான் குட்டிக்குக் கால்கள் நடுங்கின

ஓடுவதற்காகக் கால்களைத் தூக்கியது. அதற்குள் அம்மாவின் வாசனை குட்டி மானுக்குத் தெரிந்தது. உடனே குட்டி மான் குரல் கொடுத்தது. 

அம்மாவின் குரல்  காற்றில் பறந்து வந்தது.

குட்டி மானுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அம்மாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தது. குட்டி மானின் முகத்தோடு முகம் வைத்து உரசியது. அதன் நெற்றியில் நாவினால் நக்கிக் கொடுத்து ஆற்றுப்படுத்தியது.

குட்டிமானுக்கு இனி பயமில்லை. அம்மா வந்து விட்டாள்.

அம்மா ஏன் ஓடச் சொன்னீங்க? “

புலியின் வாசனை அடிச்சதும்மா..கொஞ்சம் அசந்திருந்தால் புலி அடிச்சிக்கும்..”

மானின் உடல் நடுங்கியது.

புலியே இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். நாம் எந்தப் பயமும் இல்லாமல் வாழலாம் இல்லையா .”

குட்டி மான் அம்மாவின் காதருகே முணுமுணுத்தது.

அம்மா குட்டிமானைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் சிரிக்கிறீங்க? “

அங்கே பாரு..”

குட்டி மான் நிமிர்ந்து பார்த்தது. அங்கே ஒரு காடு தெரிந்தது.

அந்தக் காட்டில் புலியோ, நரியோ, சிங்கமோ, ஓநாயோ, இல்லை.

கூட்டம் கூட்டமாய் மான்கள் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்தன.

கொய் கொய் என்று மான்கள்.  எங்கு பார்த்தாலும் மான்கள். நிற்க இடமில்லை. உட்காரமுடியவில்லை.

மான்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. உணவில்லாமல் சண்டை போட்டன. மான்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியது.

காட்டில் புல் இல்லை.

செடி இல்லை.

கொடி இல்லை.

நிழலுக்குப் புதர்கள் கூட இல்லை.

மான்களின் தீராதபசியில் காடு அழிந்து விட்டது.

மான்கள் உணவில்லாமல் ஒவ்வொன்றாய் மயங்கி விழுந்து இறந்தன. மான்கள் மட்டுமா?

இலை தழை புல் பூண்டுகள் இல்லை. அதனால் அவற்றில் வாழும் புழு, பூச்சிகள் இறந்தன.

புழு, பூச்சிகளைச் சாப்பிடும் பறவைகள் இறந்தன.

விலங்குகள் இறந்தன. 

பூச்சிகள் இல்லை என்பதால் மகரந்தசேர்க்கை நடக்கவில்லை.

மகரந்தச்சேர்க்கை நடக்காததினால் பூக்கள் பூக்கவில்லை.

காய்கள் காய்க்கவில்லை.

கனிகள் இல்லை.

கனிகள் இல்லாததால் விதைகள் இல்லை.

விதைகள் இல்லாததால் புதிய மரங்கள் முளைக்கவில்லை.

இருந்த மரங்களும் இறந்தன.

மனிதர்களும் இறந்தனர்.

அனைத்து உயிர்களும் இறந்தன.

பூமி பாலைவனமாகி விட்டது.

குட்டி மானின் கண்ணில் கண்ணீர்.

அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. தலையை ஆட்டி அந்தக் காட்சியை அழித்தது. குட்டிமானின் வாயிலிருந்து,

அம்மா எல்லோரும் இருக்கட்டும்ம்மா. “

என்ற சொற்கள் வந்தன.

தூரத்தில் புலியின் உறுமல் கேட்டது.

குட்டிமான் துள்ளிக்குதித்தது

இனி எதற்கும் பயமில்லை.

நன்றி - சூரியனைத் தொட ஆசை

வெளியீடு - சுவடு பதிப்பகம்


 

 

 

1 comment:

  1. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை கண்முன்னே காட்டியுள்ள மிக அருமையான கதை.

    ReplyDelete