Tuesday, 25 February 2025

குழந்தைமையெனும் அற்புத உலகின் சாவிகள்

 

குழந்தைமையெனும் அற்புத உலகின் சாவிகள்

உதயசங்கர்



இந்தப் பூவுலகின் உயிர்களுக்கு இயற்கையின் ஆகச்சிறந்த கொடை என்னவென்றால் குழந்தமை தான். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதும் இந்த உலகம் புதிதாகப் பிறக்கிறது. சூரியனிலிருந்து பிரிந்த கோளத்துண்டு பூமியாகி நானூற்றிஎண்பத்திநான்கு ஆண்டுகளும், முதல் உயிர் தோன்றி முன்னூற்றிஎண்பத்திநான்கு ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் இந்த பூமி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டேயிருக்கிறது. அப்படி எத்தனை கோடி முறை பிறந்திருக்குமென்று யோசித்துப் பாருங்கள். குழந்தைமையின் அற்புதம் விளங்கும்.

பிறந்ததிலிருந்து குழந்தைகள் இந்த உலகை, இயற்கையை, புழுவை, பூச்சியை, எறும்பை, மனிதர்களை, ஏன் அவர்களையே கூட புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்.  அவர்களுக்கேயுரிய தனித்துவமான கட்டற்ற புனைவு மொழியில் பேசுகிறார்கள். அந்த புனைவின் அதிசயத்தைப் பொதுவாகப் பெரியவர்கள் கவனிப்பதில்லை. அவர்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் அத்தனை முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அதாவது சர்க்கஸில் விலங்குகளைப் பழக்குவதைப் போல குழந்தைகளை இந்த சமூகமென்ற சர்க்கஸ் கூடாரத்தில் மூன்றுவேளை உணவுக்காகப் பழக்குகிறார்கள். ஆனால் எழுத்தாளர். தேனி சுந்தர் குழந்தைகளின் குழந்தைமையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அந்தக் குழந்தைமையெனும் அற்புத உலகின் கதவுகளைத் திறந்து காட்டுகிறார். அந்தக் கதவுகளைத் திறந்த சாவிகளை அவர் மட்டும் ரகசியமாகப் பூட்டி வைக்கவில்லை. நம்மிடமும் கொடுத்து திறந்து பாருங்கள் என்கிறார்.

அவர் கண்டடைந்த உலகத்தின் பக்கங்களே ” நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன” என்ற குழந்தைக்கவிதை நூல். நவீனத் தமிழ் சிறார் இலக்கிய வகைமைகளை மூன்றாகப்பிரிக்கலாம். முதலாவதாக குழந்தைகளே எழுதும் குழந்தை இலக்கியம். இரண்டாவதாக குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதும் குழந்தை இலக்கியம், மூன்றாவதாக குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதும் குழந்தை இலக்கியம் என்று வகை பிரிக்கலாம். அந்த வகையில் எழுத்தாளர் தேனிசுந்தர் மூன்றாவது வகைமையான பெரியவர்களுக்காக எழுதும் குழந்தை இலக்கியத்தில் போற்றத்தக்க பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதை நவீன பிள்ளைத்தமிழ் நூல் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழ் இலக்கிய மரபில் பிள்ளைத்தமிழ் என்ற வகைமை இருந்தாலும் அதன் நாயகர்கள் பெரியவர்களே. அவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படியெல்லாம் இருந்திருப்பார்களென்பதைச் சொல்வதாகவே அமைந்திருக்கும். அதனால் தான் அழ.வள்ளியப்பா போன்ற நம் முன்னோடிகள் பிள்ளைத்தமிழை சிறார் இலக்கியம் இல்லை என்று உறுதியாகச் சொன்னார்கள். ஆனால் தேனிசுந்தரின் குழந்தைக்கவிதைகள் பிள்ளைத்தமிழ் என்ற சொல்லின் முழு அர்த்தத்துடன் திகழ்கிறது. இந்த நூல் புகழ்மதி பிள்ளைத்தமிழ் என்று கூடச் சொல்லலாம்.

குழந்தைகள் எதையும் யோசிப்பதில்லை. அவர்களுக்கு உடனே தோன்றுவதை உடனே சொல்லிவிடுவார்கள். பெரியவர்களைப் போல இடம் காலநேரம் ஆள் அதனால் கிடைக்கும் பலாபலன் என்று மனதைக் கறைப்படுத்தாத வெள்ளையுள்ளம் கொண்டவர்களென்பதால் எல்லாம் உடனுக்குடன் தெறித்து வருகின்றன. அந்தத் தெறிப்புகளைச் சரியாகக் கண்டுணர்ந்து சொல்வது ஒரு கலைஞனால் மட்டுமே முடிகிற காரியம். அப்படிப்ப்பட்ட கலைஞனாக தேனி சுந்தர் இந்தத் தொகுப்பில் மிளிர்கிறார்.

 பள்ளியில் கற்பவர்களாக இருக்கும் குழந்தைகள் வீட்டில் ஆசிரியராக மாறுகிரார்கள். அம்மாவை எழுத வைக்கிறார்கள். விளையாட வந்த பக்கத்து வீட்டுச் சிறுவனை எழுத வைக்கிறார்கள்.  தான் கண்டுபிடித்த தன்னுடைய நான்கு பெயர்களை எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுகிறார்கள்.

வீட்டுக்குள்ள

ரொம்ப வெக்கையா இருந்துச்சு

நானும் பாப்பாவும்

மாடிக்குப் போனோம்

புகழ்மதி சொன்னாங்க

வானத்துல பாருப்பா

எவ்ளோ நச்சத்திரம் இருக்குன்னு?!

நான் சொன்னேன்

சரி பாப்பா

எத்தனை இருக்குன்னு

எண்ணிச்சொல்லு பாக்கலாம்!

பத்து பதினாலு

எட்டு அஞ்சு பத்தொம்பது!

இப்டி எண்ணிட்டு

அடுத்துச் சொன்னது தான்

ஹைலைட்டு

எல்லா நச்சத்திரமும்

நம்மளவே தான்ம்ப்பா

பாத்துக்கிட்ருக்கு

இது தான் குழந்தைமையின் அற்புதகணம். அதைக் குழந்தை மொழியிலே நமக்குக் கடத்துகிறார் கவிஞர். பேயாக இருந்தாலும் கண்ணைக்குத்துவது சும்மாச்சுக்கும் என்று சொல்லும் மனம் குழந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கும்.ஆங்கில ஏ ஃபாரை வைத்து குழந்தை சொல்லும் வார்த்தைகளை வாசித்தால் நீங்கள் புன்னகைக்காமல் இருக்க முடியாது. எல்லாக்குழந்தைகளும் விவரம் தெரிந்த நாளிலிருந்தே பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள். எல்லாப்பெரியவர்களுமே குழந்தைகளாக ஆசைப்படுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் முரண். நேற்றுவரை சின்னப்பிள்ளையாகவும் இன்று பெருசாகவும் விவரமாகவும் ஆகிவிட்டதாகச் சொல்லும் குழந்தையின் சொற்களில் என்ன ஒரு ஆனந்தம்!

குழந்தைகள் எப்படியெல்லாம் மற்றவர்களை அடையாளம் காண்கிறார்கள் தெரியுமா?. சீட்டா என்ற நாயின் அம்மா என்று ஒரு வீட்டம்மாவை அடையாளம் காண்கிறார்கள். ஏடிஎம்முக்குள்ளே போய்த் திரும்பி வரும் அப்பா கையில் பணம் இருப்பதைப் பார்த்த குழந்தை கேட்கிறது.

உள்ள யாருமே இல்ல..

களவாண்டுக்கு வந்துட்டியா?

குழந்தைகளின் பள்ளி அனுபவங்களும் கவிதையாகி இருக்கின்றன. அதில் குழந்தைகளின் கசப்புணர்ச்சி தெரிகிறது. விமர்சனமும் தெரிகிறது.

ரொம்பதூரம் நடந்தா எரிமலைக்கு கால் வலிக்கும்னு குழந்தை கண்டுபிடிக்கிறாள். கேள்விகளைக் கேட்டுப் பதிலையும் சொல்கிற குழந்தையின் சொற்களில் அன்பு வழிந்தோடுகிறது. குழந்தையின் சில கேள்விகளுக்குப் பதிலே சொல்ல முடியாது. அந்தக் கேள்விகளையும் குழந்தை கேட்கிறார். பல்லி இறந்தால் சொந்தக்காரங்க வந்து அழுதுட்டு போயிட்டாங்களா ன்னு கேட்கிறது குழந்தை. யதார்த்த உலகத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது குழந்தை என்று பாருங்கள். தோத்ததுக்கும் பரிசு கொடுத்தாங்கன்னு குழந்தை சொல்கிறாள். போட்டிகளே கவனியுங்கள். வீடு கட்ட பணம் இல்லையா? பெரிய வீடு கட்டியிருக்கிறவங்ககிட்டே போய் கேட்கலாம் என்கிறது குழந்தை.

இப்படி சின்னச்சின்னக்கவிதைகளின் வழியே குழந்தையின் மனதைப் புரிய வைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்களென்பதை அவர்களுடைய சொற்களிலிருந்தே நமக்குக் காட்டுகிறார் தேனிசுந்தர். ஒவ்வொரு கவிதையையும் வாசித்து அனுபவிக்கவேண்டும். அப்போது தான் நம்முடைய கடந்து போன குழந்தைமையின் பழைய நினைவுகளை அசைபோடவும் மனம் ததும்பித் திளைக்கவும் முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். உங்கள் குழந்தையும் இப்படியான கவித்துவத்தருணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதைக் கண்டு அனுபவிக்க நமக்குப் பொறுமை வேண்டும். குழந்தை மனம் வேண்டும்.

தேனி சுந்தர் இந்தக் கவிதைகளின் வழியே நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கிறார். இன்னும் குழந்தமையின் அற்புதவெளியில் அலைந்து திரிந்து புதையலை நமக்கு அள்ளியள்ளிக் கொடுக்க வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறேன்.


( நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன - தேனி சுந்தர் நூலுக்கான முன்னுரை )

 

No comments:

Post a Comment