Sunday, 5 January 2025

மந்திரத்தொப்பி

 

மந்திரத்தொப்பி

உதயசங்கர்



காட்டில் ஒரு மான் புதரில் கிடந்த தொப்பியைத் தலையில் அணிந்தது. வேடிக்கையாக இருந்தது. அது தான் தொப்பியுடன் இருக்கும் அழகை   எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டது.

முயலின் வீட்டுக்குப் போனது.

“ முயல் தம்பி முயல் தம்பி.. வெளியே வா.. எனக்குத் தொப்பி எப்படியிருக்குன்னு பாரு..

என்று சொன்னது. மானைப் பார்த்ததும் முயலுக்கு ஒரு தமாஷ்  செய்யலாம் என்று நினைத்தது. உடனே அது,

“ யாரது யாரையும் காணல.. தொப்பி மட்டும் தான் தெரியுது..என்றது. அதைக் கேட்ட மான் தொப்பியைக் கையில் எடுத்தது. உடனே முயல்,

“ யாரு மான் அண்ணனா? நீங்க போட்டிருக்கிற தொப்பி மந்திரத்தொப்பி போல அதைப் போட்டா ஆளே தெரியாது போல..

என்று புருடா விட்டது. மானுக்கு மகிழ்ச்சி. உடனே அந்தத் தொப்பியைப் போட்டுக்கொண்டு காட்டுக்குள் கம்பீரமாக நடைபோட்டது.

எதிரே ஒரு புலி வந்தது. புலியைப் பார்த்ததும் மானுக்கு நடுக்கம். ஆனால் முயல் சொன்ன மந்திரத்தொப்பி  ஞாபகம வந்தது. உடனே புலிக்கு எதிரேயே நடந்தது.

புலிக்கு ஆச்சரியம். எப்போதும் புலியைப் பார்த்தாலே பாய்ந்து ஓடி விடும். இப்போது என்னடா தைரியமாய் எதிரே வருகிறதே. அமைதியாய் நின்றது. மந்திரத்தொப்பியணிந்த மான் புலிக்கு மிக அருகில் வந்து விட்டது.

ஆனாலும் பயம். உரத்த குரலில்,

யாருக்காவது நான் தெரிகிறேனா.. நான்  மந்திரத்தொப்பி அணிந்திருக்கிறேன் “ என்று கத்தியது. இப்போது புலியின் கால்களுக்கு அருகில் போய்விட்டது.

அவ்வளவுதான்.

புலி ஓங்கி ஒரு அடி அடித்து மானைக் கீழே வீழ்த்தியது.

“ ஏய் முட்டாளே! யாராவது ஏதாவது சொன்னால் அப்படியே நம்பி விடுவாயா? மந்திரத்தொப்பியாம்..மந்திரத்தொப்பி ..இதோ நான் உன்னைச் சாப்பிடப்போகிறேன்..

ஐயய்யோ.. என்னை விட்டு விடு.. இனி யார் என்ன சொன்னாலும் யோசிப்பேன்.. சிந்தித்து முடிவெடுப்பேன்..என்று கதறியது மான்.

ம்ம் அது.. நான் இப்போது தான் காட்டெருமையைச் சாப்பிட்டேன்.. அதனால் உன்னை விட்டு விடுகிறேன்..என்று சொன்ன புலி மான் தலையிலிருந்த மந்திரத்தொப்பியை நார் நாராய் கிழித்தது.

மான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாலு கால் பாய்ச்சலில் ஓடியது.

 

 நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

No comments:

Post a Comment