சூரியனைத்
தொட ஆசை
உதயசங்கர்
நரியூர் காட்டில் நரிகள் ஏராளமாக வாழ்ந்து வந்தன.
நரிகளின் கூட்டம் அதிகமானதால் உணவு கிடைக்கவில்லை. குட்டிநரி கூர்ப்பன் பக்கத்துக் காடுகளுக்கு உணவு தேடிச் சென்றது. நரிகள் மோப்பசக்தியினால் தான் தங்களுடைய உணவைக் கண்டு பிடிக்கும்.
கோழி, முயல், காட்டெலி, காடை, கௌதாரி, காட்டுப்புறா,
தவிட்டுக்குருவி, என்று இரையை வேட்டையாடிச் சாப்பிடும். எதுவும் கிடைக்கவில்லை
என்றால் பல்லி, பூச்சிகள், என்று எது கிடைத்தாலும் சாப்பிடும்.
குட்டி நரி கூர்ப்பன் தலையைக் குனிந்தபடி நடந்தது. தரையை முகர்ந்து பார்த்தது. காற்றில் மூக்கை நீட்டி காற்றை முகர்ந்தது. அப்படித்தான் உணவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும்.
அப்போது ஒரு குட்டிச்செம்மறி
ஆட்டின் வாசனை காற்றில் வந்தது. தரையில் அதன் புழுக்கைகளும் கிடந்தன. குட்டிநரி கூர்ப்பனுக்கு
மகிழ்ச்சி. அப்படியே அந்த வாசனையைப் பிடித்துக் கொண்டே போனது.
” மே மே மே “ என்ற குட்டி ஆட்டின் சத்தம் கேட்டது. ஆகா! நெருங்கி விட்டோம். எச்சரிக்கையாக ஒரு புதருக்குப் பின்னால் குட்டிநரி கூர்ப்பன் பதுங்கியது. அதன் கண்களில் குட்டிச்செம்மறி ஆடு தெரிந்தது. உடனே வாயில் எச்சில் ஊறியது. இன்று நல்லவேட்டை என்று நினைத்தது.
குட்டிச்செம்மறி ஆடு குனிந்து
புல் மேயும்போது பாய்ந்து விடலாம் என்று காத்திருந்தது.
ஆனால் குட்டிச்செம்மறி
ஆடு குனியவில்லை. அது அண்ணாந்து பார்த்துக் கொண்டே “ மே மே மே மே “ என்று கத்தியது.
துள்ளிக்குதித்தது. அதற்கு மேல் குட்டிநரி கூர்ப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நேரே குட்டிச்செம்மறி ஆட்டுக்கு முன்னால் போய் நின்றது.
தன்னைப் பார்த்ததும் குட்டிச்செம்மறி ஆடு அதிர்ச்சி அடையும் என்று நினைத்தது. ஆனால் குட்டிச்செம்மறி ஆடு நரியைச் சாதாரணமாக பார்த்துவிட்டு மறுபடியும் துள்ளிக்குதித்தது.
எதையோ பிடிப்பதைப் போலத் துள்ளிக்குதித்தது. ஆனால் மேலே எதுவும் இல்லை. குட்டிநரி கூர்ப்பனுக்குக்
குழப்பம்.
“ ஏய்! ஆட்டுக்குட்டி.. என்ன பயமில்லையா? “ என்று கத்தியது. ஆனால் குட்டிச்செம்மறி ஆடு அதைக் கவனிக்காமல் குதித்துக் கொண்டே இருந்தது.
ஆச்சரியப்பட்ட குட்டிநரி கூர்ப்பன்,
“ ஏய் என்ன தான் செய்றே?
“ என்று கேட்டது.
“ மே மே மே நான் அந்தச்
சூரியனைத் தொடப் போறேன்..” என்று கத்தியது குட்டிச்செம்மறி ஆடு.
அப்போது தான் முதல் முறையாக குட்டிநரி கூர்ப்பன் நிமிர்ந்து பார்த்தது. அதிசயமாக இருந்தது.
அங்கே ஒரு சூரியன் ஒளிவீசிக்
கொண்டிருப்பதைப் பார்த்தது.
பந்து மாதிரி இருந்த சூரியன் குட்டி நரி கூர்ப்பனை “ வா வா வா “ என்று அழைத்தது.
இது எப்படி இங்கே வந்தது?.
இத்தனை நாளாக பார்க்கவில்லையே.? என்று நினைத்தது குட்டிநரி கூர்ப்பன்.
அதற்கும் சூரியனைத்
தொட வேண்டும் என்று ஆசை வந்தது.
பசியை மறந்தது.
குட்டிச்செம்மறி ஆட்டை
மறந்தது.
குட்டிநரி கூர்ப்பனும்
குதித்தது.
குட்டிச்செம்மறி ஆடும்
குதித்தது.
ஊ ஊ ஊ ஊ ஊ என்று மகிழ்ச்சியில்
ஊளையிட்டது குட்டி நரி கூர்ப்பன்.
மே மே மே மே என்று குட்டிச்செம்மறி
ஆடு கத்தியது.
குட்டிச்செம்மறி ஆட்டின்
கண்களில் சூரியன் தெரிந்தது.
குட்டிநரி கூர்ப்பனின்
கண்களில் சூரியன் தெரிந்தது.
வானத்திலிருந்து சூரியன்
அவர்களைப் பார்த்துச் சிரித்தது.
காட்டில் இதுவரை காணாத
ஒளிவெள்ளம் பாய்ந்தது.
நன்றி - சூரியனைத் தொட ஆசை
வெளியீடு - சுவடு பதிப்பகம்
தன் சாதுர்யத்தால் தன் இயல்பில் தன்னை வென்ற செம்மறி ஆடும்
ReplyDeleteபயத்துடன் நரியின் ஏமாற்றமும்
இரண்டும் எட்டாத சூரியனை பார்த்து தொட முயற்சி செய்து மகிழ்ச்சி யோடு களியாட்டம் ஆடுவது
முடியாததையும் முடியும் என்ற எண்ணம் வைத்து முன்னேறிச்செல் என்ற படிப்பினையை தருகிறது நன்றி தோழர் சிறப்பு.