Wednesday, 15 January 2025

நிலாவிடம் கதை கேட்ட குட்டிப்பையன்

 

நிலாவிடம் கதை கேட்ட குட்டிப்பையன்

உதயசங்கர்



ஆதிரனுக்குத் தூக்கம் வரவில்லை. 


புரண்டு புரண்டு படுத்தான். இரவில் அம்மாவிடம் கதை கேட்பான். அப்போது தான் அவனுக்குத் தூக்கம் வரும். ஆனால் இன்று அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அலுவலகத்திலிருந்து வரும்போதே சோர்வாக இருந்தாள். அதனால் ஆதிரன் அம்மாவைத் தொந்திரவு செய்யவில்லை. சமர்த்துப்பிள்ளையில்லையா ஆதிரன்!

சன்னல் வழியே நிலா தெரிந்தது. முழுநிலா. பளிச்சென்று மஞ்சளாய் இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தது. அவன் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே ஒரு பாட்டி உட்கார்ந்திருப்பதைப் போலத் தெரிந்தது.

அவன் அம்மாவிடம் கேட்டான்.

“ அம்மா நிலாப்பாட்டி கதை சொல்லுவாங்களா? “

அம்மாவுக்குத் தூக்கத்திலேயே சொன்னார்.

“ ம்ம்ம்ம் “

ஆதிரனின் முகத்தில் புன்னகை பூத்தது. மஞ்சள் நிலாவின் ஒளி வீசியது. அவன் திரும்பிப்பார்த்தான். அம்மா உறங்கி விட்டார். சன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு,

“ பாட்டி.. பாட்டி.. நிலாப்பாட்டி.. “ என்று மெல்லக் கூப்பிட்டான்.

கா கா யாரது என் தூக்கத்தைக் கலைச்சது? “ என்று வேப்பமரத்தில் இருந்த காகம் கேட்டது. ராக்கோழிப்பூச்சி “ கீச்ச் கீச்ச்  என்ன தம்பி தூங்கலியா? “ என்று கேட்டது.

“ நான் நிலாப்பாட்டியைக் கூப்பிட்டேன்..என்று ஆதிரன் கிசுகிசுத்தான். அதைக் கேட்ட காகம்,

பாட்டி இப்போது வடை சுடறதில்லை.. அதனால் நான் அங்கே போறதில்லை.. நீ பேசாமத் தூங்கு கண்ணு..

என்றது. ஆதிரன் மறுபடியும் படுக்கையில் படுத்தான். சன்னல் வழியே தெரிந்த நிலாவைப் பார்த்துக் கொண்டே இருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. யாரோ அவனைத் தொடுவதைப் போல இருந்தது.

நிலாப்பாட்டி சன்னலுக்கு அருகில் வந்தார். சன்னல் வழியே ஆதிரனைத் தொட்டார். அப்படியே ஆதிரனைத் தூக்கிக் கொண்டு மொட்டைமாடிக்குப் போனார். ஆதிரனை மடியில் படுக்கவைத்தார் நிலாப்பாட்டி. தலைமுடியைக் கோதி விட்டார். அவன் கண்களை விழித்து, 

“ கதை சொல்லுங்க பாட்டி..என்றான்.

நிலாப்பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தார்.

சூரியன் தோன்றிய கதையைச் சொன்னார்.

நிலா தோன்றிய கதையைச் சொன்னார்

இந்த உலகம் தோன்றிய கதையைச் சொன்னார்.

பூமி தோன்றிய கதையைச் சொன்னார்..

பூமியில் மனிதர்கள் தோன்றிய கதையைச் சொன்னார்.

இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்.

பாட்டி சொன்ன கதைகளை ஆதிரன் கேட்டான். இல்லை இல்லை பார்த்தான். அவனுக்கு காட்சிகளாகத் தெரிந்தன. பல நேரங்களில் அம்மாவிடம், அப்பாவிடம், ஆசிரியர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கிறான். ஆனால் யாருக்கும் நேரமில்லை. ஆனால் நிலாப்பாட்டி அவ்வளவு பொறுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆதிரனுக்கு நிலாப்பாட்டியை அவ்வளவு பிடித்து விட்டது. அப்படியே நிலாப்பாட்டியைக் கட்டிக் கொண்டான். குளிர்ச்சியாக இருந்தது.

அப்படியே ஆதிரன் உறங்கி விட்டான்.

நிலாப்பாட்டி ஆதிரனை மெல்லத்தூக்கினார். சன்னல்வழியே அம்மாவின் அருகில் படுக்கவைத்தார்.

ஆதிரனின் நெற்றியில் ஒரு முத்தமிட்டார்.

ஆதிரன் சிரித்தான். நிலாப்பாட்டியும் சிரித்தார்.


நன்றி - சூரியனைத் தொட ஆசை

வெளியீடு - சுவடு பதிப்பகம்

 

 

 

No comments:

Post a Comment