குரங்கு
செய்த உதவி
உதயசங்கர்
மிங்
மான் குட்டி துள்ளிக்குதித்தது. அது ஓரு இடத்தில் நிற்காது. சேட்டைன்னா சேட்டை அப்படி
ஒரு சேட்டை. அதுவும் புல்வெளியைப் பார்த்து விட்டால் போதும் அவ்வளவு தான். நுனிப்புல்லாகக்
கடிக்கும். இளம் தளிர்களாக மெல்லும். முள்செடிக்குள்ளே தலையை விடும். பறந்து கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சியைத் துரத்தும். ஊர்ந்து கொண்டிருக்கும் நத்தையின் ஓட்டை மூக்கால்
உருட்டி விளையாடும். மெதுவாக நடந்து போய்க் கொண்டிருக்கும் ஆமையைப் போல ஒவ்வொரு காலாக
எடுத்து வைத்து வக்கணை வழிக்கும்.
மிங்கின்
அம்மாவுக்கு மிங் செய்கிற சேட்டைகளைப் பார்த்துப் பெருமையாக இருந்தாலும் கவலையாகவும்
இருக்கும்.
“ கவலைப்படாதீங்க
அத்தை நான் இருக்கேன்.. மிங்க்கை நான் பாத்துக்கிறேன்..” என்று மங் குரங்கு சொல்லும்.
“ என்னமோப்பா..
நீ தான் அவனைப் பத்திரமா பார்த்துக்கணும்.. ஒரு இடத்துல இருக்கானான்னு பாரேன்..” என்று
மிங்கின் அம்மா சடைவாய் சொல்லும்.
மிங்
மானுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரே இடத்தில்
இருப்பது அதற்குப் போரடித்தது.
ஒருநாள்
அப்படிப் போகும்போது ஒரு புதிய பிரதேசத்துக்குப் போய்விட்டது. அங்கே புலியின் உறுமல்
சத்தம் கேட்டது. நரிகளின் ஊளைச்சத்தம் கேட்டது.
காய்ந்த
புற்களே எங்கும் இருந்தன. அங்கங்கே விலங்குகளின் எலும்புகள் சிதறிக் கிடந்தன. மிங்
தான் தைரியசாலியாயிற்றே. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்தது. எதிரே ஒரு குகை தெரிந்தது.
இதுவரை
மிங் மான்குட்டி குகையைப் பார்த்ததில்லை. உள்ளே என்ன தான் இருக்கும்? மிங் இருளுக்குள்
மெல்ல அடி மேல் அடி வைத்து நடந்தது. எதிரில் எதுவும் தெரியவில்லை.
” உள்ளே
யாராவது இருக்கீங்களா? “
என்று
கத்தியது. சிலநொடிகளில் இருளுக்குள் இரண்டு கண்கள் ஜொலித்தன. மிங் மான் குட்டியின்
முதுகில் படுபயங்கர நாற்றத்துடன் மூச்சுக்காற்று வீசியது. மிங் மான்குட்டிக்கு ஆபத்து
என்று புரிந்து விட்டது. திரும்பி குகையின் வாசலை நோக்கி ஓடத் தொடங்கியது.
பின்னால்
பெரும் உறுமலுடன் புலி பாய்ந்து வந்து கொண்டிருந்தது. வெளியே ஓடி வந்த மிங் மான்குட்டிக்குத்
திசை தெரியவில்லை. எங்கோ தலை தெறிக்க ஓடியது. ஆனால் புலி நெருங்கி விட்டது. இன்னும்
சில நொடிகள் தான்.
அவ்வளவு
தான். சோலி முடிஞ்சது என்று மிங் மான்குட்டி நினைத்தது. அம்மாவின் முகம் கண்ணில் தெரிந்தது.
எதிரே வழி மறித்துக் கொண்டு ஒரு பெரிய மரம் நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால்
என்ன இருந்தது என்றே தெரியவில்லை.
அப்போது
மரத்தின் மீது மங் குரங்கு தோன்றியது. அது மிங் மானகுட்டிக்கு வலதுபக்கம் ஓடும்படி
சைகை செய்தது. உடனே மிங் மான்குட்டி வலதுபக்கமாக ஓடியது. மரத்துக்கு மிக அருகில் வந்தபோது
மங் இடதுபக்கமாகத் திரும்பும்படி சைகை செய்தது.
மிங்
மான்குட்டி டக்கென்று துள்ளிக்குதித்து இடதுபக்கம் திரும்பிவிட்டது. பின்னால் ஓடிவந்த
புலியால் உடனே இடதுபக்கம் திரும்ப முடியவில்லை. அதே நேரம் மங் குரங்கு கையில் வைத்திருந்த
ஒரு குச்சியால் அங்கேயிருந்த பெரிய தேன் கூட்டைக் கலைத்து விட்டது. ஆயிரக்கணக்கான தேனீக்கள்
படையெடுத்து வந்து புலியை முற்றுகையிட்டன. புலி ஐய்யோ குய்யோ என்று அலறிக்கொண்டு வந்த
வழியே ஓடியது.
மிங்
மான்குட்டியும் மங் குரங்கும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்தப் பகுதியை விட்டு
ஓடிப் போய்விட்டன.
கதை சிறப்பு. ரசித்தேன்.
ReplyDelete