மரணத்தை
விரட்டிய சிங்கம்
உதயசங்கர்
சிங்கத்துக்கு வயதாகி விட்டது.
முன்பு போல ஓடவோ, பாய்ந்து வேட்டையாடவோ முடியவில்லை. கால்களில் சக்தியில்லை. கடைவாய்ப்பற்கள் விழுந்து விட்டன. பிடதியில் இருந்த முடியும் உதிரத் தொடங்கி விட்டது. கண்பார்வை வேறு மங்கி விட்டது. எழுந்து நடக்க முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடித்தான் நடந்தது.
ஒரு பெரிய கலைமானை வேட்டையாடித் தின்ற காலம் முடிந்து விட்டது. இப்போது அருகில்
செல்லும் காட்டெலி கூட நின்று வக்கணை வழித்துக் கொண்டு போகிறது. ஏதோ சிங்கத்தின் வாரிசுகள்
வேட்டையாடித் தின்று விட்டு மீதமாய்க் கிடக்கிற வேட்டைக்கறியை அப்படியே முழுங்கி விடும்.
பல சமயங்களில் அது செரிப்பதுமில்லை.
“ சீக்கிரம்
மரணம் வந்தால் நல்லது..” என்று
நினைத்தது கிழட்டுச்சிங்கம். அடுத்தநொடி மங்கலான கண்களுக்கு முன்னால் ஒரு கம்பீரமான
சிங்கம் தெரிந்தது. கிழட்டுச்சிங்கம் இளமையாக இருந்த போது இருந்த மாதிரியே இருந்தது
அந்தச் சிங்கம்.
“ கர்ர்ர்
யாருப்பா.. நீ? “ என்று கேட்டது கிழட்டுச்சிங்கம்.
“ நானா..
நீங்கள் இப்போது அழைத்தீர்களே.. மரணம்.. அது நான் தான்..”
” அப்படியா
என்ன விஷயம்? எதுக்கு வந்தே? “ என்று கிழட்டுச்சிங்கம் கேட்டது.
“ அட,
நீங்க தனே இப்ப மரணம் வந்தா நல்லாருக்கும்னு சொன்னீங்க.. அதான் கூட்டிட்டுப் போகலாம்னு
வந்தேன்..” என்று சொன்னது மரணம்.
“ எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன்.. இப்ப பாரு.. நடக்கேன்.. ஓடுதேன்..போ போ இன்னும் பத்து வருஷம் கழிச்சி வா.. வந்துட்டான்..எப்படா யாருடா சொல்வாங்கன்னு காத்துக்கிட்டிருக்கான் ” என்று கிழட்டுச்சிங்கம் சொல்லிக் கொண்டே நடந்தது.
லேசாக காலை
நொண்டியபடியே ஓடியது. குறுக்கே ஓடிய ஒரு குட்டி
முயலை முன்காலால் அடித்துச் சாப்பிட்டது.
ஆச்சரியத்துடன்
பார்த்துக் கொண்டிருந்த மரணம் மெல்ல நடந்தது. போகும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக்
கொண்டே போன மரணத்தைப் பார்த்த கிழட்டுச்சிங்கம்,
“ இங்கே என்ன பார்வை? ம்ம் போ போ “ என்று கர்ச்சித்தது.
மரணம் பயந்து காட்டுக்குள்
ஓடியே போய் விட்டது.
நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்
No comments:
Post a Comment