திலோப்பியின்
கனவு
உதயசங்கர்
திலோப்பிக்கு ஆச்சரியமாக இருந்தது.
கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை கடல்.
கருநீல நிறத்தில் அலைகள் ததும்பிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு நீலத்திமிங்கிலம் தன் வாயைத் திறந்து மூடியது. கடலையே குடிப்பது போல இருந்தது. அப்படியே அதன் பற்களின் வழியே நீர் வெளியேறியது. நீலத்திமிங்கிலத்தைச் சுற்றி கடல்புறாக்கள் பறந்தன. அவை நீலத்திமிங்கிலத்தின் வாயிலிருந்து துள்ளி விழும் மீன்களைக் கவ்விச் சென்றன.
சற்று தொலைவில் ஓங்கில்கள் ( டால்பின்கள் ) கூட்டமாக குதித்துக்
கொண்டே வந்தன. இடையிடையே கீக்கே கீக்கே என்று சத்தமிட்டன..
திலோப்பியும் வேகமாக நீந்தியது.
ஒரு அடி நீந்தியதும் கண்ணாடிச்சுவர் தடுத்து விட்டது. அப்படியே முட்டி நின்றது. மீன்
தொட்டி அவ்வளவு நீளம் தான் இருந்தது.
திலோப்பி கண்ணாடி வழியே
தொலைக்காட்சியில் தெரிந்த கடலைப் பார்த்தது. கடலில் இப்போது திலோப்பிக் கூட்டத்தைக்
காட்டினார்கள். அம்மாடி! எவ்வளவு கூட்டம்! தன்னுடைய உறவினர்களைப் பார்த்ததும் உடனே
அங்கே போக வேண்டும் என்று நினைத்தது.
கண்ணாடி மீன் தொட்டிக்குள் இருந்த திலோப்பி துள்ளியது.
அந்த வீட்டிலிருந்த வரவேற்பறையில்
தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிக்கு முன்னால் கதிரவன் உட்கார்ந்திருந்தான்.
வெளியே மழை பெய்யும் சத்தம் கேட்டது. தொடர்மழையினால் பள்ளி விடுமுறை விட்டிருந்தார்கள்.
கதிரவன் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திலோப்பி அவனைப் பார்த்தது.
அதே நேரத்தில் அவனும் திரும்பி
திலோப்பியைப் பார்த்தான். உடனே எழுந்து போய் மீன் உணவை எடுத்துக் கொண்டு வந்து மீன்
தொட்டியில் போட்டான்.
“ திலோப்பி.. செல்லம் சாப்பிடு..
சமத்துல்ல.. நீயும் அந்த கடலுக்குப் போறியா? எவ்வளவு மீன்கள் பார்த்தியா? உன்னுடைய
சொந்தக்காரங்க அங்கே இருப்பாங்கல்ல.. ஒரு நாள் உன்னை அங்கே கூட்டிக்கிட்டுப் போறேன்..”
என்று கொஞ்சினான்.
கடைசியாக
அவன் சொன்னதைக் கேட்டதும் திலோப்பி உடனே நீர்ப்பரப்புக்கு மேலே தலையைத் தூக்கியது.
“ எப்போ கூட்டிட்டு போவே கதிர்..” என்று கத்தியது. தண்ணீரில் குமிழிகளாக அந்த வார்த்தைகள் வந்தன. கதிர் திரும்பவும் போய் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்தான்.
வெளியே மழையின் சத்தம் கூடியது.
திலோப்பி சாப்பிடக் கூட
மறந்தது. தொலைக்காட்சிப் பெட்டியில் தெரிந்த கடலையே பார்த்துக் கொண்டிருந்தது. எப்படியாவது
அங்கே போக வேண்டும். திலோப்பிக் கூட்டத்துடன் சேர வேண்டும். இங்கே இரண்டுக்கு மூன்றடித்
தொட்டியில் லட்சக்கணக்கான முறை சுற்றிச் சுற்றி நீந்திச் சலிப்படைந்து விட்டது.
மேலே கீழே அங்கும் இங்கும் என்று எப்படி நீந்தினாலும் அந்தத் தொட்டியின் அளவு பெரிதாகவில்லை.
அப்படியே இருந்தது.
தனிமையில் இப்படிப்பட்ட குறுகிய இடத்தில் வாழ்வது எவ்வளவு கடினம். திலோப்பிக்குக் கோபம்
வந்தது. வாலால் நீரில் அடித்தது. நீர் தெறித்தது.
ஒரு நாள் நான் கடலுக்குப்
போவேன் என்று நினைத்தது. திலோப்பியிடம் கதிரவன் மட்டும் தான் வந்து பேசுவான். அவனுடைய
பள்ளியில் நடந்தவற்றைப் பற்றிச் சொல்வான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் அவனுடன் பேசக்
கூட நேரமில்லாமல் இருப்பதைச் சொல்வான். பக்கத்து விட்டு நிம்மி பூனை திலோப்பியை பேராசையுடன்
பார்த்ததைச் சொல்வான்.
” நான் உன்னைப் பாதுகாப்பேன் ” என்று பேசுவான். அப்போது மட்டும் திலோப்பி மகிழ்ச்சியுடன் அங்கும் இங்கும் நீந்தி அவனை மகிழ்ச்சிப்படுத்தும்.
திலோப்பிக்காகவே அவன் எப்போதும் தொலைக்காட்சியில் கடல் உயிரினங்களைப் பற்றிய சேனலைப்
போட்டு விடுவான். திலோப்பி கடலைப் பார்த்துக் கொண்டேயிருக்கும்.
இப்போது மழை இன்னும் இன்னும்
சத்தமாய் பெய்தது. பெருமழை.
திடீரென மின்சாரம் நின்றது.
ஒரே இருட்டு. வீட்டில் சிறிய விளக்குகள் எரிந்தன. அப்போது தான் திலோப்பி கவனித்தது.
வீட்டுக்கு வெளியே கடலில் அலைகள் முட்டி மோதுவதைப் போன்று ’ ஓ ‘ வென்ற சத்தம்
கேட்டது. கதிரவனின் அம்மாவும் அப்பாவும் மாடியிலிருந்து குரல் கொடுத்தார்கள்.
“ மேலே மாடிக்கு வா.. கதிர்..
தெருவில் தண்ணீர் ஓடுவதைப் பார்..” என்று அம்மா அழைத்தார்.
“ அம்மா தண்ணி வீட்டுக்குள்ளே
வந்துருமா? திலோப்பியை மேலே கொண்டு வந்துரலாமா? “ என்று கதிர் கேட்டான்.
“ இல்லை கதிர் அப்படியெல்லாம்
வராது.. பயப்பட வேண்டாம்..” என்றார் அப்பா.
கதிர் மாடிக்குப் போனான்.
கீழே திலோப்பி தண்ணீரின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தது.
“ கடல் கடல் கடல் கடல்..”
என்று முணுமுணுத்தது.
திடீரென வீட்டுக்குள் தண்ணீர்
கதவைத் தள்ளிக் கொண்டு பொங்கி வந்தது. முதல்முறையாக அவ்வளவு தண்ணீரைப் பார்த்த திலோப்பிக்கு
மகிழ்ச்சி பொங்கியது. அது தொட்டிக்குள்ளேயேத் துள்ளிக்குதித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்
மீன் தொட்டிக்கு மேலே வந்தது.
திலோப்பி வெள்ளத்தில் உற்சாகமாக
நீந்தியது. திறந்த கதவின் வழியாக திலோப்பி கடலை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது.
“ பை பை கதிர்..” என்று
கூவியது.
கதிர் இருந்த மாடியில்
நீர்க்குமிழிகளாகத் தெறித்தது அந்தச் சத்தம்.
நன்றி - சூரியனைத்தொட ஆசை
வெளியீடு - சுவடு பதிப்பகம்
No comments:
Post a Comment