Thursday, 27 February 2025

குழந்தைமையின் ரகசியங்களைக் காட்டும் அற்புத விளக்கு

 

குழந்தைமையின் ரகசியங்களைக் காட்டும் அற்புத விளக்கு -- ஒண்ணாப்பு அலப்பறைகள்!

உதயசங்கர்



    மானுட வாழ்க்கையின் அற்புதமான பொற்காலம் குழந்தைப்பருவம் . ஒரு போதும் திரும்பிவராத அந்தப் பருவத்தில் குழந்தைகள் தாங்கள் எதைச் செய்கிறார்களோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள். எந்தத் தயக்கமோ, தடைகளோ இன்றி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். தாங்கள் நினைப்பதைச் சொல்கிறார்கள். புதிய புதிய படைப்புகளைப் படைக்கிறார்கள். புதிது புதிதாய் மொழிக்குச் சொற்களைச் சேர்க்கிறார்கள். கவிதையாய் பேசுகிறார்கள். கதைகளை நம்புகிறார்கள். இந்த உலகத்தை புதிதாக அறிந்து கொள்கிறார்கள். அதனால் இந்த உலகத்தைப் புதிதாய் படைக்கிறார்கள். எப்போதும் படைப்பூக்கத்தின் சிகரத்தில் வீற்றிருக்கிறார்கள்.

    குழந்தைமை என்பது படைப்பூக்கம். அந்தப் படைப்பூக்கத்தின் பெருமழையில் நனையும் பாக்கியம் ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. குழந்தைகள் அப்பா அம்மாவுக்குப் பிறகு முழுவதுமாக நம்புவதும், எந்த நிபந்தனையுமற்ற அன்பைச் செலுத்துவதும் ஆசிரியர்களிடம் மட்டும் தான். அதிலும் குறிப்பாக ஆரம்பப்பள்ளிக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தான் அவர்கள் வீட்டுக்கு வெளியே சந்திக்கின்ற முதல் கதாநாயகன் / கதாநாயகி. எனவே தான் எல்லாக்குழந்தைகளும் எத்தனை வயதானாலும் தங்களுக்கு முதல் முதலில் பாடம் எடுத்த ஆசிரியரை மறப்பதேயில்லை. குழந்தைகளின் ஆளுமையை உருவாக்கும் மிக முக்கியமான பணியை ஆசிரியர்கள் செய்கிறார்கள். பாடத்திட்டங்களைத் தாண்டி, குழந்தைகளுடைய தனித்திறமைகளைக் கண்டு உற்சாகப்படுத்தவும், வளர்ப்பதற்கும் ஒரு உற்ற தோழனைப் போல உதவுகிறார்கள்.

    குழந்தைகள் ஆசிரியர்களிடம் அன்பையே எதிர்பார்க்கிறார்கள். வேறு எதையும் இல்லை. அந்த அன்பிற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தான் பள்ளிக்கூடம் குழந்தைகளின் இரண்டாவது வெளியாகத் திகழ்கிறது. அந்த வெளியில் குழந்தைகளிடமிருந்து கிடைத்த அனுபவங்களை அப்படியே சிந்தாமல் சிதறாமல் நமக்குக் கடத்தியிருக்கிறார் கவிஞர்.ராஜிலாரிஜ்வான்.

    கவிதைகளில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள கவிஞர்.ராஜிலாரிஜ்வான் குழந்தைகளின் அற்புத உலகத்துக்குள் மிக எளிதாகச் சென்று நமக்கு முத்துகளை அள்ளியள்ளிக் கொடுக்கிறார். ஒவ்வொரு அனுபவமும் குழந்தைமையின் பொக்கிஷ அறைகளைத் திறந்து பார்க்க உதவும்  சாவிகள் என்று கூடச் சொல்லலாம்.

    ஆமினாவின் கேள்விக்கு ஒரே மாதிரி பதிலைச் சொல்லிக் கொண்டேயிருக்கும் ஆசிரியரிடம் தயக்கமில்லாத அவளுடைய வார்த்தைகள் தான் அழகு. ஆதிரா எப்படி எழுதப்பழகினாள்? ராஜிலாரிஜ்வான் அதையே கவிதையாகச் சொல்கிறார். காமராஜரை உயிருடன் கொண்டு வரும் மாணவன் ஆசிரியரிடம் சொல்லும் விளக்கத்தைப் பார்க்கும்போது, மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் குழந்தையின் மனது பளிச்சிடுகிறது. முன்னிபின்னியில் தமிழுக்கு ஒரு புதிய சொல்லைத் தருகிறார் அஸ்மா என்ற மாணவி.

    பவித்ரன் என்ற மாணவனின் பொய்களைக் கேட்கும்போது மிகச்சிறந்த எழுத்தாளனாவதற்கான எல்லாவிதமான குணாதிசயங்களும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. கடைசி வரியில் கவிஞரான ஆசிரியரையேப் பயப்பட வைக்கிறார் பவித்ரன்.

    ஆப்பிள் ஆரஞ்சு அத்தியாயம் நம்முடைய பொட்டில் அறைந்த மாதிரி அந்நியமொழிக்கலப்பை குழந்தைகளே கண்டு சொல்லும் காட்சியை விவரிக்கிறது. கொசுவின் ரத்தம் எந்த குரூப்? உண்மையை ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து கண்டுபிடிக்கிறார்கள். வழக்கு மொழிக்கும் உரைநடை மொழிக்குமான வேறுபாட்டை மிக அழகாகச் சொல்கிற அத்தியாயம் தவளை- தவக்களை. ஆதில்

     இப்பதான் நீங்க சரியாத் தவக்களைன்னு சொல்றீங்க? என்று ஆசிரியரிடம் சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. வகுப்பில் பேசினால் ஐந்து மார்க் குறைப்பேனென்று ஆசிரியர் சொல்லும்போது பேசாமலிருந்தால் ஐந்து மார்க் சேர்த்துப் போடச் சொல்வது நியாயம் தானே. குழந்தைகளின் நியாயம் உண்மையில் அழகு.

    இந்த உலகத்தில் பிரியாணியை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா? ஆஃபியின் வெகுளித்தனம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது. திருமண அழைப்பிதழை தானே எழுதிக் கொண்டு வரும் நஜீமிடம் ஆசிரியர் ராஜிலாரிஜ்வான் நடந்து கொள்ளும்விதம் முன்னுதாரணமானது. குழந்தைகள் போலச் செய்பவர்கள். அவர்கள் கேட்டதையே பேசுகிறார்கள். எனவே பேசும் சொற்களில் கவனம் தேவை என்றொரு அத்தியாயம் சொல்கிறது.

    குடிப்பழக்கம் உள்ள தந்தை செய்வதைப் போல தண்ணீர் பாட்டிலைத் திறக்கும் மாணவனிடம் பக்குவமாக நடந்து கொள்கிறார் ஆசிரியர். ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை? என்று ஒரு மாணவன் கேள்வி கேட்கிறான். அது நமக்கான முக்கியமான பாடம். அமீன் என்னும் மாணவரின் கவனமின்மைக்கும், அலட்சியத்துக்கும் காரணம் தெரியாமல் திகைக்கும் ஆசிரியர் அவனுடைய தனித்திறமையைக் கண்டுபிடித்து பாராட்டும் அங்கீகாரமும் கொடுக்கும்போது அவன் மலர்ந்து மணம் வீசத் தொடங்குகிறான்.

    ஒண்ணாப்பு அலப்பறைகள் அனுபவங்களில் குழந்தைகளின் மனதை அப்படியே நம் கண்முன்னால் காட்டுகிறார் கவிஞர்.ராஜிலாரிஜ்வான். இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் உளவியலைப் பேசுகிறது. கற்றலைப் பேசுகிறது. கற்பித்தலைப் பேசுகிறது. குழந்தைமையின் வெகுளித்தனத்தைப் பேசுகிறது. குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்கிறது. குழந்தைகளுக்கு சிறிய அங்கீகாரமும் பாராட்டும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தென்று பேசுகிறது.

    குழந்தைகளின் உளவியல் குறித்த நூறு தத்துவநூல்களின் பணியை கவிஞர்.ராஜிலாரிஜ்வானின் ஒண்ணாப்பு அலப்பறைகள் என்ற ஒரே நூல் செய்து விடுகிறது.

    குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதப்படும் இலக்கியத்தில் இந்த நூல் முத்திரை பதிக்கும். நம்முடைய குழந்தைகளைப் புரிந்து கொள்ள பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிச்சயமாக உதவும்.

 ) ஒண்ணாப்பு அலப்பறைகள் - ராஜிலா ரிஜ்வான் நூலுக்கு எழுதிய முன்னுரை )

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

No comments:

Post a Comment